Friday, 14 September 2012

மூலதன நூலில் காணப்படும் அடிப்படை கலைச் சொற்கள் 1


மூலதனம் முதல் தொகுதி 1867 ஆம் ஆண்டில் செப்டம்பர் 14 வெளிவந்தது.

2012யில் செப்டம்பர் முதல் நாள் முதல் மூலதன முதல் தொகுதி வெளிவந்த 14 தேதிவரை மூலதனநூலில் காணப்படும் அரசியல் பொருளாதார கலைச் சொற்களை முகநூலில் பதிப்பித்தேன். அதனை இங்கு அப்படியே தொகுக்கிறேன்.


1.சரக்கு:-
(commodity)

"முதலாளித்துவப் பொருளுற்பத்தி முறை (capitalist mode of producation) நிலவுகிற சமுதாயங்களின் செல்வம் "சரக்குகளின் பெருந்திரட்டலாகக்" காட்சி தருகிறது. தனிச் சரக்குதான் அந்தச் செல்வத்தின் அலகு.

எனவே நமது ஆராய்ச்சி சரக்கின் பகுப்பாய்வில் இருந்து தொடங்க வேண்டும்.

சரக்கு (commodity) என்பது, முதலாவதாக நமக்குப் புறத்தேயுள்ள பொருள், தனது குணங்களைக் கொண்ட எதேனும் ஒருவிதமான மனிதத் தேவைகளை நிறைவு செய்கிற ஒன்று.

இந்தத் தேவைகளின் தன்மை எப்படிப்பட்டதாய் இருந்தாலும் சரிதான், உதாரணமாக அவை வயிற்றிலிந்து உதித்தாலும் சரி, அல்லது கேளிக்கையிலிருந்து உதித்தாலும் சரி-எல்லாம் ஒன்றுதான். இந்தத் தேவைகளை அப்பொருள் எப்படி நிறைவு செய்கிறது - என்பது குறித்தும் இங்கு நமக்குக் கவலை இல்லை."
மூலதனம் I பக்கம் 59

2.சரக்கில் உருக்கொண்டுள்ள உழைப்பின் இரட்டைத் தன்மை:-
(The Two-fold Character of the Labour Embodied in Commodities)

 “எடுத்த எடுப்பில் சரக்கானது இரு விஷயங்களின்-பயன்-மதிப்பு, (use-value) பரிவர்த்தனை-மதிப்பு (exchange-value) இவற்றின்-பின்னலாக நம்மிடம் தன்னைக் காட்டிக் கொண்டது. அதே இரட்டை இயல்பை (two-fold nature) உழைப்பும் பெற்றிக்கிறது..

ஏனென்றால் பயன்-மதிப்புகளின் படைப்பாளி என்ற முறையில் அதற்குள்ள சிறப்பியல்புகள் வேறு, மதிப்பு வாயிலாகத் தெரிவிக்கப் பெறுகிறது என்ற அளவில் அதற்குள்ள சிறப்பியல்புகள் வேறு. சரக்குகளில் அடங்கிய உழைப்பின் இந்த இரட்டை இயல்பை முதல் முதல் சுட்டிக் காட்டியதும் விமர்சன வழியில் ஆராய்ந்ததும் நானே.

அரசியல் பொருளாதாரத்திலான தெள்ளிய ஞானத்துக்கு அச்சாணியாகத் திகழ்வது இதுவே...”
மூலதனம் I பக்கம் 67


3.பயன்-மதிப்பு:-
(use-value)

"ஒரு பொருளின் பயன்பாடு அதனைப் பயன்-மதிப்பு (use-value)ஆக்குகிறது. ஆனால் இந்தப் பயன்பாடு மானசீக விஷயமன்று. அது அச்சரக்கின் பௌதிகக் குணங்களால் வரம்பிடப்படுவதால், அந்தச் சரக்கிற்கு அப்பாற்பட்டு அதற்கு வாழ்வில்லை. எனவே இரும்பு, தானியம், அல்லது வைரம் போன்ற சரக்கு அது பொருளாயதமான ஒன்று என்ற அளவில் பயன்-மதிப்பாகும், பயனுள்ள ஒன்றாகும். சரக்கின் இந்தக் குணம் அதன் பயனுள்ள பண்புகளை உபயோகித்துக் கொள்ளத் தேவையான உழைப்பின் அளவைச் சார்ந்ததன்று.
..
ஒவ்வொரு சரக்கின் பயன்-மதிப்பிலும். பயனுள்ள உழைப்பு, அதாவது ஒரு திட்டமான வகையைச் சேர்ந்ததும் திட்டமான ஒரு நோக்கத்துடன்  பிரயோகிக்கப்படுவதுமான உற்பத்தி நடவடிக்கை அடங்கியுள்ளது. பயன்-மதிப்புகள். அவற்றில் உருக்கொண்டுள்ள பயனுள்ள உழைப்பு அவை ஒவ்வொன்றிலும் பண்பு வழியில் வேறுபட்டதாக இல்லையேல். சரக்குகளாக ஒன்றையொன்று எதிர்கொள்ள முடியாது.
..
உபயோகம் அல்லது நுகர்வின் மூலமே பயன்-மதிப்புகள் மெய்ம்மையாகின்றன. அவை செல்வம் அனைத்தின் சாரமாகவும் அமைகின்றன-அந்தச் செல்வத்தின் சமுதாய வடிவம் எதுவானாலும் சரி. நாம் பரிசீலிக்கப் போகும் சமுதாய வடிவத்தில் அவை பரிவர்த்தனை-மதிப்பின் (exchange-value) பொருளாயத சேமிப்பங்களாகவும் உள்ளன"
மூலதனம் I பக்கம் 60-69,60-61

