Monday 7 October 2019

முதலாளித்துவ உற்பத்தி முறையில் சமூகமயமாகி விட்ட பொருளுற்பத்திக்கும் முதலாளித்துவ சுவீகரிப்புக்கும் இடையிலான முரண்பாடு தொடர்ந்து வளர்ச்சியடைதல்- எங்கெல்ஸ்


(முதலாளித்துவ உற்பத்தி முறையில் சமூகமயமாகி விட்ட பொருளுற்பத்திக்கும் முதலாளித்துவ சுவீகரிப்புக்கும் இடையிலான முரண்பாடு, முதலாளித்துவ உற்பத்தி முறையின் வளர்ச்சியோடு முரணும் முற்றுகிறது. தனிச் சொத்துடமையின் விளைவாய் ஏற்படும் இந்த முரண்பாடு பொதுச்சொத்தாகும் வரை தீராது.)

“தனிப்பட்ட உற்பத்தியாளர் தமக்குச் சொந்தமானதும், பொதுவாய்த் தாமே தயாரித்ததுமான மூலப் பொருளைக் கொண்டு தமது சொந்தக் கருவிகளை உபயோகித்து, தமது கரங்களது உழைப்பாலோ, தமது குடும்பத்தாரின் உழைப்பாலோ அதை உற்பத்தி செய்வது தான் வழக்கமாக இருந்தது. இந்த உற்பத்தியாளர் இந்தப் புதிய உற்பத்திப் பொருளைச் சுவீகரிக்கத் தேவையில்லை. இயற்கையாகவே அது முற்றிலும் அவருக்கே உரியதாகி விட்டது. ஆகவே இந்த உற்பத்திப் பொருளில் அவருக்கிருந்த உடைமை அவருடைய சொந்த உழைப்பை அடிப்படையாய்க் கொண்டிருந்தது. வெளியார் உதவி உபயோகிக்கப்பட்டிருந்த சந்தர்ப்பங்களிலும் கூட வழக்கமாய் அது அதிக முக்கியத்துவம் பெறவில்லை; கூலிக்கும் கூடுதலாகப் பிற வகையில் அதற்கு ஈடு செய்வதே வழக்கமாக இருந்தது. கில்டுகளில் வேலை பழகிக் கொண்டோரும் துணையாளர்களும் வேலை செய்தது தாமும் உரிமை பெற்ற கைவினைஞர்களாகும் பயிற்சி பெறுவதற்கே அன்றி சாப்பாட்டுடனான தங்கும் வசதி மற்றும் கூலி பெறுவதற்கோ அல்ல.

பிறகு உற்பத்தி சாதனங்களும் (மற்றும் உற்பத்தியாளர்களும்) பெரிய தொழிலகங்களிலும் பட்டறைகளிலும் குவிந்து செறிந்து மெய்யாகவே சமூகமயமான உற்பத்தி சாதனங்களாக (சமூகமயமான உற்பத்தியாளர்களாக) மாற்றமடை வது நிகழ்ந்தது. ஆனால் இந்த (சமூகமயமான உற்பத்தியாளர்களும்) உற்பத்தி சாதனங்களும் மற்றும் அவற்றின் உற்பத்திப் பொருட்களும் இந்த மாற்றத்துக்குப் பிற்பாடும் முன்பு போலவே இருப்பதாய், அதாவது தனி ஆட்களின் உற்பத்தி சாதனங்களாகவும் உற்பத்திப் பொருள்களாகவும் இருப்பதாய்க் கொள்ளப்பட்டுக் காரியங்கள் நடைபெற்றன இது காறும் உழைப்புச் சாதனங்களின் உடைமையாளர் உற்பத்திப் பொருட்களையும் தாமே சுவீகரித்துக் கொண்டிருந்தார், ஏனெனில் பொதுவாக அது அவரது உற்பத்திப் பொருளாகவே இருந்தது, ஏனையோருடைய உதவி விதிவிலக்காகவே இருந்தது.

இப்பொழுது உழைப்புச் சாதனங்களின் உடைமையாளர் உற்பத்திப் பொருள் தம்முடைய உற்பத்திப் பொருளாய் இல்லாமல் முற்றிலும் ஏனையோர் உழைப்பின் உற்பத்திப் பொருளாய் இருந்த போதிலும் அதைத் தாமே தொடர்ச்சியாகச் சுவீகரித்துக் கொண்டார். இவ்வாறாக, இப்பொழுது சமூக முறையில் உற்பத்தி செய்யப்பட்ட இந்தப் பொருட்கள், உண்மையில் உற்பத்தி சாதனங்களை இயக்கிப் பரிவர்த்தனைப் பொருட்களை உற்பத்தி செய்தோரால் சுவீகரிக்கப் படவில்லை ஆனால் முதலாளிகளால் சுவீகரிக்கப்பட்டன.

உற்பத்தி சாதனங்களும் மற்றும் பொருளுற்பத்தியும் சாராம்சத்தில் சமூகமயமாகி விட்டன. ஆயினும், தனி ஆட்களது தனியார் பொருளுற்பத்தி இருப்பது போலவும் ஆகவே இதன்படி ஒவ்வொருவரும் தமது உற்பத்திப் பொருளுக்குத் தாமே உடைமையாளராய் இருந்து அதைச் சந்தையில் விற்பனை செய்வது போலவும் அமைந்த சுவீகரிப்பு முறைக்கு இந்த உற்பத்தி சாதனங்களும் பொருளுற்பத்தியும் உட்படுத்தப்பட்டன. பொருளுற்பத்தி முறையானது இந்த சுவீகரிப்பு முறைக்கு ஆதாரமாயமைந்த நிலைமைகளை ஒழித்திட்ட போதிலும் அது இம்முறைக்கு உட்படுத்தப்படுகிறது.

புதிய பொருளுற்பத்தி முறைக்கு அதன் முதலாளித்துவத் தன்மையை அளித்திடும் இந்த முரண்பாட்டில் இன்றையச் சமூகப் பகைமைகள் முழுவதன் கரு அடங்கியிருக்கிறது. எல்லா முக்கிய உற்பத்தித் துறைகளிலும் பொருளாதாரத் துறையில் நிர்ணயமான நாடுகள் அனைத்திலும் புதிய பொருளுற்பத்தி முறை எவ்வளவுக்கெவ்வளவு ஆக்கம் பெற்றதோ தனி ஆள் பொருளுற்பத்தியை எவ்வளவுக்கெவ்வளவு சுருங்கச் செய்து அற்பசொற்பமாக்கியதோ அவ்வளவுக்கவ்வளவு, சமூகமயப் பொருளுற்பத்திக்கு முதலாளித்துவ சுவீகரிப்பு ஒவ்வாதென்பது தெளிவாய்ப் புலப்படுத்திக் காட்டப்பட்டது.

முதன் முதலில் தோன்றிய முதலாளிகள் ஏற்கெனவே நாம் கூறியது போல, (பிற உழைப்பு வடிவங்களுடன் கூடவே] கூலியுழைப்பு (சந்தையில்) தமக்குத் தயார் நிலையில் இருப்பதைக் கண்டனர். ஆனால் இது விதிவிலக்காகவும், துணைக் கூறாகவும், இரண்டாந்தரமாகவும், தற்காலியமானதுமான கூலி உழைப்பாக இருந்தது. விவசாயத் தொழிலாளி சில சமயம் நாட்கூலியாய் வேலைக்கு வந்த போதிலும் அவன் எப்படியோ ஒருவாறு பிழைப்பை நடத்துவதற்கான சில ஏக்கர் சொந்த நிலம் வைத்திருந்தான். கைவினைச் சங்க ஒழுங்கமைப்பில் இன்று சங்கத் துணைவினைஞனாக இருந்தவர் நாளை சங்கக் கைவினைஞராக முடிந்தது.

 ஆனால் உற்பத்தி சாதனங்கள் சமூகமயமாகி அவை முதலாளிகள் கைகளில் திரண்டு குவிந்ததும் இவையாவும் மாறலாயின. தனிப்பட்ட உற்பத்தியாளருடைய உற்பத்தி சாதனங்களும் மற்றும் உற்பத்திப் பொருள்களின் மதிப்பும் மேலும் மேலும் குறைந்து போயின; முதலாளியிடம் வேலை செய்யும் கூலித் தொழிலாளியாக மாறுவதைத் தவிர அவருக்கு வேறு வழி ஏதும் இல்லை. இதற்கு முன் விதிவிலக்காகவும் இரண்டாந்தரமாகவும் இருந்த கூலி உழைப்பு இப்பொழுது பொருளுற்பத்தி அனைத்தின் விதி முறையும் அடித்தளமுமாயிற்று; இதன் முன் துணைக் கூறாக இருந்த இது, இப்பொழுது தொழிலாளியின் எஞ்சி நின்ற ஒரே பணியாகி விட்டது. இடையிடையே சிறிது காலம் கூலித் தொழிலாளியாய் வேலை செய்து வந்தவர் வாழ்நாள் முழுதுக்குமே கூலித் தொழிலாளியாகி விட்டார்.

