Tuesday, 4 September 2012

சமூக வளர்ச்சியின் அடித்தளம்


(1.உற்பத்திச் சக்திகள்  (Productive Forces) 2.உற்பத்தி உறவுகள் (Relation of Production) 3.இவை இரண்டுக்குமான இயக்கவியல் தொடர்புகள் )


உற்பத்திச் சக்திகள்  (Productive Forces)

பொருள் உற்பத்தியே சமூகத்தின் அடிப்படையாகும். மக்கள், வாழ்வதற்கு உணவு, உடை, உறைவிடம் போன்ற தேவையான பொருளை உற்பத்தி செய்ய வேண்டியுள்ளது. வாழ்விற்கான பொருட்களை  தோற்றுவிக்கும்மக்களின் செயற்பாடுதான் உற்பத்தி என்றழைக்கப்படுகிறது. இந்த உற்பத்தி நிகழ்த்துவதற்கு, உழைப்பின் குறிப்பொருள், உழைப்புக் கருவிகள், உழைப்பு ஆகிய மூன்றும் தேவைப்படுகிறது.

1,உழைப்பின் குறிப்பொருள் (Objects of labour)

                உற்பத்தியை தொடங்குவதற்கும், விளைபொருட்களைச் செய்வதற்கும் தேவைப்படும் பொருளை உழைப்பின் குறிப்பொருள் என்றழைக்கப்படும். அதாவது  எந்தப் பொருட்களின் மீது உழைப்பாளி, தமது உழைப்பை செலுத்துகிறாரோ, அந்தப் பொருள் உழைப்பின் குறிப்பொருள்.

தொடக்க காலத்தில் இயற்கையில் இருந்து மட்டுமே, உழைப்பின் குறிப்பொருளை எடுத்துப் பயன்படுத்தினர். அவ்வாறு இயற்கையிலிருந்து எடுக்கப்படும் போது, அவை உற்பத்திச் சக்தியாகிறது. கையாளப்படாத பொருட்கள் வெறும் இயற்கையின்  ஒரு பகுதி என்று தான் அழைக்கப்படும்.

உழைப்பின் குறிப்பொருள் இரண்டு வகைப்படும். ஒன்று இயற்கையில் நேரடியாக கிடைப்பவை, அவை பூபூமியிலிருந்து கிடைக்கும் கனிமவளங்கள், நீரிலிருந்து கிடைக்கும் மீன்கள், வனப்பொருட்கள் மற்றும் நிலம் போன்றவை. சாகுபடிக்கு உகந்த நிலமே விவசாயத்திற்குரிய உழைப்பின் குறிப்பொருளாகும்.

மற்றது, ஏற்கெனவே உழைப்பிற்கு உட்படுத்தப்பட்டதான கச்சாப்பொருட்கள். நூற்பாலைக்குத் தேவையான பருத்தி, ஏற்கெனவே உருக்கி ஆயத்தமான நிலையிலுள்ள  இரும்பு, அதாவது இரும்பைக் கொண்டு உருவாக்கப்படும் பொருளுக்கு, இரும்பு கச்சாப்பொருளாகும், இது போன்றவை இவ்வகையினைச் சேர்ந்ததாகும்.

உழைப்புச் செயல்பாட்டில் உழைப்புக் கருவிகளைக் கொண்டு, மனிதன் தனது தேவைகளை  நிறைவு செய்யும் பொருட்டு, உழைப்பின் குறிப்பொருளை மாற்றுகிறான். இந்த உழைப்பின் விளைவே உற்பத்திப் பொருள் எனப்படுகிறது.

உழைப்பின் குறிப்பொருளைப் பற்றி மார்க்ஸ்  மூலதனத்தில்  எழுதுகிறார்:-
கன்னி நிலம் (பொருளாதார வழியில் பேசுவதானால் இதில் நீரும் அடங்கும்) இப்படியே பயன்படுத்தத் தக்க தயார் நிலையில் அவசியப் பண்டங்கள் அல்லது வாழ்வுச் சாதனங்களை மனிதனுக்கு வழங்குகிறது. அது மனிதனைச் சாராமல் இயற்கையாகவே இருப்பது, மனித உழைப்பின் சர்வப்பொது குறிப்பொருளாய் அமைவது. உழைப்பு சில பொருட்களைச் சுற்றுப்புறத்துடனான நேரடித் தொடர்பிலிருந்து பிரித்தெடுக்க மட்டுமே செய்கிறது.

