Tuesday, 4 September 2012

3. நிலப்பிரப்புத்துவ சமூக உற்பத்திமுறை


நிலப்பிரப்புத்துவ சமூகத்தின் உழைப்பு சக்திகள்

துண்டு நிலங்களாக பிரித்தளித்த போக்கிலிருந்து, நிலப்பிரத்துவ அமைப்பு தோற்றம் பெற்றது. இது அடிமைச் சமூகத்தின் வீழ்ச்சியின் போது அதன் உள்ளிருந்து தோன்றியது. அடிமைச் சமூகத்தை நீக்கி, அதனிடத்தில் நிலப்பிரத்துவம் நிலைபெற்றது. அனைத்து நாடுகளிலும் அடிமை முறை முழுவளர்ச்சி பெற்றிடவில்லைசிலநாடுகளில் தந்தைவழி அடிமையுடைமையின் சிற்சில கூறுகளை பெற்று, செம்மை அடிமை சமூகத்தின் வடிவத்தில், முழுவளர்ச்சியை எட்டாமல், நிலப்பிரப்புத்துவ கட்டத்திற்குச் சென்றது. இந்தியா, ரஷ்யா போன்ற நாடுகள் அடிமைச் சமூகத்தின் கூறுகளிலிருந்து, நேரடியாக நிலப்பிரத்துவத்திற்குச் சென்றது.

இந்த செம்மை அடிமை சமூகத்தின் சிதைவின் போது, இதன் அரசமைப்பு வீழ்ச்சியடைந்தது, வெற்றி அடைந்தவர்களிடம் எச்சமாக இருந்த இனக்குழு முறையும் சிதைந்தது. இந்த இனக்குழு பல்லாண்டுகளாக போரில் ஈடுபட்டுவந்ததால், படைத்தலைவர்களையும், அவர்களைக் காப்பாற்றும் மெய்காப்பாளர்களும் கொண்ட அமைப்பாக இருந்தது. வெற்றி கொண்ட பகுதிகளை தங்களுக்கிடையே பகிர்ந்து கொண்டனர். பெரும் பகுதி போர்தளபதிகள் தமதாக்கிக்கொண்டனர், மற்றவற்றை போர் வீரர்களுக்கு வாழ்வுநாள் முழுமைக்கும் மட்டும் உரிமையாக பகிர்ந்தளிக்கப்பட்டது. நாளடைவில் தலைமுறை தலைமுறையாக உரிமை பெற்றவர்களானார்கள். நிலத்தில் உழைத்த உழவர்களிடமும் மாற்றம் ஏற்பட்டது. நிலத்தை மானியமாக பெற்றவர்கள், அரசுக்கு போர் சேவை செய்யவேண்டும்.

முன்பைப் போலவே உழவர்கள், நிலத்தில் உழது பயிரிட்டனர். இப்போது நிலப்பிரபுவை சார்ந்து வேலை செய்ய வேண்டியதாயிற்று.

தொடக்கத்தில் உழவர்கள் நிலத்தோடு பிணைக்கப்படாமல் இருந்தனர், அதனால் பிற நிலச் சொந்தக்காரரிடம் சென்று வேலை செய்ய முடிந்தது.

நிலப்பிரத்துவ வளர்ச்சிக்கட்டத்தில் உழவர்கள் பண்ணையாட்களாக மாற்றம்பெற்றனர்.

உழவர்கள் தங்களது தேவைகளுக்காகவே உற்பத்தி செய்தனர். பண்ட பரிமாற்றம் என்பது பெரிய அளவில் நடைபெறவில்லை. நிலப்பிரபு தமக்கும், தம்மோடு இருப்பவர்களின் தேவைக்காகவும், பண்ணையாட்களின் உழைப்பால் உற்பத்தி செய்து கொள்ளப்பட்டது.

நிலப்பிரபுத்துவத்தின் தொடக்கக்காலத்தில் உழவுக் கருவிகள், தொன்மை சமூகத்தின் கருவிகளிடமிருந்து, பெரிய அளவிற்கு மாற்றமில்லாமல் இருந்தது. அவை மண்வெட்டி, அரிவாள், மரத்தாலான கலப்பை போன்றவையாகும். போர்களும் அதிகமாக நடைபெற்று வந்ததால், கால்நடை பற்றாக்குறை ஏற்பட்டு, உழவர்களே ஏரை இழுத்துச் செல்ல வேண்டிய நிலையும் உருவாயிற்று. இருப்பினும் அடிமைச் சமூகத்தில்  இருந்த உற்பத்தி சக்திகளைவிட நிலப்பிரபுத்துவத்தில் அதிகரித்தே காணப்பட்டது.