இதே காலத்தில் நிகழ்ந்த பிரபுத்துவ அமைப்பின் தகர்வாலும், பிரபுத்துவக் கோமான்களின் பணியாட்களின் குழுக்கள் கலைக்கப் பட்டதாலும், விவசாயிகள் உடைமை நீக்கம் செய்யப்பட்டுத் தமது குடும்ப நிலங்களிலிருந்து வெளியேற்றப்பட்டதாலும் இன்ன பிறவற்றாலும் இந்த நிரந்தரக் கூலித் தொழிலாளர்களின் எண்ணிக்கை மேலும் பிரம்மாண்டமாக அதிகரித்தது. ஒரு புறம் தமது கைகளில் உற்பத்தி சாதனங்கள் திரண்டு குவிந்திருந்த முதலாளிகளுக்கும், மறுபுறம் தமது உழைப்புச் சக்தி அன்றி வேறு எந்த உடைமையும் இல்லாத உற்பத்தியாளர்களுக்கும் இடையிலான பாகுபாடு முழு நிறைவாக்கப் பட்டது. சமூகமயமாகி விட்ட பொருளுற்பத்திக்கும், முதலாளித்துவச் சுவீகரிப்புக்கும் இடையிலான முரண்பாடு, பாட்டாளி வர்க்கத்துக்கும் முதலாளித்துவ வர்க்கத்துக்கும் இடையிலான பகைமையாய்த் தன்னை வெளிப்படுத்திக் கொண்டது.

தமது உற்பத்திப் பொருள்களின் பரிவர்த்தனையைத் தம்மிடையிலான சமூகப் பந்தமாய் கொண்ட பரிவர்த்தனைப் பண்ட உற்பத்தியாளர்கள், தனிப்பட்ட உற்பத்தியாளர்களின் சமுதாயத்தினுள் முதலாளித்துவப் பொருள் உற்பத்திமுறை புகுந்து தனக்குப் பாதை வகுத்துக் கொண்டதை நாம் கண்டோம். ஆனால் பரிவர்த்தனைப் பண்ட உற்பத்தியை அடிப்படையாய்க் கொண்ட ஒவ்வொரு சமுதாயத்திற்குமுரிய விசேஷ இயல்பு என்னவெனில் உற்பத்தியாளர்கள் தமது சொந்த சமூக இடையுறவுகள் மீதான கட்டுப்பாட்டை இழந்து விட்டார்கள் என்பதே. ஒவ்வொருவரும் தம்மிடம் இருக்கும் படி வாய்த்துள்ள உற்பத்தி சாதனங்களைக் கொண்டு தமக்காகவும், தமது எஞ்சிய தேவைகளை நிறைவு செய்து கொள்வதற்கு அவசியமான பரிவர்த்தனைக்காகவும் உற்பத்தி செய்கிறார்.

குறிப்பிட்ட தனது பண்டம் எந்தளவு சந்தைக்கு விற்பனைக்கு வரும், எந்தளவில் அதற்குத் தேவை இருக்கும் என்பது யாருக்கும் தெரியாது. தாம் உற்பத்தி செய்யும் பண்டத்திற்கு உள்ள படியே தேவை இருக்குமா, அவர் தமது உற்பத்திச் செலவை ஈடு செய்து கொள்ள முடியுமா என்றோ அல்லது தமது பண்டத்தை விற்க முடியப் போகிறதா என்றோ கூடயாருக்கும் தெரியாது. சமூகமயமாகி விட்ட பொருளுற்பத்தியில் அராஜகம் தலைவிரித்தாடுகிறது.

ஆயினும் பரிவர்த்தனைப் பண்ட உற்பத்தி, வேறு எந்த வகையான உற்பத்தியையும் போலவே அதற்கே உரியவையான உள்ளியல்பான விதிகளை, அதனின்று தனியே பிரிக்க முடியாத விதிகளைப் பெற்றிருக்கிறது. அராஜகத்தையும் மீறி இந்த விதிகள் அராஜகத்தினுள்ளும் அதன் வாயிலாகவும் செயல்படுகின்றன. சமூகப் பரஸ்பர உறவுகளின் விடாப்பிடியான ஒரே வடிவத்தில், அதாவது பரிவர்த்தனையில், இவ்விதிகள் தம்மை வெளிப்படுத்திக் கொள்கின்றன. இங்கு இவை போட்டியின் கட்டாய விதிகளாய்த் தனிப்பட்ட உற்பத்தியாளர்களைப் பாதிக்கின்றன.

ஆரம்பத்தில் இவை இந்த உற்பத்தியாளர்களுக்கே தெரியாத விதிகளாய் இருக்கின்றன. இவர்கள் இவற்றைச் சிறிது சிறிதாகவும் அனுபவத்தின் வாயிலாகவும் கண்டுபிடிக்க வேண்டியிருக்கிறது. ஆகவே இவை உற்பத்தியாளர்களைச் சாராது எதேச்சையாகவும் அவர்களுக்கு எதிராகவும் அவர்களது தனிவகைப் பொருளுற்பத்தி முறையின் இரக்கமற்ற இயற்கை விதிகளாய்ச் செயல்படுகின்றன. உற்பத்திப் பொருளானது உற்பத்தியாளர்களை ஆட்சி புரிகிறது.”
(டூரிங்குக்கு மறுப்பு – பக்கம் 470-474)

Sunday 6 October 2019

முதலாளித்துவ உற்பத்தி முறையினுடைய உள்முரண்பாட்டு பற்றியும் அதை நவீனப் பாட்டாளி வர்க்கம் அதனை வீழ்த்துவதின் வரலாற்றுக் பணியை வெளிப்படுத்துவதே விஞ்ஞான சோஷலிசத்தின் கடமை என்பது பற்றியும் எங்கெல்ஸ்:-


“முதலாளித்துவப் பொருளுற்பத்தி முறை வரலாற்றில் உதித்தெழுந்தது முதலாகவே, உற்பத்திச் சாதனங்கள் யாவும் சமுதாயத்தால் சுவீகரிக்கப்பட வேண்டும் என்பதை வருங்காலத்துக்குரிய ஒரு இலட்சியமாகத் தனி மனிதர்களும் குழுவினர்களும் தெளிவற்ற முறையில் கனவு கண்டு வந்துள்ளனர். ஆனால் இது சித்தி பெறுவதற்கு வேண்டிய எதார்த்த நிலைமைகள் தோன்றிய பிறகே இது சாத்தியமாக முடியும், வரலாற்று அவசியமாக முடியும். ஏனைய எந்த ஒரு சமூக முன்னேற்றத்தையும் போலவே இது வர்க்கங்கள் இருப்பது நீதிக்கும் சமத்துவத்துக்கும் இன்ன பிறவற்றுக்கும் முரணாகும் என்று மனிதர்கள் உணர்வதாலோ, அல்லது இந்த வர்க்கங்களை ஒழிக்க வேண்டும் என்று வெறுமனே விரும்புவதாலோ நடைமுறை சாத்தியமாகவில்லை, மாறாக சில குறிப்பிட்ட புதிய பொருளாதார நிலைமைகளின் காரணமாகவே நடை முறை சாத்தியமாகிறது.

சுரண்டும் வர்க்கமாகவும் சுரண்டப் படும் வர்க்கமாகவும், ஆளும் வர்க்கமாகவும் ஒடுக்கப்படும் வர்க்கமாகவும் சமுதாயம் பிளவுண்டதானது முற்காலங்களில் பொருளுற்பத்தியின் வளர்ச்சி பற்றாக்குறையாகவும் குறுகிய வரம்புக்குட்பட்டதாகவும் நிலவியதால் ஏற்பட்டதன் தவிர்க்க முடியாத விளைவாகும். மொத்த சமூக உழைப்பால் கிடைக்கும் உற்பத்திப் பொருட்கள் எல்லோருடைய உயிர் வாழ்வுக்கும் வேண்டிய அத்தியாவசிய அளவைக்காட்டிலும் சொற்ப அளவே அதிகமாய் இருக்கும் வரை, இதன் காரணமாய்ச் சமுதாயத்தின் உறுப்பினர்களில் மிகப் பெருவாரியானோரின் முழு நேரமும் அல்லது அனேகமாய் முழு நேரமும் உழைப்புக்காக ஈடுபடுத்த வேண்டியிருக்கும் வரையில் இந்தச் சமுதாயம் தவிர்க்க முடியாதவாறு வர்க்கங்களாய்ப் பிளவுற்றிருக்க வேண்டியதாகிறது.

