Tuesday 6 March 2018

04) மதிப்பின் அடிப்படையாய் அமைவது உழைப்பு– லெவ் யோன்டிவெவ்


வெவ்வேறு பயன்-மதிப்புகளான பொருள்கள் பரிவர்த்தனை செய்து கொள்ளப்படும் போது அவை ஒன்றுக்கு ஒன்று ஈடாகி விடுகின்றன. பொருள்கள் பரிவர்த்தனை செய்து கொள்ளப்படும் வதற்கே காரணம் அவை வெவ்வேறு பயன்-மதிப்பு கள்என்பதுதான். வெவ்வேறு மனித தேவைகளைப் பூர்த்தி செய்யும் பொருள்கள் தான் பரிவர்த்தனை செய்து கொள்ளப்படுகின்றன.

பண்டங்கள் ஒன்றுக்கு ஈடாய் ஒன்று பரிவர்த்தனை செய்து கொள்ளப்படும் அளவு விகிதங்கள் அடிக்கடி ஏறியிறங்கி அலைவுறுகின்றன. ஆயினும் இந்த அலைவுகள் எவ்வளவு தான் கடுமையான போதிலும், ஒரு டன் செம்பை உதாரணமாய் எடுத்துக் கொள்வோமாயின், எப்பொழுதும் அது ஒரு டன் வார்ப்பிரும்பைக் காட்டிலும் கிராக்கியானதாகவே இருக்கிறது; எப்பொழுதும் ஒரு டன் வெள்ளியைக் காட்டிலும், இன்னும் குறிப்பாய் ஒரு டன் தங்கத்தைக் காட்டிலும் மலிவாகவே இருக்கிறது. எனவே பண்டங்கள் ஒன்றுக்கு ஈடாய் ஒன்று பரிவர்த்தனை செய்து கொள்ளப் படும் அளவு விகிதங்களுக்கு அதிகமாகவோ குறைவாகவோ உறுதி வாய்ந்த ஓர் அடிப்படை இருக்கின்றது.

அளவு வழியிலான எந்த ஒப்பீடும் நடைபெறுவதற்கு, ஒப்பிடப்படும் பொருள்களிடையில் ஒரு பொது இயல்பு இருப்பது இன்றியமையாத நிபந்தனையாகும், முற்றிலும் வெவ்வேறு வகைப்பட்ட பொருள்களும் அடிக்கடி ஒப்பீடு செய்யப்படுகின்றன, ஆனால் இப்பொருள்களுக்குப் பொதுவானது எதேனும் ஒன்று இருந்தாலொழிய இவை ஒப்பீடு செய்யப்படுவது முடியாத காரியம். அதோடு இப்பொருள்களுக்குள்ள இந்தப் பொதுவான இயல்பு அளக்கப்படக் கூடியதாக இருப்பதும் அவசியமாகும்.

இந்தப் பொது இயல்பு எது?

முற்றிலும் வெவ்வேறான பயன்- மதிப்புகளாகிய பரிவர்த்தனைப் பண்டங்களிடையே இருக்கும் பொது இயல்பு ஒன்றே ஒன்றுதான்: இவை யாவும் மனித உழைப்பின் உற்பத்திப் பொருள்கள் என் பது ஒன்றே ஒன்று தான். இந்த இயல்பு அளக்கப்படக் கூடியதே: உழைப்பானது குறிப்பிட்ட ஒரு பண்டத்தை உற்பத்தி செய்வதற்கு ஆகும் நேரத்தைக் கொண்டு அளவிடப்படுகிறது. ஒரு பண்டம் பிறிதொன்றுடன் பரிவர்த்தனை செய்யப் படுவதற்குரிய விகிதங்களை நிர்ணயிப்பது இப் பண்டங்களை உற்பத்தி செய்வதற்கு செலவாகிய உழைப்பின் அளவுதான்.
(அரசியல் பொருளாதாரம்- முன்னேற்றப் பதிப்பகம் - பக்கம்-60-62)

No comments:

Post a Comment