Sunday 18 March 2018

மாறா - மூலதனம் பயன்மதிப்பைத் தான் படைக்கிறது பரிவர்த்தனை - மதிப்பை அல்ல என்பது பற்றி மார்க்ஸ்


(முதலாளி உற்பத்தியில் செலவிடப்படும் மூலதனத்தை இரண்டு வகையாக மார்க்ஸ் பிரிக்கிறார். ஒன்று மாறா - மூலதனம் மற்றொன்று மாறும் - மூலதனம். கச்சாப்பொருள், உழைப்புக் கருவிகள், உறைபத்திச் சாதனங்கள், எரிபொருள் போன்றவற்றை வாங்குவதற்கு செலவிடப்படும் மூலதனம் மாறா - மூலதனம் என்று அழைக்கப்படுகிறது. ஏன் என்றால் இதில் செலவிடப்பட்ட மூலதனம் உற்பத்திப் பொருளில் எந்தப் புதிய மதிப்பையும் படைக்கவில்லை. இதில் உள்ள மதிப்புகள் புதிய மதிப்பில் பகுதிப் பகுதியாக இடம் பெறுகிறது அவ்வளவே.

தொழிலாளியின் உழைப்புச் சக்திக்குக்கு கூலியாகக் கொடுக்கப்படும் மூலதனத்தை மாறும் - மூலதனம் என்றழைக்கப்படுகிறது. ஏன் என்றால் இதற்கு செலவிடப்பட்ட மூலதனம் புதிய மதிப்பைப் படைக்கிறது. அதனால் இதற்கு, மாறும் – மூலதனம் என்று பெயர் பெருகிறது.

பொருளை உற்பத்தி செய்யும் தொழிலாளியின் உழைப்பில் இரட்டைத் தன்மை அடங்கியிருப்பதாக மார்க்ஸ் கூறுகிறார். ஒன்று ஸ்தூலமான உழைப்பு, மற்றொன்று ஸ்தூலமற்ற உழைப்பு (சூக்கும உழைப்பு). கட்டில், சட்டை போன்ற வடிவத்தைப் படைக்கின்ற உழைப்புக்கு ஸ்தூல உழைப்பு என்று பெயர். ஏன் என்றால் இந்த வகை உழைப்பின் பலன் ஸ்தூலமாகத் தெரிகிறது. மூளை, நரம்பு, தசை இவற்றின் திறனுடை செலவீடான, மனித உழைப்புச் சக்தியினைக் கொண்டு உழைப்பது ஸ்தூலமற்ற உழைப்பு. இந்த உழைப்பின் பலனை ஸ்தூலமாகக் காண முடியாது, அதனால் தான் இதற்கு ஸ்தூலமற்ற உழைப்பு (சூக்கும உழைப்பு) என்று பெயர்.

உற்பத்தி செய்யப்பட்ட சரக்கில் இரண்டு மதிப்புகள் இருக்கின்றன. ஒன்று பயன் மதிப்பு, மற்றொன்று பரிவர்த்தனை மதிப்பு. சரக்கை நுகர்வது பயன் மதிப்பு. அதாவது சட்டை உடுத்துவதற்கு பயன்படுகிறது. கார் பயணத்திற்குப் பயன் படுகிறது. பயன்களை தருகிற பகுதிக்கு பயன் மதிப்பு என்று பெயர். மற்றொன்று பரிவர்ததனை மதிப்பு. இரு சரக்குகள் குறிப்பிட்ட சமதைக்கு பரிமாறப்படுகிறது. அந்த சமதையே பொதுவான மனித உழைப்பு.

ஸ்தூல உழைப்பு பயன் - மதிப்பைப் படைக்கிறது. ஸ்தூலமற்ற உழைப்பு பரிவர்த்தனை - மதிப்பைப் படைக்கிறது.)

1) மூலதனம் முதல் தொகுதி:-

மாறா-மூலதனமும் மாறும்-மூலதனமும்

மார்க்ஸ்:-
உழைப்பு நிகழ்முறையின் பல்வேறு காரணிகள் உற்பத்திப் பொருளின் மதிப்பை உருவாக்குவதில் வெவ்வேறு பாத்திரங்கள் வகிக்கின்றன.

