குறிப்பிட்ட சமூகத்தில் சிலரது விருப்பங்கள், மற்றவர்களின் விருப்பங்களுடன் மோதுகின்றன. சமூகத்தில் முரண்பாடுகள் பரந்து கிடக்கின்றன என்பது பொதுவாக எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒன்று. சமூகம் வர்க்கங்களாக பிளவுபட்டு இருப்பது என்பது வெகுகாலத்திற்கு முன்பே பல அறிஞரால் கூறப்பட்ட கருத்தாகும். ஆனால் அதற்கான காரணத்தையும், சாரத்தையும் அறியப்படாமல் இருந்தது. அறிந்ததாக கூறியவர்களும் பொருத்தமான விளக்கம் கொடுக்கவில்லை. அதாவது, திறமையானவர்களும், ஊக்கமுள்ளவர்களும் மற்றும் அறிவாற்றல் பெற்றவர்களும் சமூகத்தில் தலைமை தாங்கும் பக்குவம் பெற்றவர்களாக இருந்தனர். திறமையற்றவர்களும், சோம்பேரிகளும் ஒடுக்கப்பட்டவர்களாக ஆனார்கள். இது பொருத்தமான கூற்றில்லை என்பதை எளிதாக விளங்கிக்கொள்ளலாம். ஆளும் வர்க்கத்தின் அறிவாளிகளுக்கு இடையே அடிமுட்டாள்களை பார்க்கமுடிகிறது. ஒடுக்கப்பட்ட வர்க்கத்திடம் திறமையும், அறிவாற்றலையும் காணமுடிகிறது. இதை கணக்கில் எடுக்காமல் இருந்ததற்குக் காரணம் சமூகத்தில் வர்க்கத்தின் தோற்றத்தையும், சாரத்தையும் அவர்களால் அறிந்துகொள்ள முடியாமையேயாகும். இதனோடு இந்த கூற்றில் வர்க்க சார்பும் அடங்கியிருக்கிறது.
சமூகத்தின் வரலாறு அனைத்தும் வர்க்கப் போராட்டங்களது வரலாறாகும் என்று மார்க்ஸ் கூறியது முதல், சமூகம் பற்றிய புரியாத் தன்மை நீங்கியது. சமூகத்தின் ஆளும் விதியை கண்டுபிடித்து, அது சமூகத்தில் காணும் வர்க்கப்போராட்டம் என்னும் கொள்கையாக மார்க்ஸ் வகுத்துக் காட்டிய போது, திகைப்பூட்டும் புதிர் போல், குழப்படியாய் காட்சி தந்த சமூகம், புரிந்து கொள்ளக் கூடியதாயிற்று.
பண்டைய சமூகம் வர்க்கமாக பிரிவுபடாமல் இருந்தது, அதாவது பண்டைய கூட்டுவாழ் கம்யூனிச சமூகத்தில் வர்க்கம் தோற்றம் பெறவில்லை, அதற்கான வாய்ப்பும் அங்கில்லை. வாழ்விற்கு தேவையானதை அம்மக்கள் கூட்டாகவே முயன்று பெற்று, கூட்டாகவே அதனை பகிர்ந்தும் கொண்டனர். அச் சமூகத்தின் உற்பத்திச் சக்திகள் மிகவும் சதாரணமானவையாக இருந்தது. அவர்களுக்கு கிடைத்தப் பொருட்கள் சிறிதளவாகவே இருந்தது. கிடைத்தவை முழுவதும் உடனடியாக பயன்படுத்தி விடும் அளவிற்கு இருந்தது. மிகையான பொருள் என்று ஏதும் அப்போது சேகரிக்க முடியவில்லை, அதனால் அச் சமூகத்தில் வர்க்கம் தோற்றம் பெறுவதற்கு வாய்பில்லை.
