Friday 28 September 2012

மார்க்சின் மூலதன நூல் வாசிப்பது சிரமமா?


மார்க்ஸ் ரைனிஷ் ஜீட்டுங் பத்திரிகையில் காட்டு விறகுகள் திருட்டு பற்றிய சட்டம், மோஸெல் விவசாயிகடைய நிலைமை ஆகியவைகளைப் பற்றி எழுதும் போது, இது போன்ற பிரச்சினைகளை அரசியல்  மற்றும் தத்துவக் கண்ணோட்டத்தில் பார்ப்பதில் உள்ள போதாமையை உணர்ந்தார். இவைகளுக்குப் பின்னுள்ள பொருளாதார உறவுகளில் அதாவது பொருளாயத நலன்ககளில் இருந்து அணுகவேண்டும் என்ற முடிவுக்கு வந்தவுடன் மார்க்ஸ் பொருளாதார பிரச்சினைகளில் கவனம் செலுத்த தொடங்கினார்.   

இதனைத் தொடர்ந்து சுமார் நாற்பது ஆண்டுகள் அரசியல் பொளாதாரம் பற்றிய ஆய்வில் தமது கவனம் முழுமையையும் செலுத்தினார். இதன் விளைவே இப்போது நமது கையில் இருக்கும் மூலதனம் பற்றிய மூன்று தொகுதிகள்.

மார்க்ஸ் தமது மூலதன நூலின் மூன்று தொகுதிகளுக்கான வரைவை முடித்தவுடன் 1867 ஆகஸ்ட் 16ஆம் நாள் எங்கெல்சுக்கு எழுதிய கடிதம்:-

"அன்புள்ள பிரெட்

...ஆக இந்த தொகுதி முடிக்கப்பட்டு விட்டது. உங்களுடைய உதவியால் மட்டுமே இது சாத்தியப்பட்டது. உங்களுடைய தன்னலமற்ற தியாகம் எனக்காக நீங்கள் செய்யாமல் இருந்திருந்தால், நான் இந்த மிகப் பெரிய மூன்று தொகுதிகளுக்கான பணியை செய்திருக்கவே முடியாது.

முழுமையாக நன்றியுடன் நான் உங்களைக் கட்டித் தழுவிக் கொள்கிறேன்.
..
நன்றி
வாழ்த்துக்கள்,
அன்பிற்குரிய அருமை நண்பர்
உனது
கா.மார்க்ஸ்"
மூலதனம் முதல் தொகுதி 1867 ஆம் ஆண்டில் செப்டம்பர் 14 வெளிவந்தது.

இரண்டாம் (1885), மூன்றாம் தொகுதி (1894) மார்க்ஸ் இறந்த பின் எங்கெல்சால் வெளியிடப்பட்டது.

மூலதனத்தின் நான்காம் தொகுதி என்று மார்க்ஸ் எங்கெல்சால் கூறப்பட்டுவந்த பகுதி எங்கெல்ஸ் இறந்த பின்பு 1905-1910ல் கவுத்ஸ்கியால் வெளியிடப்பட்டது. இப்பதிப்பு தன்னிச்சையான திருத்தங்களோடு வந்திருப்பதால், சோவியத் யூனியன் கம்யூனிஸ்டுக் கட்சியின் கீழ் அமைந்த மார்க்சிய-லெனினிய ஆராய்ச்சிக் கல்லூரியால் மார்க்சின் கையெழுத்துப்படியின் அடிப்படையில் 1854-1961ல் "உபரி-மதப்பின் கோட்பாடுகள்" என்ற பெயரில் மூன்று பகுதிகளாக நான்காம் தொகுதி வெளியிடப்பட்டது.

மார்க்ஸ் மூலதன நூலில் முதலாளித்துவ சமூகத்தின் இயக்கப் போக்கை ஆராய்ந்தார். முதலாளித்துவ சமூகத்தின் தோற்றம், வளர்ச்சி, இறுதியில் அதன் மறைவு பற்றி, வரலாற்று வழியில் விஞ்ஞான முறையில் நிறுவினார்.

