Tuesday 4 September 2012

5. அறநெறி


சமூகத்தில் நிறைய மரபுகளும், நியதிகளும் வழக்கத்தில் உள்ளன. இவற்றில்  சில நியதிகள் அரசாங்கத்தின் சட்டங்களால் வகுக்கப்பட்டு நடைமுறைப் படுத்தப்படுகிறது. சட்டத்தின் மூலம் கடைபிடிக்க வேண்டியது மக்களுக்கு கட்டாயமாக்கப்படுகிறது. பிற நியதிகள் பொதுமக்களின் பழக்க வழக்கங்களால் உண்டாகின்றன. இவை அறநெறி, ஒழுக்கநெறி மற்றும் நீதிநெறி போன்றவையாகும். இதனை எளிதாக மக்கள் தாங்களே பின்பற்றிக் கொள்கின்றனர்.

                இந்த அறநெறி பண்டைய மக்களிடையே ஒருவர் மற்றொருவருடனும், பொதுவாக இனத்தினினுள் கொண்டுள்ள உறவுகளின் அடிப்படையில் தோன்றியது. செய்யக் கூடியது, செய்யக் கூடாதது, ஏற்கக் கூடியது, ஏற்கக் கூடாதது என்பவை அன்றைய சமூகத்தில் மக்கள் தங்களுக்கிடையில் கூட்டுக் கருத்துக்களின் அடிப்படையில் உருவாக்கிக்கொண்டனர். இந்தக் கருத்துக்கள் அன்றை இனமக்களின் அனுபவங்கள், மற்றும் பழக்கவழக்கங்களின் தொகுப்பாக இருந்தது. அறநெறி மரபுகளும், பழக்கங்களும் மிகுந்த வலுவுள்ளவையாக இருக்கிறது. சில அறநெறிகள் தாம் தோன்றுவதற்கு காரணமாக இருந்த பொருளாதார நிலைமைகள் மாற்றமடைந்த பின்னரும் கூட நீண்டநெடிய காலத்திற்கு நீடித்து செல்கிறது. அதன் தோற்றப் பொருள் மாற்றம்பெற்று வேறொரு பொருள்கொண்டேனும் அவை நீடித்து நிற்கிறது.

                இந்த அறநெறியின் தோற்றம், மதம் தோன்றுவதற்கு முன்பாக ஏற்பட்டவையாகும். அதாவது அறநெறி என்னும் சமூக உணர்வுநிலையின் வடிவம் மிகப் பழைமையானது. பிறகு இதனை மதம் தம்முள் இணைத்துக் கொண்டது. இதனைத் தொடர்ந்து, மதம் அறநெறி என்பது கடவுளின் விருப்பம் என்றும், கடவுளின் கட்டளை என்றும் கூறத் தொடங்கின.

                மார்க்சியம் இதனை மறுத்து, அறநெறியின் தோற்றம், சமூக வளர்ச்சியின், பொருளாதார உறவுகளின் மாற்றத்தின் அடிப்படையில்  உருவானவை என்று விளக்குகிறது. அதன் வர்க்க சார்பையும் வெளிப்படுத்துகிறது. பகைமைக் கொண்டுள்ள ஒரு சமூகத்தில் அனைவருக்கும் பொதுவான ஒரே அறநெறி இருக்கமுடியாது என்பதை வலியுறுத்துகிறது.

தொடக்க காலத்திலிருந்து, சுரண்டலை பொதுவாக அநீதியை எதிர்த்து போராடாதே, பொறுமையைக் கடைபிடி, எது உனக்கோ, அதுவே உனக்கு கிடைத்தவை, கிடைத்ததைக் கொண்டு வாழ், உழைப்பது உன் கடமை, பலனை எதிர்ப்பார்க்காதே, ஊரோடு ஒத்துவாழ் போன்றவை ஆளும் வர்க்கத்துக்கு சாதகமான அறநெறியாகும்.