பண்டைய கூட்டுவாழ் கம்யூனிச சமூகம் சிதைவுற்ற நேரத்திலும், அடிமைச் சமூகம் தோற்றம் பெற்ற நேரத்திலும் வர்க்கம் உருவாகியது. ஆக சமூகம் வர்க்கமற்றதாகத் தான் தோற்றம் பெற்றது. சமூகத்தில் சிலரிடம் உற்பத்திச் சாதனங்கள் சேரவும், மற்றவர்களுக்கு மறுக்கப்படும் போதும் வர்க்கப் பிரிவு ஏற்பட்டது. சமூகத்தில் உற்பத்தி சக்தியின் வளர்ச்சியின் போது உருவான தனிச்சொத்துடமையின் தோற்றத்தில் தான், வர்க்கத்தின் தொடக்கம் அடங்கியிருக்கிறது.
வர்க்கங்களின் தோற்றமும், நிலையிருப்பும் உற்பத்தி வளர்ச்சியின் தேவைகளின் அடிப்படையில் ஏற்பட்டது என்று, மார்க்ஸ் தான் முதன் முதலில் வர்க்கங்களின் சாரத்தை பொருள்முதல்வாதக் கண்ணோட்டத்தில் விளக்கினார். வர்க்கங்களின் இருப்பதென்பது நிலையானது அல்ல, ஏன் என்றால் சமூகத்தின் தொடக்கம் வர்க்கமற்ற நிலையில் தான் காணப்பட்டது, தனிச்சொத்தின் தோற்றத்துடன் வர்க்கச் சமூகம் உருவாயின. உற்பத்திச் சாதனங்களின் தனியுடைமைநிலை மறையும் போது வர்க்கங்களும் மறைந்து போகும்.
உற்பத்திச் சக்திகளின் வளர்ச்சியடைதல், உற்பத்திச் சாதனங்கள் சிலரிடம் சேகரமாதல், சமூகத்திற்கு தேவையானதைவிட மிகையாக உற்பத்தி செய்திட முடிந்தமை, சமூகத்தின் வேலைப் பிரிவினை ஆகிய புறநிலைக் காரணங்கள,் வர்க்கங்களின் தோற்றத்திற்கு காரணமாகிறது. இதனால் உருவான சமூகத்தில் உடைமையுள்ளவருக்கும், உடைமையற்றவருக்கும் இடையேயுள்ள சமரசப்படுத்தமுடியாத முரண்காரணமாக அரசு தோற்றம் பெற்றது. மக்களின் எழுச்சியை அடக்குவதற்கு, ஆயுதம் தாங்கிய காவற்படைகளும், ராணுவமும், சட்ட நீதிகளும், சிறை தண்டனைகளும், சுரண்டலுக்கு ஆளான, மக்களின் மீது ஏவப்படும் வன்முறைக் கருவியாக அரசு உருவாகியது.
சுரண்டல் சமூகத்தின் வரலாறு முழுவதும் வர்க்கங்களுக்கிடையேயான போராட்டமாக காணப்படுகிறது. அடிமைச் சமூகத்தில் ஆண்டான்களுக்கும், அடிமைகளுக்கும், நிலப்பிரப்புத்துவ சமூகத்தில் நிலப்பிரவுக்களுக்கும் பண்ணை விவசாயிகளுக்கும், முதலாளித்துவ சமூகத்தில் முதலாளிகளுக்கும், பாட்டாளிகளுக்கும் இடையே வர்க்கங்களாக பிளவுபட்டு காணப்படுகிறது.
முரண்பட்ட வர்க்க அமைப்புகள், ஒன்றையடுத்து ஒன்றாக சுரண்டலின் வடிவங்கள் மாறி வந்துள்ளன. ஆனால் உழைத்திடும் வர்க்கங்கள் என்றும் ஒடுக்கத்திற்கு ஆளாகியே வருகின்றது. அடிமைச் சமூகத்தில் சுரண்டலின் வடிவம் அப்பட்டமாக காணப்பட்டது. நிலப்பிரபுத்துவ சமூகத்தில், நிலத்தை சொந்தமாக வைத்திருந்த நிலப்பிரபு, தனது நிலத்தில் விவசாயிகள் வேலை செய்யவேண்டும் என்பதற்காக, கால்நடைகளும், கருவிகளும் வைத்திருந்த விவசாயிகளுக்கு துண்டு நிலங்களை கொடுத்து, தமது நிலத்தில் வேலை செய்திட வைத்தார். நிலப்பிரபுவின் நிலத்தில் வாரத்தில் சிலநாட்கள் வேலை செய்தும், மற்ற நாட்களில் தமக்காக ஒதுக்கப்பட்ட நிலத்தில் உழைத்தும், துண்டு நிலங்களை பெற்றதற்காக, நிலம் அளித்தவருக்கு பணமாகவோ, விளைபொருட்களாகவோ கொடுத்தும் வந்தனர். கருவிகளோ, கால்நடைகளோ இல்லாதவர்கள் சுரண்டலுக்கு ஏற்றவல்லாதவராயினர்.