உழைப்பாளி தன் உழைப்பினது இலக்குப் பொருள் மீது குறிப்பிட்ட அளவு கூடுதல் உழைப்பைச் செலவிட்டு-அந்த உழைப்பின் பிரத்தியேகத் தன்மையும் பயன்பாடும் என்னவாயிருப்பினும் - அந்த இலக்குப் பொருளுக்குப் புதிய மதிப்பைச் சேர்க்கிறார். மறு புறம் நிகழ்முறையில் பயன்படுத்திக் கொள்ளப்படும் உற்பத்திச் சாதனங்களின் மதிப்புகள் பாதுகாக்கப்பட்டு, உற்பத்திப் பொருளினது மதிப்பின் அடக்கக் கூறுகளாகப் புதுக் கோலம் பூணுகின்றன; எடுத்துக்காட்டாக பஞ்சு, கதிர் ஆகியவற்றின் மதிப்புகள் நூலின் மதிப்பில் திரும்ப இடம் பெற்றுத் தலைகாட்டு கின்றன. ஆகவே, உற்பத்திச் சாதனங்களின் மதிப்பு உற்பத்திப் பொருளுக்குப் பெயர்க்கப்படுவதன் மூலம் பாதுகாக்கப்படுகிறது. இந்தப் பெயர்ச்சி, அந்தச் சாதனங்கள் உற்பத்திப் பொருளாக மாற்றம் அடையும் போது, அதாவது உழைப்பு நிகழ்முறையின் போது நடைபெறுகிறது. இந்தப் பெயர்ச்சி உழைப்பைக் கொண்டு நடைபெறுகிறது; எப்படி?

உழைப்பாளி பஞ்சுக்கு மதிப்பு சேர்ப்பதை ஒரு செயற்பாடாகவும், உற்பத்திச் சாதனங்களின் மதிப்பைப் பாதுகாப்பதை - அதாவது தன் வேலைக்கு இலக்காகிற பஞ்சின் மதிப்பையும், தன் வேலையின் கருவியான கதிரின் மதிப்பில் ஒரு பகுதியையும் நூலுக்கு, அதாவது உற்பத்திப் பொருளுக்குப் பெயர்ப்பதை - இன்னொரு செயற்பாடாகவும் கொண்டு ஒரே நேரத்தில் இரு செயற்பாடுகளை நிறைவேற்றவில்லை. புதிய மதிப்பைச் சேர்ப்பதென்ற செயலாலேயே, அவர் அவற்றின் முந்தைய மதிப்புகளைப் பாதுகாக்கிறார். ஆயினும், தன் உழைப்பின் இலக்குப் பொருளுக்குப் புதிய மதிப்பைச் சேர்ப்பதும் அதன் முந்தைய மதிப்பைப் பாதுகாப்பதும் ஒரே செயற்பாட்டின் போது உழைப்பாளி ஏககாலத்தில் தோற்றுவிக்கும் இருவேறு விளைவுகளே என்பதால், விளைவின் இந்த இரட்டைத் தன்மைக்கு அவரது உழைப்பின் இரட்டைத் தன்மையையே காரணமாய்க் கொள்ள முடியும் என்பது தெளிவு. ஒரே நேரத்தில் அது ஒரு தன்மையில் மதிப்பைப் படைக்க வேண்டும்; இன்னொரு தன்மையில் மதிப்பைப் பாதுகாத்திட அல்லது பெயர்த்திட வேண்டும்.