அந்தப் பொருட்களெல்லாம் உழைப்பின் குறிப்பொருட்கள், இயற்கை தானாகவே வழங்குபவை. இயற்கையாகவே அமைந்த நீரில் நாம் பிடிக்கிற மீன்களும், இயற்கையான வனத்தில் நாம் வெட்டுகிற மரங்களும், படிவ நாளங்களிலிருந்து நாம் எடுக்கிற தாதுப் பொருட்களும் இப்படிப்பட்டவையே. மறுபுறம், உழைப்பின் குறிப்பொருள் முந்தைய உழைப்பின் மூலம் வடிகட்டப்பட்டதென்று சொல்லக் கூடுமானால், அதைக் கச்சாப் பொருள் என்று அழைக்கிறோம்.

ஏற்கனெவே எடுக்கப்பட்டுக் கழுவுவதற்குத் தயாராய் உள்ள தாதுப்பொருள் இப்படிப்பட்டதே. கச்சாப் பொருள் அனைத்தும் உழைப்பின் குறிப்பொருளாகும், ஆனால் உழைப்பின் குறிப்பொருள் ஒவ்வொன்றும் கச்சாப்பொருள் அன்று. உழைப்புச் சாதனங்களைக் கொண்டு சிறிது மாற்றத்துக்கு உட்படுத்தப்பட்டவையே கச்சாப்பொருளாக முடியும். 
மூலதனம் தொகுதி 1 பக்கம் 247

2. உழைப்புக் கருவிகள் (Instruments of labour)

கருவிகளைப் பயன்படுத்தாமல், உழைப்பை உற்பத்தியில் செலுத்த முடியாது. மனிதன், உழைப்புக் கருவிகளை, உழைப்பின் குறிப்பொருளின் மீது செயல்படுத்தியே பொருட்களை உற்பத்தி செய்கிறான். தொடக்க காலத்தில் கற்கோடாரி, மண்வெட்டி, வில் அம்பு ஆகியவையும், இன்றைய காலத்தில் இயந்திரம், சாலைகள், போக்குவரத்துச் சாதனங்கள்தொழில்நுட்பம் போன்றவையும் சேர்த்துக்கொள்ளவேண்டும். உழைப்புக் கருவிகளோடு சேர்ந்து இந்த தொழில்கூடம், கிடங்கு, ரயில்வே, கால்வாய், மின்சாரம் போன்ற சாதனங்களும் சேர்ந்து உழைப்புக் கருவிகளாகிறது.

உழைப்புக் கருவிகளை தோற்றுவிப்பதிலிருந்து, மனித உழைப்பு தொடங்குகிறது எனலாம். ஒவ்வொரு சமூக பொருளாதார அமைப்பையும், அன்றைய உழைப்புக் கருவிகளின் வளர்ச்சியின் அளவைக் கொண்டே, அதன் வளர்ச்சி நிலையை அறிந்து கொள்ளலாம். உற்பத்தி சக்தியின் வளர்ச்சிக்கு உழைப்புக் கருவிகள் பெரும் பங்காற்றுகின்றன. உற்பத்தி முறையின் மாற்றம் என்பது உழைப்புக் கருவியின் வளர்ச்சியின் அடிப்படையில் அமைகிறது. உற்பத்தி முறையின் மாற்றம் சமூக மாற்றமாக காட்சித்தருகிறது.