முதலாளித்துவ சமூகத்தில் வர்க்க அமைப்பு வேறுவடிவில் அமைந்தது. ஆண்டானுடன் முழுமையாகச் சார்ந்திருந்த அடிமைவிடவும், நிலப்பிரபுவிடம் உரிமையற்ற பண்ணை விவசாயியாய் இருப்பதைவிடவும், பாட்டாளி, சட்டப்படியான சுதந்திரத்தைப் பெற்றவராக இருக்கிறார். உற்பத்திச் சாதனங்களை இழந்த பாட்டாளி, தம்மிடம் உள்ள உழைப்புச் சக்தியை முதலாளிக்கு விற்கவேண்டிய நிலையிலுள்ளவராவார்.
இவ்வாறு, வர்க்கங்களின் இருப்பின் சாரத்தை புறநிலையானவை என்பதை நிருபித்து, அதில் உள்ள பொருளாதாரக் காரணங்களையும் தெளிவுபடுத்தியதே மார்க்சின் கண்டுபிடிப்பாகும். ஏன் இதை குறிப்பிட்டு சொல்ல வேண்டிது இன்றியமையததாகிறது என்றால், சமூக சீர்திருத்தக்காரர்கள் சமூகத்தில் வர்க்கங்கள் இருப்பிற்கு காரணம், உற்பத்தி முறையில் அல்லாது, வினியோக முறையில் உள்ள முரண்பாடில் கண்டனர். அதாவது சமூக முரண்பாட்டை பொருளாதார உற்பத்தி முறையில் காணாமல், வினியோகிக்கும் முறையில் குறைகண்டனர். ஆனால், மார்க்ஸ் ஒரு குறிப்பிட்ட பொருளாதார உற்பத்தி முறையில் உள்ள உற்பத்திச் சாதனங்கள் - பொதுவாக சொத்துடைமை - யாரிடம் இருக்கிறதோ, அந்த சொத்துடைமையாளர்களின் விருப்பப்படி வினியோகம் நடைபெறுகிறது என்றும், அந்த அடிப்படையில் உற்பத்தி உறவுகள் ஏற்படுகிறது என்றும் விளக்கினார். இந்த நிலைமைகளின் மூலமே வர்க்கத்தின் இருப்பும், போராட்டமும் நடைபெறுகிறது. சுருக்கமாகச் சொன்னால், உற்பத்தி சாதனங்களிடம் உள்ள, மனிதனுடைய உறவில் தான், வர்க்கத்தின் சாராம்சம் அடங்கியிருக்கிறது.
வர்க்கப் போராட்டம் அனைத்து சுரண்டல் அமைப்புகளிலும் வரலாற்றின் உந்து விசையாக இருக்கிறது. முரண்பட்ட சமூகத்தில் வர்க்கப் போராட்டம் இல்லாமல் சமூக முன்னேறுவதில்லை.
மார்க்ஸ் கூறுகிறார்:-
“இன்று முதலாளித்துவ வர்க்கத்தை எதிர்த்து நிற்கும் எல்லா வர்க்கங்களிலும் பாட்டாளி வர்க்கம் மட்டும்தான் மெய்யாகவே புரட்சிகரமான வர்க்கமாகும். ஏனைய வர்க்கங்கள் நவீனத் தொழிலினது வளர்ச்சியின் முன்னால் நலிவுற்றுச் சிதைந்து முடிவில் மறைந்து போகின்றது, பாட்டாளி வர்க்கம் மட்டும் தான் நவீனத் தொழிலுக்கே உரித்தான அதன் நேரடி விளைவாய் அமைகிறது.