இப்போது ஒவ்வொரு உழைப்பாளியும் புதிய உழைப்பையும், அதனால் புதிய மதிப்பையும் சேர்ப்பது எவ்வாறு? உற்பத்தித் திறனுள்ளவாறு குறிப்பிட்ட வழியில் உழைப்பதன் மூலமே என்பது தெளிவு. நூற்பாளர் நூற்பதன் மூலமும், நெசவாளர் நெய்வதன் மூலமும், கருமான் உலைக்களத்தில் காய்ச்சியடிப்பதன் மூலமும் இதைச் செய்கின்றனர். ஆனால் பொதுவாக உழைப்பை, அதாவது மதிப்பை இவ்வாறு இணைக்கிற அதே நேரத்தில், உற்பத்திச் சாதனங்களான பஞ்சும் கதிரும், நூலும் தறியும், இரும்பும் பட்டறைக் கல்லும் உற்பத்திப் பொருளின், அதாவது புதிய பயன் - மதிப்பின் ஆக்கக் கூறுகளாவது உழைப்பின் குறிப்பான வடிவத்தாலேயேமுறையே நூற்பாலும், நெசவாலும், காய்ச்சியடித்தலாலுமே. பயன் - மதிப்பு ஒவ்வொன்றும் மறைந்து போவது ஒரு புதிய பயன்-மதிப்பில் ஒரு புதிய வடிவத்தில் மறுபடியும் தலைகாட்டுவதற்கே. இந்நிலையில், ஒரு பயன் - மதிப்பு புதிய பயன் - மதிப்பின் உற்பத்தியில் திறனுள்ள முறையில் நுகரப்பட்டால், நுகரப்பட்ட பண்டத்தின் உற்பத்தியில் செலவிடப்பட்ட உழைப்பளவானது புதிய பயன்- மதிப்பை உற்பத்தி செய்வதற்கு அவசியமான உழைப்பளவின் பகுதியாக அமைகிறது என்பதை மதிப்பைப் படைக்கும் நிகழ்முறையைப் பரிசீலித்துக் கொண்டிருந்த போது பார்த்தோம். எனவே உழைப்பின் இந்தப் பகுதியானது உற்பத்திச் சாதனங்களில்லிருந்து புதிய உற்பத்திப் பொருளுக்குப் பெயர்க்கப்படுகிற உழைப் பாகும். எனவே, நுகரப்பட்ட உற்பத்திச் சாதனங்களின் மதிப்புகளை உழைப்பாளி பாதுகாப்பது, அல்லது அவற்றை உற்பத்திப் பொருளுக்கு அதன் மதிப்பின் பகுதிகளாகப் பெயர்ப்பது, ஸ்தூல மற்றதாய்க் கொண்ட அவரது கூடுதல் உழைப்பின் மூலமன்று. அந்த உழைப்பின் குறிப்பான பயனுள்ள தன்மையின் மூலமே; உற்பத்தித் திறனுள்ள தனி வடிவத்தின் மூலமே. ஆக, உழைப்பு இத்தகைய பிரத்தியேகமான திறனுடையச் செயற்பாடாக இருப்பதால், நூற்பு, நெசவு, அல்லது காய்ச்சியடித்தலாக இருப்பதால், உற்பத்திச் சாதனங்களைத் தீண்டுவதன் மூலமே அவற்றை உயிரற்ற நிலையிலிருந்து எழுப்பி, உழைப்பு நிகழ்முறையின் உயிர்த் துடிப்புள்ள காரணிகளாக்கி, அவற்றுடன் இணைந்து புதிய உற்பத்திப் பொருட்களாகிறது.