மார்க்சின் மூலதன முதல் தொகுதி வெளிவந்து சிலகாலம் வரை நூலைப் பற்றி முதலாளித்துவ சமூகம் ஏதும்பேசாது மவுன சதியாய் அமைதி காத்தது. ஆனால் இதனை சில காலகட்டத்துக்கு மேல் கடைபிடிக்க முடியவில்லை.

மார்க்ஸ்:-
"ஜெர்மானிய முதலாளி வர்க்கத்தின் கற்றாரும் கல்லாதாருமான பிரதிநிதிகள் எனது முந்தைய எழுத்துக்களை எப்படி மவுனம் சாதித்துக் கொன்றார்களோ, அது போலவே "தாஸ் கேபிட்டலையும்" மவுனம் சாதித்தே கொன்று விடலாமென முதலில் முயன்றனர். இந்தத் தந்திரம் இனி காலத்தின் நிலைமைகளுக்குப் பொருந்தாது என்பதைக் கண்டதும் அவர்கள் எனது புத்தகத்தை விமர்சிக்கும் தோரணையில் "முதலாளித்துவ உள்ளத்தை சாந்தப்படுத்துவதற்கான" நியமங்களை எழுதினர். ஆனால் அவர்கள் தொழிலாளர்களின் பத்திரிகையுலகில் தங்களை விடவும் வலிமை வாய்ந்த எதிராளிகளைக் கண்டனர்"
மூலதனம் இரண்டாம் ஜெர்மன் பதிப்புக்குப் பின்னுரை

தொழிலாளி வர்க்கத்தின் விடிவை சுட்டிக்காட்டும் மூலதன நூல் பாட்டாளி வர்க்கத்தின் சித்தாந்த ஆயுதாக விளங்குகிறது. முதலாளித்துவ சமூகத்தில் காணப்படும் தீர்க்க முடியாத முரண்பாடுகள், முதலாளித்துவத்தின் அழிவை நோக்கி எவ்வாறு இட்டுச்செல்கிறது என்பதை விஞ்ஞான முறையில் விளக்கி எழுதியுள்ளார் மார்க்ஸ்.

இப்படிப்பட்ட மூலதன நூல் வாசிப்பது சிரமமானது என்று கூறுவது இன்றைய நிலையில் சரியானதா?

பலபேர் இன்றும் சிரமம் என்று தொடர்ந்து கூறிவருவதை கேட்க முடிகிறது. இதற்கு சாட்சியாக மார்க்சையும் எங்செல்சையும் அழைத்துவருகின்றனர். இது சரியா என்பதை பரிசிலிப்போம்.

மார்க்ஸ்:-
"தொடக்கம் என்றாலே இடர்ப்பாடுதான், இது எல்லா விஞ்ஞானங்களுக்கும் பொருந்தும். ஆகவே, முதல் அத்தியாயம் குறிப்பாகச் சரக்குகளின் பகுப்பாய்வைக் கொண்டுள்ள பிரிவைப் புரிந்து கொள்வது மிகவும் இடர்ப்பாடானது"
மூலதனம் முதல் ஜெர்மன் பதிப்புக்க முன்னுரை

எங்கெல்ஸ்:-
".. ஒரு சங்கடத்தை வாசகருக்கு நாம் தராமலிக்க முடியாது, குறிப்பிட்ட சில சொற்களை, அன்றாட வாழ்க்கையில் மட்டுமல்லாமல் சாதாரண அரசியல் பொருளாதாரத்திலும் அவற்றுக்குள்ள அர்த்தத்தில் இருந்து வேறான அர்த்தத்தில் பிரேயோகித்திருப்பதைச் சொல்கிறோம். இதனைத் தவிர்க்க முடியவில்லை. ஒரு  விஞ்ஞானத்தின் ஒவ்வொரு புதிய கட்டமும் அந்த விஞ்ஞானத்தின் கலைச் சொற்களில் ஒரு புரடசியை அவடிசயமாக்குகிறது"
மூலதனம் ஆங்கலப் பதிப்புக்கு முன்னுரை
மார்க்ஸ்:-
"..நான் கையாண்டுள்ள, இதுகாறும் பொருளாதார விவகாரங்களுக்குப் பிரயோகிக்கப்படாத பகுப்பாய்வு முறையினால் ஆரம்ப அத்தியாயங்கள் படிப்பதற்கு கடினமாயுள்ளன. பிரெஞ்சுப் பொதுமக்கள் எப்போதுமே ஒரு முடிவுக்குவர அவசரப்படக் கூடியவர்கள். பொதுவான கோட்பாடுகளுக்கும், தங்களது உணர்ச்சிகளைக் கிளறி விட்டுள்ள உடனடிப் பிரச்சினைகளுக்கும் இடையிலான தொடர்பை அறியத் துடிப்பவர்கள். ஆகவே தாங்கள் உடனே தொடர்ந்து படிக்க இயலவில்லை என்பதால் அவர்கள் ஆர்வமிழக்கலாம் என அஞ்ச வேண்டியயுள்ளது.

