“முதலாளித்துவப் பொருளுற்பத்தி முறை வரலாற்றில்
உதித்தெழுந்தது முதலாகவே, உற்பத்திச் சாதனங்கள் யாவும் சமுதாயத்தால் சுவீகரிக்கப்பட
வேண்டும் என்பதை வருங்காலத்துக்குரிய ஒரு இலட்சியமாகத் தனி மனிதர்களும் குழுவினர்களும்
தெளிவற்ற முறையில் கனவு கண்டு வந்துள்ளனர். ஆனால் இது சித்தி பெறுவதற்கு வேண்டிய எதார்த்த
நிலைமைகள் தோன்றிய பிறகே இது சாத்தியமாக முடியும், வரலாற்று அவசியமாக முடியும். ஏனைய
எந்த ஒரு சமூக முன்னேற்றத்தையும் போலவே இது வர்க்கங்கள் இருப்பது நீதிக்கும் சமத்துவத்துக்கும்
இன்ன பிறவற்றுக்கும் முரணாகும் என்று மனிதர்கள் உணர்வதாலோ, அல்லது இந்த வர்க்கங்களை ஒழிக்க வேண்டும் என்று வெறுமனே
விரும்புவதாலோ நடைமுறை சாத்தியமாகவில்லை, மாறாக சில குறிப்பிட்ட புதிய பொருளாதார நிலைமைகளின்
காரணமாகவே நடை முறை சாத்தியமாகிறது.
சுரண்டும் வர்க்கமாகவும் சுரண்டப் படும் வர்க்கமாகவும்,
ஆளும் வர்க்கமாகவும் ஒடுக்கப்படும் வர்க்கமாகவும் சமுதாயம் பிளவுண்டதானது முற்காலங்களில்
பொருளுற்பத்தியின் வளர்ச்சி பற்றாக்குறையாகவும் குறுகிய வரம்புக்குட்பட்டதாகவும் நிலவியதால்
ஏற்பட்டதன் தவிர்க்க முடியாத விளைவாகும். மொத்த சமூக உழைப்பால் கிடைக்கும் உற்பத்திப்
பொருட்கள் எல்லோருடைய உயிர் வாழ்வுக்கும் வேண்டிய அத்தியாவசிய அளவைக்காட்டிலும் சொற்ப
அளவே அதிகமாய் இருக்கும் வரை, இதன் காரணமாய்ச் சமுதாயத்தின் உறுப்பினர்களில் மிகப்
பெருவாரியானோரின் முழு நேரமும் அல்லது அனேகமாய் முழு நேரமும் உழைப்புக்காக ஈடுபடுத்த
வேண்டியிருக்கும் வரையில் இந்தச் சமுதாயம் தவிர்க்க முடியாதவாறு வர்க்கங்களாய்ப் பிளவுற்றிருக்க
வேண்டியதாகிறது.
முற்றிலும் உழைப்பிலே மட்டும் ஈடுபட வேண்டிய கொத்தடிமைகளான
மிகப் பெருவாரியுடன் கூடவே நேரடியான பொருளுற்பத்திக்குரிய உழைப்பில் இருந்து விடுபட்ட
ஒரு வர்க்கம் தோன்றி உழைப்பை நெறிப்படுத்தல், அரசு, சட்டம், விஞ்ஞானம், கலை விவகாரங்கள்
போன்ற சமுதாயத்தின் பொது அலுவல்களைக் கவனித்து வருகிறது. ஆகவே உழைப்புப் பிரிவினை விதிதான் வர்க்கப் பிரிவினைக்கு
அடிப்படையாய் அமைகிறது. ஆனால் இந்த வர்க்கப் பிரிவினை பலாத்காரம், கொள்ளை, சூழ்ச்சி
மற்றும் மோசடி மூலம் செயல்படுத்தப்படுவதை இது தடுக்கவில்லை. ஆதிக்க நிலை பெற்றதும்
ஆளும் வர்க்கம் தொழிலாளி வர்க்கத்துக்குப் பிரதி கூலமாக தனது ஆதிக்கத்தை உறுதியாக வலுப்படுத்திக்
கொள்வதையோ, சமுதாயத்தில் தனக்கிருந்த தலைமையினைப் பெருந்திரளான மக்களை [மேலும் கடுமையாக) சுரண்டுவதற்காக மாற்றிக்
கொள்வதையோ இது தடுக்கவில்லை.