முற்றிலும் உழைப்பிலே மட்டும் ஈடுபட வேண்டிய கொத்தடிமைகளான மிகப் பெருவாரியுடன் கூடவே நேரடியான பொருளுற்பத்திக்குரிய உழைப்பில் இருந்து விடுபட்ட ஒரு வர்க்கம் தோன்றி உழைப்பை நெறிப்படுத்தல், அரசு, சட்டம், விஞ்ஞானம், கலை விவகாரங்கள் போன்ற சமுதாயத்தின் பொது அலுவல்களைக் கவனித்து வருகிறது. ஆகவே உழைப்புப் பிரிவினை விதிதான் வர்க்கப் பிரிவினைக்கு அடிப்படையாய் அமைகிறது. ஆனால் இந்த வர்க்கப் பிரிவினை பலாத்காரம், கொள்ளை, சூழ்ச்சி மற்றும் மோசடி மூலம் செயல்படுத்தப்படுவதை இது தடுக்கவில்லை. ஆதிக்க நிலை பெற்றதும் ஆளும் வர்க்கம் தொழிலாளி வர்க்கத்துக்குப் பிரதி கூலமாக தனது ஆதிக்கத்தை உறுதியாக வலுப்படுத்திக் கொள்வதையோ, சமுதாயத்தில் தனக்கிருந்த தலைமையினைப் பெருந்திரளான மக்களை [மேலும் கடுமையாக) சுரண்டுவதற்காக மாற்றிக் கொள்வதையோ இது தடுக்கவில்லை.

ஆனால் வர்க்கப் பிரிவினைக்கு இந்த விதத்தில் வரலாற்று வழியில் ஓரளவு நியாயம் உண்டெனில், இது குறிப்பிட்ட காலத்துக்கு மட்டுமே குறிப்பிட்ட சமூக நிலைமைகளின் கீழ் மட்டுமே உள்ளதாகும். இதற்குப் பொருளுற்பத்தியின் போதாமையே அடிப்படையாக இருந்தது. இது நவீன உற்பத்தி சக்திகளுடைய முழு வளர்ச்சியால் துடைத்தெறியப் பட்டுவிடும். உண்மையில் சமுதாயத்தில் வர்க்கங்கள் ஒழிக்கப் படுவதற்கு வரலாற்று வழியிலான பரிணாம வளர்ச்சி குறிப்பிட்ட ஓர் அளவுக்கு இருப்பது முன் நிபந்தனை யாகும். இந்தப் பரிணாம வளர்ச்சி ஏற்பட்டதும், குறிப்பிட்ட இந்த அல்லது அந்த ஆளும் வர்க்கம் மட்டுமன்றி, ஆளும் வர்க்கம் என்பதாய் எதுவும் இருப்பதும், ஆகவே வர்க்கப் பாகுபாடு இருப்பதும் காலங்கடந்து போய்ச் சிறிதும் ஒவ்வாதனவாகி விடும்.

சமுதாயத்தின் எந்த வர்க்கமும் உற்பத்தி சாதனங்களையும் உற்பத்திப் பொருட்களையும் சுவீகரித்துக் கொள்வதும், அதோடு கூட அரசியல் ஆதிக்கம் செலுத்துவதும், கலாசார ஏகபோகமும் அறிவுத் துறை தலைமையும் வகிப்பதும் தேவையற்றதாவதுடன் வளர்ச்சிக்குப் பொருளாதார வழியிலும் அரசியல் வழியிலும் அறிவுத்துறை வழியிலும் இடையூறாகி விடும்படியான அளவுக்குப் பொருளுற்பத்தி வளர்ச்சியுறுவது வர்க்கங்கள் ஒழிக்கப்படுவதற்குரிய முன் நிபந்தனையாகும்.

இந்த வளர்ச்சி நிலை தற்போது எய்தப்பட்டுவிட்டது. அரசியல் துறையிலும் அறிவுத் துறையிலும் முதலாளித்துவ வர்க்கம் வக்கிழந்து வகையிழந்து விட்டது என்பது முதலாளித்துவ வர்க்கத்துக்கே இனி ஓர் இரகசியமாய் இருப்பதாய்க் கூற முடியாது. இவ்வர்க்கத்தாரின் பொருளாதாரத்திலான வக்கிழந்த வகையிழந்த தன்மை [bankruptcy] பத்தாண்டுக்கு ஒரு தரம் முறையாய் மீண்டும் வெளிப்பட்டு வருகிறது. ஒவ்வொரு தரமும் நெருக்கடியின் போது சமுதாயம் அதனுடைய உற்பத்தி சக்திகள், உற்பத்திப்பொருள்களது சுமையின் கீழ் திணறித் திக்குமுக்காடுகிறது.

இந்த உற்பத்தி சக்திகளையும் உற்பத்திப் பொருட்களையும் சமுதாயத்தால் உபயோகித்துக் கொள்ள முடியவில்லை; உற்பத்தியாளர்களுக்கு நுகர ஏதுமில்லை, ஏனென்றால் நுகருவோர் போதியளவு இல்லை என்னும் இந்த அபத்த முரண்பாட்டின் முன்னால் சமுதாயம் ஒன்றும் செய்ய இயலாததாய் நிற்கிறது. உற்பத்தி சாதனங்களுடைய விரிவகற்சியின் வலிமை முதலாளித்துவ உற்பத்தி முறை அவற்றின் மீது திணித்துள்ள கட்டுக்களை உடைத்தெறிகிறது. இந்தக் கட்டுக்களிலிருந்து உற்பத்தி சாதனங்கள் விடுதலை பெறுவது உற்பத்தி சக்திகள் இடைமுறிவு இன்றி இடையறாது துரித வேகத்தில் வளர்ச்சி பெறுவதற்கும் இவ்விதம் பொருளுற்பத்தி அனேகமாய் வரம்பின்றிப் பெருகிச் செல்வதற்குமான ஒரேயொரு முன் நிபந்தனையாகும்.

இது மட்டுமல்ல. உற்பத்தி சாதனங்களைச் சமுதாயம் சுவீகரித்துக் கொள்வதானது தற்போது - பொருளுற்பத்திமீது இருந்து வரும் செயற்கையான தடைகளை - ஒழித்துக் கட்டுவதோடு கூட இன்று பொருளுற்பத்தியின் - தவிர்க்க முடியாத உடனிணைவுகளாகி நெருக்கடிகளின் போது உச்ச நிலைக்கு உக்கிரமாகிவிடும் உற்பத்தி சக்திகள் மற்றும் உற்பத்திப் பொருள்களின் அப்பட்டமான விரயத்துக்கும் அழிவுக்கும் முடிவு கட்டிவிடும். தவிரவும் இன்றைய ஆளும் வர்க்கங்களும் அவற்றின் அரசியல் பிரதிநிதிகளும் புரிந்து வரும் அர்த்தமற்ற ஊதாரித்தனத்துக்கு முடிவு கட்டுவது மூலம் அது பொதுவில் சமுதாயத்துக்குப் பெரிய அளவில் உற்பத்தி சாதனங்களையும் உற்பத்திப் பொருள்களையும் விடுவித்துக் கொடுக்கும்.

சமூகமயமான பொருளுற்பத்தி மூலம் சமுதாயத்தின் ஒவ்வொரு உறுப்பினருக்கும் பொருளாயத நிலையில் முற்றிலும் போதுமானதும் நாளுக்குநாள் மேலும் பூரணமாகி வருவதுமான வாழ்வை மட்டுமன்றி எல்லோருக்கும் தமது உடல் ஆற்றல்களும் உள்ளத்து ஆற்றல்களும் தங்கு தடையின்றி வளர்ச்சியடைவதற்கும் செயல்படுவதற்கும் உத்தரவாதம் செய்யும் வாழ்வையும் கிடைக்கச் செய்வதற்கான சாத்தியப்பாடு இப்பொழுது இருப்பதோடு, கை வரப் பெறவும் செய்கிறது.

உற்பத்தி சாதனங்களைச் சமுதாயம் கைப்பற்றிக் கொண்டதும், பரிவர்த்தனைப் பண்ட உற்பத்திக்கு முடிவுகட்டப்பட்டு விடுகிறது. இதனுடன் கூடவே உற்பத்தியாளரை உற்பத்திப் பொருள் அடக்கி ஆண்மை செலுத்துவதும் ஒழிந்து விடுகிறது. சமூகப் பொருளுற்பத்தியில் அராஜகம் ஒழிக்கப்பட்டு, திட்டப் பொருத்தமுடைய, உணர்வு பூர்வமான ஒழுங்கமைப்பு உண்டாக்கப்படுகிறது. தனி மனிதனின் பிழைப்புப் போராட்டம் மறைகிறது, இதன்பின் முதன் முதலாய் மனிதன் ஒரு வகை அர்த்தத்தில் விலங்கின உலகிலிருந்து முடிவாய்த் துண்டித்துக் கொண்டு விலங்கின வாழ் நிலைமைகளிலிருந்து வெளிப்பட்டு மெய்யான மனித வாழ் நிலைமைகளினுள் பிரவேசிக்கிறான். மனிதனது சுற்றுச் சார்பாய் அமைந்து, இது காறும் மனிதனை ஆட்சி செய்து வந்த வாழ் நிலைமைகள் இப்பொழுது மனிதனுடைய ஆதிக்கத்துக்கும் கட்டுப்பாட்டுக்கும் உட்பட்டு விடுகின்றன; முதன் முதலாய் மனிதன் இயற்கையின் மெய்யான உணர்வு பூர்வமான அதிபதி ஆகின்றான். ஏனெனில் இப்பொழுது அவன் தனது சமூக ஒழுங்கமைப்பை ஆட்சி புரியும் எஜமானன் ஆகிவிடுகிறான்.