பண்டைய கூட்டுவாழ் சமூகத்தில் கற்கோடாரி, தடித்த கழிகள் போன்றவற்றை உழைப்புக் கருவிகளாகப் பயன்படுத்தினர். அதனால் அச் சமூகம் கொண்டுள்ள எளிய கருவிகளால் இயற்கையை வெல்வதற்கு சக்தி குறைந்தவர்களாகவே காணப்பட்டனர். அடிமைச் சமூகத்தில் இரும்பாலன கருவிகள் வளர்ச்சியடைந்திருந்தது. நிலப்பிரபுத்துவ சமூகத்தில் இரும்பை உருக்கும் முறையின் தொடர்ச்சியாக, பட்டறைக்குத் தேவையான கருவிகள் வளர்ச்சியடைந்தது, இன்றைய முதலாளித்துவ சமூகத்தில் இயந்திரம், கணிப்பொறி போன்ற சாதனங்கள் உழைப்பிற்குத் துணைபுரிகிறது. தற்போது இயற்கையின் மீது செலுத்தும் சக்தி பெருமளவிற்கு வளர்ச்சியடைந்துள்ளது.

உழைப்புக்  கருவிகளைப் பற்றி மார்க்ஸ்  மூலதனத்தில்  எழுதுகிறார்:-
உழைப்புக் கருவிகள் என்பது உழைப்பாளி தனக்கும் தன் உழைப்பின் குறிப்பொருளுக்கும் இடையே வைப்பதும், அவரது செயற்பாட்டின் கடத்தியாகப் பயன்படுவதுமான பொருள், அல்லது பொருட் தொகுதி ஆகும். அவர் சில பொருட்களின் யாந்திரிக, பௌதிக, இரசாயனப் பண்புகளைப் பயன்படுத்தி பிற பொருட்களைத் தமது நோக்கங்களுக்கு சேவகம் புரியச் செய்கிறார்.

பழங்கள் போன்ற தயார் நிலையிலுள்ள வாழ்வுச் சாதனங்களை சேகரிப்பதில் மனிதனின் கைகால்களே உழைப்புக் கருவிகளாகப் பயன்படுகின்றன. இவற்றை விலக்கிவிட்டுப் பார்த்தால், உழைப்பாளி சொந்தமாக்கிக் கொள்கிற முதற்பொருள் உழைப்பின் குறிப்பொருளன்று, உழைப்புக் கருவியே.

இவ்வாறு, இயற்கை அவரது செயற்பாட்டுக்குதவும் உறுப்புகளில் ஒன்றாகின்றது. அதனை அவர் தமது உறுப்புகளோடு இணைத்துக் கொண்டு  விலிலிய நூல் என்ன சொன்னாலும்  தமது ஆகிருதியை ஓங்கி வளரச் செய்கிறார். பூமி அவரது ஆதி உக்கிராணமாய் விளங்குகிறது. எடுத்துக்காட்டாக, வீசுவதற்கும், அரைப்பதற்கும், அடிப்பதற்கும், வெட்டுவதற்கும் இன்ன பிற காரியங்களுக்குமான கற்களை அது அவருக்கு வழங்குகிறது. பூபூமியே ஓர் உழைப்புக் கருவிதான்.

ஆனால், அது விவசாயத்தில் அவ்வாறு பயன்படுத்தப்படுவதற்கு, வரிசையான இதர பல உழைப்புச் சாதனங்களும், ஒப்பளவில் உழைப்பின் வளர்ச்சி நிலையும் அவசியம். உழைப்பு சிறிதளவு வளர்ச்சி கண்டதுமே, அதற்கென தயாரிக்கப்பட்ட தனிவகைக் கருவிகள் தேவைப்படுகின்றன. இவ்வாறு மிகப் பழங் குகைகளில் கற்கருவிகளையும் கல்லாயுதங்களையும் காண்கிறோம். மனித வரலாற்றின் மிக ஆரம்ப காலத்தில், பழக்கப்பட்ட மிருகங்கள், அதாவது குறிக்கோளுடன் வளர்தெடுக்கப்பட்டு உழைப்பினால் மாற்றங்களுக்குள்ளான மிருகங்கள், - திருத்திச் செப்பனிட்ட கற்கள், மரம், எலும்புகள், கிளிஞ்சல்கள் ஆகியவற்றோடு - கூட  உழைப்புக் கருவிகளாக முக்கியப் பங்குவகிக்கின்றன.