ஆனால் வர்க்கப் பிரிவினைக்கு இந்த விதத்தில் வரலாற்று
வழியில் ஓரளவு நியாயம் உண்டெனில், இது குறிப்பிட்ட காலத்துக்கு மட்டுமே குறிப்பிட்ட
சமூக நிலைமைகளின் கீழ் மட்டுமே உள்ளதாகும். இதற்குப் பொருளுற்பத்தியின் போதாமையே அடிப்படையாக
இருந்தது. இது நவீன உற்பத்தி சக்திகளுடைய முழு வளர்ச்சியால் துடைத்தெறியப் பட்டுவிடும்.
உண்மையில் சமுதாயத்தில் வர்க்கங்கள் ஒழிக்கப் படுவதற்கு வரலாற்று வழியிலான பரிணாம வளர்ச்சி
குறிப்பிட்ட ஓர் அளவுக்கு இருப்பது முன் நிபந்தனை யாகும். இந்தப் பரிணாம வளர்ச்சி ஏற்பட்டதும்,
குறிப்பிட்ட இந்த அல்லது அந்த ஆளும் வர்க்கம் மட்டுமன்றி, ஆளும் வர்க்கம் என்பதாய்
எதுவும் இருப்பதும், ஆகவே வர்க்கப் பாகுபாடு இருப்பதும் காலங்கடந்து போய்ச் சிறிதும்
ஒவ்வாதனவாகி விடும்.
சமுதாயத்தின் எந்த வர்க்கமும் உற்பத்தி சாதனங்களையும்
உற்பத்திப் பொருட்களையும் சுவீகரித்துக் கொள்வதும், அதோடு கூட அரசியல் ஆதிக்கம் செலுத்துவதும்,
கலாசார ஏகபோகமும் அறிவுத் துறை தலைமையும் வகிப்பதும் தேவையற்றதாவதுடன் வளர்ச்சிக்குப்
பொருளாதார வழியிலும் அரசியல் வழியிலும் அறிவுத்துறை வழியிலும் இடையூறாகி விடும்படியான
அளவுக்குப் பொருளுற்பத்தி வளர்ச்சியுறுவது வர்க்கங்கள் ஒழிக்கப்படுவதற்குரிய முன் நிபந்தனையாகும்.
இந்த வளர்ச்சி நிலை தற்போது எய்தப்பட்டுவிட்டது.
அரசியல் துறையிலும் அறிவுத் துறையிலும் முதலாளித்துவ வர்க்கம் வக்கிழந்து வகையிழந்து
விட்டது என்பது முதலாளித்துவ வர்க்கத்துக்கே இனி ஓர் இரகசியமாய் இருப்பதாய்க் கூற முடியாது.
இவ்வர்க்கத்தாரின் பொருளாதாரத்திலான வக்கிழந்த வகையிழந்த தன்மை [bankruptcy] பத்தாண்டுக்கு ஒரு தரம்
முறையாய் மீண்டும் வெளிப்பட்டு வருகிறது. ஒவ்வொரு
தரமும் நெருக்கடியின் போது சமுதாயம் அதனுடைய உற்பத்தி சக்திகள், உற்பத்திப்பொருள்களது
சுமையின் கீழ் திணறித் திக்குமுக்காடுகிறது.
இந்த உற்பத்தி சக்திகளையும் உற்பத்திப் பொருட்களையும்
சமுதாயத்தால் உபயோகித்துக் கொள்ள முடியவில்லை; உற்பத்தியாளர்களுக்கு நுகர ஏதுமில்லை,
ஏனென்றால் நுகருவோர் போதியளவு இல்லை என்னும் இந்த அபத்த முரண்பாட்டின் முன்னால் சமுதாயம்
ஒன்றும் செய்ய இயலாததாய் நிற்கிறது. உற்பத்தி சாதனங்களுடைய விரிவகற்சியின் வலிமை முதலாளித்துவ
உற்பத்தி முறை அவற்றின் மீது திணித்துள்ள கட்டுக்களை உடைத்தெறிகிறது. இந்தக் கட்டுக்களிலிருந்து
உற்பத்தி சாதனங்கள் விடுதலை பெறுவது உற்பத்தி சக்திகள் இடைமுறிவு இன்றி இடையறாது துரித
வேகத்தில் வளர்ச்சி பெறுவதற்கும் இவ்விதம் பொருளுற்பத்தி அனேகமாய் வரம்பின்றிப் பெருகிச்
செல்வதற்குமான ஒரேயொரு முன் நிபந்தனையாகும்.
