Tuesday 6 March 2018

03) பரிவர்த்தனைப் பண்டம் இருவேறு தன்மையானது– லெவ் யோன்டிவெவ்


உழைப்பின் உற்பத்திப் பொருளானது ஒரு பரிவர்த்தனைப் பண்டமாக வேண்டுமாயின், அது மனிதத் தேவைகளில் ஏதேனும் ஒன்றைப் பூர்த்தி செய்வதாய் இருக்க வேண்டும்; அதனுடைய பயனுடைமை (utility) இதில் தான் அடங்கியிருக்கிறது. உழைப்பின் உற்பத்திப் பொருளுக்கு இருக்கக் கூடிய இந்த இயல்புக்குப் பயன் - மதிப்பு (use-value) என்று பெயர். பாலுக்கும் இறைச்சிக்குமுள்ள பயன் - மதிப்பு இப்பொருள்கள் மக்களுடைய உணவுத் தேவையைப் பூர்த்தி செய்யப் பயன்படுவதில் அடங்கியிருக்கிறது. அருவி ஒன்றின் நீரும், தானாகவே காய்த்துப் பழுத்திருக்கும் பழமும், மனித உழைப்பின் உற்பத்திப் பொருளாய் இராத இவற்றையொத்த ஏனைய பல பொருள்களும்  இதே போல் பயன் - மதிப்பு கொண்டவையே.

இயற்கைப் பொருளாதாரத்திலும் பரிவர்த்தனை பண்டப் பொருளாதாரத்திலும் உழைப்பால் உற்பத்தி செய்யப்படும் பொருள்கள் குறிப்பிட்ட மனிதத் தேவைகளைப் பூர்த்தி செய்கின்றவையே. விவசாயி தனது சொந்த நுகர்வுக்காக உற்பத்தி செய்யும் ரொட்டி விவசாயியின் உணவுத் தேவையைப் பூர்த்தி செய்கிறது, ஆகவே இது பயன் - மதிப்பாய் இருக்கின்றது. ஆனால் இந்த ரொட்டி பரிவர்த்தனைப் பண்டமாகுமாயின், இது இன்னொரு முக்கிய இயல்பையும் பெறுகிறது-அதாவது, இதைப் பரிவர்த்தனை செய்து இதற்குப் பதில் இன்னொரு பரிவர்த்தனைப் பண்டத்தைப் பெற முடிகிறது.

ஒரு பரிவர்த்தனைப் பண்டத்தைக் குறிப்பிட்ட ஓர் அளவு விகிதத்தில் இன்னொரு பரிவர்த்தனைப் பண்டத்துடன் பரிவர்த்தனை செய்து கொள்ள முடிகிறது; அதாவது, இப்பண்டம் ஒரு பரிவர்த்தனை மதிப்பு (exchange value), அல்லது சுருக்கமாய் மதிப்பு எனப்படுவதையும் கொண்டிருக்கக் காண்கிறோம். உழைப்பின் உற்பத்திப் பொருள் ஒரு பரிவர்த்தனைப் பண்டமாகும் போது, அது இந்தப் புதிய இயல்பைப் பெறுகிறது. ஆகவே பரிவர்த்தனைப் பண்டமானது பயன் - மதிப்பு, மதிப்பு ஆகிய இரு இயல்புகளும் கொண்டதாகும்.
(அரசியல் பொருளாதாரம்- முன்னேற்றப் பதிப்பகம் - பக்கம்-59-60)

No comments:

Post a Comment