உழைப்புக் கருவிகளின் உபயோகமும் புனைவும்  குறிப்பிட்ட சில மிருக ராசிகளிடையே இவை முதிரா நிலையில் காணப்பட்ட போதிலும்  மனித உழைப்பு நிகழ்முறைக்கே உரித்தான தனிச் சிறப்புகளாகும், எனவே, கருவி செய்யும் மிருகம் என்று மனிதனுக்கு இலக்கணம் வகுக்கிறார் பிராங்க்ளின்.

மறைந்து போய்விட்ட மிருக ராசிகளை நிர்ணயிப்பதற்கு புதைபடிவ எலும்புகள் எவ்வளவு முக்கியத்துவமுள்ளவையோ, மறைந்து போய்விட்ட சமூகப் பொருளாதாரக் கருவிகளின் மீதமிச்சங்களும் அதே அளவு முக்கியத்துவமுள்ளவையாகும்.

வெவ்வேறு பொருளாதார சகாப்தங்களை நாம் வேறுபடுத்திப் பார்க்க உதவுவது தயாரிக்கப்பட்ட பொருட்களை எவை என்பதன்று, அவை தயாரிக்கப்பட்டது எப்படி என்பதும், எக்கருவிகளால் என்பதுமே. உழைப்புக் கருவிகள் மனித உழைப்பு அடைந்துள்ள வளர்ச்சி நிலைக்கு ஓர் அளவுகோலை வழங்குவது மட்டுமல்லாமல், அந்த உழைப்பு நடைபெறுகிற சமூக நிலைமைகளைச் சுட்டிக் காட்டும் குறிகளாகவும் உள்ளன.

....இன்னும் விரிவான அர்த்தத்தில், நாம் உழைப்புக் கருவிகள் என்ற வகையில், உழைப்பை அதன் குறிப்பொருளுக்கு நேரடியாக மாற்றிக் கொடுப்பதற்குப் பயன்படுத்தப்படுபவையும், எனவே ஏதேனும் ஒரு விதத்தில் செயற்பாட்டின் கடத்திகளாகப் பயன்படுபவையுமான அந்தப் பொருட்களோடு கூட, உழைப்பு நிகழ்முறையை நடத்துவதற்கு அவசியமான எல்லாப் பொருட்களையும் சேர்த்துக் கொள்ளலாம்.

இவை நேரடியாக உழைப்பு நிகழ்முறையில் நுழைவதில்லை, ஆனால் இவையின்றி அது நடைபெறவே முடியாது, அல்லது பகுதியளவுக்கே நடைபெற முடியும்.  பூபூமி இவ்வகைப்பட்ட சர்வப் பொது கருவி என்பதை மீண்டும் காண்கிறோம். ஏனெனில் உழைப்பாளி நிற்பதற்கு ஓர் இடத்தையும் அவரது செயற்பாடு ஈடுபடுத்தப்படுவதற்கு ஒரு களத்தையும் அது வழங்குகிறது. முந்தைய உழைப்பின் பலனாய் அமைந்து, இவ்வகை உழைப்புக் கருவிகளாகவும் இருப்பவற்றில் பட்டறைகள், கால்வாய்கள், சாலைகள் போன்றவற்றைக் குறிப்பிடலாம்.
மூலதனம் தொகுதி 1 பக்கம் 247   248

3. உழைப்பு

இயந்திரமோ, கச்சாப்பொருளோ தானாகவே எதையும் உற்பத்தி செய்திட முடியாது. அதில், மனிதனது உழைப்பு நடவடிக்கை செலுத்தும் போதுதான் உற்பத்தி நடைபெறுகிறது. உழைப்பு என்பது இயற்கையிடமிருந்து கிடைக்கும் பொருட்களை, மனிதத் தேவைகளை நிறைவு செய்ய முற்படும் நடவடிக்கையாகும்.

மனிதயினம் தமக்குத் தேவையான வாழ்க்கைச் சானதங்களை உற்பத்திச் செய்துகொள்கிறது, இதுவே விலங்கினத்திடமிருந்து மனிதயினத்தைப் பிரித்துக் காட்டுவதாக இருக்கிறது.