கம்யூனிஸ்ட் அறிக்கை
முதலாளித்துவ சமூகத்தில் பாட்டாளிகள் நடத்தும் வார்க்கப்போராட்டம் பொருளியல், அரசியல், மற்றும் சித்தாந்தம் என்கிற மூன்று வழிகளில் நடைபெறுகிறது.
முதலாளிகள், அதிக ஆதாயம் பெறுவதற்கும், அதனைத் தக்க வைப்பதற்கும் தேவைப்படுகின்றவற்றில் எதைவேண்டுமானாலும் செய்வதற்கு முனைப்பாக இருக்கிறார்கள், இந்நிலையில், பாட்டாளிகள் தங்களது அன்றாட வாழ்க்கைத் தேவைகளுக்காக நடத்தப்படும் போராட்டம், பொருளியல் போராட்டமாகும். அதாவது பாட்டாளிகளின் பொருளியல் நிலைமைகளை மேப்படுத்துவதற்கும், சுரண்டலிருந்து தங்களை கட்டுப்படுத்துவதற்கும் மற்றும் குறைத்துக் கொள்வதற்கும், இருப்பதைவிட மேம்பட்ட உழைக்கும் சூழ்நிலைகளுக்கும், ஊதிய உயர்விற்கும், வேலைநேரக் கட்டுப்பாடிற்கும் ஆன போராட்டமாகும். குறிப்பாக சொன்னால் பாட்டாளி தங்களது நலவுரிமைக்கும், பாதுகாப்பிற்கும் நடத்தப்படும் போராட்டமாகும். பாட்டாளிகள், தங்களது உடனடி பொருளாதார நலன்களை முன்னிருத்தி போராடுகின்றனர். இதற்கு அவர்கள் சங்கம் அமைத்துக் கொள்கின்றனர். இது வர்க்கப் போராட்டத்தின் தொடக்கப்புள்ளியாகும்.
பொருளாதார அடிப்படையில் நடத்தப்பட்டு வரும் போராட்டம், பாட்டாளிகளை, சுரண்டலிருந்து முழுமையாக விடுவிக்கவில்லை. ஏனென்றால் இந்தப் போராட்டங்களின் மூலம், கிடைத்திடும் பலன் அவர்களது வாழ்க்கைச் சாதனங்கள் அனைத்திற்கும் வழியமைத்து தருவதில்லை, மற்றும் தங்களது வாழ்வின் முழு பாதுகாப்பிற்கும் வழி கிடைக்கவில்லை. இதன் மூலம் முதலாளிகளிடமிருந்து சில சலுகைகளை மட்டுமே பெறமுடிகிறது. அவர்களது வாழ்க்கைத் துன்பங்களுக்கு, முழு விடுதலை என்பது கிடைத்திடவில்லை. இந்தச் சலுகைகளை பெறுவதற்கே பெரும் போராட்டத்தை நடத்த வேண்டியிருக்கிறது. பொருளாதாரப் போராட்டத்தின் போது பாட்டாளிக்கள் தங்களது கூட்டம் கூடுவதற்கும், சங்கம் நடத்துவதற்கும், தமக்கான பத்திரிகை நடத்துவதற்கும் ஆன உரிமைகளை நிலைநிறுத்துவதற்கு போராட வேண்டிவருகிறது. இவ்வாறு பாட்டாளிகளின் போராட்டம் அரசியல் போராட்டமாக வடிவெடுக்கிறது.
போராடிப் பெற்ற சிறு சலுகைகளை தக்க வைப்பதற்கும், இதனை சட்டமாக்குவதற்கும், அதாவது அரசியல் போராட்டதிற்காக, தங்களது பிரதிநிதிகளை நாடாளுமன்றத்திற்கு அனுப்ப வேண்டி வருகிறது, இதன் மூலம் பொருளாதாரப் போராட்டம் அவர்களை அரசியல் போராட்டத்திற்கு இட்டுச்செல்கிறது.
