Tuesday 4 September 2012

4. கலைகள்

மனிதர்கள் தமது வீட்டில் பயன்படுத்தும் சிறுசிறு பொருட்கள் முதற்கொண்டு அழகியலோடு உருவாக்கிக்கொள்கின்றனர். உடை, உறைவிடம்உணவு ஆகிய அனைத்தையும் அழகியலோடு படைத்துக்கொள்கின்றனர். இதனை பழங்குடி மக்களிலிருந்து, நாகரீக மக்கள்வரை உள்ள அனைவரிடத்தும் காணலாம். இதில்  அழகியல் தன்மையைவிட பயன்பாடு முதன்மையானது, அதாவது தங்களுக்கு பயன்பாட்டுக்கு உட்பட்டதாகவே அழகியல் இருந்துவருகிறது. கலை என்பதை வெறும் அழகியல் உணர்ச்சி என்று சுறுக்கிக் கொள்ளமுடியாது. சொல்ல வரும் கருத்தை, கலைப்படைப்பாளர்கள் அழகியலோடு வெளிப்படுத்துகிறார்கள்.

            கலை, ஒரு சமூக உணர்வுநிலையின் வடிவம் என்ற வகையில் மற்றவற்றோடு வேறுபடுகிறது. அரசியல் சித்தாந்தம், சட்டம் போன்றவை போல் சமூக வாழ்வின் நெருங்கிய, நேரடியான முறையில் கலை தம்மை வெளிப்படுத்திக் கொள்வதில்லை. இதில் அழகியல் உணர்வும், கற்பனை வளமும் மேலோங்கி இருக்கிறது.

கலை என்பது சிறுகதை, நாவல், கவிதை, நடனம், சிலை, ஓவியம், இசை, நாடகம், திரைப்படம் போன்வற்றை குறிக்கும். மக்கள் கலைத்தன்மையை அழகியல் உணர்வை, தங்கள் நடவடிக்கைகள் அனைத்திலும் வெளிப்படுத்துகின்றனர்.

                சமூகவாழ்வின் தேவைகளின் விருப்பத்திற்கு ஏற்ப, மக்கள் இயற்கையை மாற்றிக் கொள்ளும் போது, தமது திறமைகளையும், படைப்பாற்றலையும் வளர்த்துக் கொள்கிறார்கள். இவ்வாறு இயற்கையை மாற்றி அமைக்கும் செயற்பாட்டின் போது மக்கள் அழகியல் உணர்வுகளையும் தோற்றுவித்துக் கொள்கின்றனர்.

           கலை என்பது மக்களின் அழகியல் உணர்வை நிறைவு செய்வதோடு, சமூகத்தின் எதார்த்தத்தை அறிந்து கொள்வதற்கும், அதனை மாற்றுவதற்கும் வழிமுறையையும்வெளிப்படுத்துவதாக இருக்கிறது.

    பண்டைக் காலத்தில் கலை, உற்பத்திச் செயலோடு நேரடியாக இணைந்தும், பிணைந்தும் காணப்பட்டதை, கற்பாறைகளிலும், குகைகளிலும் வாழ்ந்த மனிதன்  தீட்டிய ஓவியங்களில் காணலாம். வேட்டையாடுதல், மீன் பிடித்தல், உழவுசெய்தல் போன்ற செயல்களின் போது தேவைப்படும்நுணுக்கத்தை பகிர்ந்து கொள்வதற்காகவே இவைகள் தீட்டப்பட்டிருப்பதை அறிந்து கொள்ளலாம். உடல் உழைப்பிலிருந்து, அறிவு உழைப்பு தனித்த பிரிவாக செயற்பட தொடங்கியது முதல் நிலைமை மாறுகிறது.

  கருத்துமுதல்வாதக் கண்ணோட்டமானது, கலையைச் சமூதாயத்தின் அடித்தளத்திலிருந்து பிரித்தும், விலக்கியும் காட்ட முயற்சிக்கிறது. கலை கலைக்காகவே என்கின்றனர். கலையை முழுமையான கருத்துப்போக்காக, அகநிலை உணர்வாக, தனிமனித உள்ளாற்றலாக கருத்துமுதல்வாதம் கருதுகிறது.

