Tuesday, 4 September 2012

2. மதம்


சமுதாய உணர்வுநிலையின்  இதர வடிவங்களைப் போல் மதமும் சமூக வாழ்நிலையின் பிரதிபலிப்பேயாகும். பொருளியல் வாழ்வின் பொய்யான, திரிந்த முறையில் பிரதிபலிக்கும் வடிவமாகவே மதம் திகழ்கிறது. அறிவியல் வளர்ச்சி, பெருமளவிற்கு வளர்ந்த பின்னும், மதச் சிந்தனை சமூகத்தில் நீடித்து நிற்கக் கூடியதாக இருக்கிறது.

மதம் என்பது இறை வெளிப்பாடாக, உலகிற்கப்பால் உள்ள சக்தியின் பிரதிபலிப்பாக, மதம் தன்னைக் காட்டிக் கொள்ள முயற்சிக்கிறது. ஆனால் சமூக எதார்த்தத்தின் பிரதிபலிப்பே மதம் என்கிறது மார்க்சியம். இது இவ்வுலக வாழ்வின் வெளிப்பாடேயாகும்.

பண்டைய மனிதன் இயற்கையை அறிந்து கொள்வதில் சக்தியற்றவனாக இருந்தான், இயற்கை நிகழ்வுகளுக்கும், சமூக நிகழ்வுகளுக்கும் காரணத்தை அறியாமல் திகைத்தான், இதற்கெல்லாம் இயற்கைக்கும் சமூகத்திற்கும் மேற்பட்ட சக்திகளின் சங்கல்பத்தால் நடைபெறுவதாக கருதிக்கொண்டான். இவ்வாறுதான் சமூகத்தில் இயல்பாய்த் தோன்றியது மதவுணர்வு. பகத்தறிவுவாதிகள் சொல்வது போல், அறியாமையில் இருந்த மக்களை ஏய்ப்பதற்காக சமூகத்தில் திணிக்கப்பட்டதல்ல மதம். ஆனால் இந்த மதவுணர்வு சுரண்டல் வர்க்கத்திற்குப் பயன்பட்டது என்பதை மார்க்சியம் மறுக்கவில்லை.

உற்பத்தி சக்திகளின் வளர்ச்சி மிகவும் தாழ்ந்த நிலையில் இருந்த போது மதம் தோன்றியது. அப்போது இயற்கைக்கு வடிவம் கொடுத்தார்களே அன்றி, அதற்கு இயற்கையை மீறிய சக்தி இருப்பதாக, அதன் மீது ஏற்றிக் கூறவில்லை. இதனை இந்து மதம் போற்றும் நான்கு வேதங்களில் காணலாம்.

இயற்கையை எதிர்த்து போராட முடியாத நிலையே, பண்டைய மக்களின் தொடக்க கால மதவுணர்வுக்கு காரணமாக இருந்தது. இதனோடு கூட சமூகத்தில் காணப்படும் சுரண்டல் முறையும், அதன் அழுத்தத்தினால் உண்டான செயலற்ற தன்மையும், மதவுணர்வு வலுபெறுவதற்காண சமூக நிலைமைகளும் காரணமாகின்றன. தமக்கு எதிராக காணப்படும் இந்த சமூக சக்திகளை, எதிர்கொள்ள முடியாத நிலையே, மக்களை கற்பனையான, எதிர்நிலையான வடிவத்தில், மதம் உறுபெற்றது.

சமூகத்தில் காணப்படும், மக்களுக்கு மீறிய சக்திகள், உலகிற்கு அப்பாற் பட்ட அதீத சக்திகளைத் தோற்றுவிக்கிறது.

