Saturday 30 December 2017

09. முதலாளித்துவ பொது நெருக்கடியின் கட்டங்கள்


(“சமூக விஞ்ஞானம்” என்ற மாஸ்கோ முன்னேற்றப் பதிப்பகம் 1985ல் வெளியிட்ட நூலில் இருந்து முதலாளித்துவம் பற்றிய சில பகுதிகளை தொடர்ந்து பார்க்கலாம். இந்நூலை கி.ஷஹ்நஸாரவ், அ.போபரீக்கின், யூ.சிராஸின், வி.சுகதேயெவ் ஆகியோர் எழுதியுள்ளனர்.)

முதலாளித்துவத்தின் பொது நெருக்கடிக் காலகட்டத்தில், தனிப்பட்ட நாடுகளைத் தனது ஆதிக்கத்தின் கீழ் இனிமேலும் முதலாளித்துவ அமைப்பு வைத்திருக்க இயலாத அளவிற்கு இதன் உள் முரண்பாடுகள் கூர்மையடைகின்றன; இந்த நாடுகள் ஒன்றன்பின் ஒன்முக இதிலிருந்து விலகி சோஷலிசப் பாதைக்கு வருகின்றன. மறுபுறத்தில் சோஷலிச அமைப்பின் தோற்றமும் அதன் வளர்ச்சியும் பலப்படுத்தலும் ஏகாதிபத்தியத்தின் சிதைவை மேலும் அதிகமாகத் துரிதப்படுத்துகின்றன.

முதலாளித்துவ பொது நெருக்கடியின் முதல் கட்டம் முதல் உலக யுத்தத்தையடுத்து, குறிப்பாக அக்டோபர் சோஷலிசப் புரட்சியின் வெற்றியோடு துவங்கியது. அக்டோபர் புரட்சி தொழிலாளர் மற்றும் தேசிய விடுதலை இயக்கத்தின் மீது பெரும் செல்வாக்கு செலுத்தியது, சமுதாய வளர்ச்சி முழுவதற்கும் பெரும் உந்து சக்தியை அளித்தது. சோஷலிசம் தத்துவத்திலிருந்து நடைமுறையாகியது, முதலாளித்துவத்தின் தவிர்க்க இயலாத அழிவைப் பற்றியும் அதைப் புதிய சமுதாய அமைப்பால் மாற்றுவதைப் பற்றியும் மார்க்சிய-லெனினியப் போதனை கூறிய ஆரூடத்தின் உண்மை முதன்முதலாக மெய்ப்பிக்கப்பட்டது.

இரண்டாவது உலக யுத்தம் முதலாளித்துவத்தின் பொது நெருக்கடியைக் கூர்மையாக்கி ஆழப்படுத்தியது; ஐரோப்பாவிலும் ஆசியாவிலும் பல நாடுகள் முதலாளித்துவ அமைப்பிலிருந்து விலகியதையடுத்து இந்த நெருக்கடியின் இரண்டாவது கட்டம் துவங்கியது. சோஷலிசம் ஒரு நாட்டின் வரம்பை விட்டு வெளியேறி உலக அமைப்பாக மாறியது. அதே பொழுது தேசிய விடுதலைப் புரட்சிகள், பல முந்தைய காலனிகள் மற்றும் அரைக் காலனிகளின் இடத்தில் சுயமான அரசுகளைத் தோற்றுவித்தன.

50ம் ஆண்டுகளின் இரண்டாம் பாதியிலிருந்து முதலாளித்துவ பொது நெருக்கடியின் மூன்றுவது கட்டம் ஆரம்பமாகியது. இது உலக யுத்தத்தோடு தொடர்பின்றி துவங்கியது என்பதில்தான் இதன் சிறப்பியல்பு அடங்கியுள்ளது. முன்பு சமாதானக் காலத்தில் உழைப்பாளிகளின் சோஷலிச இயக்கத்தையும் அடிமைப்படுத்தப்பட்ட மக்களின் தேசிய விடுதலை இயக்கத்தையும் நசுக்கக்கூடிய அளவிற்கு முதலாளித்துவம் சக்தி வாய்ந்ததாக இருந்தது; பரஸ்பர வேறுபாடுகளால் பலவீனமடைந்து, அவர்களாலேயே மூட்டி விடப்பட்ட உலக யுத்தங்களில் மும்முரமாயிருந்ததால்தான் ஏகாதிபத்தியவாதிகளால் விடுதலை இயக்கங்களின் பெரும் வெற்றிகளுக்குத் தடைவிதிக்க இயலவில்லை.
...
இலட்சியங்களின்றி

