Tuesday 4 September 2012

1. பண்டைய கூட்டுவாழ் கம்யூனிச சமூக உற்பத்திமுறை


பண்டைய கூட்டுவாழ் கம்யூனிச சமூகத்தின் உற்பத்தி சக்திகள்

                மலைகளிலும், காடுகளிலும் மனித இனம் வாழ்ந்து வந்த காலத்தில், அவர்கள் முதலில் பயன்படுத்திய கருவி கல்லால் உருவானவையாகும். அவை கூர்மையற்ற கரடுமுரடானவை. இதனை பயன்படுதுவதற்கு, மனிதயினத்திற்கு பல்லாயிரம் ஆண்டுகள் கடக்கவேண்டியிருந்தது. இதனையடுத்து தடித்த கழிகளைப் பயன்படுதினார்கள். குகைகளும், காடுகளின் ஓரங்களும் அவர்களது வாழ்விடமாக இருந்தது.

                இவ்விதமான வாழ்க்கை பல்லாயிரம் ஆண்டுகளாகத் தொடர்ந்ததுகாலவோட்டத்தில்  நன்றாக செதுக்கப்பட்ட கற்கருவிகளையும், கற்கோடாலிகளையும் பயன்படுத்தத் தொடங்கினர். ஈட்டி, அரிவாள் போன்ற கருவிகளையும்  உருவாக்கிக் கொண்டனர்.

வில்லும் அம்பும் கண்டு பிடிக்கப்பட்டதற்கு பின், அக்கால மக்களின் உற்பத்திச் சக்திகளின் வளர்ச்சி மேம்பாடடைந்தது.

                புதிய கருவிகளின் வளர்ச்சி, பழங்கால மனிதனின் வாழ்க்கையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது. இவற்றின் துணையால் மான், யானை, காண்டாமிருகம் போன்ற விலங்குகளை, முன்பைவிட அதிக அளவில் வேட்டையாட முடிந்தது.

                நெருப்பைப் பயன்படுத்த தொடங்கியவுடன், பெரும் மாற்றங்கள் இனகுழுவில் ஏற்பட்டன. இப்போது நெருப்பினால் உணவுகளை உருவாக்கினார்கள், பிடித்த விலங்குகளை பச்சையாக உண்பதற்கு பதிலாக சமைத்து உண்டார்கள். இதன்முலம் இனக்குழுவில் உள்ள மனிதர்களின் உடல் வலுபெற்றது, முன்பைவிட அதிகமாக உணவைத் திரட்ட முடிந்தது. முன்பை போல் பிழைப்பிற்காக இடம்பெயர்தல் குறைந்தது. ஒரேயிடத்தில் தங்கி வாழக்கூடிய சூழ்நிலை ஏற்பட்டுவிட்டது. தனித்தனி இனக்குழுவாக  வாழத் தொடங்கினர்.

                வேலைகளை தங்கள் இனக்குழுவிற்குள் பிரித்துக் கொண்டனர். வேட்டையில் ஆண்கள் ஈடுபட்டனர். பெண்கள் பிள்ளை வளர்ப்பு, வயதில் முதிர்ந்தவர்களை பராமரித்தல் போன்றவற்றில் ஈடுபட்டனர். இதுவரை மனிதயினம் ஒருவித மந்தைகள் போல் வாழ்ந்த நிலைமாறி, ஒரு தொல்குலமாக வடிவெடுத்தது.

இச் சமூகம் தாய்வழிச் சமூகமாக விளங்கியது.

இயற்கையான புல்வெளிகளை தங்களது வளர்ப்புக் கால்நடைகளுக்கு உணவாகக் கொடுத்தனர். கால்நடை வளர்ப்பு வளர்ச்சியுற்ற காலகட்டத்திலும், தமக்கான பயிர்களைத் தாமே சாகுபடி செய்யத் துவங்கிய போதும், உழைப்புப் பிரிவினை ஏற்பட்டது. கால்நடை வளர்ப்பும், பயிர் சாகுபடியும் பிரிந்ததுஇவ்வாறு வரலாற்றில் முதல் சமூக உழைப்புப் பிரிவினை உண்டாயிற்று. சாகுபடியாளர்கள் தமக்கு வேண்டிய சிறுசிறு கருவிகளை தாமே செய்து கொண்டனர்.

                 இனக்குழுக்களிடையே ஏற்பட்ட சண்டையில், தோற்ற இனக்குழு மக்களை இப்போது தமது இனக்குழுவிற்காக உழைக்கச் செய்தனர். முன்பெல்லாம் அவ்வாறு தோற்ற இனமக்களை பராமரிப்பதில் உள்ள கூடுதல் சிரமத்தின் காரணத்தால், கொலை செய்துவிடுவர். இப்போது அடிமைகளாய் வேலையில் ஈடுபட வைத்தனர்.