தன்னியல்பான பொருளாதாரப் போராட்டத்துடன், அரசியல் போராட்டமும் இணையும் போது, பாட்டாளிகளின் அரசியல் உணர்வு மேலோங்குகிறது. அரசியல் கோரிக்கைகள் அவர்களின் கம்யூனிச உணர்வை வளர்த்துவிடுகிறது. முதலாளிக்கு எதிரான போராட்டத்தில், பாட்டாளிகள் சங்கமாய் இணைந்து போராடும் போது, பாட்டாளிகள் ஒரு வர்க்கமாய் சேகரமாகிறார்கள். வர்க்கமாய் தமது போராட்டத்தை நடத்தும் போது, முதலாளியை எதிர்த்து நடத்தப்பட்ட போராட்டம், முதலாளித்துவ வர்க்கத்தை நோக்கிய போராட்டமாக - வர்க்கப்போராட்டமாக - உருமாறுகிறது. இந்தப் போராட்டத்தில் முதலாளித்துவம், பாட்டாளி வர்க்கத்தை நோக்கி சட்டமுறைகளிலும், சட்டத்திற்கு எதிரான வழிகளிலும் ஒடுக்க முற்படுகிறது. அப்போது முதலாளித்துவ அரசிற்கு எதிரான போராட்டம், முதலாளித்துவ நாடாளுமன்றத்திற்கு எதிராகவும், முதலாளித்துவ அமைப்பு முழுமைகு எதிரான போராட்டமாகவும் மாறுகிறது. பொருளாதாரப் போராட்டத்தை, அரசியல் போராட்டமாக தொடரச் செய்யும் போது, உருவான நோக்கங்கள், குறிக்கோள்கள், போராட்ட முறைகள் ஆகியவை பாட்டாளி வர்க்கத்தின் சித்தாந்தமாக திரட்டப்படுகிறது.
முதலாளித்துவ சித்தாந்தத்தை எதிர்கொள்ளும் வகையில், பாட்டாளிகள் தங்களது சித்தாந்ததை உருவாக்க வேண்டியிருக்கிறது. சுரண்டும் வர்க்கமான முதலாளித்துவத்தை, சங்கம் அமைத்து எதிர்க்கும் போது, சமூகத்தில் உள்ள அனைத்து தொழிலாளிச் சங்கங்களையும் இணைத்து வழிநடத்துவதற்கு, பாட்டாளிகளுக்கு புரட்சிகரமான கட்சி தேவைப்படுகிறது.
லெனின் கூறுகிறார்:-
“தொழிலாளிகளிடையே சமூக-ஜனநாயகவாத (கம்யூனிச) உணர்வு இருந்திருக்க முடியாது என்று சொன்னோம். அது வெளியிலிருந்துதான் அவர்களுக்கு கொண்டுவரப்படவேண்டும். பாட்டாளி வர்க்கம் தனது சொந்த முயற்சிகள் மூலமாகத் தொழிற்சங்க உணர்வு மட்டுமே -அதாவது, தொழிற்சங்கங்களில் ஒன்றுபடுவது, முதலாளிகளை எதிரத்துப் போராடுவது, இன்றியமையாத தொழிலாளர் சட்டங்களை நிறைவேற்றுமாறு அரசாங்கத்தைக் கட்டாயப்படுத்த முயல்வது, முதலியவற்றின் இன்றியமையாமைப் பற்றிய துணுபு மட்டுமே - வளர்த்துக்கொள்ள முடிகிறது என்று எல்லா நாடுகளின் வரலாறு புலப்படுத்துகிறது. ஆனால் சோஷலிஸத்தின் கொள்கை, மெய்யறிவுவகைப்பட்ட, வரலாறுவழிப்பட்ட, பொருளாதார வகைப்பட்ட கொள்கைகளிலிருந்து வளர்ந்ததாகும், சொத்துள்ள வர்க்கங்களின் பிரதிநிதிகள், அறிவுத்துறையினர், அவற்றை வகுத்து விளக்கினர். நவீன விஞ்ஞான சோஷலிஸத்தின் மூலவர்களான மார்க்சும், எங்கெல்சும் முதலாளி வர்க்கப் போக்கான படிப்பாளிப்பகுதினரைச் சேர்ந்தவர்கள்
- என்ன செய்ய வேண்டும் பக்கம்47 - 48