இது மட்டுமல்ல. உற்பத்தி சாதனங்களைச் சமுதாயம் சுவீகரித்துக்
கொள்வதானது தற்போது - பொருளுற்பத்திமீது இருந்து வரும் செயற்கையான தடைகளை - ஒழித்துக்
கட்டுவதோடு கூட இன்று பொருளுற்பத்தியின் - தவிர்க்க முடியாத உடனிணைவுகளாகி நெருக்கடிகளின்
போது உச்ச நிலைக்கு உக்கிரமாகிவிடும் உற்பத்தி சக்திகள் மற்றும் உற்பத்திப் பொருள்களின்
அப்பட்டமான விரயத்துக்கும் அழிவுக்கும் முடிவு கட்டிவிடும். தவிரவும் இன்றைய ஆளும்
வர்க்கங்களும் அவற்றின் அரசியல் பிரதிநிதிகளும் புரிந்து வரும் அர்த்தமற்ற ஊதாரித்தனத்துக்கு
முடிவு கட்டுவது மூலம் அது பொதுவில் சமுதாயத்துக்குப் பெரிய அளவில் உற்பத்தி சாதனங்களையும்
உற்பத்திப் பொருள்களையும் விடுவித்துக் கொடுக்கும்.
சமூகமயமான பொருளுற்பத்தி மூலம் சமுதாயத்தின் ஒவ்வொரு
உறுப்பினருக்கும் பொருளாயத நிலையில் முற்றிலும் போதுமானதும் நாளுக்குநாள் மேலும் பூரணமாகி
வருவதுமான வாழ்வை மட்டுமன்றி எல்லோருக்கும் தமது உடல் ஆற்றல்களும் உள்ளத்து ஆற்றல்களும்
தங்கு தடையின்றி வளர்ச்சியடைவதற்கும் செயல்படுவதற்கும் உத்தரவாதம் செய்யும் வாழ்வையும்
கிடைக்கச் செய்வதற்கான சாத்தியப்பாடு இப்பொழுது இருப்பதோடு, கை வரப் பெறவும் செய்கிறது.
உற்பத்தி சாதனங்களைச் சமுதாயம் கைப்பற்றிக் கொண்டதும்,
பரிவர்த்தனைப் பண்ட உற்பத்திக்கு முடிவுகட்டப்பட்டு விடுகிறது. இதனுடன் கூடவே உற்பத்தியாளரை
உற்பத்திப் பொருள் அடக்கி ஆண்மை செலுத்துவதும் ஒழிந்து விடுகிறது. சமூகப் பொருளுற்பத்தியில்
அராஜகம் ஒழிக்கப்பட்டு, திட்டப் பொருத்தமுடைய, உணர்வு பூர்வமான ஒழுங்கமைப்பு உண்டாக்கப்படுகிறது.
தனி மனிதனின் பிழைப்புப் போராட்டம் மறைகிறது, இதன்பின் முதன் முதலாய் மனிதன் ஒரு வகை
அர்த்தத்தில் விலங்கின உலகிலிருந்து முடிவாய்த் துண்டித்துக் கொண்டு விலங்கின வாழ்
நிலைமைகளிலிருந்து வெளிப்பட்டு மெய்யான மனித வாழ் நிலைமைகளினுள் பிரவேசிக்கிறான். மனிதனது
சுற்றுச் சார்பாய் அமைந்து, இது காறும் மனிதனை ஆட்சி செய்து வந்த வாழ் நிலைமைகள் இப்பொழுது
மனிதனுடைய ஆதிக்கத்துக்கும் கட்டுப்பாட்டுக்கும் உட்பட்டு விடுகின்றன; முதன் முதலாய்
மனிதன் இயற்கையின் மெய்யான உணர்வு பூர்வமான அதிபதி ஆகின்றான். ஏனெனில் இப்பொழுது அவன்
தனது சமூக ஒழுங்கமைப்பை ஆட்சி புரியும் எஜமானன் ஆகிவிடுகிறான்.
