Tuesday, 6 March 2018

06) பண்டத்தில் உருக் கொண்டிருக்கும் உழைப்பு இருவேறு தன்மையானது– லெவ் யோன்டிவெவ்


பரிவர்த்தனைப் பண்டமானது பயன்- மதிப்பு பரிவர்த்தனை - மதிப்பு ஆகிய இரண்டுமாகும் என்பதை முன்பே தெரிந்து கொண்டோம். பரிவர்த்தனைப் பண்டத்தில் உருக் கொண்டிருக்கும் உழைப்பும் இதே போல இருவேறு தன்மையானது. - உழைப்பும் அது உற்பத்தி செய்யும் பயன்மதிப்புகளைப் போலவே பல வகைப்பட்டதாகும், உழைப்பின் பல்வேறு வகைகளும் அவற்றின் நோக்கம், கருவிகள், செய்முறைகள், இலக்குப் பொருள்கள், விளைவுகள் ஆகியவை சம்பந்தமாய் ஒன்றிலிருந்து ஒன்று வேறுபடுகின்றன. உழைப் பால் உற்பத்தி செய்யப்பட்ட பயன்- மதிப்பு ஒவ் வொன்றிலும் ஸ்தூல (concrete) வடிவிலான உழைப்பு வகை உருக்கொண்டிருக்கிறது. எடுத்துக் காட்டாய் நிலக்கரி, ஆடைகள், உருக்கு ஆகிய வற்றில் முறையே சுரங்கத் தொழிலாளி, தையற்காரர், உருக்கு உற்பத்தியாளர் ஆகியோரின் உழைப்பு உருக் கொண்டிருக்கின்றன.

வெவ்வேறு பண்டங்கள் பரிவர்த்தனை செய்யப்படுகையில் ஒப்பிடப்பட்டு ஒன்றுக்கு ஒன்று ஈடாக்கப்படுகின்றன. பண்டங்களுடைய பயன் - மதிப்புகள் ஓப்பிடப்பட முடியாதவை, ஆகவே பண்டங்கள் ஒன்றுக்கு ஒன்று ஈடாக்கப்படுகையில் அவற்றின் பயன் - மதிப்புகள் கருதப்படுவ தில்லை. பண்டங்களுடைய பயன்மதிப்புகளைக் கருதாமல் ஒதுக்கும் உற்பத்தியாளர்கள், அவற்றில் உருக் கொண்டிருக்கும் ஸ்தூல வடிவிலான உழைப்பு வகைகளிடையே இருக்கும் வேறுபாடுகளையும் கருதாமல் ஒதுக்குகிறார்கள். பண்டங்கள் பொது வடிவிலான மனித உழைப்பின் உற்பத்திப் பொருள்களாய்க் கருதப்படுகின்றன. ஆகவே பண்டத்தில் உருக் கொண்டிருக்கும் உழைப்பானது ஒருபடித்தானதாய்க் கருதப்படுகிறது; பொது வடிவிலான மனித உழைப்பு சக்தியின் செல்வாய், அதாவது சூக்கும் வடிவிலாகிய (abstract) உழைப்பாய்க் கருதப்படுகிறது. இவ்விதம், வெவ்வேறு உற்பத்தியாளர்களும் செலவிடும் உழைப்பு சக்தி பண்பு வழியில் அல்லாமல், அளவு வழியில் வேறு படுவ தாகின்றது.

ஆகவே, பண்டத்தை உற்பத்தி செய்பவரின் உழைப்பு ஒரு புறத்தில் பயன்--மதிப்புகளைத் தோற்றுவிக்கும் ஸ்தூல வடிவிலான உழைப்பாய் இருக்கிறது; மறு புறத்தில் பண்டத்தின் மதிப்பைத் தோற்றுவிக்கும் பொது வடிவிலான உழைப்பின் செலவாய், சூக்குமாக உழைப்பாய், சமூக உழைப்பின் ஒரு பங்காய் இருக்கிறது.

இவ்வாறு, பண்டம் இருவேறு தன்மையதாய் இருப்பதானது, அப்பண்டத்தில் உருப்பெற்றிருக்கும் உழைப்பு இருவேறு தன்மையதாய் இருப்பதிலிருந்து எழும் தவிர்க்கவொண்ணாத விளைவே ஆகும்.
(அரசியல் பொருளாதாரம்- முன்னேற்றப் பதிப்பகம் - பக்கம்-63-64)

No comments:

Post a Comment