உற்பத்திச் சக்திகளும், உற்பத்தி உறவுகளும் சமூக அமைப்பிற்கு அடித்தளம் என்று கூறும் வரலாற்றியல் பொருள்முதல்வாதம், அதன் மேற்கட்டமைப்பையும் ஆராய்ந்து, அது எவ்வாறு வடிவம் பெறுகின்றன என்பதையும் விவரிக்கிறது. பொருளாதார வாழ்வு எவற்றை தீர்மானிக்கிறதோ அந்த அரசியல், சட்டம், குடும்பம், மதம், தத்துவயியல், அறநெறி, கலைகள் போன்றவை சமூக உணர்வுநிலையின் வடிவங்களாக, நிறுவனங்களாக செயல்படுகின்றன, என்பதை மார்க்சியம் விளக்குகிறது.
இந்த சமூக உணர்வுநிலையின் வடிவங்கள், கருத்துமுதல்வாதமும், மதக் கண்ணோட்டமும் புலனறிவுக்கு அப்பாற்பட்ட சத்தியினால், கடவுளால் தோற்றுவிக்கப்பட்டதாக கூறிவருகிறது. இது சமூக உணர்வுநிலையின் தோற்றுவாயை சமூகத்தின் பொருளியலுக்கு தொடர்பில்லாத வாழ்விற்கு அப்பால் தேடின. மார்க்ஸ் இதன் தோற்றுவாயை பொருள் உற்பத்தியிலும், அப்போது ஏற்படுகிற உற்பத்தி உறவுகளிலும் உள்ளன என்பதைக் கண்டுபிடித்தார்.
சமூக உணர்வுநிலை சமூக வாழ்நிலையைப் பிரதிபலிக்கிறது. சமூகத்தின் பொருளாதார உற்பத்தியும், உற்பத்தி உறவுகளும் எத்தகையானதோ, அத்தகையானதாகவே மக்கள்களின் கருத்துக்களும், சித்தாந்தங்களும் அமைகின்றன. சமூக உணர்வுநிலை, சமூக நிறுவனங்களுடன் சேர்ந்து செயல்படுகிறது.
சமூகத்தில் தோன்றும் கருத்துக்களும், சித்தாந்தங்களும் பொருளாதார உற்பத்திச் செயல்களின் அடிப்படையில் தோன்றுகின்றன. இந்த அடிப்படையைத் தவிர்த்து, தனித்த சுதந்திரம் அதற்கு கிடையாது என்பதை உணர்த்தும் வரலாற்றியல் பொருள்முதல்வாதம், அதன் சார்புநிலையில் உள்ள சுதந்திரத்தை மறுக்கவில்லை. இந்தச் சுதந்திரம் ஏன் சார்புநிலை என்று கூறப்படுகிறது என்றால், பொருளாதாரத்திற்கும் சித்தாந்தத்திற்கும் இடையில் உள்ள இணைப்புகளின் தொடர்பில் தான் இந்தச் சுதந்திரம் அடங்கியிருக்கிறது. இந்த சார்புநிலை அந்தந்த காலத்தில் நிலவும் பொருளாதார நிலைமைகளுக்கு, உள்ளடங்கி இருப்பதால், அதன் சுதந்திரம் அதற்கு பொருந்திய வகையிலேயே இருக்கிறது.
அடித்தளம், உற்பத்தி சக்திகளின் வளர்ச்சிகளுக்கு ஏற்ப மாறுகிறது, அடித்தளத்தின் வளர்ச்சிக்கு ஏற்ப, மேற்கட்டமைப்பு மாற்றம் பெறுகிறது.
மேற்கட்டமைப்பு என்பது அடித்தளத்தின் கட்டமைப்பு எனலாம். அடித்தளத்தின் வெளித்தோற்ற வடிவம் என்று மேற்தளத்தைக் கூறலாம். அடித்தளமும் மேற்கட்டமைப்பும் தம்முள் நெருக்கமான இணைப்பைப் பெற்றவை. அடித்தளமே நிர்ணயகரமான தன்மை பெற்றவை, அது மேற்கட்டமைப்புக்கு காரணமாகிறது. மொத்தத்தில் மேற்கட்டமைப்பு அடித்தளத்திற்கு பொருத்தமாக இருக்கிறது. அடித்தளம் எத்ததையதோ மேற்கட்டமைப்பும் அத்தகையதாகவே ஆகிறது. அடித்தளமும் மேற்கட்டமைபும் பொருந்தியிருப்பது, முறையான சமூக வளர்ச்சிக்கு இன்றியமையானவாகும்.