அவனுடைய சமூகச் செயற்பாடுகளின் விதிகள், இது காறும் இயற்கை விதிகளாய் அவனுக்கு அன்னியமாய் இருந்து ஆதிக்கம் செலுத்தி அவனை ஆட்டிப் படைத்த இந்த விதிகள், இனி அவனால் பூரணமாய் உணரப்பட்டுப் பயன்படுத்திக் கொள்ளப்படும்; ஆகவே மனிதன் இவற்றின் மீது ஆண்மை செலுத்துகிறவன் ஆகிவிடுவான். இதுகாறும் இயற்கை மற்றும் வரலாற்றால் தவிர்க்க முடியாதது என்று மனிதனுக்கு எதிராகத் திணிக்கப்பட்டு வந்த மனிதனது சொந்த சமூக ஒழுங்கமைப்பானது இப்போது அவனது கட்டற்ற செயல்பாட்டின் விளைவாகிறது. இதுவரை வரலாற்றை ஆளுமை செய்த அயலான புறநிலை சக்திகள் நேரடியாய் மனிதனது கட்டுப் பட்டின் கீழ்வருகின்றன. அது முதல் தான் மனிதன் முழு உணர்வுடன் தனது சொந்த வரலாற்றைத் தானே படைப்பவனாவான்; அது முதல் தான் அவனால் இயக்குவிக்கப்பட்ட சமுதாய நோக்கங்கள் பிரதானமாயும் இடையறாத அதிகரித்த அளவிலும் அவன் உத்தேசித்த விளைவுகளை அடையும். அவசியத்தின் ஆட்சியிலிருந்து சுதந்திரத்தின் ஆட்சிக்கு மனிதன் வளர்ந்து உயருவதை இது குறிப்பதாகும்.

[வரலாற்றுப் பரிணாம வளர்ச்சி குறித்து நாம் கூறியதைச் சுருக்கமாய்த் தொகுத்தளிப்போம்.

1.மத்திய காலச் சமுதாயம் - தனிப்பட்டோரது சிறு வீதப் பொருளுற்பத்தி. உற்பத்திச் சாதனங்கள் தனிப்பட்டோரது உபயோகத்துக்கு ஏற்றனவாய் இருக்கின்றன; ஆகவே புராதனமாய், செப்பமற்றனவாய், சின்னஞ்சிறியன்வாய், செயலில் சிறுதிறத்தனவாய் இருக்கின்றன. நேரே உற்பத்தியாளர் அல்லது அவரது பிரபுத்துவக் கோமானது உடனடி நுகர்வுக்காகப் பொருளுற்பத்தி நடை பெறுகிறது. இந்த நுகாவுக்கும் கூடுதலாய் உற்பத்தி செய்யப்படும் போது தான் இந்த உபரிப் பொருள் விற்கப்படுகிறது. பரிவர்த்தனைக்கு வருகிறது. ஆகவே - பரிவர்த்தனைப் பண்ட உற்பத்தி பிள்ளைப் பருவத்திலே தான் இருக்கிறது. ஆனால் பொதுவில் சமுதாயத்தின் பொருளுற்பத்தியிலான அராஜகத்தை அது ஏற்கெனவே தன்னுள் கரு வடிவில் கொண்டுள்ளது.

2.முதலாளித்துவப் புரட்சி - தொழில் துறை மாற்றி யமைக்கப்படுதல்; முதலில் எளிய கூட்டுறவு அமைப்பு மற்றும் பட்டறைத் தொழில் இவற்றின் மூலம் இது நடைபெறுகிறது. இது காறும் சிதறிக்கிடந்த உற்பத்தி சாதனங்கள் பெரிய தொழிலகங்களாய் ஒன்று குவிகின்றன. தனி ஆட்களது உற்பத்தி சாதனங்களாய் இருந்தவை இதன் விளைவாய் சமூக உற்பத்திச் சாதனங்களாய் மாற்றப்படுகின்றன. ஆனால் இந்த மாற்றத்தால் மொத்தத்தில் பரிவர்த்தனையின் வடிவம் பாதிக்கப்பட்டு விடவில்லை. பழைய சுவீகரிப்பு முறைகள் மாற்றமின்றி அப்படியே செயல்பட்டு வருகின்றன. முதலாளி தோற்றமளிக்கிறார். உற்பத்திச் சாதனங்களுடைய உடைமையாளர் என்ற முறையில் உற்பத்திப் பொருள்களை அவர் தாமே அபகரித்துக் கொண்டு அவற்றைப் பரிவர்த்தனைப் பண்டங்களாக மாற்றி விடுகிறார். பொருளுற்பத்தி சமூகச் செயலாகி விட்டது. பரிவர்த்தனையும் சுவீகரிப்பும் தொடர்ந்து தனி ஆள் செயல்களாய், தனிப்பட்டோரது செயல்களாய் நீடிக்கின்றன. சமூக உழைப்பினாலான உற்பத்திப் பொருள் தனிப்பட்ட முதலாளியால் சுவீகரித்துக் கொள்ளப்படுகிறது. இந்த அடிப்படை முரண்பாட்டில் இருந்து தான் நமது இன்றைய சமுதாயத்துக்கு உரியவையான எல்லா முரண்பாடுகளும் நவீனத் தொழில் துறையால் பகிரங்கமாக்கப்படும் இந்த எல்லா முரண்பாடுகளும் எழுகின்றன.

அ) உற்பத்தியாளர் உற்பத்திச் சாதனங்களிலிருந்து துண்டித்து விலக்கப்படுதல், தொழிலாளி ஆயுள் முழுதும் கூலி உழைப்பில் உழலும் சாபக்கேட்டுக்கு ஆளாவது. பாட்டாளி வர்க்கத்துக்கும் முதலாளித்துவ வர்க்கத்துக்கும் இடையிலான பகைமை.

ஆ) பரிவர்த்தனைப் பண்டங்களின் உற்பத்தியை ஆளுமை செய்யும் விதிகள் மென்மேலும் தலைமை ஆதிக்கம் பெறு தலும், மேலும் அதிகரித்த பயனுறுதி கொண்டனவாதலும். கட்டுக் கடங்காத போட்டா போட்டி. தனிப்பட்ட ஆலையில் பொருளுற்பத்தியின் சமூகமயமாக்கப்பட்ட ஒழுங்கமைப்புக்கும் பொதுவில் பொருளுற்பத்தியிலான சமூக அராஜகத்துக்கும் இடை பிலான முரண்பாடு.

இ) ஒரு புறத்தில் தனிப்பட்ட ஆலை அதிபர் ஒவ்வொருவருக்கும் போட்டா போட்டியினால் இயந்திர சாதனங்கள் மேலும் மேலும் செம்மை செய்யப்படுதல் கட்டாயமாதலும் இதைத் தொடர்ந்து மேலும் மேலும் அதிகமான தொழிலாளர்கள் வேலையில்லாதாராய் ஆக்கப்படுதலும் - தொழில் துறை ரிசர்வ் பட்டாளம் உருவாதலும் மறுபுறத்தில் பொருளுற்பத்தி வரம்பின்றிப் பெருகிச் செல்லுதல் - இதுவும் போட்டா போட்டியின் கீழ் ஒவ்வொரு ஆலை அதிபருக்கும் கட்டாயமாகி விடுகிறது. இப்படி இரு வழிகளிலும் உற்பத்தி சக்திகள் என்றுமில்லாதபடி வளர்ச்சியடைந்து ஓங்குதல், தரவை சந்தைத் தேவைக்கு விஞ்சியதாகி உபரியாதல், மிகை உற்பத்தி, பண்டங்கள் குவிந்து சந்தைகளில் தேவைக்கு மேல் தேங்கி வழிதல், பத்தாண்டுக்கு ஒரு தரம் நெருக்கடி, நச்சுச் சூழல் - இங்கே உற்பத்திச் சாதனங்களும் உற்பத்திப் பொருள்களும் அமிதமாகி விட்டன; அங்கே தொழிலாளர்கள் அமிதமாக வேலை இன்றி பிழைப்புச் சாதனங்கள் இன்றித் திண்டாடுகின்றனர்.

பொருளுற்பத்திக்கும் மற்றும் சமுதாயத்தின் நல்வாழ்வுக்குமான இந்த இரு நெம்புகோல்களும் ஒன்று சேர்ந்து செயல்பட முடியவில்லை, காரணம் முதலாளித்துவப் பொருளுற்பத்தி முறை முதலில் உற்பத்திப் பொருள்கள் மூலதனமாக மாற்றப்படா விட்டால் உற்பத்தி சக்திகள் செயல்படுவதையும், உற்பத்திப் பொருள்களைப் புழங்க விடாமலும் தடுக்கிறது ஆனால் அவற்றின் அதீத அபரிமிதமே அவற்றை மூலதனமாய் மாறமுடியாதபடி தடுக்கின்றது. இந்த முரண்பாடு ஓர் அபத்தமாய் வளர்ந்து விட்டது: பொருளுற்பத்தி முறை -- பரிவர்த்தனை முறையை எதிர்த்துக் கலகம் புரிகின்றது. முதலாளித்துவ வீர்க்கம் தனது சொந்தப் பொருளுற்பத்தி சக்திகளை நிர் வகிக்கத் திறனற்றதாகி விட்டது என்பது நிரூபிக்கப்பட்ட தீர்ப்பாகி விட்டது.