அவனுடைய சமூகச் செயற்பாடுகளின் விதிகள், இது காறும்
இயற்கை விதிகளாய் அவனுக்கு அன்னியமாய் இருந்து ஆதிக்கம் செலுத்தி அவனை ஆட்டிப் படைத்த
இந்த விதிகள், இனி அவனால் பூரணமாய் உணரப்பட்டுப் பயன்படுத்திக் கொள்ளப்படும்; ஆகவே
மனிதன் இவற்றின் மீது ஆண்மை செலுத்துகிறவன் ஆகிவிடுவான். இதுகாறும் இயற்கை மற்றும்
வரலாற்றால் தவிர்க்க முடியாதது என்று மனிதனுக்கு எதிராகத் திணிக்கப்பட்டு வந்த மனிதனது
சொந்த சமூக ஒழுங்கமைப்பானது இப்போது அவனது கட்டற்ற செயல்பாட்டின் விளைவாகிறது. இதுவரை
வரலாற்றை ஆளுமை செய்த அயலான புறநிலை சக்திகள் நேரடியாய் மனிதனது கட்டுப் பட்டின் கீழ்வருகின்றன.
அது முதல் தான் மனிதன் முழு உணர்வுடன் தனது சொந்த வரலாற்றைத் தானே படைப்பவனாவான்; அது
முதல் தான் அவனால் இயக்குவிக்கப்பட்ட சமுதாய நோக்கங்கள் பிரதானமாயும் இடையறாத அதிகரித்த
அளவிலும் அவன் உத்தேசித்த விளைவுகளை அடையும். அவசியத்தின் ஆட்சியிலிருந்து சுதந்திரத்தின்
ஆட்சிக்கு மனிதன் வளர்ந்து உயருவதை இது குறிப்பதாகும்.
[வரலாற்றுப்
பரிணாம வளர்ச்சி குறித்து நாம் கூறியதைச் சுருக்கமாய்த் தொகுத்தளிப்போம்.
1.மத்திய
காலச் சமுதாயம் -
தனிப்பட்டோரது சிறு வீதப் பொருளுற்பத்தி. உற்பத்திச் சாதனங்கள் தனிப்பட்டோரது உபயோகத்துக்கு
ஏற்றனவாய் இருக்கின்றன; ஆகவே புராதனமாய், செப்பமற்றனவாய், சின்னஞ்சிறியன்வாய், செயலில்
சிறுதிறத்தனவாய் இருக்கின்றன. நேரே உற்பத்தியாளர் அல்லது அவரது பிரபுத்துவக் கோமானது
உடனடி நுகர்வுக்காகப் பொருளுற்பத்தி நடை பெறுகிறது. இந்த நுகாவுக்கும் கூடுதலாய் உற்பத்தி
செய்யப்படும் போது தான் இந்த உபரிப் பொருள் விற்கப்படுகிறது. பரிவர்த்தனைக்கு வருகிறது.
ஆகவே - பரிவர்த்தனைப் பண்ட உற்பத்தி பிள்ளைப் பருவத்திலே தான் இருக்கிறது. ஆனால் பொதுவில் சமுதாயத்தின் பொருளுற்பத்தியிலான அராஜகத்தை
அது ஏற்கெனவே தன்னுள் கரு வடிவில் கொண்டுள்ளது.
2.முதலாளித்துவப்
புரட்சி -
தொழில் துறை மாற்றி யமைக்கப்படுதல்; முதலில் எளிய கூட்டுறவு அமைப்பு மற்றும் பட்டறைத்
தொழில் இவற்றின் மூலம் இது நடைபெறுகிறது. இது காறும் சிதறிக்கிடந்த உற்பத்தி சாதனங்கள்
பெரிய தொழிலகங்களாய் ஒன்று குவிகின்றன. தனி
ஆட்களது உற்பத்தி சாதனங்களாய் இருந்தவை இதன் விளைவாய் சமூக உற்பத்திச் சாதனங்களாய்
மாற்றப்படுகின்றன. ஆனால் இந்த மாற்றத்தால் மொத்தத்தில் பரிவர்த்தனையின் வடிவம் பாதிக்கப்பட்டு
விடவில்லை. பழைய சுவீகரிப்பு முறைகள் மாற்றமின்றி அப்படியே செயல்பட்டு வருகின்றன. முதலாளி
தோற்றமளிக்கிறார். உற்பத்திச் சாதனங்களுடைய உடைமையாளர் என்ற முறையில் உற்பத்திப்
பொருள்களை அவர் தாமே அபகரித்துக் கொண்டு அவற்றைப் பரிவர்த்தனைப் பண்டங்களாக மாற்றி
விடுகிறார். பொருளுற்பத்தி சமூகச் செயலாகி விட்டது. பரிவர்த்தனையும் சுவீகரிப்பும்
தொடர்ந்து தனி ஆள் செயல்களாய், தனிப்பட்டோரது செயல்களாய் நீடிக்கின்றன. சமூக உழைப்பினாலான உற்பத்திப் பொருள் தனிப்பட்ட
முதலாளியால் சுவீகரித்துக் கொள்ளப்படுகிறது. இந்த அடிப்படை முரண்பாட்டில் இருந்து தான்
நமது இன்றைய சமுதாயத்துக்கு உரியவையான எல்லா முரண்பாடுகளும் நவீனத் தொழில் துறையால்
பகிரங்கமாக்கப்படும் இந்த எல்லா முரண்பாடுகளும் எழுகின்றன.