           மார்க்சியமோ, கலை வர்க்கத் தன்மை பெற்றதாக தெரிவிக்கிறது. முரண்பட்ட சமூகத்தில் கலை ஒரு சார்பற்றதாக, வர்க்கங்களுக்கு அப்பாற்பட்ட கலையாக இருக்க முடியாது. பகைமை கொண்ட சமூகத்தில், கருத்துப் போரை நிகழ்த்த கலை எப்போதும் ஒரு கருவியாக செயல்படுகிறது.

               அதனால் எதார்த்தத்தை தொழிலாளி வர்க்கக் கலை படம்பிடித்து காட்டுகிறது. முதலாளித்துவ கலை யதார்த்த போக்கை திசை திருப்பவும், புரியாத வகையில் மாயத் தோற்றமாக, சமூகத்தைச் சித்தரிக்கிறது. முதலாளித்துவத்தில் ஓவியம் புரியாத் தன்மையில், மாயப்பொருளாக வெளிப்படுகிறது. அது மட்டுமல்லாது சிறுவர் கதைகளிலும் உலகத்திற்கு, வெளிக் கோள்வாசிகளிடமிருந்து, எப்போதும் ஆபத்து இருப்பதாக தெரிவித்துக் கொண்டேயிருக்கிறதுசமூகத்தின் மிது அச்சமும், அதற்கான மாயமயக்கமும் மக்களிடம் இருக்குமாறு, கலையை முதலாளித்துவம் படைத்தளிக்கிறது.

            முதலாளித்துவ பொதுநெருக்கடியின் ஆபத்துக்களை வெளிப்படுத்தாமல், அந்த ஆபத்திலிருந்து தப்பித்து வருவதாக மட்டும் தொடர்ந்து செய்திகளை, புதுப்புது  புள்ளிவிவரங்களோடு வெளியிட்டுக் கொண்டேயிருக்கிறது. பிற்காலங்களில் பொருளாதார நெருக்கடி ஏற்படாமல் இருப்பதற்கான வழிவகை ஏதும் இருக்கிறதா?    என்று தேடிக்கொண்டே இந்த பணியை செய்துவருகிறது. இதற்கு முதன்மையான காரணம் முதலாளித்துவத்தின் ஆபத்தை மறைப்பதற்கும், அதனைப் பற்றிய  சிந்தனைக்கு செல்ல விடாமல் தடுப்பதையும் கருத்தில் கொண்டுள்ளது. இதுவே, முதலாளித்துவ கலையின் தன்மை, மற்றும் மக்களை பிளவுபடுத்தும் போக்கும் இதன் முதன்மையான செயற்பாடாகும், மக்களை கோட்பாடு இல்லாமல், சிதைந்து இருப்பதையே விரும்புகிறது. அதற்கான புதுப்புது தத்துவப்போக்குகளைப் படைத்துக்கொண்டே இருக்கிறது. இதற்காக மாவோவின்     ஆயிரம்பூக்கள் மலரட்டும் என்ற முழக்கத்தையும் குட்டிமுதலாளித்துவ போக்குடையவர்களின் மூலம் பயன்படுத்திக்கொள்கிறது. கலைப் படைப்பாளி அறிந்திருந்தாலும் அறியாவிட்டாலும் கலையினுள் சித்தாந்தக் கண்ணோட்டம் வெளிப்படவே செய்கிறது.

 சித்தாந்தத்திலிருந்து பிரித்து விடாமலும், கலையை சித்தாந்த முழக்கத்துடன் ஒன்றாக்கி குழப்பிவிடாமலும் தொழிலாளி வர்க்கம் தமது கலையை உருவாக்குகிறதுகலை சமூகத்தின் வெளிப்பாடாக இருப்பதால், அதில் அரசியல், சட்ட, அறநெறி, மதத்தைப் பற்றிய கண்ணோட்டம் அனைத்தும் வெளிப்படும். கலை யதார்த்தத்தை பிரதிபலிக்கும் போது யதார்த்தத்தைப் பற்றி மதிப்பீடும், அணுகுமுறையும் வெளிப்படுத்துகிறது. இதனால் கலையை சித்தாந்தத்திற்கு  ஆட்பட்டதாகவே கருதுகிறது தொழிலாளி வர்க்கம். அழகியல் உணர்வை வெளிப்படுத்துவது மட்டுமே கலையின் நோக்கமாக கருதாத பாட்டாளி வர்க்கம், தமது உலகக்கண்ணோட்டத்தை அழகியலோடு படைத்தளிக்கிறது.

No comments:

Post a Comment