இதனை எங்கெல்ஸ் கூறுகிறார்:-
"எல்லாச் சமயங்களுமே, மனிதர்களின் அன்றாட வாழ்க்கையைக் கட்டுப்படுத்துகிற அந்தப் புறம்பான சக்திகள் பற்றி மனிதர்களின் மனங்களில் ஏற்படும் கற்பனையின் பிரதிபலிப்பே தவிர வேறு ஏதுவுமில்லை, இந்தப் பிரதிபலிப்பில் மண்ணுலக சக்திகள், இயற்கையை மீறியதான சக்திகளின் வடிவத்தை மேற்கொள்கின்றன. வரலாற்றின் துவக்கத்தில் இயற்கையின் சக்திகளே அவ்வாறு பிரதிபலிக்கப்பட்டன, மேலும் ஏற்பட்ட பரிணாமப் போக்கில் இவை பல்வேறு மக்களிடையே மிகவும் பன்முகமான பல்வகையான உருவகத் தோற்றங்களை மேற்கொண்டன. இந்த ஆரம்ப இயக்கப் போக்குக்கு மூலாதாரம் இந்திய வேதங்களில் தோன்றிய முன்பு - குறைந்தபட்சம் இந்தோ - ஐரோப்பிய மக்கள் விஷயத்தில் - ஒப்பியல் புரணாங்களால் தேடிக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது, பிறகு இதன் கூடுதல் பரிணாமத்தில் இது இந்தியர்கள், பாரசீகர்கள், கிரேக்கர்கள், ரோமானியர், ஜெர்மானியர்களிடையே விவரமாக எடுத்துக் காட்டப்பட்டிருக்கிறது. ..

ஆனால் விரைவிலேயே இயற்கையின் சக்திகளுடன் அக்கம்பக்கமாகச் சமுதாயச் சக்திகளும் செயலூக்கமடையத் தொடங்குகின்றன. இந்த சக்திகள் மனிதனைச் சம அளவில் புறம்பாகவும் முதலில் சம அளவில் விளக்கமுடியாத வகையிலும் எதிரிடுகின்றன, இயற்கை சக்திகளைப் போலவே காணப்படுகின்ற அதே இயற்கை அவசியத்துடன் அவன் மீது ஆதிக்கம் செலுத்துகின்றது. முதலில் இயற்கையின் விந்தையான சக்திகளை மட்டுமே பிரதிபலித்து வந்த கற்பனை உருவங்கள் இந்தக் கட்டத்தில் சமுதாய இயல்புகளைப் பெற்று வரலாற்று சக்திகளின் பிரதிநிதிகளாகின்றன.
-டூரிங்குக்கு மறுப்பு - பக்கம் 555 -  556

                இந்த அதித சக்திகளை வணங்கியும், அதனைச் சார்ந்து இருக்கவும் வேண்டும் என்று, மக்கள் கருதிக்கொண்டனர். மனிதனையும், சமூகத்தையும் கட்டுப்படுத்தும் அந்த சக்திகளே, இதனை ஒழுங்குப்படுத்துவதாக நினைத்தனர். அதனால் அதன் மீது அச்ச உணர்வும், கீழ்படிதலும் உருவானது.

                சமூகத்தை ஒழுங்குபடுத்துகின்ற இந்த மதத்தின் போக்கு, சுரண்டும் வர்க்கத்தின் ஆதிக்கத்தை வலுப்படுத்த துணைசெய்கிறது.

                மதம் என்பது மனிதமனதின் கற்பனையான வடிவம் அல்ல, சமூகப் பிரதிபலிப்பின் கற்பனை வடிவமாகும். மதம் தோன்றுவதற்கான சமூகக் காரணங்களின் அழிவின் மூலமே மதவுணர்வின் மறைவும் அடங்கியுள்ளது. அதனால் சமூகத்தில் காணப்படும் சுரண்டல் முறையின் அழிவோடு, மதவுணர்வு இருப்பின் தோற்றமும் மறைந்து போகும். அப்போது மதம் மேலுலகில் கிடைப்பதாக கூறப்பட்ட பொன்னான வாழ்வு, இவ்வுலகிலேயே கிடைத்துவிடும். மதம் மறைந்துவிடும்.

எங்கெல்ஸ் கூறுகிறார்:-
"... மனிதர்கள் புறம்பான, இயற்கை மற்றும் சமுதாய சக்திகளின் ஆதிக்கத்தின் கீழ் இருக்கும் வரையில், அவர்கள் மீது ஆதிக்கம் செலுத்தும் இந்த  சக்திகளுடனான மனிதர்களின் உறவின் நேரடியான அதாவது        உணர்ச்சிபூர்வமான வடிவில் சமயம் தொடர்ந்து நிலவமுடியும். எனினும், நிலவும் முதலாளித்துவ  சமுதாயத்தில் மனிதர்கள் தம்மாலேயே உருவாக்கப்பட்ட பொருளாதார நிலைமைகளால், அவர்களே உண்டாக்கியுள்ள உற்பத்தி சாதனங்களால் புறம்பான ஒரு  சக்தியின் பலம் போன்று ஆதிக்கம்        செலுத்தப்படுகின்றனர். எனவே, சமயத்தைத் தோற்றுவிக்கும் பிரதிபலிக்கிற செயல்பாட்டின் உண்மையான அடிப்படை  தொடர்ந்து நிலவுகிறது. அதோடு      சேர்ந்து அதன் சமயப் பிரதிபலிப்பும் நிலவுகிறது.