அ) உற்பத்தியாளர் உற்பத்திச் சாதனங்களிலிருந்து
துண்டித்து விலக்கப்படுதல், தொழிலாளி ஆயுள் முழுதும் கூலி உழைப்பில் உழலும் சாபக்கேட்டுக்கு
ஆளாவது. பாட்டாளி வர்க்கத்துக்கும் முதலாளித்துவ
வர்க்கத்துக்கும் இடையிலான பகைமை.
ஆ) பரிவர்த்தனைப் பண்டங்களின் உற்பத்தியை ஆளுமை
செய்யும் விதிகள் மென்மேலும் தலைமை ஆதிக்கம் பெறு தலும், மேலும் அதிகரித்த பயனுறுதி
கொண்டனவாதலும். கட்டுக் கடங்காத போட்டா போட்டி. தனிப்பட்ட ஆலையில் பொருளுற்பத்தியின் சமூகமயமாக்கப்பட்ட ஒழுங்கமைப்புக்கும்
பொதுவில் பொருளுற்பத்தியிலான சமூக அராஜகத்துக்கும் இடை பிலான முரண்பாடு.
இ) ஒரு புறத்தில் தனிப்பட்ட ஆலை அதிபர் ஒவ்வொருவருக்கும்
போட்டா போட்டியினால் இயந்திர சாதனங்கள் மேலும் மேலும் செம்மை செய்யப்படுதல் கட்டாயமாதலும்
இதைத் தொடர்ந்து மேலும் மேலும் அதிகமான தொழிலாளர்கள் வேலையில்லாதாராய் ஆக்கப்படுதலும்
- தொழில் துறை ரிசர்வ் பட்டாளம் உருவாதலும் மறுபுறத்தில்
பொருளுற்பத்தி வரம்பின்றிப் பெருகிச் செல்லுதல் - இதுவும் போட்டா போட்டியின் கீழ் ஒவ்வொரு
ஆலை அதிபருக்கும் கட்டாயமாகி விடுகிறது. இப்படி இரு வழிகளிலும் உற்பத்தி சக்திகள்
என்றுமில்லாதபடி வளர்ச்சியடைந்து ஓங்குதல், தரவை சந்தைத் தேவைக்கு விஞ்சியதாகி உபரியாதல்,
மிகை உற்பத்தி, பண்டங்கள் குவிந்து சந்தைகளில்
தேவைக்கு மேல் தேங்கி வழிதல், பத்தாண்டுக்கு ஒரு தரம் நெருக்கடி, நச்சுச் சூழல் - இங்கே
உற்பத்திச் சாதனங்களும் உற்பத்திப் பொருள்களும் அமிதமாகி விட்டன; அங்கே தொழிலாளர்கள்
அமிதமாக வேலை இன்றி பிழைப்புச் சாதனங்கள் இன்றித் திண்டாடுகின்றனர்.
பொருளுற்பத்திக்கும் மற்றும் சமுதாயத்தின் நல்வாழ்வுக்குமான
இந்த இரு நெம்புகோல்களும் ஒன்று சேர்ந்து செயல்பட முடியவில்லை, காரணம் முதலாளித்துவப்
பொருளுற்பத்தி முறை முதலில் உற்பத்திப் பொருள்கள் மூலதனமாக மாற்றப்படா விட்டால் உற்பத்தி
சக்திகள் செயல்படுவதையும், உற்பத்திப் பொருள்களைப் புழங்க விடாமலும் தடுக்கிறது ஆனால்
அவற்றின் அதீத அபரிமிதமே அவற்றை மூலதனமாய் மாறமுடியாதபடி தடுக்கின்றது. இந்த முரண்பாடு
ஓர் அபத்தமாய் வளர்ந்து விட்டது: பொருளுற்பத்தி
முறை -- பரிவர்த்தனை முறையை எதிர்த்துக் கலகம் புரிகின்றது. முதலாளித்துவ வீர்க்கம்
தனது சொந்தப் பொருளுற்பத்தி சக்திகளை நிர் வகிக்கத் திறனற்றதாகி விட்டது என்பது நிரூபிக்கப்பட்ட
தீர்ப்பாகி விட்டது.
