Monday 27 May 2019

10. நியாயமான வினியோகக் கோட்பாடு


-எஸ்.இல்யீன், அ.மொத்திலோவ்
முன்னேற்றப் பதிப்பகம் - மாஸ்கோ- 1986

கா.மார்க்ஸ் கூறியபடி ஒரு உழைப்பாளி ''சமூகத் துக்குத் தான் என்ன கொடுத்தாரோ, அதையே -எல்லாக் கழித்தல்களும் செய்யப்பட்ட பிறகு - மிகத் துல்லியமாக அவர் திரும்பப் பெறுகிறார்” (மார்க்ஸ், எங்கெல்ஸ், லெனின், கம்யூனிஸ்ட் சமூகம், முன்னேற்றப் பதிப்பகம், மாஸ்கோ , 1983, பக்கம் 50.) என்ற வினியோகக் கோட்பாடுதான் சோஷலிச உற்பத்திக்கு ஏற்றதாகும். அதாவது ஒருவன் தன் உழைப்பின் அளவிற்கும் தரத் திற்கும் ஏற்றதைப் பெற வேண்டும். “ஒவ்வொருவரிட மிருந்தும் அவரவர் திறமைக்கேற்ப, ஒவ்வொருவருக் கும் அவரவர் உழைப்பிற்கேற்ப'' என்பதுதான் சோஷலி சத்தின் நியாயமான வினியோகக் கோட்பாடாகும். இது கொச்சையான சமப்படுத்தும் வினியோகத்தையும் எதிர்க்கிறது, அதே நேரத்தில் தன் உழைப்பால் நேர் மையாகக் கிடைக்க வேண்டியதை விட அதிகமாக சமுதாயத்திடமிருந்து பிடுங்க விரும்பும் முகமாக இந்த உண்மையான சமூக சமத்துவத்தை யாராவது குலைக்க விரும்புவதையும் எதிர்க்கிறது. சோம்பேறிகள், பிறர் உழைப்பால் வாழும் ஒட்டுண்ணிகள், சமுதாயத்திட மிருந்து இயன்ற அளவு அதிகமாகப் பிடுங்க விரும்புபவர் கள் போன்றோரை உழைப்பாளிகளின் சமுதாயத்தால் சகித்துக் கொள்ள முடியாது.

சுரண்டலையும் வலுக்கட்டாயமான நிர்ப்பந்த உழைப்பு முறைகளையும் ஒழித்துக் கட்டிய சோஷலிசம் உழைப்பின் முக்கியத்துவத்தையே பெரிதும் உயர்த்தியுள்ளது. சோஷ லிச பலத்தின் வற்றா மூல ஊற்று இதில்தான் அடங்கி யுள்ளது. உழைப்பிற்கான உரிமை மனிதனுக்குக் கிட்டி யது, அதே நேரத்தில் அவன் உழைக்கவும் கடமைப் பட்டவனாகிறான். ''யார் உழைக்கவில்லையோ அவருக்கு சாப்பாடு கிடையாது'' என்பதுதான் சோஷலிசக் கோட் பாடாகும்.

சோஷலிசத்தின் விரோதிகள் இதை வைத்து எதையும் எளிதில் நம்புபவர்களை அச்சுறுத்த முயலுகின்றனர்: மனிதன் கண்டிப்பாக வேலை செய்துதான் ஆக வேண்டுமெனில், இது என்ன தனிநபர் சுதந்திரம் என்கின்றனர். வேறொருவரின் உழைப்பில் வாழ்ந்து பழகி விட்டவர் களால்தான் இப்படிக் கூற முடியும். உழைப்பது எனும் புனிதமான கடமையை அலட்சியப்படுத்துவதானது சாராம்சத்தில் பார்த்தால் ஒட்டுண்ணித் தனமாகும், இது சோஷலிச அமைப்பின் தன்மைக்கே அன்னியமானது. ஒரு உழைப்பாளி கூட இதை ஒப்புக் கொள்ள மாட் டான். சோஷலிசத்தின் கீழ் உழைப்பு முதல் ஜீவாதாரத் தேவையாக மாறாவிட்டாலும் இயன்ற வரை சிறப்பாக, பயன் மிகு வகையில் உழைக்கும் ஆர்வம் உண்மை யிலேயே பரவலாக நிலவுகிறது.

இந்த நாட்டத்திற்கு, சர்வபொது ஆர்வத்திற்கு அரசின் முழு ஆதரவு கிட்டுகிறது. ஊதிய முறைகளை அரசு இடையறாது மேம்படுத்தி வருகிறது, எல்லா இடங்களிலும் தனிப்பட்ட பொருளாயத அக்கறைக் கோட் பாடு செயல்படுமாறு பார்த்துக் கொள்கிறது, உழைப்பு அளவைக்கும் நுகர்வு அளவைக்கும் இடையிலான பொருத் தம் முழுமையாக கடைப்பிடிக்கப்படுமாறு கவனித்துக் கொள்கிறது.