உழைப்பாளியின் தனிவிதத் திறனுடை உழைப்பு நூற்பாய் இல்லா விட்டால், அவர் பஞ்சை நூலாக மாற்ற முடியாது; எனவே பஞ்சு, கதிர் ஆகியவற்றின் மதிப்புகளை நூலுக்குப் பெயர்க்க முடியாது. அதே உழைப்பாளி தன் தொழிலை தச்சுத் தொழிலாக மாற்றிக் கொள்வதாக வைத்துக் கொண்டாலும், அவர் தன் வேலைக்கு இலக்காகும் பொருளுக்கு ஒரு நாள் உழைப்பின் மூலம் மதிப்பைச் சேர்க்கவே செய்வார். ஆதலால், முதலாவதாக, புதிய மதிப்புச் சேர்ப்பு நடைபெறுவது அவரது உழைப்பு குறிப்பாக நூற்பு அல்லது குறிப்பாகத் தச்சு வேலை என்றிருப்பதன் மூல மன்று; அது ஸ்தூலமற்ற உழைப்பாக, சமுதாயத்தினது மொத்த உழைப்பின் பகுதியாக இருப்பதன் மூலமே என்று பார்க்கிறோம். இரண்டாவதாக, சேர்க்கப்படுகிற மதிப்பு குறிப்பிட்ட திட்டமான அளவினதாக இருப்பது, அவரது உழைப்பு தனிவிதப் பயன்பாட்டைப் பெற்றிருப்பதன் மூலமன்று. குறிப்பிட்ட காலத்துக்குப் பிரயோகிக்கப்படுவதன் மூலமே என்று பார்க்கிறோம். அப்படியானால், நூற்பானது ஒரு புறம் பஞ்சு, கதிர் ஆகியவற்றின் மதிப்புகளோடு புதிய மதிப்பைச் சேர்ப்பது ஸ்தூலமற்ற மனித உழைப்புச் சக்தியின் செலவீடாக இருத்தல் என்ற அதன் பொதுத் தன்மையின் மூலமே; நூற்பு என்ற அதே உழைப்பு மறு புறம் உற்பத்திச் சாதனங்களின் மதிப்புகளை உற்பத்திப் பொருளுக்குப் பெயர்ப்பதும் சரி, அவற்றை உற்பத்திப் பொருளில் பாதுகாப்பதும் சரி, ஸ்தூலமான, பயனுள்ள நிகழ்முறையாக இருத்தலென்ற அதன் தனித் தன்மையின் மூலமே. எனவே, ஒரே நேரத்தில் ஓர் இரட்டை விளைவு உண்டாக்கப்படுகிறது.”
(மூலதனம் தொகுதி 1 பக்கம் 273 -275)

உற்பத்திச் சாதனங்கள் உழைப்பு நிகழ்முறையின் போது தம் சொந்தப் பயன்-மதிப்பின் அழிவால் தாமே இழப்பதை விட அதிக மதிப்பை உற்பத்திப் பொருளுக்குப் பெயர்ப்பதில்லை என்பது தெட்டத் தெளிவாகிறது. இப்படியொரு சாதனம் இழப்பதற்கு மதிப்பேதும் இல்லையென்றால், அதாவது அது மனித உழைப்பின் உற்பத்திப் பொருளாக இல்லையென்றால், உற்பத்திப் பொருளுக்கு அது மதிப்பெதையும் பெயர்ப்பதில்லை. அது பரிவர்த்தனை-மதிப்பைப் படைப்பதற்குப் பங்கு செலுத்தாமலே பயன் - மதிப்பைப் படைக்க உதவுகிறது. மனித உதவியில்லாமல் இயற்கையால் வழங்கப்படும் எல்லா உற்பத்திச் சாதனங்களும் இவ்வகையில் அடங்கும்; நிலம், காற்று, நீர், கனிம நிலையிலுள்ள உலோகங்கள், கன்னிக் காடுகளின் மர வளம் போன்றவற்றை உதாரணமாய்க் கொள்ளலாம்.”
(மூலதனம் தொகுதி 1 பக்கம் 279 -280)

உற்பத்திச் சாதனங்களைப் பொறுத்த வரை, உண்மையில் நுகரப்படுவது அவற்றின் பயன்-மதிப்பே; இந்தப் பயன்-மதிப்பை நுகர்வதன் விளைவே உற்பத்திப் பொருள். அவற்றின் மதிப்பு எவ்வகையிலும் நுகரப்படுவதில்லை. எனவே, அது மறுவுற்பத்தி செய்யப்படுவதாகக் கூறுவது பிழையாகும். சரியாகச் சொன்னால், அது பாதுகாக்கப்படுகிறது. நிகழ்முறையின் போது ஏதேனும் ஒரு வினைமுறைக்கு அது உள்ளாகிறது என்பதால் அன்று, ஆரம்பத்தில் அதற்கு உறைவிடமாய் இருக்கும் பண்டம் மறைவது மெய்தான் என்றாலும் இவ்விதம் மறைவதன் மூலம் வேறொரு பண்டமாகிறது என்பதாலேயே, அது பாதுகாக்கப்படுகிறது. எனவே, உற்பத்திப் பொருளின் மதிப்பில் உற்பத்திச் சாதனங்களின் மதிப்பு திரும்ப இடம் பெறுகிறதே தவிர, கண்டிப்பாகச் சொன்னால், அந்த மதிப்பு மறுவுற்பத்தியாவதில்லை. உற்பத்தியாவது புதிய பயன்மதிப்பே, பழைய பரிவர்த்தனை- மதிப்பு இந்தப் புதிய பயன்மதிப்பில் திரும்ப இடம் பெறுகிறது.”
(மூலதனம் தொகுதி 1 பக்கம் 283 -284)

