Tuesday 4 September 2012

2. அடிமை சமூக உற்பத்திமுறை


அடிமை சமூகத்தின் உழைப்பு சக்திகள்

தொன்மைக்கூட்டுவாழ் கம்யூனிச சமூக உற்பத்திமுறையின் விழ்ச்சியிலிருந்து, அடிமை சமூக உற்பத்தி முறை தோன்றியதுசமூக வரலாற்றில் அடிமை சமூகம் சுரண்டலின் தொடக்கமாகவும், அப்பட்ட வடிவமாகவும் இருந்தது.

வாழ்விற்கு தேவையானதை விட, சிறிது அதிகமான பொருட்கள் உற்பத்தி செய்திட முடிந்த போது, அடிமைச் சமூகம் தொடங்குகிறது. தொடக்கத்தில் அடிமைகளின் எண்ணிக்கை மிகக் குறைவாக இருந்தனர்.

அடிமைகளோடு ஆண்டான்களும் உழைப்பில் ஈடுபட்டனர். தனியுடைமையின் தோற்றத்துடன், தாய்வழிச் சமூகம் மறைந்து. தந்தைவழிச் சமூகம் தொடங்கியது. இந்த தந்தை வழி குடும்பத்திற்கான தேவைகளை நிறைவு செய்வதற்கு அடிமையின் உழைப்பு பயன்பட்டது.

தொன்மைக்கூட்டுவாழ் சமூகத்தில் உழைப்புக் கருவிகள் கல்லால் ஆனவை, மற்றும் வில், ஈட்டி போன்றனவாகும். அடிமைச் சமூகத்தில் இரும்பு கண்டுபிடிக்கப்பட்டுவிட்டது, இதை உருக்கும் முறையும் ஓரளவிற்கு அறிந்திருந்தது, இதனால் இரும்பாலான கருவிகள் பயன்படுத்தப்பட்டது, இது மனித உழைப்பின் ஆற்றலைப் பெருக்கியது. இரும்பாலான கோடாரியும், கலப்பையின் கொழுமுனை ஆகியவையும், இரும்பால் அமைத்துக் கொண்டபோது, முன்பைவிட அதிகமான நிலப்பரப்பில் உழவுசெய்திட முடிந்தது.

தொடக்கத்தில் இருந்த குறைந்தளவில் உள்ள அடிமைகளின் எண்ணிக்கை போதாமல் போனது. இனக்குழுக்களிடையே நடைபெற்ற சண்டைகளில், தோற்ற போர்வீரர்களை முன்பைப் போல் கொலை செய்திடாமல், அவர்களையும் அடிமைகளாக்கி உழைப்பில் ஈடுபடுத்தினர். அப்போது அடிமைகளின் எண்ணிக்கை அதிகரித்தது. கால்நடை வளர்ப்பும் வளர்ச்சி பெற்றது, பெரிய மந்தைகள் உருவாகியது, அடிமைகளின் உழைப்பால் கால்நடைகள் பராமரிக்கப்பட்டது. பெருகிய அடிமைகளால், முன்பைவிட அதிகமான நிலபரப்பில் சாகுபடி செய்திட முடிந்தது. தொன்மைக்கூட்டு சமூகத்தில் உழைப்பென்பது, விருப்பப்படியான உழைப்பும், அனைவரிடையே ஒத்துழைப்பும் இருந்தது. அடிமை சமூகத்தில் அடிமையின் உழைப்பு கட்டாயமாக்கப்பட்டதாகவும்சலிப்பூட்டுவதாகவும் இருந்தது.

தொடக்கத்தில் விவசாயிகள் தமக்கு வேண்டிய உலோகக் கருவிகளைத் தாமே செய்து கொண்டும், பழுதுபார்த்துக் கொண்டும் இருந்தனர். இரும்பை உருக்கிச் செய்யும் கருவிகளின் தேவை அதிகரித்த போது, கைவினைஞர்கள் என்ற தனி உழைப்புப் பிரிவினை ஏற்பட்டது. இது சமூகம் கண்ட இரண்டாம் உழைப்புப் பிரிவினையாகும்.