ஈ) உற்பத்தி சக்திகளுடைய சமூக இயல்பைப் பகுதி அளவுக்கு அங்கீகரிக்கும் படியான பலவந்தம் முதலாளிகளுக்கே ஏற்படுகிறது. பொருளுற்பத்திக்கும் போக்குவரத்துக்குமான மாபெரும் நிலையங்கள் முதலில் கூட்டுப் பங்குக் கம்பெனிகள் பிறகு டிரஸ்டுகள், பிறகு அரசு ஆகியவற்றின் சொத்தாய் மாற்றப்படுதல். முதலாளித்துவ வர்க்கம் தேவையற்ற வர்க்கம் என்பது கண்கூடாக்கப்படுகிறது. அதனுடைய சமூக வேலைகள் யாவும் இப்பொழுது சம்பளச் சிப்பந்திகளால் செய்யப்படுகின்றன.

3. பாட்டாளி வர்க்கப் புரட்சி -- முரண்பாடுகளுக்குத் தீர்வு ஏற்படுகின்றது. பாட்டாளி வர்க்கம் பொது ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றிக் கொள்கிறது. முதலாளி வர்க்கத்தின் கைகளில் இருந்து நழுவிக் கொண்டிருக்கும் சமூகமயமான உற்பத்தி சாதனங்களை இவ்விதம் அது பொதுச் சொத்தாய் மாற்றுகின்றது. இந்தச் செயலின் மூலம் பாட்டாளி வர்க்கம் உற்பத்திச் சாதனங்களை அவை இது காறும் தாங்கி இருந்த மூலதன இயல்பிலிருந்து விடுவித்து, அவற்றின் சமூக இயல்பு செயல்படுவதற்கு முழுச் சுதந்திரம் அளிக்கின்றது. சமூகமயமான பொருளுற்பத்தி இனி முன் கூட்டியே தீர்மானிக்கப்பட்ட திட்டத்தின் அடிப்படையில் நடைபெறுவது சாத்தியமாகிறது. பொருளுற்பத்தியின் வளர்ச்சியானது சமுதாயத்தில் வெவ்வேறு வர்க்கங்கள் இருத்தலை இனிமேல் காலத்திற்கொவ்வாத தாக்குகிறது. சமூகப் பொருளுற்பத்தியில் அராஜகம் எவ்வளவுக்கு எவ்வளவு மறைகிறதோ அவ்வளவுக்கு அவ்வளவு அரசின் அரசியல் அதிகாரம் மடிந்து போகிறது. முடிவில் தனக்கு உரித்தான சமூக ஒழுங் கமைப்பை ஆட்சி புரியும் எஜமானனாகிவிடும் மனிதன், அதே போதில் இயற்கையின் அதிபதியும் ஆகி, தானே தனக்கு எஜமானன் ஆகிறான்- சுதந்திரமடைகிறான்.)

உலகளாவிய இந்த விடுதலைப் பணியினைச் செய்து முடிப்பது நவீனப் பாட்டாளி வர்க்கத்தின் வரலாற்றுக் கடமையாகும். இந்தச் செயலுக்கான வரலாற்று நிலைமைகளையும் அதோடு கூடவே இதன் தன்மையையும் தீர்க்கமாய்ப் புரிந்து கொண்டு, தற்போது ஒடுக்கப்பட்டதாய் இருக்கும் பாட்டாளி வர்க்கத்துக்கு இந்த நிலைமைகளையும் அது செய்து முடிக்க வேண்டிய சகாப்தகரச் சிறப்புடைத்த இந்தப் பணியின் முக்கியத்துவத்தையும் முழு அளவில் தெரியப் படுத்துவது தான் பாட்டாளி வர்க்கத்தின் கோட்பாட்டு வெளியீடாகிய விஞ்ஞான சோஷலிசத்தின் கடமை.”
(டூரிங்குக் மறுப்பு)


முதலாளித்துவத்தின் தோற்றமும் – வளர்ச்சியும் இறுதியில் அதன் அழிவும் பற்றி மார்க்ஸ்:-


“முதலாளித்துவப் பொருளுற்பத்தி முறை தொடக்கத்திலிருந்தே அதற்கென்று உரித்தான இரு சிறப்பியல்புகளால் வேறுபடுத்திக் காட்டப்படுகிறது.

முதலாவது: அது உற்பத்திப் பொருள்களை சரக்குகளாக உற்பத்தி செய்கிறது. அது சரக்குகளை உற்பத்தி செய்கிறது என்ற உண்மை அதனை ஏனையப் பொருளுற்பத்தி முறைகளிலிருந்து வேறுபடுத்துவதில்லை; பார்க்கப் போனால், சரக்காய் இருத்தல் என்பதுதான் முதலாளித்துவப் பொருளுற்பத்தி முறையின் உற்பத்திப் பொருட்களுக்குரிய மேலோங்கிய சிறப்பியல்பும் நிர்ணயிக்கும் தனித்தன்மையும் ஆகும் என்ற உண்மைதான் அதனை அவ்வாறு வேறுபடுத்துகிறது. அனைத்துக்கும் முதலாவதாக இதன் பொருள் என்னவென்றால், தொழிலாளியே வெறும் சரக்கு விற்பவராகவும் இவ்விதம் சுதந்திரக் கூலித்தொழிலாளியாகவும் முன்னுக்கு வருகிறார். இதனால் உழைப்பு என்பதே பொதுவாகக் கூலி உழைப்பாய்த் தோற்றமளிக்கிறது.

ஏற்கெனவே கூறப்பட்டிருப்பதை கருத்தில் கொள்வோமானால், மூலதனத்துக்கும் கூலி உழைப்புக்கும் இடையிலான உறவுதான் பொருளுற்பத்தி முறையின் தன்மையனைத்தையும் நிர்ணயிக்கிறது என்பதை புதிதாக மெய்ப்பித்துக் காட்டுவது தேவையற்றது. இந்தப் பொருள் உற்பத்தி முறையின் முதன்மைச் செயலிகளான முதலாளியும் கூலித் தொழிலாளியும் அந்த வகையில் மூலதனம், கூலி உழைப்பு ஆகியவற்றின் உருக்கள் தான், ஆளுருவங்கள்தான்; சமுதாயப் பொருளுற்பத்தி நிகழ் முறையில் தனியாட்கள் மீது முத்திரையிடப்படும் திட்டவட்டமான சமூகச் சிறப்பியல்புகள்தான்; திட்டவட்டமான இந்தச் சமூக உற்பத்தி உறவுகளின் விளை பயன்கள்தான்.
… … …

மேலும், உற்பத்தியின் சமூகக்குணாம்சங்கள் பொருளுருவம் பெறுவதும் உற்பத்தியின் பொருளாயத அடித்தளங்கள் ஆளுருவம் பெறுவதும் முதலாளித்துவப் பொருளுற்பத்தி முறை அனைத்திற்கும் உரிய சிறப்பியல்பாகிய இது -சரக்கிலேயே உட்கிடக்கையாகும்: சரக்கானது மூலதனத்தின் உற்பத்திப் பொருளாகும்போது இன்னுங்கூட அதிகமாகவே உட்கிடக்கையாகும்.

முதலாளித்துவப் பொருளுற்பத்தி முறையை வேறுபடுத்திக் காட்டும் இரண்டாவது குணாம்சம் உபரி மதிப்பின் உற்பத்தியே பொருளுற்பத்தியின் நேரடிக்குறியும் நிர்ணயிக்கும் நோக்கமுமாய் இருப்பதாகும். அடிப்படையாகப் பார்த்தால் மூலதனம் மூலதனத்தை உற்பத்தி செய்கிறது; உபரி - மதிப்பை உற்பத்தி செய்யும் அளவுக்கே அது இவ்விதம் மூலதனத்தை உற்பத்தி செய்கிறது. ஒப்பீட்டு உபரி - மதிப்பை பரிசீலித்தபோதும், உபரி - மதிப்பு இலாபமாக மாற்றமடைவதைப் பரிசீலித்தபோதும், முதலாளித்துவக் காலத்திற்கே உரித்தான ஒரு பொருளுற்பத்தி முறை எப்படி இதன் அடிப்படையில் உருவாகிறது என்று பார்த்தோம் - உழைப்பின் சமுதாய உற்பத்தித் திறன்களது வளர்ச்சியின் தனிவடிவமாய் இருந்த போதிலும் இது மூலதனத்தின் சுயேச்சையான உற்பத்தித் திறன்களாகத் தொழிலாளியை எதிர் நோக்குகிறது, ஆகவே தொழிலாளியின் வளர்ச்சிக்கு நேரெதிராய் நிற்கிறது.