4.பரிவர்த்தனை-மதிப்பு:-
(exchange-value)

"பார்த்த மாத்திரத்தில். பரிவர்த்தனை-மதிப்பானது ஓர் அளவு வழிப்பட்ட உறவாக, ஒரு வகைப்பட்ட பயன்-மதிப்புகள் இன்னொரு வகைப்பட்ட உறவாக, ஒரு வகைப்பட்ட பயன்-மதிப்புகளுக்குப் பரிவர்த்தனை செய்து கொள்ளப்படுகிற  விகிதாசாரமாக, காலத்துக்கும் இடத்துக்கும் ஏற்ப இடைவிடாமல் மாறிக் கொண்டிருக்கும் உறவாகக் காட்சி தருகிறது.
..
.. சரக்குகளின் பயன்-மதிப்பைப் பரிசீலனையிலிருந்து விட்டுவிடுவோமானால், உழைப்பின் உற்பத்திப் பொருட்களாக இருத்தல் என்ற ஒரே ஒரு பொதுவான குணமே அவற்றில் எஞ்சி நிற்கிறது. ஆனால் உழைப்பின் உற்பத்திப் பொருளும் கூட நமதுகையில் ஒரு மாற்றத்தை அடைந்துதிருக்கிறது. நாம் உற்பத்திப் பொருளின் பயன்-மதிப்பை நீக்கிவிட்டுப் பர்ர்போமானால், அதே நேரத்தில், அதனைப் பயன்-மதிப்பாக்குகிற பொருட்கூறுகள், உருவங்கள் ஆகியவற்றையும் நீக்கிவிட்டுப் பார்ப்பதாகும். இனியும் நாம் அதன் உருவில் மேசையை, வீட்டை, நூலை அல்லது வேறு ஏதேனும் பயனுள்ள பொருளைப் பார்ப்பதில்லை. பொருளாயதமான ஒன்று என்ற அதன் நிலை பார்வையிலிருந்து அகற்றப்படுகிறது. தச்சர், கொத்தர், நூற்பாளரது உழைப்பின் அல்லது வேறு திட்டமான வகைப்பட்ட திறனுடைய உழைப்பு எதனுடையவும் உற்பத்திப் பொருளாக இனி அதனைக் கருதவும் முடியாது. உற்பத்திப் பொருடகளின் பயனுள்ள பண்புகளோடு கூடவே, அவற்றில் உருக்கொண்ட உழைப்பின் பல்வேறு வகைகளது பயனுள்ள தன்மை, அந்த உழைப்பின் ஸ்தூல வடிவங்கள் (concete formms) ஆகிய இரண்டையுமே பார்வையில் இருந்து அகற்றி விடுகிறோம். அவை அனைத்துக்கும் பொதுவானது எதுவோ, அது மட்டுமே எஞ்சி நிற்கிறது, அனைத்துமே ஒரே வகை உழைப்பாக, ஸ்தூலமற்ற மனித உழைப்பாகப் பெயர்க்கப்படுகின்றன.
..
..இவை இப்போது நமக்குச் சொல்வதெல்லம், மனித உழைப்புச் சக்தி அவற்றின் உற்பத்தியில் செலவிடப்பட்டிருக்கிறது, மனித உழைப்பு அவற்றில் உருக்கொண்டிருக்கிறது என்பதையே. அவை அனைத்துக்கும் பொதுவான இந்த சமூக சாரத்தின் படிகங்களாக நோக்குங்கால். அவையே மதிப்புகள் (Values)

சரக்குகள் பரிவர்த்தனை செய்யபடும் போதுஅவற்றின் பரிவர்த்தனை-மதிப்பு அவற்றின் பயன்-மதிப்பை சற்றும் சார்ந்திராத ஒன்றாகத் தன்னைக் காண்பித்துக் கொள்கிறது.
மூலதனம் I பக்கம் 61-63

5. சமூகவழியில் அவசியமான உழைப்பின் நேரம்:-
(labour-time socially necessary)