சமூகத்தில் வேலைப் பிரிவினையால் ஏற்பட்ட வளர்ச்சியின் போது, தனித்தனியாக செயற்பட்ட இனக்குழுக்கள், தங்களிடையே சிறு பண்ட பரிமாற்றங்களை நிகழ்த்திக் கொண்டன. இந்த பரிமாற்ற வளர்ச்சியில், கிடைக்கும் இடத்தில் குறைந்த விலைகொடுத்து பொருட்களை வாங்கி, தேவைப்படும் இடங்களில் அதிக விலைக்கு விற்கும் வணிக தொழில் நடைபெற்ற போது, வணிகர்கள் என்ற மூன்றாம் சமூக உழைப்புப் பிரிவினை தோன்றியது.

கைவினைஞர்களும், வணிகத் தொழிலும் வளர்ச்சி பெற்ற போது, பல ஊர் மக்கள் சந்திக்கும் சிறு நகரம் தோன்றியது, நாளடைவில் கைவினைஞர்களின், வணிகர்களின் மையங்களாக மாற்றம் பெற்ற போது, சிறுநகரங்கள் பெரிய நகரங்களாக உருப்பெற்றது.

உற்பத்திச் சக்திகளின் அதிகரிப்பால் ஆண்டைகளிடம் செல்வம் சேரத்தொடங்கியது, அடிமைகளின் மீதான சுரண்டல் அதிகரித்து, சிறிதளவாக இருந்த தனியுடைமை அதிகரித்து, உறுதிப்படத் தொடங்கியது. செல்வந்தர்களின் வாழ்க்கை ஆடம்பரமாக மாறியது, அடிமையின் வாழ்வோ மிகவும்  சொல்லொணாத் துயரத்தை சந்தித்தது, உயிர்பிழைத்து வாழ்வதற்கு தேவையான உணவிற்கு மேல் கிடைப்பதென்பது அரிதாய் போனது.

சமூகத்தில் கடன் பெற்றவர்களில், கடன் செலுத்த முடியாமல் போனவர்கள் அடிமைகளாக மாற்றப்பட்டனர். கடன் கொடுத்தவருக்கும், கடன் பெற்றவர்களுக்கும் இடையே முரண் அதிகரித்துக் கொண்டே வந்தது.

கடன் கொடுக்கும் முறையில் கடுவட்டி முறை தோன்றியது.

புதிதாகத் தோன்றிய இந்த சமூக கொந்தளிப்பிற்கு, பழைய இனக்குழு தலைவர்களும், அனுபவம் பெற்ற மூத்தோர் அறிவுரைகளும், சண்டையில் ஈடுபடும் போது, தலைமை ஏற்றவர்களும் இன்று பயன்னற்று போயினர், அப்போதுபுதிய குறுநில மன்னர்கள் தோன்றினர்.

சமூக கொந்தளிப்பை அடக்குவதற்கு, ஆயுதம் தாங்கிய படைகளும், சட்ட நியதிகளும், சிறை தண்டனைகளும், சுரண்டப்பட்ட மக்கள்மீது ஆளும் வர்க்கத்தின் வன்முறைக் கருவியாக அரசு தோற்றம் பெற்றது. வர்க்க முரண்பாட்டில் உருவெடுத்த அரசு நிர்வாகம், கொந்தளித்த அடிமைகளை கட்டுப்படுத்தவும், அடிமைச் சமூகத்தை கட்டிக்காக்கவும் பயன்பட்டது.

அடிமை சமூகத்தில் உற்பத்தி உறவுகள்

தொன்மைக்கூட்டுவாழ் கம்யூனிச சமூகத்தில் உழைப்புச் சாதனங்கள், அனைவருக்கும் பொதுவாக இருந்தது. அடிமை சமூகத்தில உற்பத்தி சாதனங்கள், அடிமையின் எசமானனுக்கு சொந்தமாகிவிட்டது. இத்துடன் அடிமைகளையும் உடைமையாக பெற்றிருந்தனர். அடிமைகளின் கடுமையான உழைப்பே இச்சமூகத்தின் வளர்ச்சிக்கு அடிப்படையாக இருந்தது. நூற்றுக் கணக்கிலும், சில இடங்களில் ஆயிரம் அடிமைகளைக் கொண்டும் வேலை வாங்கப்பட்டது.