இந்தப் புறம்பான     ஆதிக்கத்தின் தற்செயலான தொடர்பு குறித்துமுதலாளித்துவ அரசியல் பொருளாதாரம் ஒரு குறிப்பிட்ட அளவு     நுண்ணறிவினை வழங்கியிருந்த போதிலும,் இதனால் முக்கியமான வித்தியாசம் எதுவும்  ஏற்பட்டு      விடவில்லை. முதலாளித்துவப் பொருளாதாரத்தால் பொதுவாக  நெருக்கடிகளைத் தடுக்க முடியாது, தனிப்பட்ட முதலாளிகளை நஷ்டம், திரும்பிவராத கடன், வக்கற்ற      வகையற்ற நிலை ஆகியவற்றிலிருந்து     பாதுகாக்கவும் முடியாது,    தனிப்பட்ட தொழிலாளர்களுக்கு வேலையில்லாத்      திண்டாட்டம் மற்றும் வறுமைக்கு எதிராக பாதுகாப்பளிக்கவும் முடியாது.     மனிதன் ஒன்று நினைக்கத் தெய்வம் (அதாவது முதலாளித்துவ உற்பத்தி முறையின்        அன்னிய ஆதிக்கம்) ஒன்று கட்டளையிடுகிறது என்பது இன்னும் மெய்யாகவே உள்ளது.

முதலாளித்து பொருளாதார விஞ்ஞானத்தைக்      காட்டிலும் மேலும் கூடுதலாகவும் அதிக ஆழமாகவும் சென்றதாயினும் சரி,        வெறும் அறிவு       சமூக சக்திகளை சமூகத்தின்  ஆதிக்கத்தின் கீழ்க் கொண்டு      வருவதற்குப் போதுமானதல்ல. எல்லாவற்றுக்கும் மேல் இதற்கு அவசியமாக இருப்பது        ஒரு சமூதாயச் செயலே. இந்தச் செயல் நிறைவேற்றப்படும் பொழுது, சமுதாயம் எல்லா உற்பத்தி சாதனங்களின் உடைமையையும் மேற்     கொண்டு, அவற்றை திட்டமிட்ட அடிப்படையில் பயன்படுத்துவது மூலம்,     தன்னையும் தனது உறுப்பினர்கள் எல்லோரையும், அவர்களாலேயே        உண்டாக்கப்பட்டு அவர்களை (வெல்ல) முடியாத அன்னிய சக்தியாக எதிரிட்டு நிற்கும் இந்த உற்பத்தி சாதனங்களால் அவர்கள் தளைப்படுத்தி   வைக்கப்பட்டிருக்கும் நிலையிலிருந்து தன்னைத் தானே விடுவித்துக்   கொள்ளும் பொழுது - மனிதன் நினைப்பது மட்டுமின்றி செயல்படவும் செய்கிறான் - அப்பொழுது மட்டுமே சமயத்தில் இன்னும் பிரதிபலித்துக் கொண்டிருக்கும் கடைசி அன்னிய சக்தி மறையும், அதனுடன் சமயப் பிரதிபலிப்பே மறையும், இதற்குக் காரணம் பிறகு பிரதிபலிப்பதற்கென்று எதுவும் மீதமாக இருக்காது."
-டூரிங்குக்கு மறுப்பு  557 - 558

மனித சமூகம் தனது தொடக்க நிலையில் மதத்தை பெற்றிருக்கவில்லை. மதமற்ற சமூகமாகவே இருந்திருக்கிறது. அதே போல் வருங்காலத்தில் மதம் இல்லாத சமூகம் உருவாகும்.

No comments:

Post a Comment