"ஒரு சரக்கின் மதிப்பு அதற்காகச் செலவிடப்பட்ட உழைப்பின் அளவைக் கொண்டு நிர்ணயிக்கப்படுகிறது என்றால், உழைப்பாளி எவ்வளவு அதிகம் சோம்பேறியாகவும் தேர்ச்சியற்றவராகவும் இருக்கிறாரோ, அவ்வளவு அதிகம் மதிப்புள்ளதாக அவரது சரக்கு இருக்கும், ஏனெனில் அதன் உற்பத்திக்கு அதிக நேரம்  தேவைப்படும் என்று சிலர் நினைக்கக் கூடும். ஆயினும் மதிப்பின் சாரமாகிற உழைப்பு ஒருபடித்தான மனி உழைப்பு ஆகும், ஒரேசீரான உழைப்புச் சக்தியின் செலவீடாகும். சமுதாயத்தால் உற்பத்தி செய்யப்படும் சரக்குகள் அனைத்தினதும் மதிப்புகளின் ஒட்டுமொத்தத்தில் உருக்கொண்டுள்ள சமுதாயத்தின் மொத்த உழைப்புச் சக்தி, அது எண்ணற்ற தனித்தனி அலகுகளால் ஆனதென்றாலும், இங்கே மனித உழைப்புச் சக்தியின் ஒரே ஒருபடித்தான திரளாகவே கணக்கிடப்படுகிறது.

இந்த அலகுகளில் ஒவ்வொன்றும் சமுதாயத்தின் சராகரி உழைப்புச் சக்தியின் தன்மையைப் பெற்றிருக்கிறது, அவ்வாறே பயன்படுகிறது என்ற அளவில், அதாவது ஒரு சரக்கை உற்பத்தி செய்வதற்குத் தேபைப்படுகிற நேரம் சராசரியாகத் தேபைப்படுகிற நேரம்தான், சமுதாயவழியில் அவசியமான நேரம்தான் என்ற அளவில் இவ்வலகுகள் அனைத்தும் ஒன்றே. சமுதாய வழியில் அவசியமான உழைப்பு நேரம் என்பது, இயல்பான உற்பத்தி நிலைமைகளிலும், அந்நேரத்தில் வழக்கிலுள்ள சராசரியான தேர்ச்சி (skill), மும்முரம் (intensity) இவற்றைக் கொண்டும் ஒரு பண்டத்தை உற்பத்தி செய்யத் தேவைப்படுகிற நேரமாகும்.

இங்கிலாந்தில் விசைத்தறி புகுத்தப்பட்டதானது குறிப்பிட்ட அளவு நூலைத் துணியாக நெய்வதற்குத் தேவைப்படும் உழைப்பை ஏறக்குறைய சரிபாதியாகக் குறைத்து விட்டது எனலாம். அப்போதும், கைத்தறி நெசவாளர்களுக்கு, முன்பு தேவைப்பட்ட அதே நேரமே தொடர்ந்து தேவைப்பட்டது, ஆனாலும் கூட அவர்களது ஒரு மணி நேர உழைப்பின் உற்பத்திப் பொருள் இம்மாற்றத்திற்குப் பின்னர் அரை மணி நேர சமுதாய உழைப்பை யே குறித்தது, இதன் விளைவாக அதன் முந்தைய மதிப்பில் சரிபாதியாகக் குறைந்தது.

அப்படியானால், எந்தப் பண்டத்தினது மதிப்பின் பருமனையும்  நிர்ணயிப்பது சமுதாய வழியில் அவசியமான உழைப்பின் அளவே, அதாவது நேரமே என்பதைப் பார்க்கிறோம்."

மூலதனம் I பக்கம் 65


6.ஸ்தூல உழைப்பு:-
(concrete labour)

சட்டையானது குறிப்பிட்ட ஒரு தேவையை நிறைவு செய்யும் பயன்-மதிப்பாகும். அது ஒரு தனி வகைப்பட்ட உற்பத்தி நடவடிக்கையின் விளைவாய் உருவாகிறது. இந்நடவடிக்கையின் இயல்பு அதன் நோக்க்ததாலும, இயங்கு முறையாலும், இலக்குப் பொருளாலும், சாதனங்களாலும், விளைவாலும் நிர்ணயிக்கப்படுகிறது. இவ்வாறு எதன் உபயோகம் அதன் உற்பத்திப் பொருளின் பயன்-மதிப்பால் குறிக்கப்படுகிறதோ, அல்லது எது அதன் உற்பத்திப் பொருளை பயன்மதிப்பாக்குவதன் மூலம் வெளிப்படுகிறதோ, அந்த உழைப்பைப் பயனுள்ள உழைப்பு என்று அழைக்கிறோம். இது தொடர்பாக அதன் பயன்தரு விளைவை மாத்திரமே நோக்குகிறோம்.
..
சட்டையைத் துணியின் சமதையாக்குவதன் மூலம் சட்டையில் உருக்கொண்ட உழைப்பை துணியில் உருக்கொண்ட உழைப்புக்குச் சமன் செய்கிறோம். சட்டை தைக்கிற தையலானது துணி நெய்கிற நெசவுக்கு மாறான வகையைச் சேர்ந்த ஸ்தூலமான உழைப்புதான்