ஈ) உற்பத்தி சக்திகளுடைய சமூக இயல்பைப் பகுதி அளவுக்கு
அங்கீகரிக்கும் படியான பலவந்தம் முதலாளிகளுக்கே ஏற்படுகிறது. பொருளுற்பத்திக்கும் போக்குவரத்துக்குமான
மாபெரும் நிலையங்கள் முதலில் கூட்டுப் பங்குக் கம்பெனிகள் பிறகு டிரஸ்டுகள், பிறகு
அரசு ஆகியவற்றின் சொத்தாய் மாற்றப்படுதல். முதலாளித்துவ
வர்க்கம் தேவையற்ற வர்க்கம் என்பது கண்கூடாக்கப்படுகிறது. அதனுடைய சமூக வேலைகள் யாவும்
இப்பொழுது சம்பளச் சிப்பந்திகளால் செய்யப்படுகின்றன.
3. பாட்டாளி
வர்க்கப் புரட்சி --
முரண்பாடுகளுக்குத் தீர்வு ஏற்படுகின்றது. பாட்டாளி வர்க்கம் பொது ஆட்சியதிகாரத்தைக்
கைப்பற்றிக் கொள்கிறது. முதலாளி வர்க்கத்தின்
கைகளில் இருந்து நழுவிக் கொண்டிருக்கும் சமூகமயமான உற்பத்தி சாதனங்களை இவ்விதம் அது
பொதுச் சொத்தாய் மாற்றுகின்றது. இந்தச் செயலின் மூலம் பாட்டாளி வர்க்கம் உற்பத்திச்
சாதனங்களை அவை இது காறும் தாங்கி இருந்த மூலதன இயல்பிலிருந்து விடுவித்து, அவற்றின்
சமூக இயல்பு செயல்படுவதற்கு முழுச் சுதந்திரம் அளிக்கின்றது. சமூகமயமான பொருளுற்பத்தி
இனி முன் கூட்டியே தீர்மானிக்கப்பட்ட திட்டத்தின் அடிப்படையில் நடைபெறுவது சாத்தியமாகிறது.
பொருளுற்பத்தியின் வளர்ச்சியானது சமுதாயத்தில் வெவ்வேறு வர்க்கங்கள் இருத்தலை இனிமேல்
காலத்திற்கொவ்வாத தாக்குகிறது. சமூகப் பொருளுற்பத்தியில் அராஜகம் எவ்வளவுக்கு எவ்வளவு
மறைகிறதோ அவ்வளவுக்கு அவ்வளவு அரசின் அரசியல் அதிகாரம் மடிந்து போகிறது. முடிவில் தனக்கு
உரித்தான சமூக ஒழுங் கமைப்பை ஆட்சி புரியும் எஜமானனாகிவிடும் மனிதன், அதே போதில் இயற்கையின்
அதிபதியும் ஆகி, தானே தனக்கு எஜமானன் ஆகிறான்- சுதந்திரமடைகிறான்.)
உலகளாவிய இந்த விடுதலைப் பணியினைச் செய்து முடிப்பது
நவீனப் பாட்டாளி வர்க்கத்தின் வரலாற்றுக் கடமையாகும். இந்தச் செயலுக்கான வரலாற்று நிலைமைகளையும்
அதோடு கூடவே இதன் தன்மையையும் தீர்க்கமாய்ப் புரிந்து கொண்டு, தற்போது ஒடுக்கப்பட்டதாய்
இருக்கும் பாட்டாளி வர்க்கத்துக்கு இந்த நிலைமைகளையும் அது செய்து முடிக்க வேண்டிய
சகாப்தகரச் சிறப்புடைத்த இந்தப் பணியின் முக்கியத்துவத்தையும் முழு அளவில் தெரியப்
படுத்துவது தான் பாட்டாளி வர்க்கத்தின் கோட்பாட்டு வெளியீடாகிய விஞ்ஞான சோஷலிசத்தின்
கடமை.”
(டூரிங்குக் மறுப்பு)
No comments:
Post a Comment