மார்க்ஸ், எங்கெல்ஸ் கூறுகிறார்கள்:-
“.. ஆகவே நடைமுறையில் கம்யூனிஸ்டுகள் எல்லா நாடுகளிலும் தொழிலாளி வர்க்கக் கட்சிகளது மிகவும் முன்னேறிய, மிகவும் வைராக்கியமான பகுதியாய், ஏனைய எல்லோரையும் முன்னோக்கி உந்தித் தள்ளும் பகுதியாய் இருக்கிறார்கள், கொள்கைகளில் அவர்கள் பாட்டாளி வர்க்க இயக்கத்தின் வழிநடப்பையும் நிலைமைகளையும் பொதுவான இறுதி விளைவுகளையும் தெளிவாய்ப் புரிந்து கொள்ளும் அனுகூலத்தை, பாட்டாளி வர்க்கத்தின் பெருந்திரளினருக்கு இல்லாத அனுகூலத்தைப் பெற்றிருக்கிறார்கள்”
கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை பக்கம் 64 - 65
இக்கட்சி புரட்சிகரமாக செயற்படுவதற்கு, புரட்சிகரமான கொள்கை தேவைப்படுகிறது. அந்தச் சித்தாந்தத்தை மார்க்சின் பொருள்முதல்வாதம் அளிக்கிறது. குறிப்பாக மார்க்சிய தத்துவயியலில் உள்ள வரலாற்றியல் பொருள்முதல்வாதம், பாட்டாளி வர்க்கத்திற்குரிய அறிவியல் கம்யூனிச சித்தாந்தம் என்கிற புரட்சிகர கொள்கைகளை வகுத்தளிக்கிறது.
“ புரட்சிகரமான கொள்கையில்லாமல் புரட்சிகரமான இயக்கம் இருக்க முடியாது (Without revolutionary theory there can be no revolutionary movement.) மற்றும் ..முன்னேறிய கொள்கையை வழிகாட்டியாகக் கொண்டுள்ள கட்சி ஒன்றுதான் முன்னணிப் போராளியின் பாத்திரத்தை நிறைவேற்ற முடியும் என்று மட்டும் தற்போதைக்குச் சொல்ல விரும்புகிறேன்” என்கிறார் லெனின்.
(என்ன செய்ய வேண்டும் பக்கம் 39, 40)
சமூகப் புரட்சி
உற்பத்திச் சக்திகளுக்கும் உற்பத்தி உறவுகளுக்கும் இடையேயான மோதல் சமூகப் புரட்சியின் பொருளாதார முன்நிபந்தனையாக உள்ளது. இந்தப் பொருளாதார நெருக்கடிச் சுழலைத்தான், புரட்சிகர நிலைமை என்று கூறுகிறார் மார்க்ஸ். இந்நிலைமையின் போது சுரண்டும் வர்க்கத்தால், சமூகத்தை நிர்வகிக்க இயலாது போகிறது. சுரண்டப்படும் வர்க்கமோ இனிமேலும் பழைய நிலைமையில் வாழ முடியாமல், புரட்சியைத் தொடங்குகிறது. எல்லாப் புரட்சிகர சுழலும் புரட்சியை ஏற்படுத்துவதில்லை, சமூகத்தில் அனைத்து துறையிலும் நெருக்கடிகள் ஏற்பட்டவுடன், சமூகத்தின் கட்டமைப்பு தளரத்தொடங்குகிறது. புரட்சியை இறுதி வெற்றியை எட்டும் நிலைக்கு எடுத்துச் செல்லும் புரட்சிகர பாட்டாளி வர்க்கமும், அதன் இணை சக்தியான விவசாயிகளும், மற்ற துணை சக்திகளையும் ஒருங்கிணைந்து தலைமைத்தாங்கும், புரட்சிகர கட்சி என்னும் முன்னணிப்படை தேவைப்படுகிறது. சமூகத்தில் காணப்படும் சூழலைக் கணக்கில் கொண்டு புரட்சிகர கட்சி, துணைச் சக்திகளையும் இணைத்து, பாட்டாளிகளின் புரட்சிக்கு வழிகாட்டுகிறது.