மூலதனம் I பக்கம் 68-79
7. சூக்கும உழைப்பு:-
(abstract labour)

"சமதையாகப் பயன்படுகிற சரக்கின் தசையுரு, சுக்கும மனித உழைப்பின் பொருள்வடிவமாக்கமாக இடம்பெறுகிறது, அதே நேரத்தில் குறிப்பிட்ட பயனுள்ள ஸ்தூலமான உழைப்பின் உற்பத்திப் பொருளாகவும் உள்ளது. எனவே, இந்த ஸ்தூலமான உழைப்பு சுக்கும மனித உழைப்பைத் தெரிவிப்பதற்கான ஊடகம் ஆகிறது. ஒரு புறம், சட்டை சுக்குமமான மனித உழைப்பின் உருவாகவே இடம்பெறுகிறது என்றால், அப்படியே மறுபுறம், அதில் உள்ளபடியே உருக்கொண்டுள்ள தையல் அந்த சுக்கும மனித உழைப்பு ஈடேற்றம் பெற்றுள்ள வடிவமாகவே கணக்கிடப்படுகிறது. துணியின் மதிப்புத் தெரிவிப்பில், தையலின் பயன்பாடு அடங்கியிருப்பது உடைகள் தயாரிப்பதில் அன்று. மதிப்பு என்று, எனவே உழைப்பின் இறுகல் என்று, ஆனால் துணியின் மதிப்பில் ஈடேற்றம் பெற்ற உழைப்பிலிருந்து வேறுபடுத்த முடியாத உழைப்பின் இறுகல் என்று உடனே ஏற்றுக் கொள்ளும் படியான ஒரு பொருளைத் தயாரிப்பதிலேயே அப்பயன்பாடு அடங்கியுள்ளது. மதிப்பின் இததகையதொரு கண்ணாடியாகச் செயல்பட வேண்டுமானால், தையலுழைப்பு பொதுவான மனித உழைப்பாயிருக்கும் தனது சுக்கும பண்பை அல்லாமல் வேறு எதையும் பிரதிபலிக்கலாகாது.

..ஸ்தூலமான உழைப்பு அதன் எதிர்க் கூறாகிய சூக்குமமான மனித உழைப்பின் புலப்பாட்டு வடிவமாகிறது.."
மூலதனம் I பக்கம் 89-90
8.சரக்கின் மாய்மாலமும் அதன் இரகசியமும்:-
(The Fetishism of Commodities and the Secret thereof)

"எடுத்த எடுப்பில் சரக்கு என்பது சர்வ சாதாரணமானதாகவும், எளிதிற் புரிந்துகொள்ளக் கூடியதாகவும் தோன்றுகிறது. உண்மையில் அது சூக்கும நுணுக்கங்களும் வேதாந்த நுட்பங்களும் நிறைந்த மிக விந்தையான பொருளாகும் என்பதை அதன் பகுப்பாய்வு காட்டுகிறது. அது ஒரு பயன்-மதிப்பு என்ற அளவில் தன் தன்மைகளால் மனிதத் தேவைகளை நிறைவு செய்ய வல்லது என்ற கண்ணோட்டத்தில் பார்த்தாலும்  சரி அந்தத் தன்மைகள் மனித உழைப்பின் பலனாகும் என்ற கண்ணோட்டத்தில் பார்த்தாலும் சரி, அதில் எந்த மர்மமும் இல்லை. மனிதன் தனது தொழிலைக் கொண்டு, இயற்கை தந்த பொருடகளின் விதத்தில் மாற்றுகிறான் என்பது வெள்ளிடைமலை.
..
..மதிப்பின் அளவுவழி நிர்ணயிப்புக்கு அடித்தளமாவது எதுவோ அதைப் பொறுத்த வரை, அதாவது அந்தச் செலவீடு நீடிக்கும் காலம் அல்லது உழைப்பின் அளவைப் பொறுத்த வரை, அதாவது அந்தச் செலவீடு நீடிக்கும் காலம் அல்லது உழைப்பின் அளவைப் பொறுத்த வரை, அதன் அளவுக்கும் பண்புக்கும் இடையே ஒரு வேறுபாடு இருப்பது தெள்ளத் தௌவாய்த் தெரிகிறது. எல்லாச் சமுதாய முறைகளிலும் வாழ்வுச் சாதனங்களை உற்பத்தி செய்வதற்கு செலவாகிற உழைப்பு நேரம், வெவ்வேறு வளர்ச்சிக் கட்டங்களிலும் ஒரே விதமான அக்கறைக்குரியதன்று என்றாலும், மனித வர்க்கத்தின் அக்கறைக்குரிய ஒன்றாய்க் கட்டாயம் இருந்தர்க வேண்டும். கடைசியாக மனிதர்கள் எவ்விதத்திலேனும் ஒருவர் மற்றவருக்காக உழைக்கிற அக்கணத்தில் இருந்தே அவர்களது உழைப்பு ஒரு சமூக வடிவத்தை மேற்கொள்கிறது.