உழைப்பு ஒருவகையில் மனிதனையே படைத்தது எனலாம். மனிதன் உழைப்பில் ஈடுபடும்போது திறமையும் தேர்ச்சியும் பெறுகிறான். உழைப்பு செற்பாட்டில் புதுப்புது மேம்பாட்டை புகுத்துகிறான்.

உழைப்பைப் பற்றி மார்க்ஸ்  மூலதனத்தில்  எழுதுகிறார்:-
உழைப்பு என்பது, முதலாவதாக, மனிதனும் இயற்கையும் பங்குபெறுகிற, மனிதன் தனக்கும் இயற்கைக்கும் இடையிலான பொருளாயதப் பிரதிச் செயல்களைத் தானாகவே தொடங்கி, முறைப்படுத்தி கட்டுப்படுத்துகிற நிகழ்முறையாகும். மனிதன் இயற்கையின் சக்திகளில் தானும் ஒருவன் என்ற முறையில் தன்னையே இயற்கைக்கு எதிராக நிறுத்திக் கொள்கிறான். இயற்கையின் உற்பத்திகளைத் தன் சொந்தத் தேவைகளுக்குத் தகவமைந்த வடிவத்தில் தனதாக்கி கொள்ளும் பொருட்டு, தோளையும், காலையும், தலையையும், கையையும் அதாவது தன் உடலின் இயற்கைச் சக்திகளை இயங்கச் செய்கிறான். புறவுலகின் மீது இவ்வாறு செயல்பட்டு, அதனை மாற்றுவதன் மூலம் அவன் அதே நேரத்தில் தனது தன்மையையும் மாற்றிக் கொள்கிறான்.

..... முழுக்க முழுக்க மனிதனுக்கே உரியதான உழைப்பு வடிவத்தையே நாம் மனத்தில் கொண்டுள்ளோம். ஒரு நெசவாளரின் செயல்முறைகளை ஒத்தவற்றை சிலந்தி செய்திடுகிறது. கட்டக் கலைஞர்கள் பலரும் வெட்கித் தலைகுனியும் படி தேனீ, தேன் கூட்டை அமைத்திடுகிறது. ஆனால், கட்டடக் கலைஞர் தன் கட்டட அமைப்பை எதார்த்தத்தில் எழுப்பு முன்பே மனத்தில் எழுப்பிக் கொண்டு விடுகிறார், படுமோசமான கட்டடக் கலைஞரையும் தலைசிறந்த தேனீயிடமிருந்து வேறுபடுத்திக் காட்டுவது இதுவே.

உழைப்பு நிகழ்முறை ஒவ்வொன்றின் முடிவிலும் கிடைக்கும் விளைவு, அந்நிகழ்முறையின் தொடக்கத்திலேயே உழைப்பாளியின் மனத்தில் இருந்ததுதான். அவர் தாம் வேலை செய்கிற மூலப் பொருளில் வடிவ மாற்றத்தை உண்டாக்குவதோடு தமது குறிக்கோளையும் நிறைவேற்றிக் கொள்கிறார்.

இந்தக் குறிக்கோள் அவரது வேலை முறையின் நெறியை நிர்ணயிக்கிறது. அவர் இக் குறிக்கோளுக்குத் தமது சித்தத்தைக் கீழ்ப்படுத்திக் கொண்டாக வேண்டும். இப்படிக் கீழ்ப்படுத்துவது கண நேரத்துக்கு மட்டுமான செயலன்று. உடல் உறுப்புகளை வருத்திக் கொள்வதன்னியில், வேலையின் போது ஆரம்பம் முதல் கடைசி வரை உழைப்பாளியின் சித்தம் அவரது குறிக்கோளுக்குத் தொடர்ந்து இசைவாயிருப்பதையும் நிகழ்முறை அவசியமாக்குகிறது, வேலையில் உன்னிப்பாய் கவனம் செலுத்த வேண்டும் என்பது இதன் பொருள்.
மூலதனம் தொகுதி 1 பக்கம் 244  245