சமூக வாழ்நிலை, சமூக உணர்வுநிலையைத் தோற்றுவிக்கிறது என்று சொல்லும் போது, அவை ஒரேவிதமாக வெளிப்படுத்துகிறது என்று பொருள்கொள்ள முடியாது. வர்க்க சமூதாயத்தில் சமூக வாழ்நிலை, மாறுபட்ட சமூக உணர்வுநிலையாகத்தான் பிரதிபலிக்கும். சமூகத்தில் காணும் வர்க்கப் போராட்டத்தின் ஊற்றை இந்தப் பிரதிபலிப்பில் காணமுடிகிறது.
சமரசப்படுத்த முடியாத முரண்பாடுகளைக் கொண்ட முதலாளித்துவ சமூகத்தில், முதலாளிகளின் நலன்களும், தொழிலாளிகளின் நலன்களும் ஒன்றமுடியாமல் மோதுகின்றன. அவரவர்களின் நலன்களுக்கு ஏற்பவே கருத்தாக்கமும், தத்துவயியலும் தோன்றுகின்றன. சமரசப்படுத்த முடியாத முரண்பாடுகளைக் கொண்ட வர்க்கச் சமூகத்தில், அனைவருக்கும் பொதுவான கருத்தும், தத்துவயியலும் இருக்க முடியாது.
உற்பத்திச் சக்திகள் யாருக்கு சொந்தமாக இருக்கின்றதோ, அவர்களுக்கு அரசும், சித்தாந்தமும் முன்னிலைப் பெறுகின்றன.
முதலாளித்துவ சித்தாந்தம் என்பது மாற்றம் பெறாது, அச்சமூகம்் தோன்றியது முதல் ஒரே விதமாக தொடர்ந்து செல்வதாக, சொல்லிவிட முடியாது. நிலைமைகளுக்கு ஏற்ப மாற்றம் பெறுகிறது. முதலாளித்துவ வளர்ச்சியின் தொடக்கக் கட்டத்தில், நிலப்பிரப்புத்துவ சித்தாந்தத்துடன் ஒப்பிடுகையில், முதலாளித்துவ சித்தாந்தம் முற்போக்கான கருத்துக்களையும், கொள்கைகளையும் கொண்டிருந்தது. சமூக வளர்ச்சிக்கு நிலப்பிரத்துவ கருத்தாக்கங்கள் தடையாக இருந்ததால், அதனை எதிர்த்து போராடும் கட்டத்தில், முற்போக்கான சித்தாந்தங்களை ஏற்றுச் செயல்பட்டது. கால வளர்ச்சியில், பாட்டாளிகள் தனி வர்க்கமாக உறுபெற்று, சுரண்டலுக்கு எதிரான தமது போராட்டத்தை தொடங்கியவுடன், முதலாளித்துவம் பிற்போக்கான செயல்பாட்டிற்கு மாற்றிக்கொண்டது. எதார்த்தப் போக்கை மாற்றி, திரித்து தமது நலன்களுக்கு சாதகமான கருத்துக்களையும், சித்தாந்தங்களையும் உருவாக்கி அதனை வானொலி, தொலைக்காட்சி, பத்திரிகை போன்ற ஊடங்கங்களின் வாயிலாக பரப்பியது.
சமூக வாழ்நிலை மாறும் போது, சமூக உணர்வுநிலையும் மாற்றம் பெறுகிறது. ஒடுக்கும் வாக்கம், ஒடுக்கப்படும் வர்க்கம் இவைகளின் சித்தாந்தத்தில், நேருக்குநேர் பகைமையாய் இந்த மாற்றம் பிரதிபலிக்கிறது.