அப்படியானால் உழைப்பின் உற்பத்திப்யின் உற்பத்திப் பொருள் சரக்கு என்ற வடிவத்தை மேற்கொண்டதுமே, அது பெறுகிற விசித்திரத் தன்மை எதிலிருந்து பிறக்கிறது? இந்த வடிவத்திலிருந்தே என்பது தெளிவு.
..
..மனிதர்களுடைய உழைப்பின் சமூகத் தன்மை அந்த உழைப்பின் உற்பத்திப் பொருளுக்கு உரித்தான பொருள்வயத் தன்மையாக அவர்களுக்கு தோற்றமளிக்கிறது, உற்பத்தியாளர்களுக்கு அவர்களுடைய உழைப்பின் ஒட்டுமொத்ததுடன் உள்ள உறவானது அவர்களிடையே நிலவுகிற சமூக உறவாக அல்லாமல் அவர்களது உழைப்பின் உற்பத்திப் பொருட்களிடையே நிலவுகிற சமூக உறவாக அவர்களை எதிர்கொள்கிறது-சரக்கின் மாயமான தன்மைக்கு இதுவேதான் காரணம். உழைப்பின் உற்பத்திப் பொருட்கள் சரக்குகளாவதற்கு, புலன்களால் உணரக் கூடியவையும் அதேபோது உணர முடியாதவையிமான சமூகப் பொருட்களாவதற்கு இதுவேதான் காரணம்."
மூலதனம் I பக்கம் 105-106-107

9. பரிவர்த்தனை:-
(Exchange)

"சரக்குகள் யாருக்கு அவை பயன்-மதிப்புகள் அல்லவோ அவர்களிடம் இருந்து யாருக்குப் பயன்-மதிப்புகளாகின்றனவோ அவர்களுக்கு மாற்றப்படுகிற நிகழ்முயையே பரிவர்த்தனை..
..
ஒரு சரக்கை அதன் உடைமையாளர் இடமிருந்து பிரதானமாக வேறுபடுத்துவது, அது மற்ற ஒவ்வொரு சரக்கையும் தன் சொந்த மதிப்பினது தோற்றத்தின் வடிவமாகவே பார்க்கிறது என்ற உண்மையே.
..
அவரது சரக்குக்கு அவருக்கு வேண்டிய எந்த உடனடிப் பயன்-மதிப்பு இல்லை. இருக்குமானால், அவர் அதைச் சந்தைக்குக் கொண்டுவர மாட்டார். அதற்கு மற்றவர்களுக்கு வேண்டிய பயன்-மதிப்பும் உள்ளது, ஆனால் அவருக்கோ அதன் ஒரே நேரடிப் பயன்-மதிப்பு பரிவர்த்தனை-மதிப்பின் இருப்பகமாகவும், ஆதலால் பரிவர்த்த்னைச் சாதனமாகவும் அது உள்ளதென்பதே. எனவே, தனக்குப் பயன்படவல்ல பயன்-மதிப்புடைய சரக்குகளுக்காக அதைக் கைவிட அவர் தீர்மானிக்கிறார். எல்லாச் சரக்குகளும் அவற்றின் உடைமையாளர்களுக்குப் பயன்-மதிப்புகளாகவும் உள்ளன. இதன் விளைவாக அவை அனைத்துமே கைமாற வேண்டும். ஆனால் இந்தக் கைமாற்றம் அவற்றின் பரிவர்த்தனையாக அமைகிறது, இப்பரிவர்த்தனை அவற்றை ஒன்றோடு ஒன்று மதிப்புகள் என்ற உறவில் வைக்கிறது, அவற்றை மதிப்புகளாக ஈடேற்றம் செய்கிறது. எனவே, சரக்குகள் பயன்-மதிப்புகளாக ஈடேற்றம் பெறுமுன் மதிப்புகளாக ஈடேற்றம் பெற வேண்டும்.

மறு புறம், அவை தம்மைப் பயன்-மதிப்புகளாகக் காட்டிக் கொண்டே பிறகே, மதிப்புகளாக ஈடேற்றம் பெற முடியும். ஏனெனில். அவற்றில் வெலவிடப்பட்டுள்ள உழைப்பு, மற்றவர்களக்குப் பயனுள்ள வடிவத்தில் செலவிடப்பட்டுள்ளது என்ற அளவிலேயே அர்த்தமுள்ளதாகிறது. அந்த உழைப்பு மற்றவர்களுக்குப் பயனுள்ளதாகவும், ஆதலால் அதன் உற்பத்திப் பொருள் மற்றவர்களது தேவைகளை நிறைவு செய்ய வல்லதாகவும் உள்ளதா என்பதைப் பரிவர்த்தனைச் செயலின் மூலமே நிரூபிக்க முடியும்."
மூலதனம் I பக்கம் 148-124-125