மதிப்புக்கும் உபரி - மதிப்புக்குமான உற்பத்தி என்பது ஒரு சரக்கை, அதாவது அதன் மதிப்பை உற்பத்தி செய்வதற்கு அவசியமான உழைப்பு நேரத்தை உள்ளபடியே நடப்பிலிருக்கும் சமுதாயச் சராசரிக்குக் கீழானதாய்க் குறைக்கும் போக்கு ஓயாமல் செயல்பட்டு வருவதைக் குறிக்கிறது என்று நமது பகுப்பாய்வின் போக்கில் தெளிவாக்கினோம். அடக்க விலையை அதன் குறைந்தபட்ச அளவாகக் குறைப்பதற்கான நெருக்குதல்தான் உழைப்பின் சமுதாய உற்பத்தித் திறனை உயர்த்துவற்கு மிகவலிய நெம்புகோல் ஆகிறது; ஆனால் உழைப்பின் உற்பத்தித்திறன் இவ்விதம் உயர்ந்தாலும் மூலதனத்தின் உற்பத்தித்திறன் ஓயாமல் உயருவதாகத்தான் இங்கு தோற்றமளிக்கிறது.

நேரடிப் பொருளுற்பத்தி நிகழ்முறையில் மூலதனத்தின் ஆளுருவம் என்ற முறையில் முதலாளி மேற்கொள்ளும் அதிகாரமானது, பொருளுற்பத்தியின் மேலாளர், ஆளுநர் என்ற பொறுப்பில் அவராற்றிடும் சமுதாயச் செயல்பாடானது அடிமைகள், பண்ணை யடிமைகள் முதலானவர்களைக் கொண்டு நடைபெறும் பொருளுற்பத்தியின் அடிப்படையில் செலுத்தப்படும் அதிகாரத்திலிருந்து சாராம்சத்தில் வேறுபட்டதாகும்.
… … …
உழைப்பு கூலியுழைப்பின் வடிவிலும் உற்பத்திச் சாதனங்கள் மூலதனத்தின் வடிவிலும் இருப்பதால் தான் - அதாவது இந்த இன்றியமையாத உற்பத்திக் காரணிகளின் இந்தப் பிரத்தியேகமான சமூக வடிவத்தின் காரணத்தால்தான் - மதிப்பில் (உற்பத்திப் பண்டத்தில்) ஒரு பகுதி உபரி - மதிப்பாகத் தோற்றமளிக்கிறது; இந்த உபரி - மதிப்பு இலாபமாக (வாடகையாக), முதலாளியின் ஆதாயமாக, பயன்படுத்திக் கொள்ளத் தயார்நிலையில் அவருக்குச் சொந்தமாய் இருக்கும் கூடுதல் செல்வமாகத் தோற்றமளிக்கிறது. ஆனால் இந்த உபரி-மதிப்பு இப்படி அவரது இலாபமாகத் தோற்றமளிப்பதால்தான், மறுவுற்பத்தியின் விரிவாக்கத்தை நோக்கமாய்க் கொண்டதும் இந்த இலாபத்தில் ஒரு பகுதியாக அமைவதுமான கூடுதல் உற்பத்திச் சாதனங்கள் புதிய கூடுதல் மூலதனமாகத் தோற்றமளிக்கின்றன; பொதுவாக மறுவுற்பத்தி நிகழ்முறை விரிவாவது முதலாளித்துவத் திரட்டல் நிகழ்முறையாகத் தோற்றமளிக்கிறது.

உழைப்பு கூலி உழைப்பாக வடிவெடுப்பது இந்நிகழ்முறை அனைத்தின் வடிவத்துக்கும் பிரத்தியேகமான பொருளுற்பத்தி முறைக்கும் தீர்மானகரமானது என்றாலும், மதிப்பை நிர்ணயிப்பது கூலி உழைப்பு அல்ல. மதிப்பு நிர்ணயிப்பில் பொதுவான சமுதாய உழைப்பு நேரம் எவ்வளவு என்பதே, சமுதாயம் பொதுவாகத் தன்வசம் வைத்துள்ள உழைப்பு எவ்வளவு என்பதே பிரச்சினையாகும். இந்த உழைப்பளவு பல்வேறு உற்பத்திப் பொருள்களாலும் ஒப்பளவில் கிரகிக்கப்படுவதாக அதனதன் சமுதாய - முக்கியத்துவத்தை நிர்ணயிக்கிறது எனலாம். சமுதாய உழைப்பு நேரம் சரக்குகளின் மதிப்பை நிர்ணயிப்பதில் தீர்மானகரப் பங்கு வகிப்பதன் குறிப்பிட்ட வடிவம் உழைப்பு கூலி உழைப்பாக வடிவெடுப்பதுடனும், இதற்கிணையாக உற்பத்திச் - சாதனங்கள் மூலமாக வடிவெடுப்பதுடனும் தொடர்புடையதாகும் என்பதில் ஐயமில்லை; ஏனென்றால் இந்த அடிப்படையில்தான் சரக்கு - உற்பத்தி பொருளுற்பத்தியின் பொது வடிவமாகிறது.

மேலும், விநியோக உறவுகள்; எனப்படுகிறவற்றையே பரிசீலித்தல் பார்ப்போம். கூலியுழைப்பை முன் தேவையாகக் கொண்டுள்ளது, இலாபம் மூலதனத்தை முன்தேவையாக்கிக் கொண்டுள்ளது. ஆகவே இந்தக் குறிப்பிட்ட விநியோக வடிவங்கள் உற்பத்திச் சாதனங்களின் குறிப்பிட்ட சமூகச் சிறப்பியல்புகளையும் உற்பத்திச் செயலிகளின் குறிப்பிட்ட சமூக உறவுகளையும் முன் தேவைகளாகக் கொண்டுள்ளன. பிரத்தியேகமான விநியோக உறவுகள் இவ்விதம் பிரத்தியேகமான வரலாற்று வழிப்பட்ட உற்பத்தி உறவுகளின் தெரிவிப்பாகுமே தவிர வேறல்ல.

இலாபத்தை எடுத்துக் கொள்வோம்; உபரி - மதிப்பின் இந்தப் பிரத்தியேக வடிவமானது உற்பத்திச் சாதனங்களின் புதிய படைப்பு முதலாளித்துவப் பொருளுற்பத்தியின் வடிவத்தில் நடை பெறுவதற்கான முன்னிபந்தனை ஆகும்; அதாவது இது மறுவுற்பத்தியை ஆளும் - உறவாகும்; மெய்யாகவே தமது இலாபமனைத்தையும் வருவாயாக நுகரமுடியும் என்பது போல் தனியொரு முதலாளிக்குத் தோன்றிய போதிலும் நிலைமை இதுவே. எப்படியானபோதிலும் தனியொரு முதலாளி காப்புறுதி மற்றும் சேமநிதிகள், போட்டியின் விதிகள் போன்றவற்றின் வடிவிலேயே கூட தடை மதில்களைச் சந்திக்கிறார்; இந்தத் தடை மதில்கள் அவருக்குத் தடை போடுகின்றன, இலாபமென்பது சொந்த முறையில் நுகரக்கூடிய உற்பத்திப் பண்டத்தின் வினியோகக் கருத்தினம் மட்டுமல்ல என்பதை அவருக்கு நடைமுறையில் நிரூபித்துக் காட்டுகின்றன.

மேலும் முதலாளித்துவப் பொருளுற்பத்தி நிகழ்முறை அனைத்தும் உற்பத்திப் பொருட்களின் விலைகளால் ஆளப்படுகிறது. ஆனால் ஆளும் உற்பத்தி விலைகள் இலாபவீதத்தின் சமனமாக்கத்தாலும், இதற்கிணையாக பல்வேறு சமுதாயப் பொருளுற்பத்திக் கிளைகளிடையே மூலதனம் வினியோகமானதாலும் ஆளப்படுகின்றன. ஆக, இலாபமென்பது இங்கே உற்பத்திப் பொருட்களின் வினியோகத்தில் அல்லாமல் அவற்றின் உற்பத்தியிலேயே முக்கியக் காரணியாகத் தோற்ற மளிக்கிறது; மூலதனங்களும் உழைப்பும் பல்வேறு உற்பத்திக் கிளைகளிடையிலும் வினியோகமாவதில் ஒரு காரணியாகத் தோற்றமளிக்கிறது. இலாபம் முனைவு இலாபமாகவும் வட்டியாகவும் பிரிவது அதே வருவாயின் வினியோகமாகத் தோற்றமளிக்கிறது. ஆனால் தற்பெருக்கமடையும் மதிப்பாக, உபரி - மதிப்பின் படைப்பாளியாக மூலதனம் வளர்ச்சியடைவதிலிருந்தே, அதாவது நடப்பிலுள்ள பொருளுற்பத்தி நிகழ்முறையின் இந்தப் பிரத்தியேக சமூக வடிவத்திலிருந்தே தொடக்கத்தில் இப்பிரிவினை எழுகிறது. அது கடன் - செலாவணியையும் கடன் - செலாவணி - நிறுவனங்களையும் தனக்குள்ளிருந்தே வகுத்தமைக்கிறது. இவ்விதம் உற்பத்தி வடிவத்தையும் வகுத்தமைக்கிறது. வட்டி போன்றவற்றில், வெளிப்படையாகத் தெரியும் வினியோக வடிவங்கள் நிர்ணயிக்கும் உற்பத்திக் காரணிகளாக விலையில் சேருகின்றன.