மாறா- மூலதனம் (constant capital):-
உற்பத்திச் சாதனங்கள், அதாவது கச்சாப் பொருள், துணைப் பொருள், உழைப்புச் சாதனங்கள் ஆகியவை மூலதனத்தின் எந்தப் பகுதியைக் குறிக்கின்றனவோ அந்தப் பகுதி உற்பத்தி நிகழ்முறையில் அளவுவழியிலான மதிப்பு மாறுபாடு எதையும் அடைவதில்லை. எனவே, நான் அதை மூலதனத்தின் மாறாப் பகுதி, அல்லது, சுருக்கமாக மாறா- மூலதனம் [constant capital) என்று அழைக்கிறேன்.”
(மூலதனம் தொகுதி 1 பக்கம் 286)

மாறும் மூலதனம் (variable capital):-
உற்பத்தி நிகழ்முறையில், உழைப்புச் சக்தி குறிக்கிற மூலதனப் பகுதியின் மதிப்பு மாறுபாடு அடையவே செய்கிறது. அது தன் சொந்த மதிப்பின் சமதையை மறுவுற்பத்தி செய்வது மட்டுமல்லாமல் ஒரு மிகையையும், அதாவது உபரி-மதிப்பையும் உற்பத்தி செய்கிறது: இந்த மிகை அல்லது உபரி மதிப்பு மாறுபடக் கூடியது; சூழ்நிலைக்கேற்ப அதிகமாகவும் இருக்கலாம், குறைவாகவும் இருக்கலாம். மூலதனத்தின் இந்தப் பகுதி மாறாப் பருமன் என்ற நிலையிலிருந்து மாறும் பருமனாகத் தொடர்ந்து மாற்றப்படுகிறது. எனவே, நான் அதை மூலதனத்தின் மாறும் பகுதி, அல்லது சுருக்கமாக மாறும் மூலதனம் (variable capital) என்று அழைக் கிறேன்.”
(மூலதனம் தொகுதி 1 பக்கம் 286)

(மாறா-மூலதனம் மதிப்பு எதையும் படைப்பதில்லை என்பதனால் மார்க்ஸ் அதனை பூஜ்யம் என்றே கொள்கிறார்.)

நமது ஆய்வு பிழையற்ற முடிவுகளுக்கு இட்டுச்செல்ல வேண்டுமானால், உற்பத்திப் பொருளின் மதிப்பில் மாறாமூலதனத்தை மட்டும் குறிக்கிற பகுதியைப் பிரித்தகற்றி விட வேண்டும்; ஆதலால் மாறா-மூலதனத்தை பூஜ்யமென்று கொள்ள வேண்டும்; அதாவது C=0 எனக் கொள்ள வேண்டும். கூட்டல், கழித்தல் குறிகளால் மட்டுமே ஒன்றுக்கொன்று தொடர்புபடுத்தப்படும் மாறாப் பருமனுடனும் மாறும் பருமனுடனும் இயங்கும் போதெல்லாம் பிரயோகிக்கப்படும் கணிதவியல் விதியின் பிரயோகமே இது.”
(மூலதனம் தொகுதி 1 பக்கம் 291-292)

உபரி - மதிப்பு வீதத்தைக் கணக்கிடும் முறை சுருக்கமாகப் பின்வருமாறு: நாம் உற்பத்திப் பொருளின் மொத்த, மதிப்பை எடுத்துக் கொண்டு அதில் திரும்ப இடம் பெற மட்டுமே செய்கிற மாறா-மூலதனத்தை பூஜ்யமெனக் கொள்கிறோம்.”
(மூலதனம் தொகுதி 1 பக்கம் 296)

