அரசியல் சித்தாந்தம் நெருக்கமாகவும், நேரடியாகவும் பொருளாதாரத்துடன் தொடர்பை பெற்ற சித்தாந்த வடிவமாகும். இது பொருளாதாரத்தை ஒன்றுதிரட்டப்பட்ட வடிவமாக பிரதிபலிக்கிறது. மற்ற வடிவங்களின் மீது மிகுந்த செல்வாக்கை செலுத்தும் வடிவமாக அரசியல் சித்தாந்தம் இருக்கிறது, இதற்கு காரணம் அரசியல் சித்தாந்தத்திற்கும் பொருளாதாரத்திற்கும் இருக்கும் நெருக்கமும் பிணைப்பும் ஆகும்.
பொதுவாக அரசியல் சித்தாந்தம் என்பது அனைவருக்கும் பொருந்துவதாகவும், அனைத்து மக்களின் நலன்களின் அடிப்படையில் உருவானதாகவும் ஆளும்வர்க்கம் தெரிவித்துவருகிறது.
ஒவ்வொரு அரசியல் சித்தாந்தமும், அந்தந்த வர்க்கத்தின் நலன்களை பிரதிபலிக்கிறது. அதனால் தான் எல்லா வர்க்கமும் தமக்கென்று தனித்தனியான அரசியல் சித்தாந்தத்தை கொண்டவையாக இருக்கிறது. முதலாளித்துவ வர்க்கத்தின் சித்தாந்தம் சனநாயகம், சுதந்திரம், மனித உரிமைகள் என்ற சொல் அலாங்காரத்திற்குள் ஒளிந்திருக்கிறது. ஏன் இதனை வெறும் அலங்காரம் என்று சொல்லப்படுகிறது என்றால் இவற்றை அந்தச் சமூதாயத்தில் நிறைவேற்றுவது சாத்தியம் இல்லாமையேயாகும். அதனால் இதற்கான விளக்கங்கள் தெளிவில்லாமலும், குழப்பமாகவும் வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது.
குட்டிமுதலாளித்துவ சித்தாந்தப் போக்கு விவசாயிகள், கைவினைஞர்கள், பழங்குடியினர் ஆகியோர்களின் நலன்களை முன்னிருத்துகிறது. இந்த சித்தாந்தம் இந்த சுரண்டும் சமூகத்தை எதிர்க்கின்றது, புரட்சிகரமான செயல்களுக்கு ஆதரவைத் தெரிவிக்கின்றது, மறுபக்கத்தில் சொத்துடைமைக்கு ஆதவரவாகவும் இருக்கின்றனர். குறிப்பாக முதலாளித்துவ உற்பத்தி முறைக்கு எதிராக செயல்படுவதற்கு பதில், பகிர்வுக்கு மட்டும் முதன்மை கொடுக்கிறது. முதலாளித்துவ அரசில் காணும் சுதந்திரத்தை ஏற்றுக்கொள்வதில்லை, ஆட்சியதிகார மாற்றத்தின் மூலம் புதிய சமூகத்தைப் படைத்தளிக்க முடியும் என்று கருதுகிறது. மூலதன ஆட்சியினையும், சமூக வளர்ச்சியின் விதிகளையும் இவர்கள் கணக்கில் எடுத்துக்கொள்வதில்லை. அரசமைப்பின் வர்க்கத் தன்மையைப் பார்க்காமல், அவற்றை அனைத்துவித தீமைகளுக்கும் மூலம் என்று கருதிக்கொள்கிறது. புரட்சியை தன்னிச்சையான கிளர்ச்சியாக விளக்கப்படுத்திக்கொள்கிறது, இந்த குட்டிமுதலாளித்துவ சித்தாந்தம்.
தொழிலாளி வர்க்கத்தின் சித்தாந்தம் ஒளிவுமறைவில்லாத வகையில் வெளிப்படுத்தப்படுகிறது. சுரண்டல் முறைக்கு தமது எதிர்ப்பை, நேரடியாக தெரிவிக்கிறது, சுரண்டலை போக்குவதற்கான வழிமுறைகளைக் கையாள்கிறது. தமது சித்தாந்தத்தை பாட்டாளி வாக்கம் சமூகத்தின் செயல்பாடுகளையும், வளர்ச்சி விதிகளையும், வரலாற்றில் அதன் புறநிலைப் போக்குகளை அடிப்படையாகக் கொண்டு உருவாக்குகிறது, அதனால் இந்த சித்தாந்தம் விஞ்ஞான வகைப்பட்டதாக இருக்கிறது. பொதுவாக ஆளும்வர்க்கச் சித்தாந்தம், அன்றைய ஆளும் சித்தாந்தமாக இருக்கிறது என்பதை புரிந்து கொண்டும், சமூக வளர்ச்சியின் போக்கை அறிந்து கொண்டும், அன்றைய மற்றும் தொலைதூர திட்டங்களை அமைத்தும் செயல்படுகிறது. வரலாற்றியல் பொருள்முதல்வாத வழியில் அமைந்த விஞ்ஞான கம்யூனிசம் பாட்டாளி வர்க்கத்தின் சித்தாந்தமாகும்.
No comments:
Post a Comment