10. பணம்:-
(Money)
"பணத்தின் முதல் முககியப் பணி சரக்குகளுக்கு அவற்றின் மதிப்புகளைத் தெரிவிப்பதற்கான பொருளை வழங்குவது, அல்லது அவற்றின் மதிப்புகளைப் பண்புவழியில் சமமான, அளவுவழியில் ஒப்பிடத்தக்க ஒரே அலகு வகைப்பட்ட பருமன்களாகக் காட்டுவதாகும். இவ்வாறு அது மதிப்பின் சர்வப் பொது அளவையாக (universal measure of value)பயன்படுகிறது. இந்தப் பணியின் பயனாகத்தான் தலைசிறந்த சமதைச் சரக்கான தங்கள் பணமாகிறது.

சரக்குகளைப் பொதுவளவுடையனவாய் ஆக்குவது பணமன்று. நேர்மாறானதே உண்மை. ஏனெனில் எல்லாச் சரக்குகளுமே மதிப்புகள் என்ற விதத்தில் பொருள் வடிவாக்கப்பட்ட மனித உழைப்பாகவும், எனவே பொதுவளவுடையனவாகவும் இருப்பதால்தான் அவற்றின் மதிப்புகளை ஒரே தனிவகைச் சரக்கினால் அளவிடவும், அத்தனிவகைச் சரக்கை அவற்றின் மதிப்புகளின் பொது அளவையாக, அதாவது பணமாக மாற்றவும் முடிகிறது. மதிப்பின் அளவை என்ற விதத்தில் பணமானது சரக்குகளில் உள்ளார்ந்துள்ள மதிப்பளவையான உழைப்பு நேரம் அவசியமாகவே மேற்கொள்ள வேண்டிய புலப்பாட்டு வடிவமாகும்."
மூலதனம் I பக்கம் 135

11. மூலதனம்:-
(Capital)

"பணமாக மட்டுமே உள்ள பணத்துக்கும், மூலதனமாக உள்ள பணத்துக்கும் இடையில் நாம் காண்கிற முதல் வேறுபாடு அவற்றின் சுற்றோட்ட வடிவத்திலான மாறுபாட்டுக்கு மேல் ஒன்றும் இல்லை.

சரக்குச் சுற்றோட்டத்தின் மிகவும் சாமானிய வடிவம் C-M-C (சரக்கு-பணம்-சரக்கு), அதாவது சரக்கு பணமாக மாறுவதும் பணம் மீண்டும் சரக்காக மாறுவதும் ஆகும், அல்லது வாங்கும் பொருட்டு விற்பதாகும். ஆனால் இந்த வடிவத்தோடு கூடவே நாம் காண்கிற இன்னொரு முற்றிலும் வேறுபட்ட வடிவம் M-C-M (பணம்-சரக்கு-பணம்), அதாவது பணம் சரக்குகளாக மாறுவதும், சரக்குகள் மீண்டும் பணமாக மாறுவதும் ஆகும், அல்லது விற்கும் பொருட்டு வாங்குவதாகும். பின்சொன்ன விதத்தில் சுற்றோட்டத்தில் செல்கிற பணம் இவ்வழியில் மூலதனமாக மாறுகிறது, மூலதனம் ஆகிறது. உள்ளாற்றலில் ஏற்கெனவே மூலதனமாகவும் இருக்கிறது.
..
..C-M-C (சரக்கு-பணம்-சரக்கு) என்ற சுற்றுக்கும் M-C-M (பணம்-சரக்கு-பணம்) என்ற சுற்றுக்கும் இடையிலான முதல் முக்கிய வேறுபாடு இரு கட்டங்களினதும் நேர்மாறான வரிசையமைப்பே ஆகும். சரக்குகளின் சாமானியச் சுற்றோட்டம் விற்றலுடன் தொடங்கி வாங்கலுடன் முடிவடைகிறது, மூலதனம் என்ற விதத்தில பணத்தின் சுற்றோட்டமோ வாங்கலுடன்  தொடங்கி விற்றலுடன் முடிவடைகிறது. ஒன்றில் தொடக்கநிலை, இலக்கு ஆகிய இரண்டுமே சரக்குகளாகும், மற்றதில் அவை இரண்டுமே பணமாகும். முதல் வடிவத்தில் பணத்தின் குறுக்கீட்டாலும். இரண்டாவதில் சரக்கின் குறுக்கீட்டாலும் இயக்கம் நிகழ்த்தப்படுகிறது."
மூலதனம் I பக்கம் 204-205

12. உழைப்புச் சக்தி:-
(Labour-Power)

"உழைப்புச் சக்தி அல்லது உழைக்கும் திறன் என்று சொல்லும் போது ஒரு மனிதனிடம் உள்ள மூளையாற்றல்கள், உடலாற்றல்கள் ஆகியவற்றின்-ஏதேனும் ஒரு வகைப் பயன்-மதிப்பை உற்பத்தி செய்யும் போதெல்லாம் அவன் பயன்படுத்துகிற இந்த ஆற்றல்களின்-ஒட்டுமொத்தம் என்றே புரிந்து கொள்ள வேண்டும்.