2) மூலதனம் இரண்டாம் தொகுதி:-

உற்பத்தியின் போது நுகரப்படும் மாறா - மூலதனத்தைக் குறிக்கும் மதிப்புப் பகுதியான C வேறு. உற்பத்தியில் ஈடுபடுகிற மாறா-மூலதனத்தின் மதிப்பு வேறு. மூலப் பொருட்கள் முழுமையாக நுகரப்படுவதும் அவற்றின் மதிப்புகள் உற்பத்திப் பண்டத்துக்கு முழுமையாகப் பெயர்க்கப்படுவதும் மெய்தான். ஆனால் ஈடுபடுத்தப்படும் நிலை மூலதனத்தில் ஒரு பகுதி மட்டுமே முழுமையாக நுகரப்பட்டு, அதன் மதிப்பு இவ்விதம் உற்பத்திப் பண்டத்துக்குப் பெயர்க்கப்படுகிறது. இயந்திரங்களும் கட்டடங்களும் இன்ன பிறவுமான நிலை-மூலதனத்தில் இன்னொரு பகுதியானது வருடாந்தரத் தேய்மானத்துக்குச் சமமான அளவு மதிப்பு குறைந்து விட்டாலுங்கூட, முன்போல் அப்படியே நீடித்துக் கொண்டும் தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டும்தான் இருக்கிறது. இப்படித் தொடர்ந்து நீடிக்கிற இந்த நிலை-மூலதனப் பகுதி, உற்பத்திப் பண்ட மதிப்பை எடை போடுகையில் நமக்கு இல்லாத ஒன்றாகி விடுகிறது. மூலதன-மதிப்பின் ஒரு பகுதியாகிய இது புதிதாக உற்பத்தி செய்யப்படும் சரக்கு - மதிப்பைச் சாராமலும் சேராமலும் இருந்து வருகிறது. முன்பு தனிப்பட்ட மூலதனத்தின் உற்பத்திப் பண்டத்தின் மதிப்பினைப் பகுப்பாய்ந்த போது (முதல் பாகம், அத்தியாயம் VIII, பக்கம் 279-280] ஏற்கெனவே தெளிவு செய்யப் பட்ட ஒன்றே இது.”
(மூலதனம் தொகுதி 2 பக்கம் 523-524)

மூலதனம் மூன்றாம் தொகுதி:-

சரக்குகளின் உற்பத்தியில் மாறா - மூலதனத்திற்குப் பங்கிருக்கும் வரை கருத்துக்குரியதாய் இருப்பது அதன் பயன் மதிப்புதானே தவிர பரிவர்த்தனை - மதிப்பன்று. நூற்பாலையில் வெண்சணலால் உறிஞ்ச முடிகிற உழைப்பளவு அந்த வெண்சணலின் அளவைப் பொறுத்ததே தவிர மதிப்பையன்று - உழைப்பின் உற்பத்தித் திறன், அதாவது தொழில்நுட்ப வளர்ச்சித் தரம் குறிப்பிட்டதாய் இருப்பதாகக் கொண்டு இப்படிச் சொல்கிறோம். இவ்வாறே, ஓர் இயந்திரம் உதாரணமாக மூன்று தொழிலாளர்களுக்கு வழங்கிடும் உதவி அவ்வியந்திரத்தின் பயன் - மதிப்பைப் பொறுத்ததுதானே தவிர மதிப்பையன்று.”
(மூலதனம் தொகுதி 3 பக்கம் 100-101)


மாறா-மூலதனக் கூறுகள் விலைமலிவாதல் உபரி மதிப்பு வீதம் மாறாதிருக்கும் போதே, அல்லது உபரி - மதிப்பு வீதம் எப்படியிருந்த போதிலும், இலாப வீதத்தை உயரச் செய்யும் காரணிகள் பற்றி இப்புத்தகத்தின் முதல் பகுதியில் கூறியதனைத்தும் இவ்விடத்துக்கும் அவசியமானதே. ஆகவே, மொத்த மூலதனத்தைப் பொறுத்த வரை, மாறா-மூலதனத்தின் பொருட் பரிமாணம் அதிகரிக்கும் அதே விகிதத்தில் அதன் மதிப்பு அதிகரிப்பதில்லை என்பதையும் கூட இங்கே குறிப்பிட வேண்டும்.”
(மூலதனம் தொகுதி 3 பக்கம் 311)