… … …
ஆக, விநியோக உறவுகள் எனப்படுகிறவை பொருளுற்பத்தி நிகழ்முறையின் வரலாற்று வழியில் நிர்ணயமான சமூக வடிவங்களுக்கும், மனித வாழ்க்கையின் மறுவுற்பத்தி நிகழ்முறையில் மனிதர்கள் தமக்குள் ஏற்படுத்திக் கொள்ளும் உறவுகளுக்கும் ஏற்ப அமைகின்றன, அவற்றிலிருந்து எழுகின்றன. இந்த விநியோக உறவுகளின் வரலாற்று வழிப்பட்ட தன்மை உற்பத்தி உறவுகளின் வரலாற்று வழிப்பட்ட தன்மையாகும்; உற்பத்தி உறவுகளின் பண்புக் கூறுகளில் ஒன்றுதான் விநியோக உறவுகளில் குறிக்கப்படுகிறது. முதலாளித்துவ விநியோகம் ஏனைய பொருளுற்பத்தி முறைகளில் லிருந்து எழும் விநியோக வடிவங்களிலிருந்து வேறுபடுகிறது; ஒவ்வொரு விநியோக வடிவமும் எந்த உற்பத்தி வடிவத்திலிருந்து அது எழுகிறதோ, எந்த உற்பத்தி வடிவத்துக்கு ஏற்ப அது அமைகிறதோ அந்த பிரத்தியேக உற்பத்தி வடிவத்துடன் சேர்ந்து மறைந்து விடுகிறது.

விநியோக உறவுகள் மட்டுமே வரலாற்று வழிப்பட்டவை, உற்பத்தி உறவுகள் அப்படி அல்ல என்ற கருத்தானது ஒருபுறம் முதலாளித்துவப் பொருளாதாரத்தின் மீதான தொடக்க நிலைப்பட்ட - ஆனால் இன்னமும் அரைகுறையான - விமர்சனத்தின் பார்வையே ஆகும். மறுபுறம் இந்தக் கருத்து சமுதாய பொருளுற்பத்தி நிகழ்முறையையும் சாமான்ய உழைப்பு நிகழ்முறையையும் ஒன்றோடொன்று குழம்பிக் கொள்வதையும் இரண்டையும் ஒன்றாகக் கருதுவதையும் அடிப்படையாகக் கொண்டுள்ளது - சமான்ய உழைப்பு நிகழ்முறை என்பது இயல்பு மீறி - தனிமைப்பட்டுள்ள ஒரு மனிதப் பிறவியாலும் கூட சமுதாயத்தின் உதவியே இல்லாமல் செய்து முடிக்கக் கூடியதாகும். உழைப்பு நிகழ்முறையானது முழுக்க முழுக்க மனிதனுக்கும் இயற்கைக்கும் இடையிலான நிகழ்முறையாக மட்டும் இருக்கும் அளவுக்கு அதன் சாமான்ய அடிக்கூறுகள் சமுதாய வளர்ச்சி வடிவங்கள் அனைத்திற்கும் பொதுவானவையாக இருந்து வருகின்றன.

ஆனால் இந் நிகழ்முறையின் பிரத்தியேக வரலாற்று வடிவம் ஒவ்வொன்றும் அதன் பொருளாயத அடித்தளங்களையும் சமூக வடிவங்களையும் மேலும் வளர்த்தெடுக்கிறது. குறிப்பிட்ட முதிர்ச்சிக்கட்டத்தை அடைந்துவிட்ட போதெல்லாம் பிரத்தியேகமான வரலாற்று வடிவம் களையப்பட்டு இன்னும் உயர்ந்த வரலாற்று வடிவத்துக்கு வழிவிடுகிறது. இப்படியொரு நெருக்கடி வந்து சேரும் தருணத்தை வெளிப்படுத்தும் அடையாளம் என்னவென்றால் ஒருபுறம் விநியோக உறவுகளுக்கும் இவ்விதம் அவற்றுக்குரிய உற்பத்தி உறவுகளின் பிரத்தியேக வரலாற்று வடிவத்துக்கும், மறுபுறம் உற்பத்தி சக்திகளுக்கும் உற்பத்தித் திறன்களுக்கும் அவற்றின் செயலிகளது வளர்ச்சிக்கும் இடையிலான முரண்பாடுகளும் பகைமைகளும் ஆழ அகலமும் பெறுவதாகும். அடுத்து மூள்வது பொருளுற்பத்தியின் பொருளாயத வளர்ச்சிக்கும் அதன் சமூக வடிவத்துக்கும் இடையிலொரு பூசல்"
(மூலதனம்- தொகுதி 3 – பக்கம் 1255-1262)

முதலாளித்துவத்தின் மேலோடு அதாவது பழைமைப்பட்டுப் போன முதலாளித்துவ உற்பத்தி உறவுகள்- உடைத்தெறியப்பட்டு முதலாளித்துவத் தனியுடைமையின் சாவு மணி ஒலிக்கப்படுவதைப் பற்றி மார்க்ஸ்:-


“சுயேச்சையான தனித்த உழைப்பாளி அவரது உழைப்புச் சாதனங்களுடன் ஒன்றிக் கலப்பதன் அடிப்படையிலானதென்று சொல்லத்தக்க. சுயசம்பாத்தியத் தனியுடைமை போய், முதலாளித்துவத் தனியுடைமை வருகிறது; இது பிறர் உழைப்பின் - பெயரளவில் சுதந்தரமான உழைப்பின் - சுரண்டலை, அதாவது கூலியுழைப்பை ஆதாரமாய்க் கொண்டுள்ளது.

இந்த மாற்ற நிகழ்முறை பழைய சமூகத்தை அடி முதல் நுனி வரை போதுமான அளவு சிதைத்ததும், உழைப்பாளிகள் பாட்டாளி களாகவும் அவர்களது உழைப்புச் சாதனங்கள் மூலதனமாகவும் மாறியதும், முதலாளித்துவப் பொருளுற்பத்தி முறை சொந்தக் காலில் நிற்கத் தொடங்கியதும். உழைப்பை மேலும் சமூகமயமாக்குதல் நிலத்தையும் ஏனைய உற்பத்திச் சாதனங்களையும் சமுதாய அளவில் பயன்படக்கூடிய, எனவே பொதுவிலான உற்பத்திச் சாதனங்களாக மேலும் மாற்றுதல், அதே போல் தனிச் சொத் துடைமையாளர்களின் உடைமையை மேலும் பறித்தல் ஆகியவை புது வடிவெடுக்கின்றன. இப்போது உடைமைப் பறிப்புக்கு ஆளாக வேண்டியது சொந்தத்துக்குப் பாடுபடும் உழைப்பாளியல்ல; பல உழைப்பாளிகளைச் சுரண்டும் முதலாளியே.

இந்த உடைமைப் பறிப்பை முதலாளித்துவப் பொருளுற்பத்தியினது உள்ளார்ந்த விதிகளின் செயற்பாடே, மூலதனத்தின் மையப்பாடே நிறைவேற்றுகிறது. எப்போதுமே ஒரு முதலாளி பல முதலாளிகளை விழுங்கி விடுகிறார். இந்த மையப்பாட்டுடன் கூடவே, அதாவது சில முதலாளிகள் பல முதலாளிகளை இவ்வாறு உடைமைப் பறிப்புக்கு ஆளாக்குவதுடன் கூடவே, உழைப்பு நிகழ்முறையின் கூட்டு வேலை வடிவமும், விஞ்ஞானத்தின் உணர்வுபூர்வமான தொழில் நுட்பப் பிரயோகமும், நிலத்தின் முறைவழிச் சாகுபடியும், உழைப்புக் கருவிகளைப் பொதுவில் மட்டுமே பயன்படுத்தக் கூடியவையாக மாற்றுவதும், எல்லா உற்பத்திச் சாதனங்களையும் ஒன்றிணைந்த. சமூகமயமான உழைப்பின் உற்பத்திச் சாதனங்களாக உபயோகிப் பதன் மூலம் அவற்றை சிக்கனப்படுத்துவதும், உலகச் சந்தை என்னும் வலையில் எல்லா மக்கள் சமூகங்களையும் சிக்க வைப் பதும். இத்துடன் முதலாளித்துவ ஆளுகையின் சர்வதேசத் தன்மையும் மேன்மேலும் அதிக அளவில் வளர்கின்றன. இந்த மாற்ற நிகழ்முறையின் அனுகூலங்களை எல்லாம் அபகரித்து ஏகபோகமாக்கிக் கொள்ளும் முதலாளித்துவத் திமிங்கலங்களின் தொகை தொடர்ந்து குறைந்து செல்வதோடு கூடவே, துன்ப துயரமும் ஒடுக்குமுறையும் அடிமைத்தனமும் சீரழிவும் சுரண்டலும் பெருகிச் செல்கின்றன. ஆனால், தொழிலாளி வர்க்கத்தின் எதிர்ப்பும் வளர்ந்து செல்கிறது; இவ்வர்க்கம் தொகையில் தொடர்ந்து பெருகுகிறது. முதலாளித்துவப் பொருளுற்பத்தி நிகழ்முறையின் இயங்கமைப்பே இவ்வர்க்கத்தைக் கட்டுப்பாடு மிக்கதாக்கி, ஒன்று படுத்தி, அமைப்பு வழியில் திரளச் செய்கிறது. மூலதனத்தின் ஏகபோகம், அதனோடு சேர்ந்தும் அதன் ஆளுகையிலும் பிறந்து வளர்ந்த பொருளுற்பத்தி முறைக்குப் பூட்டிய விலங்காகி விடுகிறது. முடிவில், உற்பத்திச் சாதனங்களின் மையப்பாடும் உழைப்பின் சமூகமயமாதலும் வளர்ந்து செல்கையில், அவற்றின் முதலாளித்துவ மேலோடு அவற்றுக்கு ஒவ்வாததாகி விடும் நிலை வருகிறது. ஆகவே அந்த மேலோடு உடைத்தெறியப்படுகிறது. முதலாளித்துவத் தனியுடைமையின் சாவு மணி ஒலிக்கிறது. உடைமை பறிப்போரின் உடைமை பறிக்கப்படுகிறது.