கிடைத்தைக் கொண்டு ஏன் பொறுமையாக இருக்க வேண்டும், நமக்கு வேண்டியதை நாமே எடுத்துக்கொள்வோம், உழைப்பை செலுத்தியவருக்கு இல்லாத உரிமையா? என்பவை அராஜகவாத போக்காகும், இதனால் சமூகத்தில் எந்த மாற்றமும் ஏற்பட்டதில்லை, மக்களுக்கு எந்தப் பயனும் கிடைத்திடல்லை. இவர்கள் சமூக வளர்ச்சியையும், மாற்றத்தையும் கணக்கில் எடுத்துக் கொள்ளாமல், தனிப்பட்டவரின் விருப்பம், அல்லது குழுவினது விருப்பத்தை நிறைவேற்றிக் கொள்ள முயல்கின்றனர். இது குறுங்குழுவாதமாய் வடிவெடுக்கிறது.

                அடுத்து தொழிலாளிகளின் அறநெறி, கிடைப்பதைக் கொண்டு வாழ்வதும், உடன் உழைக்கும் தொழிலாளியுடன் சேர்ந்து தமது தேவைகளுக்காக போராடுவதும், சுரண்டல் முறையை எதிர்ப்பதுடன், அதனை நீக்குவதற்கான வழியை கடைபிடிப்பதும், இந்த நோக்கோடு செயற்படும் விவசாயத் தோழர்களையும் இணைத்துக் கொள்வதும், அதற்கு சார்பான அறநெறிகளைப் பின்பற்றுவதும் தொழிலாளி வர்க்க அறிநெறியாகும்.

                இனக்குழு தம் வளர்ச்சியின் இறுதி கட்டத்தில் இருந்த போது, மிகுந்த குழப்பமும், போட்டியும் உடையதாக இருந்தது. அப்போது ஏற்பட்ட சண்டைகள் மிகவும் கொடுரமாக இருந்ததன. பல்லுக்கு பல், ரத்தத்திற்கு ரத்தம் என்பது போன்ற போக்கு இருந்தது. பிறகு வர்க்கச் சமூகம் தோன்றிய பின், சமூகத்தில் அமைதியை எதிர்பார்த்தபோது பழிக்குபழி என்றபோக்கு மாற வேண்டிவந்தது. மன்னிக்கும் மனோ நிலை உருவானது அப்போது ஒரு கன்னத்தில் அடித்தால், மறுகன்னத்தைக் காட்டச் சொல்லிற்று, அவர் நாண நன்னயம் செய்வதை விரும்பியது.

எங்கெல்ஸ் கூறுகிறார்:-
இன்றைய சமுதாயத்தின் மூன்று வர்க்கங்களான நிலவுடைமைப் பிரபுக்       குலம், முதலாளி வாக்கம் மற்றும் பாட்டாளி வர்க்கம் ஒவ்வொன்றுக்கும்    அவற்றுக்கே உரிய ஒழுக்கநெறி இருப்பதை காணும் பொழுது நாம் ஒரு முடிவுக்கு மட்டுமே வரமுடியும், கடைசியாக நோக்குமிடத்து மனிதர்கள் தமது வர்க்க நிலைமை அடிப்படையாகக் கொண்டிருக்கும் நடைமுறை உறவுகளிலிருந்தே - அவர்கள் உற்பத்தியையும் பரிவர்த்தனையையும் நடத்தி வரும் பொருளாதார உறவுகளிலிருந்தே - உணர்வு பூர்வமாகவோ அல்லது உணர்வுபூர்வம் இன்றியோ தமது அறநெறிக் கருத்துக்களைப் பெறுகிறார்கள்.