உழைப்பின் குறிப்பொருள், உழைப்புக் கருவிகள் இரண்டும் சேர்ந்து உற்பத்திச் சாதனங்கள்  (Means of Production) என்றழைக்கப்படும். இவைகள் கடந்த கால உழைப்பின் விளைபொருளாகும். இவை இரண்டும் தாமே பொருட்களை உற்பத்தி செய்திட முடியாது. உழைப்பைப் பயன்படுத்தாத உற்பத்திச் சாதனங்கள் உயிரற்ற பொருட் குவியலாக, பயனற்று வீணாய்க்கிடக்கும். மக்களின் உழைப்புச்சக்தி இதனோடு இணைந்து செற்பட்டால் தான் உற்பத்தியை நிகழ்த்த முடியும்.

உற்பத்தி அனுபவமும,்  திறமையும் கொண்ட மக்களின் உழைப்பு சக்தியும், உற்பத்திச் சாதனங்களும்  சேர்ந்து உற்பத்திச் சக்திகள் (Productive Forces) என அழைக்கப்படும்.  மக்கள் தான் சமூகத்தின்  முதன்மையான உற்பத்திச் சக்தியாகும். உற்பத்திச் சக்திகள் எப்போதும் சமூகத் தன்மை கொண்டவையாக இருக்கிறது.

கனிம வளங்கள் கண்டுபிடிக்கப்பட்டு விட்டால் மட்டும், அவைகள் உற்பத்திச் சக்தியாகிவிடாது, அதே போல் வனங்களில் வனச்செல்வங்கள் நிறைந்து இருந்தால் மட்டும் போதாது, மனித உழைப்பு அதில் செலுத்தப்பட்டால் தான், அவை உற்பத்திச் சக்தியாகிறது.

அறிவியலும், தொழில் நுட்பமும் மேம்பாடு அடைவதைத் தொடர்ந்து, உற்பத்திக் கருவிகள் செம்மையுறுகிறது. இதனோடு மக்களின் திறமை தேர்ச்சியும், அனுபவமும் விரிவடைகிறது. உற்பத்தி சக்திகளின் வளர்ச்சி, சமூகத்தின் வளர்ச்சியை விரிவாக்குகிறது.

II. உற்பத்தி உறவுகள் (Relation of Production)   

உற்பத்தியை நிகழ்த்தும் போது இயற்கையை மாற்றுகிற அதே நேரத்தில் மக்கள் ஒருவருடன் ஒருவர் இணைந்து செயல்படுகின்றனர், அப்போது  உறவுகள் ஏற்படுகிறது. அத்தகைய உற்பத்தி தொடர்பாக நடைபெறும் உறவுகள் தான் உற்பத்தி உறவுகளாகும். சமூகத்தில் நிகழும் உறவுகளில் இதுவே முதன்மை பெற்றவையாக இருக்கிறது. மற்ற உறவுகளை  இதுவே தீர்மானிக்கிறது.

தனக்குத் தேவையானவைகளை மனிதன் தன்னந்தனியாக அனைத்தையும் தோற்றுவிக்க முடியாது. தான் உற்பத்தி செய்ததை பிறருக்குக் கொடுத்தும், தனக்கு தேவைப்படும், ஆனால் தன்னால் உருவாக்கப்படாத பொருளை பிறரிடம் பெற்றும் வாழவேண்டியிருக்கிறது. இந்தச் செயற்பாடுகள், மனிதர்களிடையே குறிப்பிட்ட சமூகப் பிணைப்புகளை உருவாக்குகிறது. இந்த பிணைப்புகள், புறநிலையானவை, அதாவது மனிதனின் உணர்வுநிலையை சாராமல் இருப்பவையாகும். 

உற்பத்திச் சக்திகளின் வளர்ச்சிக்கு, ஏற்பவே உற்பத்தி உறவுகள் தோன்றுகிறது. புதிய தலைமுறையினர் தமது முதல் அடியினை, முந்திய தலைமுறையினர் தோற்றுவித்திருக்கும் வாழ்நிலைமைகளின் வளர்ச்சி நிலையின,் தொடர்ச்சியாகத் தான் எடுத்துவைக்கின்றனர்.