முதலாளித்துவப் பொருளுற்பத்தி முறையிலிருந்து விளைவ தான முதலாளித்துவத் தனதாக்க முறை முதலாளித்துவத் தனியுடை மையைத் தோற்றுவிக்கிறது. உடைமையாளரின் உழைப்பை அடிப் படையாகக் கொண்ட தனியாள் - தனியுடைமையின் முதல் மறுப்பு இது. ஆனால், முதலாளித்துவப் பொருளுற்பத்தி இயற்கை விதிக் குரிய உறுதிப்பாட்டுடன் அதன் மறுப்பையே ஈன்றெடுக்கிறது. இது மறுப்பின் மறுப்பு. இது உற்பத்தியாளருக்குத் தனியுடைமையை மீண்டும் ஏற்படுத்தித் தருவதன்று; முதலாளித்துவ சகாப்தத்தால் வரப்பெற்றதாகிய கூட்டு வேலையின் அடிப்படையிலும், நிலமும் உற்பத்திச் சாதனங்களும் எல்லாருக்கும் பொதுவாய் இருப்பதன் அடிப்படையிலுமான தனியாள் உடைமையை அவருக்கு அளிப்பது ஆகும்.

தனியாள் உழைப்பிலிருந்து பிறக்கும் சிதறலான தனியுடைமையை முதலாளித்துவத் தனியுடைமையாக மாற்றுவது, ஏற்கெனவே நடைமுறையில் சமூகமயமாகி விட்ட பொருளுற்பத்தியை ஆதாரமாய்க் கொண்ட முதலாளித்துவத் தனியுடைமையை சமுதாயப் பொதுவுடைமையாக மாற்றுவதை விடவும் ஒப்பிட முடியாத அளவுக்கு நீண்ட நெடிய நிகழ்முறையாகும்; வன்முறை மலிந்த. கடினமான நிகழ்முறையாகும்; இது இயற்கைதான்.

முதலாவது மாற்றம் உடைமைப் பறிப்பாளர் ஒரு சிலர் மக்கட் பெருந்திரளின் உடைமையைப் பறிப்பதாகும். இரண்டாவது மாற்றம் மக்கட் பெருந்திரள் உடைமையாளர் ஒரு சிலரின் உடைமையைப் பறிப் பதாகும்.”
(மூலதனம்- தொகுதி 1 – பக்கம் – 1025-1027)

இன்றைய முதலாளித்துவ வளர்ச்சியை ஆய்வு செய்வதற்கு மார்க்ஸ் “மூலதனம்” நூலில் ஆய்வு செய்த “ஆய்வு முறையே” மார்க்சியர்களுக்கு இன்றும் வழிகாட்டியாகும். மார்க்ஸ் காட்டியபடியே இன்றைய வளர்ச்சியடைந்த முதலாளித்துவ உற்பத்தி முறையும் நெருக்கடிக்கு உள்ளாகிறது, இதற்கு தீர்வு மார்க்ஸ் “மூலதனம்” நூலில் கூறியதேயாகும்.:-


மார்க்ஸ் ஆய்வு செய்த முதலாளித்துவம் அன்றைக்கு உள்ள முதலாளித்துவம் தான். “மூலதனம்” நூல் மூன்றாம் தொகுதியை, எங்கெல்ஸ் வெளியிடும் போது மூலதனம் நூலில் சொல்லப்பட்ட முதலாளித்துவத்தைவிட அன்றைய முதலாளித்துவம் வளர்ந்து காணப்பட்டது. அந்நூலின்  பின்னுரையில் பங்கு சந்தையைப் பற்றி எங்கெல்ஸ் மூலதனம் நூலில் குறிப்பிட்டதற்கு மேலாக அன்றைய பங்கு சந்தையின் நிலைமை வளர்ந்துவிட்டதைச் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஆனால் முதலாளித்துவ வளர்ச்சியின் உள்முரண்பாடும், மறுவுற்பத்தியின் மூலம் அந்த முரண்பாடுகளும் வளர்ச்சி அடைவதைப் பற்றி மார்க்ஸ் கூறியுள்ளது  தனிவுடைமையை அடிப்படையாகக் கொண்ட முதலாளித்துவத்தின் அடிப்படையாகும். இந்த அடிப்படையின் மூலம் வளர்ச்சி அடைந்து கொண்ட செல்லும் முதலாளித்துத்தின் அழிவையும் அந்த அழிவில் இருந்து மீட்டு எடுப்பதற்கு சோஷலிச உற்பத்தி முறைக்கான சமூக மாற்றமே தீர்வு என்றும் மார்க்ஸ் தெள்ளத்தெளிவாக கூறியிருக்கிறார். இன்றைய பொருளாதார வளர்ச்சியும் அதன் நெருக்கடிகளும் மார்க்சின் ஆய்வு சரி என்பதையே தொடர்ந்து நிறுபித்துவருகிறது.

ஏகாதிபத்திய கட்டத்தினை ஆய்வு செய்ய லெனினுக்கு மார்க்சின் “மூலதனம்” நூலே வழிகாட்டியாக இருந்தது, இன்றைய உலகமயமாதல் கட்டத்திலும் அதுவே வழிகாட்டியாகும்.

மார்க்ஸ் வைத்த அவ்வப் போதைய “முழங்களை” மட்டும் மனப்பாடம் செய்துவிட்டு அது தான் மார்க்சியம் என்று கருதுபவர்கள், இன்றைய வளர்ச்சிக் கட்டத்திற்கு மார்க்சியம் பொருந்தவில்லை என்று ஊளையிடுகின்றனர். மார்க்சியம் வறட்டுச் சூத்திரவாதமல்ல, ஏகாதிபத்திய கட்டத்தில் லெனினியமாக வளர்ந்தது போல் அது வளர்ந்து கொண்டே இருக்கும். அதன் வரலாற்றுக் கடமையை நிறைவேற்றும்வரை வளரும்.

மார்க்சிய அரசியல் பொருளாதாரத்தை மூலதனம் நூலில் படித்து அறிவதற்கு சிரமப்படுபவர்கள் “டூரிங்குக்கு மறுப்பு” என்று எங்கெல்ஸ் எழுதிய நூலில் மார்க்சின் கருத்து தொகுக்கப்பட்டதைப் படித்தறியலாம். “டூரிங்குக்கு மறுப்பு” நூலில் “மூலதனம்” முதல் தொகுதியை மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளது. மற்றவைகளைப் பற்றி குறிப்புகள் மட்டுமே காணப்படும். இருந்தாலும் முதலாளித்துவ உள்முரண்பாட்டையும் அதன் அழிவையும் மார்க்சிய வழியில் எங்கெல்ஸ் அருமையாக தொகுத்தளித்துள்ளார்.
************************************************************************************************************

1) முதலாளித்துவத்தின் மேலோடு அதாவது பழைமைப்பட்டுப் போன முதலாளித்துவ உற்பத்தி உறவுகள்- உடைத்தெளியப்பட்டு முதலாளித்துவத் தனியுடைமையின் சாவு மணி ஒலிக்கப்படுவதைப் பற்றி மார்க்ஸ்:-
https://marxistpoliticaleconomy.blogspot.com/2019/10/blog-post_85.html

3) முதலாளித்துவஉற்பத்தி முறையினுடைய உள்முரண்பாட்டு பற்றியும் அதை நவீனப் பாட்டாளி வர்க்கம் அதனைவீழ்த்துவதின் வரலாற்றுக் பணியை வெளிப்படுத்துவதே விஞ்ஞான சோஷலிசத்தின் கடமை என்பதுபற்றியும் எங்கெல்ஸ்:-https://marxistpoliticaleconomy.blogspot.com/2019/10/blog-post_45.html