... ஜங்கம சொத்துக்களின் தனியார் உடைமை வளரத் தொடங்கிய தருணம் முதல் இந்தத் தனியார் உடமை நிலவிய எல்லா சமூகங்களும் இந்த ஒழுக்க நெறி ஆணையைப் பொதுவாக வைத்திருக்க வேண்டியிருந்தது, நீ திருடக்கூடாது. இதன் மூலம் இந்த ஆணை ஒரு சாசுவத ஒழுக்க நெறி        ஆணையாகி விடுமா? எவ்வழியிலும் ஆகாது. திருடுவதற்கான எல்லாச் செயல் நோக்கங்களும் அறவே ஒழிக்கப்பட்ட ஒரு சமுகத்தில் அதன் காரணமாக அதிகமாய்ப் போனால் பைத்தியக்காரர்கள் மட்டுமே எப்பொழுதாவது திருடுவார்கள் என்ற நிலையில்  நீ திருடக் கூடாது  என்ற சாசுவத உண்மையினை பயபக்தியுடன் பறைசாற்ற முயலும் ஒர் ஒழுக்கநெறிப் பிரசாரகர் எவ்வாறு சிரிப்புக்கு ஆளாவார் தெரியுமா!

எனவே, ஒழுக்க நெறி உலகத்திற்கும் அதன் நிரந்தரக் கோட்பாடுகள் உள்ளன, அவை வரலாற்றுக்கும் நாடுகளிடையான வேற்றுமைகளுக்கும் அப்பாற்பட்டு நிற்பவை என்ற சாக்கில் ஒரு சாசுவதமான அறுதியான என்றென்றும் மாற்றவொண்ணா அறநெறி விதி என்ற முறையில் ஏதேனும் ஓர் ஒழுக்க நெறி சூத்திரத்தையும் எம்மீது திணிக்க  நடத்தும் ஒவ்வொரு முயற்சியையும் நாம் நிராகரிக்கிறோம். இதற்கு மாறாக, இறுதியாக ஆய்வுசெய்து பார்க்கும் பொழுதில் இதுகாறுமுள்ளதான எல்லா ஒழுக்கநெறிக் கொள்கைகளும் அந்தந்தக் காலங்களில் நிலவிய சமூகத்தின் பொருளாதார நிலைமைகளின் விளைவே என்று நாம் மெய்ப்பித்து நிலைநிறுத்துகிறோம். சமூகம் இதுவரையில் வர்க்கப் பகைமைகளிலேயே இயங்கி வந்திருப்பதால், ஒழுக்க நெறி எப்பொழுதுமே வர்க்க ஒழுக்க நெறியாக இருந்து வந்துள்ளது, அது     ஒன்றா ஆளும் வர்க்கத்தின் ஆதிக்கத்தையும் மற்றும் நலன்களையும் நியாயப்படுத்தியுள்ளது அல்லது ஒடுக்கப்பட்ட வர்க்கம் போதியளவு வலுப்பெறத் தொடங்கியது முதல் இந்த ஆதிக்கத்திற்கு எதிரான அதன் கோபாவேசத்தின், ஒடுக்கப்பட்டவர்களின் எதிர்கால நலன்களின் சின்னமாக அமைந்துவிட்டது.                  
- டூரிங்குக்கு மறுப்பு - பக்கம்   165 - 167

                சமூகத்தில் பொதுவான அறநெறி என்று சில தொடர்ந்து வருவதும் உண்டு. குழந்தைகளின் மீது பெற்றோருக்கு இருக்கும் அக்கறை, பெற்றோர்களின் மீது குழந்தைகளுக்கு இருக்கும் அன்பு, மூத்தோரை மதித்தல், தன்னடக்கம், பொறுமை, சொன்னசொல் காப்பாற்றுதல் போன்றவை இவ்வகையைச் சார்ந்தது. இந்தப் பொதுவான அறநெறிகள் தோன்றிய காலத்தில் வர்க்க சார்பு இல்லாமல் இருந்த போதிலும், பிற்பாடு ஏற்பட்ட வர்க்க சமூதாயத்தில், அதற்குள் வர்க்க நலன்கள் இணைந்து கொண்டன.

No comments:

Post a Comment