உழப்பட்ட நிலம், விளைச்சலுக்குப்பின், தரிசாக  20 முதல்  25 ஆண்டுகளுக்கு விடப்பட்டு, பின்பே சாகுபடிக்குப் பயன்படுத்தும் முறை கையாளப்பட்டு வந்து. இதனால் ஐந்தில் அல்லது நான்கில் ஒரு பங்கு நிலம்தான் பயன்பாட்டில் இருந்தது.

பின்நாட்களில் தானியச் சாகுபடி, காய், கனி, தோட்ட பயிர் வளர்த்தல், திராட்சை சாறைவடித்தல், வெண்ணை எடுத்தல் போன்றவை வளர்ச்சியுற்றது. உழவுக் கருவிகளில் மேம்பாடும், இரும்பு போன்ற உலோகங்களை உருக்கும்முறையில் மேம்பாடும் உற்பத்திச் சக்திகளின் வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றியது. கைத்தொழில் மற்றும் உழவுத் தொழில்களில், மனித உடலுழைப்பே முதன்மைப் பெற்று விளங்கியது.

அடிமைச் சமூகத்தில் வீழ்சியடைந்த கைவினைஞர்களின் தொழில், நிலப்பிரத்துவ சமூகத்தில் படிப்படியாக வளர்ச்சி பெற்றது. இரும்பாலான கலப்பைகளும், இரும்பை உருக்கி செய்யப்படும் கருவிகள் பலவும், இக்காலகட்டத்தில் வளாச்சியுற்றது. முதலாளித்துவத்தின் கருவாய் விளங்கிய பட்டறைத் தொழில், இதன் தொடர்ச்சியாய் வளர்ந்து தனி பொருளாதார கிளையாய் நிலைபெற்றது.

நிலப்பிரபுத்துவ சமூகத்தில் உற்பத்தி உறவுகள்

நிலப்பிரப்புத்துவ அமைப்பு, நிலத்துடன் பிணைக்கப்பட்ட மக்கள் மீது, நேரடியாக ஆட்சி செலுத்தியது. உற்பத்திச் சாதனங்களில், நிலமே முதன்மை பெற்றுவிளங்கியது. நிலங்கள் நிலப்பிரபுக்களின் உடைமையாக இருந்தது.

நிலப்பிரபு நிலங்களில் சிலவற்றை தம்மிடம் வைத்துக் கெண்டார். பிறபகுதிகளை உழவர்களுக்கு பகிர்ந்து கொடுத்தார். அடிமைச் சமூகத்தில் சிதைந்த உழைப்புச் சக்தி, நிலப்பிரபுத்துவத்தில் பண்ணையடிமைகளாக மாற்றம் பெற்றது. இந்த பண்ணையடிமை முறையே நிலப்பிரத்துவ அமைப்பில் உழைப்புச் சக்தியாகயாக விளங்கியது.

தமக்கு பகிர்ந்து கொடுத்த நிலத்தில், வாரத்திற்கு சில நாட்களுக்கு வேலைசெய்தும், பிறநாட்களில் நிலப்பிரபுவின் நிலத்தில் கூலியின்றி உழைப்பதும், தமக்களிக்கப்பட்ட நிலத்தில் விளைந்ததில், ஒரு பகுதியைக் நிலக்குத்தையாகக் கொடுக்க வேண்டியதும் ஆகியவை கட்டாயமாகக்ப்பட்டது. நிலக்குத்தகையாக தானியம், ஆடு, கோழி போன்ற பொருள்களை கொடுக்க வேண்டும் அல்லது பணமாக செலுத்த வேண்டும்

இதன் மூலம் உழவர்களுக்கு பெரிய வாழ்வு ஏதும் பெற்றிடவில்லை, என்றாலும், அடிமைச் சமூகத்தை விட சிறிது முன்னேற்றம் கண்டது, நிலச் சொந்தக்காரனுக்காக வாரத்தில் சில நாட்கள் உழைத்து முடித்து, தமக்கு ஒதுக்கப்பட்ட நிலத்தில் பிறநாட்களில்  உழைத்திட முடிந்தது, அந்தளவிற்கு உரிமை பெற்வராக இருந்தனர்.

சில நூற்றாண்டுகள் சென்ற பின்பு, நிலக்குத்தையாக விளைபொருள், உயிரினம் போன்றவற்றிக்கு பதிலாக பணம் மட்டும் செலுத்த வேண்டும், என்று நில உரிமையாளரால் கட்டாயப்படுத்தப்பட்டது. உழவர் விளைபொருளையும், கோழி, ஆடு போன்றவற்றை  சந்தையில் விற்று பணமாக்கி அதனை நிலப்புரபுவிற்கு ரொக்கமாக கொடுத்தனர்.