அடிமையின் உழைப்பு கட்டாயமாக்கப்பட்டதாகும். ஆடு மாடுகளைப் போல் அடிமை நடத்தப்பட்டார். அடிமையின் உழைப்பில் விளைந்தவை அனைத்தும், அடிமையின் எசமானனுக்கே சென்றது. அடிமைக்கு உயிர் பிழைத்திருப்பதற்கு மேல் உணவு கிடைப்பதில்லை. சத்தற்ற உணவும், சலிப்புற்ற உழைப்பும் அடிமையின் வாழ்க்கையாக இருந்ததுஎசமானர்களின் வாழ்க்கை ஆடம்பரமாக, களியாட்டங்களாக இருந்தது. இந்த காலகட்டத்திலிருந்து கலைகள், ஓவியம், இலக்கியம் போன்ற படைப்புகள் அதிகரித்தது. இவ்வகை இலக்கியம், எசமானனின் மகிழ்விற்காகவே படைக்கப்பட்து.

விலங்குளைப் போல் அடிமைகளை விற்பதும், வாங்குவதும் நடைபெற்றது. அடிமைகளின் வேலைப்பளு அதிகமாக இருந்தது. பண்ட பரிமாற்ற வளர்ச்சியை ஒட்டி அடிமைகளின் மீதான சுரண்டல் மிகவும் கடுமையானது. தொடக்கத்தில் அடிமையுடன் வேலை செய்த எசமானன், அடிமைகளின் எண்ணிக்கை அதிகரித்த பிறகு, உழைப்பிலிருந்து விடுபட்டார். அடிமைகளிடமிருந்தே, அவர்களை கட்டுப்படுத்துவதற்கான பொறுப்பாளர்களைத் தேர்ந்தெடுக்கப்பட்டது. உடலுழைப்பும், மூளை உழைப்பும் தனித்தனியாகப் பிரிந்தது. இதனைத் தொடர்ந்து உழைப்பை இழிவாக கருதும் போக்கு வளர்ந்தது. குறைந்தளவிலுள்ள எசமானருக்காக, அடிமைகள் அனைவரும் உழைத்திட வேண்டியிருந்தது.

அடிமைகச் சமூகத்தின் முரண்பாடும் வீழ்ச்சியும்

சுரண்டலுக்கு ஆளான அடிமைக்கு, தாம் எவ்வளவு பாடுபட்டும், தமது வாழ்வில் பெரிய மாற்றம் ஏற்படாததால், உழைப்பின் விளைபயனில் அக்கரையின்மை ஏற்பட்டது. அதனால் அடிமையின் உற்பத்தி திறன் குறைந்து போனது. ஆடிமைகள், எண்ணிக்கையில் மிகுந்திருந்ததாலும், எளிதில்  கிடைத்ததாலும், உழைப்பின் உற்பத்தித் திறனை பெருக்குவதற்கு எசமானருக்கு விரும்பம் ஏற்படாமல் போனது. அடிமையின் கடும் உழைப்பால் விளைந்தவை அனைத்தும், எசமானரின் ஆடம்பரச் செலவில் வீணடிக்கப்பட்டது, கேளிக்கை களியாட்டங்கள் மிகுந்து காணப்பட்டது, சமூகத்தின் விளைபொருட்கள் ஊதாரித்தனத்தால் அழிந்து நாசமானது.

அடிமைகளை அடித்தும், வதைத்தும் வேலை வாங்கப்பட்டது. சிறு தவறுகளுக்கும் கடும் தண்டனை கிடைத்தது. எசமானனால் அடிமையை கொலை கூட செய்ய முடிந்தது. இதனை தடுப்பதற்கும், அடிமைகளை காப்பாற்றுவதற்கும், அன்றைய சட்டநியதிகள் துணைபுரியவில்லை. அடிமைகள் பேசும் விலங்குகளை போலானார்கள்.