பண்டைய கூட்டுவாழ் கம்யூனிச சமூகதில் உற்பத்தி உறவுகள்

மந்தை வாழ்க்கையிலும், பின்பு இனக்குழு வாழ்க்கையிலும் வளர்ச்சியடைந்த உற்பத்தி சக்திகளுக்கு, ஏற்ப உற்பத்தி உறவுகள் இருந்தது. உற்பத்தி சக்திகள் சிறிதளவிற்கே வளர்ச்சியடைந்திருப்பதால் ஒருவராலும் தனியாகத் தனக்கு வேண்டியதைத் நிறைவேற்றிக் கொள்ள முடியவில்லை. எளிய கருவிகளைப் பயன்படுத்தினர். ஒவ்வொருவரும் இனக்குழுவில் உள்ள அனைவருக்காகவும் உழைத்தனர்.

இவ்வகையான இனக்குழு சமூகத்தில் உழைப்பு கூட்டாக செயல்பட்டது, உணவு சேகரிப்பதில் அனைவரும் சமமாக ஈடுபட்டனர். சேகரித்த உணவுகள் இனகுழு முழுமைக்கும் பகிர்ந்தளிக்கப்பட்டது. எளிய கூட்டுறவு செயல்பாடாக அன்றைய சமூக உறவுகள் இருந்தன.

அன்றைய சமூகப் பொருளாதாரத்தில் ஏற்றதாழ்வு நிலை உருவாகவில்லை. மக்கள் வர்க்கமாக பிளவுபடாமலும், சொத்து என்று எதையும் தனிநபர்களிடம் சேரமாலும், அதாவது வர்க்க மற்ற, தனிச்சொத்துடைமையற்ற சமூகமாக, ஒன்றுபட்ட தொன்மை கம்யூனிச சமூக அமைப்பாகக் காணப்பட்டது.

தொன்மைக்கூட்டுவாழ் மக்களின் தேவைகளுக்கும், அப்போது கையாண்ட எளிய உற்பத்திக் கருவிகளுக்கும் இடையேயுள்ள முரண்பாடே தொன்மை கூட்டுவாழ் கம்யூனிச சமூக உற்பத்திமுறையின் முரண்பாடாகும்.

தொன்மைக்கூட்டுவாழ் கம்யூனிச சமூக உற்பத்திமுறையின் முரண்பாடும் - வீழ்ச்சியும்

                வளர்ச்சி அடைந்த உற்பத்தி சக்தியும், உழைப்பில் ஏற்பட்ட திறனும், உற்பத்தியை வெகுவாக அதிகரித்தது. வேலையில் ஈடுபட்டவர்களின் பிழைப்புக்குத் தேவையான, குறைந்தளவிற்கு மேல் உற்பத்திப் பொருட்கள் மிகையாய் கிடைத்தது. அப்பொருட்கள் சமூகத்தில் உள்ள சிலரது கையில் சேரத்தொடங்கியது.

                அதாவது, விரைவாக வளர்ச்சியுற்ற உற்பத்தி சக்திகளுக்கு ஏற்ப உற்பத்தி பொருட்கள் அதிகரித்தன. சமூகம் உற்பத்தி செய்த மிகை உற்பத்திகளை, அன்றைய இனக்குழுத் தலைவர்களும், இனக்குழுவில்  செயற்பட்ட சில பொறுப்பாளர்களும், சடங்குகளை நிறைவேற்றி வந்தவர்களும் தமதாக்கிக் கொண்டனர். உடல் உழைப்பு, மூளை உழைப்பு என்ற பிரிவு தோன்றியது. தனி மனித உழைப்பு தோன்றியவுடன், பழைய கூட்டுழைப்பு மறைந்து போனது. கூட்டுழைப்பின் போது சமூகத்திற்கு தேவைப்பட்ட எளிய கருவிகள் சமூகச் சொத்தாக இருந்தது. புதிதாக ஏற்பட்ட தனிமனித உழைப்பின் காரணமாக தனிச்சொத்து தோன்றத் தொடங்கியது.

                இதனைத் தொடர்ந்து செல்வங்கள் ஓரிடத்தில் சேரத் தொடங்கியதால், ஏழை, பணக்காரர்கள் என்ற வர்க்கப் பிரிவினை ஏற்பட்டது. இவ்வாறு  தனிச்சொத்துடைமையின் தோற்றம் என்பது உற்பத்திச் சக்திகளின் வளர்ச்சியால், புறநிலையினால் உருவானவையாகும். இதற்கு அடுத்து வந்த சமூகம், சொத்துடைமையுடன், வர்க்கச் சமூகமாக உருவெடுக்கத் தொடங்கியது.

No comments:

Post a Comment