இதைத் தொடர்ந்து உழவர்களின் பண்டமாற்று உற்பத்தி முறையாக மாற்றம் பெற்றது. பண்ட உற்பத்தி முறை வளர்ச்சியடையும் போது உழவர்களிடையே பல அடுக்குகள் தோன்றத் தொடங்கின, பண்ட பரிவர்த்தனை வளர்ந்ததால் சில உழவர்கள் பணக்காரர்களாகவும், மீதமுள்ள பெரும் பகுதியினர் ஏழைகளாகவும் மாறினர்.

உழவர்களுக்குத் தேவைப் படும் கருவிகளுக்கான பொருட்களை, நகரத்து கைவினைஞரிடம் கொடுத்து, கேட்ட பொருட்களை செய்து பெற்றுக் கொண்டனர். கைவினைஞரின் உழைப்புக் கருவிகள் தொன்மை வகையினதாக இருந்தது. நாளடைவில் கைவினைஞர்கள் உழவர்களின் தேவையானதை செய்து கொடுத்தும், தேவைப்படும் பொருட்களைச் செய்தும் சந்தையை  நோக்கி அனுப்பினர். இதனைத் தொடர்ந்து கைவினைஞருக்கும், உழவருக்கும், மற்றும் சிற்றூரும், நகரத்திற்கும் இடைவெளி பெரியதாகி, தனித்து பிரிந்தது. கைவினைஞர்களின் பொருட்கள் சந்தையை நோக்கி உற்பத்தி செய்திடும் போது, வணிகத்தின் வளர்ச்சிய பெரிய அளவில் அதிகரித்தது.

உழவர்களின் தேவையின் அதிகரிப்பும், வணிகத்தின் வளர்ச்சியடைய வேண்டிய நிலையும், கைவினைஞர்களின் உற்பத்தி முறையின் போதாமையும், ஏற்பட்ட போது, பட்டறைகள் தோன்றியது. இவ்வகையில் முதலாளித்துவ கூறுகள், நிலப்பிரபுத்துத்தினுள்ளேயே பிறந்தது.

நிலப்பிரப்புத்துவ சமூகத்தின் முரண்பாடும் வீழ்ச்சியும்

உழவர்களின் தொழில்நுட்ப வளாச்சியும், இரும்பாலான கலப்பை, இரும்பாலான கருவிகளின் பெருக்கமும், சாகுபடியில் முன்னேற்றமும், தோட்டப்பயிர் வளர்ச்சி, திராட்சையிலிருந்து சாறெடுக்கும் பக்குவம் மற்றும் பாலாடை, வெண்ணை போன்ற தயாரிப்பு முறையும் வளர்ச்சியடைந்தது, கைவினைஞர்களின் உற்பத்தி முறை பட்டறை தொழிலாக மாறியது. இந்த வளர்ச்சியடைந்த உற்பத்தி சக்திகளுகளோடு, பழைய உற்பத்தி உறவுகள் முரண்பட்டு நிலப்பிரபுத்துவம் வீழ்ச்சியை சந்தித்தன.

பண்ட உற்பத்தியில் ஏற்பட்ட போட்டியின் காரணமாக, நொடிந்து போன உழவர்களும், கைவினைஞர்களும் வேலையற்று போய், முளைவிட்டுக் கொண்டிருக்கும் முதலாளித்துவ முறையில் கூலிகளாக வேலைக்குச் சென்றனர்.

வணிகத்தில் பெரும் ஆதாயம் அடைந்தவர்களிடம் சேர்ந்த பணம், வணிக மூலதனமாக மாறியது. இந்த வணிக மூலதனம், தொழில் மூலதனமாக மாற்றம் பெற்றது, வணகர்கள் தொழில் முதலாளிகளாக மாறினர்.

நிலப்பிரபுத்துவத்தில் காணப்பட்ட முரண்பாடுகளால் எழுச்சியடைந்த உழவர் கூட்டத்தைப் பயன்படுத்தி, இளம்முதலாளிகள் அதிகாரத்தை கைப்பற்றினர்.

புதியதாய் தோன்றிய முதலாளித்துவ அமைப்பு, சமூகத்தில் உள்ள சுரண்டலை அகற்றிடவில்லை, அதனிடத்தில் முதலாளித்துவ சுரண்டல் என்னும் புதிய அமைப்பாக வடிவம் பெற்றது.

2 comments:

  1. அருமையான பதிவு.
    நன்றி.
    Sir,
    Please avoid Word Verification.

    ReplyDelete
  2. கருத்துக்கு நன்றி. இதுவரை இங்கு பதிந்தவை எனது முதல் நூலின் சில பகுதியிலிருந்து எடுத்தவை. இதனைத் தொடர்ந்து மார்க்சிய அரசியல் பொருளாதாரம் பற்றிய எளிய கட்டுரைகளும், மார்க்சின் மூலதன நூலை வாசிக்க துணைபுரியும் படியான கட்டுரைகளும் இடம் பெறும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

    ReplyDelete