புரட்சியை நிறைவேற்றிய பாட்டாளி வர்க்கம், அரசைக் கைப்பற்றி, பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தால் சமூகத்தை நிர்வகிக்கப்படும். வர்க்கங்களை ஒழித்தல் என்பது ஒரு நீண்டநெடிய நிகழ்முறையாகும், சோஷலிசப் புரட்சியைத் தொடர்ந்து, பல கட்டங்களின் வளர்ச்சியில், கம்யூனிச சமூகத்தில் நிறைவு பெறுகிறது.
வர்க்கங்களை முடிவிற்குக் கொண்டுவரும், கம்யூனிச சமூகத்தில் உள்ள அனைவரும் சமத்துவம் பெற்றவராய் இருப்பர். உற்பத்திச் சாதனங்கள் பொதுவுடைமையாகவும், அதற்கேற்ற உற்பத்தி உறவுகளையும் பெற்று, சமூக முழுமைக்கும் விளைபொருட்கள், தேவைக்கு ஏற்ப கிடைக்கும். அதாவது உழைப்பிற்கு ஏற்ப கிடைத்தது, தேவைக்கு ஏற்ப வழங்கப்படும்.
எங்கெல்ஸ் எழுதுகிறார்:-
“பாட்டாளி வர்க்கப் புரட்சி - முரண்பாடுகளுக்குத் தீர்வு காண்கிறது. பாட்டாளி வர்க்கம் பொது ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றிக் கொள்கிறது. முதலாளி வர்க்கத்தின் கைகளில் இருந்து நழுவிக் கொண்டிருக்கும் சமூகமயமான உற்பத்தி சாதனங்களை இவ்விதம் அது பொதுச் சொத்தாக மாற்றுகின்றது. இந்தச் செயலின் மூலம் பாட்டாளி வர்க்கம் உற்பத்திச் சாதனங்களை அவை இது காறும் தாங்கி இருந்த மூலதன இயல்பிலிருந்து விடுவித்து, அவற்றின் சமூக இயல்பு செயல்படுவதற்கு முழுச் சுதந்திரம் அளிக்கின்றது. சமூகமயமான பொருளுற்பத்தி இனி முன் கூட்டியே தீர்மானிக்கப்பட்ட திட்டத்தின் அடிப்படையில் நடைபெறுவது சாத்தியமாகிறது.
பொருளுற்பத்தியின் வளர்ச்சியானது சமுதாயத்தில் வெவ்வேறு வர்க்கங்கள் இருத்தலை இனிமேல் காலத்திற்கொவ்வாததாக்குகிறது. சமூகப் பொருளுற்பத்தியில் ஆராஜகம் எவ்வளவுக்கு எவ்வளவு மறைகிறதோ அவ்வளவுக்கு அவ்வளவு அரசின் அரசியல் அதிகாரம் மடிந்து போகிறது. முடிவில் தனக்கு உரித்தான சமூக ஒழுங்கமைப்பை ஆட்சி புரியும் எஜமானனாகிவிடும் மனிதன், அதே போதில் இயற்கையின் அதிபதியும் ஆகி, தானே தனக்கு எஜமானன் ஆகிறான் - சுதந்திரமடைகிறான்.
உலகளாவிய இந்த விடுதலைப் பணியினைச் செய்து முடிப்பது நவீனப் பாட்டாளி வர்க்கத்தின் வரலாற்றுக் கடமையாகும். இந்தச் செயலுக்கான வரலாற்று நிலைமைகளையும் அதோடு கூடவே இதன் தன்மையையும் தீர்க்கமாய்ப் புரிந்து கொண்டு, தற்போது ஒடுக்கப்பட்டதாய் இருக்கும் பாட்டாளி வர்க்கத்துக்கு இந்த நிலைமைகளையும் அது முடிக்க வேண்டிய சகாப்தகரச் சிறப்புடைத்த இந்தப் பணியின் முக்கியத்துவத்தை முழு அளவில் தெரியப்படுத்துவது தான் பாட்டாளி வர்க்கத்தின் கொள்கை வெளியீடாகிய விஞ்ஞான சோஷலிசத்தின் கடமை.
-டூரிங்குக்கு மறுப்பு பக்கம் 500 - 501
No comments:
Post a Comment