ஆனால் நமது பணபுடைமையாளர் ஒரு சரக்காக விலைக்கு வரும் உழைப்புச் சக்தியைக் காண வேண்டுமானால் முதற்கண் பல்வேறு நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்பட வேண்டும். சரக்குகளின் பரிவர்த்தனை தன்னளவில், தன் சொந்த இயபிலிருந்தே விளைகின்றவற்றைத் தவிர வேறு எந்தச் சார்பு உறவையும் குறிப்பதில்லை. இந்த அனுமானத்தின் பேரில், உழைப்புச் சக்தியைப் பெற்றிருப்பவர்-உழைப்புச் சக்தி யாருடையதோ அந்தத் தனியாள்-அந்த உழைப்புச் சக்தியை ஒரு சரக்காக விற்பனைக்கு முன்வைக்கவோ விற்கவோ செய்தால்தான்-அப்படிச் செச்கிற அளவில் தான்- உழைப்புச் சக்தி ஒரு சரக்காக விற்பனைக்கு முன்வைக்கவோ விற்கவோ செய்தால்தான்-அப்படிச் செய்கிற அளவில் தான்-உழைப்புச் சக்தி ஒரு சரக்காக சந்தைக்கு வரமுடியும். அவர் இதைச் செய்ய வேண்டுமானால், அதைத் தன் விருப்பத்துக்குப் பயன்படுத்தும் நிலையில் இருக்க வேண்டும், தன் உழைக்கும் திறனின், அதாவது தன் சரீரத்தின் வில்லங்கமற்ற உடைமையாளராக இருக்க வேண்டும். அவரும் பணவுடைமையாளரும் சந்தையில் சந்தித்து, ஒருவர் வாங்குபவர், மற்றவர் விற்பவர் என்ற ஒரே ஒரு வேறுபாடு மட்டும் நிலவ சம உரிமைகளின் அடைப்பயில் ஒருவரோடு ஒருவர் பேரம் செய்கின்றனர், எனவே இருவரும் சட்டத்தின் பார்வையில் சமம் ஆகின்றனர்.
..
பணவுடைமையாளர் சந்தையில் உழைப்புச் சக்தி ஒரு சரக்காக இருக்கக் காண்பதற்கு இரண்டாவது அத்தியாவசிய நிபந்தனை, உழைப்பாளி தன் உழைப்பாலான சரக்குகளை விற்கிற  நிலையில் இருப்பதற்குப் பதிலாக உயிரும் உடலுமான அவரையே உறைவிடமாய்க் கொண்ட அவ்வுழைப்புச் சக்தியையே ஒரு சரக்காக விலைக்குக் கொடுக்கும் கட்டாயத்துக்கு ஆளாக வேண்டும்.
..
பணத்தை வைத்திருப்பவரோடு சந்தையில் நேருக்கு நேர் வருவது, உண்மையில் உழைப்பல்ல, உழைப்பாளியே. உழைப்பாளி விற்பது அவரது உழைப்புச் சக்தியையே. அவரது உழைப்பு உளளபடியே தொடங்கியதும் அது அவருக்குச் சொந்தமானதாயில்லை. எனவே அதனை அவர் விற்க முடியாது"
மூலதனம் I பக்கம் 232-233-721


13. மாறா-மூலதனம், மாறும்-மூலதனம்:-
(Constant Capital and Variable Capital)

"..உற்பத்திச் சாதனங்கள், அதாவது கச்சாப் பொருள், துணைப் பொருள், உழைப்புச் சாதனங்கள் ஆகியவை மூலதனத்தின் எந்தப் பகுதியைக் குறிக்கின்றனவோ அந்தப் பகுதி உற்பத்தி நிகழ்முறையில் அளவுவழியிலான மதிப்பு மாறுபாடு எதையும் அடைவதில்லை. எனவே, நான் அதை மூலதனத்தின் மாறாப் பகுதி, அல்லது சுருக்கமாக மாறா-மூலதனம் (constant capital) என்று அழைக்கிறேன்.

மறுபுறம், உற்பத்தி நிகழ்முறையில், உழைப்புச் சக்தி குறிக்கிற மூலதனப் பகுதியின் மதிப்பு மாறுபாடு அடையவே செய்கிறது. அது தன் சொந்த மதிப்பின் சமதையை மறுவுற்பத்தி செய்வது மட்டுமல்லாது ஒரு மிகையையும், அதாவது உபரி-மதிப்பையும் உற்பத்தி செய்கிறது, இந்த மிகை அல்லது உபரி-மதிப்பு மாறுபடக் கூடியது, சூழ்நிலைகைகேற்ப அதிகமாகவும் இருக்கலாம், குறைவாகவும் இருக்கலாம். மூலதனத்தின் இந்தப் பகுதி மாறாப் பருமன் என்ற நிலையிலிருந்து மாறும் பருமனாகத் தொடர்ந்து மாற்றப்படுகிறது. எனவே, நான் அதை மூலதனத்தின் மாறும் பகுதி அல்லது சுருக்கமாக மாறும்-மூலதனம் (variable capital) என்று அழைக்றேன்."
மூலதனம் I பக்கம் 286