உற்பத்தி நிகழும்போது ஏற்படும் அனைத்து உறவுகளும், உற்பத்தி உறவு எனப்பதில்லை. இதில் உள்ள பொருளாரரதார உறவுகளே, உற்பத்தி உறவுகள் என்றழைக்கப்படுகிறது. குறிப்பாகச் சொன்னால் உற்பத்தி, வினியோகம், பரிவர்த்தனை மற்றும் நுகர்வு ஆகியவற்றின் போது ஏற்படும் நிகழ்வுப்போக்கின் தொடர்பே, உற்பத்தி உறவுகள் எனப்படும்.

உற்பத்தி உறவுகளில் முதன்மையாக விளங்குவது, உற்பத்திச் சாதனங்களிடையே மனிதர்களுக்கு உள்ள உறவுகள், அதாவது உற்பத்திச் சாதனங்கள் யாருக்கு உடைமையாய் இருக்கின்றன, என்பதை அடிப்படையாகக் கொண்டிருக்கின்றது. உற்பத்திச் சாதனங்கள் முதலாளிகளுக்கு சொந்தமாக இருப்பதால், அப்போது உற்பத்தியின் விளைபொருட்கள் முதலாளிக்குச் சொந்தமாகிவிடுகிறது. உற்பத்திச் சாதனங்கள் யாருக்கு உடைமையாக இருக்கின்றன என்பதே, உற்பத்தி உறவுகளை நிர்ணயிக்கின்றன. அதன்படி, உற்பத்திப் பொருட்களின் வினியோகம் தனிச்சொத்து அடிப்படையில் சுரண்டல் கூட்டத்தின் நலன்களுக்கு ஏற்ப நடைபெறுகிறது. சமூகம் சுரண்டல் சமூகமாக நிலவுகிறது. சமூகத்தில் தனியுடைமை நிலவினால், அங்கே ஆதிக்கம், கீழ்படிதல் என்ற சுரண்டல் உறவுகள் செயல்படுகிறது.

முதலாளித்துவ சமூகத்தில் உடைமைகள் முதலாளிகளுக்கு தனியுடைமையாய் இருக்கின்றன. சட்டப்படியான பெயரளவுக்கு சுதந்திரமாக உள்ள தொழிலாளி வேலைக்கு அமர்த்தப்படுகிறான். எந்த உடைமையும் அவனுக்கு சொந்தமில்லை, இந்த நிர்பந்த நிலைமையில் அவன் தனது உழைப்புச் சக்தியை விற்கவேண்டிய கட்டாயத்திற்கு ஆட்படுகிறான்.

உற்பத்தி சக்திகளுக்கும், உற்பத்தி உறவுகளுக்கும் இடையேயான ஒற்றுமையே குறிப்பிட்ட சமூக பொருளாதார அமைப்பாக  நிலவுகிறது. உழைப்பு கருவிகளிலும், உழைப்பு திறமைகளிலும் ஏற்படும் படிப்படியான வளர்ச்சி உற்பத்திச் சக்திகளின் வளர்ச்சியை பெருக்குகின்றன. உற்பத்தி சக்திகளின் வளர்ச்சிகளில் ஏற்படும் மாற்றங்களை ஒட்டி, உற்பத்தி உறவுகளிலும் மாற்றங்கள் ஏற்பட வேண்டும், ஆனால் உற்பத்திச் சக்திகளில் குறிப்பிடும்படியான மாற்றங்கள் ஏற்படும் பொழுது, சொத்துடைமை வர்க்கம் பழைய உற்பத்தி உறவுகளில் மாற்றம் ஏற்படுவதற்கு தடையாய் நிற்கிறது. இந்த உற்பத்திச் சக்திகளுக்கும் உற்பத்தி உறவுகளுக்கும் இடையேயான மோதல், சமூகப் புரட்சிக்கு வித்திடுகிறது. இதனைத் தொடர்ந்து பழைய சமூகப் பொருளாதார அமைப்பு மறுதலிக்கப்பட்டு, புதிய சமூக பொருளாதார அமைப்பாக உருவெடுக்கிறது.