அடிமைச் சமூகத்தின் இறுதியில், கடும் முரண்பாடுகள் தென்பட்டன. இதில் உற்பத்திக்கு தேவையான உழைப்புச் சக்தியாக இருந்த அடிமைகளை, அடக்கு முறைகளாலும், கொலைகளாலும் சமூக வளர்ச்சி தேக்கம் பெற்றது. அடிமைக்கும் எசமானருக்கும் சண்டைச் சச்சரவுகள் மிகுந்தன. அடிமைகளின் எண்ணிக்கை குறைந்துபோனதால், மற்றவர்களுடன் சண்டையிட்டு, தோற்ற போர்வீரர்களை அடிமையாக்கும் முயற்சி கடுமையாக நடைபெற்றது. போரின் போது அதிகமானவர்கள் இறக்க வேண்டியதாகியது. போரின் சுமையால் வரிகள் அதிகம் செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது. போர் மற்றும் அடிமைகளின் உயிரிழப்பால் மக்களின் எண்ணிக்கை குறையத் தொடங்கிற்று. வளமையாய் விளைந்த வயல்வெளிகள் பாழானது. வணிகம் வளர்ச்சியற்று தேக்கம் கண்டது. கைவினைஞர்கள் நலிவுற்றனர். நகரங்கள் சீரழிந்தன, உழவர்கள் கீழ்நிலையடைந்தனர்.

இறுதியாய் அடிமைகளின் எழுச்சி, சமூகத்தை ஆட்டம் காணவைத்தது. இவர்களுடன் நலிவுற்ற சிறுசாகுபடியாளர்களும், போராட்டத்தில் இறங்கினர். போராட்டம் குறிக்கோளற்ற முறையிலும், பழைய சமூகத்தை மீட்டெடுக்கும் கனவு முயற்சிலும் நடைபெற்றதால், சுரண்டல் சமூகத்தை வெற்றி கொண்டு, மாற்றிட முடியாமல் போனது.

சமூகத்தின் உற்பத்திச் சக்தியாய் இருந்த அடிமைகளுக்கு மாற்றாக, வேறு உற்பத்திச் சத்திகள் தேவைப்பட்டன. பெருநிலப்பரப்பில் எற்பட்ட உற்பத்தி பாழ்பட்டுப்போனபோது, சிறுநிலத்தில் உற்பத்தி செய்வது பாதுகாப்பாக தோன்றியது. அடிமைச் சங்கிலியிருந்து விடுபட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்தது. பெருநிலங்கள் துண்டு நிலங்களாகப் பிரிக்கப்பட்டு சில பொறுப்பாளர்களிடம் சாகுபடிக்கு விடப்பட்டது. இந்தப் பொறுப்பளார்கள் அடிமைப் போலல்லாது, கொடுக்கப்பட்ட நிலத்தில் உழுதுபயிரிட்டு விளைச்சலில் கிடைத்ததைக் கொண்டு பணமாகவோ, அல்லது விளைபொருளாகவோ பெரும்பங்கை நிலம் அளித்தவருக்கு கொடுத்தனர். இவர்கள் முழுதும் விடுதலைப் பெற்ற உழவர்களாக வாழவில்லை, ஒதுக்கப்பட்ட நிலத்தில் பிணைக்கப்பட்டவர்களாக இருந்தனர். பெறப்பட்ட நிலத்திலிருந்து விடுபட்டு போகமுடியாத நிலையில் இருந்த, இவர்கள் நிலம் விற்கப்படும் போது, அத்துடன் இவர்களும் சேர்த்து விற்கப்படக் கூடியவர்களாகவே இருந்தனர்.

இவ்வாறு அடிமைச் சமூகத்திலிருந்தே, நிலப்பிரபுத்துக் கூறுகள் கருக்கொள்ள தொடங்கியது. அதே நேரத்தில், வெளி நாட்டவர்களின் படையெடுப்புகளும் நிகழ்தது. போர் கடுமையாக தொடர்ந்தன. இந்த வெளி தாக்குதல்களும், உள்ளே தோன்றிய எழுச்சிகளும் முடிவில் அடிமைச் சமூகத்தை வீழ்த்தியது.

புதியதாய் தோன்றிய நிலப்பிரபுத்துவ அமைப்பு, சமூகத்தில் உள்ள சுரண்டலை அகற்றிடவில்லை, அதனிடத்தில் நிலப்பிரபுத்துவ சுரண்டல் என்னும் புதிய அமைப்பாக வடிவம் பெற்றது.

No comments:

Post a Comment