உழைப்பின் அளவிற்கும் தரத்திற்கும் ஏற்ப அளிக்கப் படும் ஊதியம் அதிகரிக்கப்படுவதும், சமூக நுகர்வு நிதி களிலிருந்து அளிக்கப்படும் உதவித் தொகைகளும் சலுகை களும் அதிகரிக்கப்படுவதும்தான் சோஷலிசத்தில் உழைப் பாளிகளின் உண்மையான வருமான அதிகரிப்பிற்கான மூல ஊற்றுகளாகும். சோவியத் நாட்டில் உழைப்பாளி களின் வருமான அதிகரிப்பில் முக்கால் பங்கு உழைப் பிற்கு அளிக்கப்படும் ஊதியத்தால் வருகிறது. இது உழைப்பாளிகளின் நுகர்வை திட்டமிட்ட முறையில் அதிகரிப்பதற்கு மட்டுமின்றி ஊதியத்தின் ஊக்குவிப்புத் தன்மையை கூட்டவும் (உற்பத்தியின் இறுதி முடிவுகளை யும் உற்பத்தியின் பயன் தன்மை அதிகரிப்பதையும் இது சார்ந்திருப்பதை அதிகப்படுத்தி) உதவுகிறது.

முதலாளித்துவத்தில் உள்ள ஊதிய அசமத்துவத்தைப் போன்ற அதே அசமத்துவமும் ஏதோ சோஷலிசத்திலும் நிலவுவதாகக் கூறும் ''தத்துவங்களைப் பரப்புவது சில கம்யூனிச எதிர்ப்பு சித்தாந்திகளுக்குப் பிடித்தமான விஷயமாகும். தேர்ச்சி மிகு நிபுணர்களுக்கும் தேர்ச்சி குறைவான உழைப்பாளர்களுக்கும் இடையிலும் நிர்வாகத் துறையில் உள்ளவர்களுக்கும் தொழிலாளர்களுக்கும் இடை யிலும் உள்ள ஊதிய வேறுபாடுகளை இவர்கள் சுட்டிக் காட்டுகின்றனர். சோஷலிச வினியோகக் கோட்பாடு சமமான ஊதியத்தைக் குறிக்கிறது என்று உண்மையான மார்க்சிஸ்டுகள் யாரும் எப்போதும் கூறவில்லை. சமமான உழைப்பிற்கு சமமான ஊதியம் எனும் கோட்பாடே சமமற்ற உழைப்பிற்கு சமமற்ற ஊதியம் என்பதைக் குறிக் கிறது. ஆனால் விஷயம் இதில் மட்டும் இல்லை.

தேர்ச்சி மிகு நிபுணர்களுக்கு அளிக்கப்படும் அதிக ஊதியம், உற்பத்தியில் இவருடைய கணிசமான பங்களிப்புடன் தொடர்புடையது. இது உழைப்பாளிகளின் ஞானம், அனுபவம், திறமையை மேம்படுத்த கண்டிப்பான ஊக்க மாகத் திகழுகிறது. கல்வி கற்க சம உரிமை நிலவு கையில், உழைப்பாளிகளின் கல்வி மட்டம் மற்றும் தேர்ச்சி யை உயர்த்த அரசும் தொழிற்சங்கங்களும் பெரும் அக்கறை காட்டும் போது, எல்லா உழைப்பாளிகளின் ஊதிய மட்டத்தையும் உயர்த்துவதற்கு அவசியமான முன்நிபந்தனைகள் தோற்றுவிக்கப்படுகின்றன. தேர்ச்சி மட்டம் அதிகரிப்பதும், செகன்டரி கல்வி பயின்ற தொழி லாளர்களின் எண்ணிக்கை கூடுவதும் மட்டுமின்றி, ஒப்பீட்டளவில் குறைவான மற்றும் நடுத்தர ஊதியம் பெறுபவர்கள், சிக்கலான பருவ நிலைமைகளில் வேலை செய்பவர்கள் போன்றோரின் ஊதியங்களை உயர்த்த மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளும் இதற்குச் சான்று.

உழைப்பின் அளவிற்கும் தரத்திற்கும் ஏற்ற வினியோ கத்தின் கீழ் நுகர்வில் தவிர்க்க இயலாத சமமின்மை ஏற்படும். ஒரே மாதிரியான ஊதியம் குடும்பத்திலுள்ள நபர்களின் எண்ணிக்கையைப் பொறுத்து வெவ்வேறு உண்மையான வருமானமாக அமையும். இச்சமமின்மையை அகற்றுவதில் சமூக நுகர்வு நிதிகள், அதாவது அரசு உழைப்பாளிகளுக்கு வழங்கும் உதவித் தொகைகளும் சலுகைகளும் பெரும் பங்காற்றுகின்றன. இது தொழி லாளர்கள், உத்தியோகஸ்தர்களின் குடும்ப பட்ஜெட்டு களுக்கு கணிசமான உதவியாகும்.

சமூக நுகர்வு நிதிகள் இல்லாமலிருந்து, உழைப்பாளிகள் மாத ஊதியம் மட்டும் பெற்று வந்தார்கள் என்றால் இவர்கள் கூடுதல் செலவு களுக்காக பல சமயங்களில் பெரும் தொகையைச் செலவிட வேண்டி வரும். உதாரணமாக, முனிசிபல் கட்டணங்களுக்காக சுமார் மும்மடங்கும், நர்சரிப் பள்ளி களில் குழந்தைகளைப் பராமரிக்க ஐந்து மடங்கும் அதி கமாகச் செலவிட வேண்டி வரும்.

சமூக நுகர்வு நிதிகளைக் கொண்டு மக்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்த சோஷலிச அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகள் மனிதன் பிறந்தது முதல் முதிய பருவம் வரை நன்கு வாழ உதவுகின்றன. உழைப்பு, உடல் நலப் பாதுகாப்பு, கல்வி, இளம் தலைமுறையினரின் வளர்ப்பு, கலாசார தேவைகளைப் பூர்த்தி செய்தல், வீட்டு வசதிகள், ஓய்வு போன்ற பல்வேறு துறைகளிலும் இந்நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

No comments:

Post a Comment