மார்க்ஸ், எங்கெல்ஸ் கூறுகிறார்கள்:-
“ஒவ்வொரு சகாப்தத்திலும் ஆளும் வர்க்கங்களின் கருத்துக்களே கோலோச்சும் கருத்துக்களாக விளங்கும். அதாவது, சமுதாயத்தின் பொருள்வகை சக்தியை ஆளும் வர்க்கம், அதே சமயம் அதன் கோலோச்சும் அறிவுத்துறை சக்திகளாகவும் விளங்கும். பொருள் உற்பத்தி சாதனங்களைத் தனது செயலாட்சியில் வைத்திருக்கும் வர்க்கம், அதேசமயம் அறிவுத்துறை உற்பத்தி சாதனங்கள் மீது கண்காணிப்புச் செலுத்தும், எனவே அதன் மூலம், பொதுப்படச் சொன்னால், அறிவுத்துறை உற்பத்தி சாதனங்கள் தம் வசம் இல்லாதவர்கள், அதற்குக் கீழடங்கி இருப்பார்கள். கோலோச்சும் கருத்துக்கள் என்பவை மேலோங்கி நிற்கும் பொருள்வகை உறவுகளின் லட்சிய வெளிப்பாடும், கருத்துக்களாகப் புரிந்து கொள்ளப்பட்ட மேலோங்கி நிற்கும் பொருள்வகை உறவுகளும் தவிர வேறு எதுவுமல்ல. - ஜெர்மன் சித்தாந்த்தம் - மார்க்ஸ் - எங்கெல்ஸ்
முதலாளித்துவ சித்தாந்திகள் முரண்பட்ட சமுதாயத்தில், சித்தாந்தமும் முரண்பட்டு இருப்பதை ஏற்றுக்கொள்ளவில்லை. அவர்கள் சித்தாந்தங்களை எல்லோருக்கும் பொதுவானவையாக, முரண்பாடுகளுக்கு அப்பாற்பட்டதாக காட்ட முயற்சிக்கிறார்கள்.
லெனின் கூறுகிறார்:-
“முதலாளித்துவச் சித்தாந்தம் அல்லது சோஷலிஸ்டு சித்தாந்தம்.... , நடுவழி ஏதும் கிடையாது (ஏனென்றால் மனிதகுலம் ஒரு "மூன்றாம்" சித்தாந்தத்தைப் படைக்கவில்லை, மேலும், வர்க்கப் பகைமைகளால் பிளக்கப்பட்டுள்ள ஒரு சமுதாயத்தில் வர்க்கத்தன்மையற்ற சித்தாந்தமோ வர்க்கத்துக்கு அப்பாற்பட்ட சித்தாந்தமோ என்றைக்கும் இருக்க முடியாது). எனவே சோஷலிஸ்டு சித்தாந்தத்தை எந்த விதத்தில் சிறுமைப்படுத்தினாலும், அதிலிருந்து இழையளவேனும் விலகிச் சென்றாலும் முதலாளித்துவச் சித்தாந்தத்தைப் பலப்படுத்துவதாகவே பொருளாகும். மூன்றாம் வழி கிடையாது “
என்ன செய்ய வேண்டும்? - லெனின்
மார்க்சியம், சித்தாந்தத்தின் சார்புத் தன்மையை வெளிப்படுத்துகிறது. இதனை ஏற்றுக்கொள்ள முடியாதவர்கள், மார்க்சியத்தின் இந்த போக்கை சிதைப்பதற்காக பெரும் முயற்சியில் ஈடுபடுகின்றனர். அதில் முன்னிலையில் இருப்பது மார்க்சியத்தின் அடித்தளம், மேற்கட்டமைப்பு என்ற கருத்தாக்கமாகும், மார்க்சியர் என்ற வேடமிட்டும், மார்க்சியர் என்ற போர்வையிலும் இதனைத் திரித்து எழுதுவதை, நீண்ட காலமாக செய்துவருகின்றனர். ஏன் இதனை மார்க்ஸ் தமது கருத்தை படைத்தளித்தது முதல் இந்த வேலை நடைபெற்றுவருகிறது என்று சொல்லலாம்.
அடித்தளம் மேற்கட்டமைப்பை தீர்மானிக்கிறது என்றால் அது பொருள்முதல்வாத கண்ணோட்டமாகும். மேற்கட்டமைப்பு அடித்தளைத்தை நிர்ணயிக்கிறது என்றால் அது கருத்துமுதல்வாதமாகும். சித்தாந்தமே சமூகத்தை நடத்திச் செல்கிறது, மேல்கட்டமைப்பே அடித்தளத்தைத் தீர்மானிக்கிறது என்பதெல்லாம் கருத்துமுதல்வாத போக்காகும். மார்க்ஸ் கண்டுபிடித்த கருத்தாக்கத்தின் வலுவை குலைப்பதற்கு மற்றொரு போக்கையும் கைகொள்வர், அது அடித்தளமும், மேற்கட்டமைப்பும் ஒன்றையொன்று இடைசெயல்புரிகிறது, தாக்குகிறது என்பதை மிகைப்படுத்தி, அடித்தளத்தின் தீர்மானப் போக்கை குறைத்தும், மறைத்தும் மதிப்பிடுவர். இது மார்க்சியத்தின் அடித்தளம் மேற்கட்டமைப்பு என்ற கருத்தாக்கத்தை சிதைப்பதை நோக்கமாக கொண்டதாகும்.
6, தத்துவம்
No comments:
Post a Comment