14. உபரி மதிப்பு:-
(Surplus-Value)

"உழைப்ப்ளி உழைப்பு நிகழ்முறையில் ஒரு பகுதியின் போது, தன் உழைப்புச் சக்தியின் மதிப்பை மட்டுமே, அதாவது தன்வாழ்வுச் சாதனங்களின் மதிப்பை மட்டுமே உற்பத்தி கெய்கிறார்.. , இப்போது, அவரது வேலை சமுதாய உழைப்புப் பிரிவினையை அடிப்படையாகக் கொண்ட ஓர் அமைப்பின் அங்கமே என்பதால், அவர் உள்ளபடியே தான் நுகர்கிற அவசியப் பண்டங்களை தானே நேரடியாக உற்பத்தி  செய்வதில்லை, பதிலுக்கு அவர் அந்த அவசியப் பண்டங்களின் அல்லது அவற்றை வாங்குவதற்கான பணத்தின் மதிப்புக்கச் சமமான மதிப்புடைய குறிப்பிட்ட ஒரு சரக்கை, .. உற்பத்தி செய்கிறார்.
..
படைக்கப்படும் புதிய மதிப்பு முன்னீடு செய்யப்படட மாறும்-மூலத்தை மாற்றீடு செய்வதோடு சரி. இக்காரணத்தால் மூன்று ஷில்லிங் என்ற புதிய மதிப்பின் உற்பத்தி வெறும் மறுவுற்பத்தியின் சாயலைப் பெறுகிறது. ஆகவே, வேலை-நாளில் இந்த மறுவுற்பத்தி நடைபெறும் பகுதியை "அவசிய" உழைப்பு நேரம் என்றும், அந்த நேரத்தில் செலவிடப்படும் உழைப்பை "அவசிய உழைப்பு" ("necessary" abour) என்றும் அழைக்கிறேன். தொழிலாளியைப் பொறுத்தவரை அவசியம் என்பது எப்படியென்றால், இது அவரது உழைப்பின் குறிப்பிட்ட சமூக வடிவத்தை சார்ந்ததன்று, மூலதனத்தையும் முதலாளிகளின் உலகையும் பொறுத்த வரை அவசியம் என்பது எப்படி என்றால், தொழிலாளி இல்லையேல் முதலாளியும் இல்லை.

தொழிலாளி ஆனவர் உழைப்பு நிகழ்முறையின் இரண்டாவது காலப் பகுதியிலும்-அவரது உழைப்பு அவசிய-உழைப்புபாயிராத அப்பகுதியிலும்-உழைக்கிறார், உழைப்புச் சக்தியைச் செலவிடுகிறார் என்பது மெய்தான், ஆனால், அவரது உழைப்பு முன்போல் அவசிய-உழைப்பாயிராததால் தனக்கென அவர் மதிப்பேதும் படைப்பதில்லை. அவர் உபரி-மதிப்பைப் படைக்கிறார், முதலாளியைப் பொறுத்த வரை, இவ்வுபரி-மதிப்பு ஒன்றுமே இல்லாமல் படைக்கப்படும் படைப்பில் அருமைபெருமைகளை எல்லாம் கொண்டதாகிறது. வேலை-நாளின் இந்தப் பகுதிக்கு உபரி-உழைப்பு நேரம் என்றும், அந்த நேரத்தில் செலவிடப்படும் உழைப்புக்கு உபரி-உழைப்பு (surplus-labour) என்றும் பெயர் சூட்டுகிறேன்."
மூலதனம் I பக்கம் 294-296

6 comments:

  1. அருமை ....... தேடிய ஒன்றை கிடைத்த, வாசித்த, அறிந்த மகிழ்ச்சி !!!

    ReplyDelete
    Replies
    1. இதுவரை மார்க்சின் "மூலதன" நூலுக்கு தியாகு, ஜமதக்னி ஆகிய இரண்டு பேர் மொழியாக்கம் மட்டுமே இருக்கின்றன. தியாகுவின் மொழியாக்கம் தெளிவாக இருக்கிறது. இன்னும் அதனை மேம்படுத்தலாம். அதற்கு பலபேருடைய ஒத்துழைப்பு தேவைப்படுகிறது

      Delete
  2. excellent. I am also trying to do something like this.

    ReplyDelete
    Replies
    1. தொடருங்கள் அனைவரது முயற்சியும் கண்டிப்பாக பெரும் பயனைத்தரும்

      Delete
  3. தோழர் C P Ravisankar அவர்களின் வலைப்பூ
    http://marxinmooladhanam.blogspot.com/

    ReplyDelete