உண்மையைக் காணத் துடிக்கிற வாசகர்களை முன்கூட்டேயே எச்சரித்து, முன்கூட்டியே ஆயத்தப்படுத்துவதன் மூலம் அல்லாமல் சங்கடத்தை சாமாளிக்கச் சக்தியற்றவனாய் இருக்கிறேன். விஞ்ஞானத்துக்கு ராஜபாட்டை ஏதுமில்லை, அதன் களைப்பூட்டும் செங்குத்துப பாறைகளில் ஏறத் துணிந்தவர்களுக்கே அதன் ஒளிரும் உச்சிகளை எய்துகிற வாய்ப்புண்டு"
மூலதன பிரெஞ்சுப் பதிப்புக்கு முன்னுரை



இதுபோன்ற எச்சரிக்கைகள் படிக்கத் தூண்டுவதற்கு எழுதப்பட்டவையே. ஆனால் இன்றுவரை இதனை நமது மக்களிடையே படிக்கத் தடை ஏற்படுத்துவதற்கே பயன்படுத்தப் படிருக்கிறது.

மார்க்ஸ், எங்கெல்ஸ் ஆகியோரின் எச்சரிக்கையை நேரடியாக படித்தாலே மூலதன நூலைப் படிக்கத் தூண்டும் வகையில் எழுதப்பட்டிருப்பதை அறிந்து கொள்ள முடிகிறது.

முதலில் இந்த எச்சரிக்கைகள் சுமார் 150 ஆண்டுகளுக்கு முன்புள்ள நிலைமையினை குறிப்பிடுவதாகும். எங்கெல்ஸ் குறிப்பிட்ட சில சொற்களை, அன்றாட வாழ்க்கையில் மட்டுமல்லாமல் சாதாரண அரசியல் பொருளாதாரத்திலும் அவற்றுக்குள்ள அர்த்தத்தில் இருந்து வேறான அர்த்தத்தில் பிரேயோகித்திருப்பதைச் சொல்கிறோம்.என்று குறிப்பிடுவது இன்றைக்கு அப்படியே எவ்வாறு பொருந்தும். மார்க்சின் அரசியல் பொருளாதாரக் கலைச்சொற்கள் பயன்பாட்டுக்கு வந்து சுமார் 150 ஆண்டுகள் நெருங்க்கிவிட்டன. தமிழகத்திலும் மார்க்சின் அரசியல் பொருளாதாரம் அறிமுகமாகி பல பத்து ஆண்டுகள் கடந்து விட்டன. உபரி மதிப்பு, உழைப்பின் இரட்டைத் தன்மை, சரக்கின் இரட்டை மதிப்பு போன்றவை புத்தம்புதிய சொற்களாக இன்றும் எவ்வாறு இருக்க முடியும். அப்படி புதிதாக இருந்தால் இதுவரை மார்க்சிய அரசியல் பொருளாதாரத்தை படிக்க முயற்சிக்கவே இல்லை என்பதே உண்மை. முயச்சிக்காதவருக்கு எப்போதும் எல்லாமும் சிரம்மே.