III. உற்பத்திச் சக்திகளுக்கும் உற்பத்தி உறவுகளுக்கும் இடையேயான
இயக்கவியல் தொடர்பு

உற்பத்திமுறையில் இரண்டு இன்றியமையாத தன்மை உற்பத்தி சக்திகளும், உற்பத்தி உறவுகளும் ஆகும்.  இவற்றில் ஒன்றை தனியே பிரித்து பார்க்க முடியாது. இவை இரண்டும் வளர்ந்து கொண்டே இருக்கிறது.

உற்பத்திச் சக்திகளின் இயல்புக்கு பொருத்தமாக, உற்பத்தி உறவுகள் அமைந்திருப்பது, சமூக வளர்ச்சிக்கு, இன்றியமையாதவையாகும். ஆனால் இந்த பொருத்தம் தற்காலிகமானதே. உற்பத்தி வளர்ச்சியின் தொடக்க கட்டத்தில் மட்டுமே இசைவான முறையில் உற்பத்தி உறவுகள் நிலவுகிறது. வளர்ச்சி முதிரும் போது முரணும் பெருகுகிறது.

உற்பத்தியின் வளர்ச்சி என்பது உற்பத்திச் சக்திகளின் வளர்ச்சியிலிருந்தே தொடங்குகிறது. உழைப்புச் சக்தியின் வளர்ச்சி, முதன்மையாய் உற்பத்திக் கருவிகளின் வளர்ச்சியால் தோன்றுகிறது. உற்பத்தியைப் பெருக்குவதற்கு, உற்பத்திக் கருவிகளை செம்மைப்படுத்துவதும், தொழில்நுட்பத்தை மேம்படுத்துவதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதன் கூடவே மனிதர்களின் உழைப்புத் திறன் தேர்ச்சி பெறுகிறது, உற்பத்தி அனுபவம் வளமை அடைகிறது.

       உற்பத்தி சக்திகளின் வளர்ச்சி குறிப்பிட்ட கட்டம் வரை, உற்பத்தி உறவுகளை பெரிய அளவிற்கு பாதிக்கப்படாமல் கட்டுப்பட்டே காணப்படுகிறது. ஆனால் உற்பத்தி சக்திகள் வளர்ச்சியடைந்த காலகட்டத்தில் பழைய உற்பத்தி உறவோடு முரண்பட வைக்கிறது. உற்பத்திச் சக்திகள் உற்பத்தி உறவுகளைக் காட்டிலும் விரைவாக மேம்பாடடைகிறது, பழைய உற்பத்தி உறவுகளோ, அந்த புதிய வளாச்சியடைந்த உற்பத்திச் சக்தியுடன் முரண்படுகிறது.

பழைய உற்பத்தி உறவுகள், புதிய உற்பத்திச் சக்தியை மந்தப்படுத்த முயற்சிக்கிறது, புதிய உற்பத்தி உறவுகள் வளர்ச்சியை முன்னோக்கி எடுத்துச் செல்கிறது.

சமூக உற்பத்தி முறையின் முரண்பாடு, பழைய உற்பத்தி முறையை மறுதலித்து, புதிய உற்பத்தி முறைக்கு மாற்றுகிறது.  புதிய உற்பத்தி சக்திகளுக்கு, பொருத்தமான உற்பத்தி உறவுகள,் பழைய அமைப்பின் உள்ளிருந்தே தோன்றுகிறது. உற்பத்திச் சக்திகள், உற்பத்தி உறவுகள் ஆகியவற்றின் இயக்கவியல் வளர்ச்சி என்பது ஒர் உற்பத்திமுறையிலிருந்து, மற்றொரு உற்பத்திமுறைக்கு மாற்றம் அடைவதாகும். அதாவது கீழ்நிலை உற்பத்திமுறையிலிருந்து, மேல்நிலை உற்பத்திமுறைக்குச் சென்றடைவதாகும்.

No comments:

Post a Comment