மார்க்சிய அரசியல் பொருளாதாரத்தின் கலைச்சொற்கள் தமக்கு இன்னும் அறிமுகமாகவில்லை என்றாலோ, புரியவில்லை என்றாலோ அவர்கள் தங்களை எப்படி மார்க்சியவாதியாக கருத முடியும்.

மூலதன நூல் பாட்டாளி வார்க்கத்தை எவ்வாறு சுரண்டுகிறது என்பதையும், அதனை அறிந்து தமது போராட்டத்தையும், அரசியலையும், சித்தாந்தத்தையும் அமைத்துக் கொள்ள வேண்டியவராக இருக்கின்றனர். அதனால் மூலதன நூல் பாட்டாளி வர்க்கத்துக்கு புரியாது என்பது அபத்தமேயாகும். அவர்கள் வாழ்நிலையும் அவர்களுக்கான போராட்டமும் அவர்களுக்கான தத்துவமும் எவ்வாறு அவர்களுக்கு புரிந்துகொள்ள முடியாமல் போகும். 

எங்கெல்ஸ்:-
என்னுடைய மாற்றங்கள் ஒரேயொரு விவகாரம் பற்றியவை. மூலத்தின்படி தொழிலாளர் தமது உழைப்பைக் கூலிக்காக முதலாளியிடம் விற்கிறார். ஆனால் இங்குள்ள வாசகத்தின்படி அவர் தமது உழைப்பு சக்தியை விற்கின்றார். இப்படி நான் மாற்றம் செய்திருப்பதற்குரிய விளக்கத்தைக் கூறுவது எனது கடமையாகும். இது வெறும் சொற் சிலம்பமல்ல, மாறாக அரசியல் பொருளாதாரம் அனைத்திலுமே மிக முக்கிய விவகாரங்களில் ஒன்றாகும் என்பதைத் தொழிலாளர்கள் கண்டு கொள்ளும் பொருட்டு, நான் அவர்களுக்கு இந்த விளக்கத்தைக் கூறக் கடமைப்பட்டிருக்கிறேன். படிக்காத தொழிலாளர்கள்  - மிகவும் சிக்கலான பொருளாதாரப் பகுத்தாய்வுகளையும் சுலபமாக இவர்களுக்குப் புரிய வைத்துவிட முடிகிறது- மண்டைக் கனம் கொண்ட நமது  மெத்தப் படித்தவர்களைக்  காட்டிலும்- இப்படிப்பட்ட சிக்கலான பிரச்சினைகள் இந்த மெத்தப் படித்தவர்களுக்கு வாழ்நாள் முழுதும் தீராப் புதிர்களாகவே இருக்கின்றன  ..
கூலியுழைப்பும் மூலதனமும்

உண்மையில் படிக்காத தொழிலாளர்களுக்கு மிகவும் சிக்கலான பொருளாதாரப் பகுத்தாய்வுகளையும் சுலபமாக புரிய வைத்திட முடிகிறது, மண்டைக் கனம்பிடித்த மெத்த படித்தவர்களுக்கே இப்படிப்பட்ட சிக்கலான பிரச்சினைகள் வாழ்நாள் முழுதும் தீராப் புதிர்களாக காணப்படுகிறது. இந்த மெத்த படித்தவர்களுக்கு புரியாமல் போவதற்கு அவர்களிடம் பாட்டாளிவர்க்கப் சார்பும், பாட்டாளி வர்க்க தத்துவப் போக்கும் இல்லமையே காரணமாகும். இவர்கள் பாட்டாளி வாக்கத்துக்கான அறிவுவழிபட்டவர்கள் அல்ல. இந்த மெத்த படித்தவர்களுடன் போராடுவது வீண்வேலை. இவர்களின் சதிவலையிலிருந்து கம்யூனிஸ்டுகள் முதலில் விடுபடவேண்டும்.

நாம் மூலதனத்தை படித்தறிவதற்கான முயற்சியில் இறங்குவோம். இதற்கு மார்க்ஸ், எங்கெல்ஸ், லெனின் போன்றோர்கள் நமக்கு வழிகாட்டியிருக்கிறார்கள். அவ்வழியில் செல்லும்போது மூலதன வாசிப்பில் சிரமம் தெரியாது.