சித்தாந்தத் துறை உட்பட வாழ்க்கையின் எல்லாத் துறைகளுக்கும் இந்நெருக்கடி பரவியுள்ளதால்தான் இது பொது நெருக்கடி என்று அழைக்கப்படுகிறது. மக்களைத் தன் பக்கம் இழுக்கும் போராட்டத்தில் ஏகபோக முதலாளி வர்க்கம் நம்பிக்கையின்றி தோல்விகளைத் தழுவி வருகிறது.

முதலாளி வர்க்கம் ஆட்சிக்கு வந்த தருணத்தில் விடுதலை, சமத்துவம், சகோதரத்துவம் ஆகிய கோஷங்களால் வெகு ஜனங்களைத் தன் பக்கம் கவர்ந்திழுத்தது. இந்தக் கோஷங்கள் பூர்ஷ்வா அரசியல் அமைப்புச் சட்டங்களில் எழுதப் பட்டுள்ளன. ஆனால் முதலாளித்துவச் சூழ்நிலைகளில் இவற்றின் மட்டான தன்மை இப்போது நன்கு தெளிவாகியுள்ளது. தனிநபர் சுதந்திரத்தின் அம்சங்களில் ஏதாவது ஒன்றைப் பயன்படுத்தும் வாய்ப்பு (உதாரணமாக பத்திரிகை சுதந்திரம் போன்றவை) பொருளாயத சாதனங்களைப் பெற்றிருப் பதைப் பெரிதும் சார்ந்துள்ளதால், இது பெரும்பாலும் ஆளும் வர்க்கத்திற்கு மட்டுமே எட்டக்கூடியது.
...
எப்போதோ தன் பதாகையில் எழுதப்பட்ட லட்சியங்களே நம் காலத்தில் முதலாளி வர்க்கம் கீழே போட்டு மிதித்துள்ளது. வெகுஜனங்களைக் கவரக் கூடிய புதிய கோஷங்களைக் கண்டுபிடிக்க அதன் சித்தாந்தவாதிகள் செய்த முயற்சிகள் யாவும் தோல்வியடைந்து வருகின்றன.

இப்போது, சோஷலிசம் கற்பனையிலிருந்து யதார்த்த மாக மாறியுள்ள போது முதலாளித்துவ உண்மையை சோஷலிச உலகின் நடைமுறையோடு ஒப்பிட உழைப்பாளிகளுக்கு வாய்ப்புள்ளது. இவ்வாருன ஒப்பீடு, சோஷலிசம், கம்யூனிசம் மட்டுமே உண்மையான சுதந்திரத்தையும் சமத்துவத்தையும் சகோதரத்துவத்தையும் அளிக்க முடியும் என்ற முடிவிற்கு இட்டுச் செல்கிறது. எனவேதான் பூர்ஷ்வாச் சித்தாந்தவாதிகள் கம்யூனிசக் கருத்துக்களுக்கு எதிரான போராட்டத்தை, கம்யூனிச எதிர்ப்பைத் தமது முக்கியக் கடமையாக அறிவிக்கின்றனர். அவர்களிடம் ஆக்க பூர்வமான வேலைதிட்டம் கிடையாது, நிலைநாட்டுவதற்கு அவர்களிடம் எதுவும் இல்லை, இவர்கள் சமுதாய முன்னேற்றத்திற்கு இடையூறு மட்டுமே விளைவிக்கின்றனர் என்பதை இதுவே நிரூபிக்கின்றது.

ஏகாதிபத்திய அரசுகளில் கம்யூனிச எதிர்ப்பிற்காக ஒரு முழு தொழில்துறையே தோற்றுவிக்கப்பட்டுள்ளது, பத்துக்கணக்கான, நூற்றுக்கணக்கான விசேஷ நிறுவனங்களில் கம்யூனிசக் கருத்துக்களை மறுப்பதற்கான பல்வேறு முறைகள் உருவாக்கப்பட்டு வருகின்றன, உழைப்பாளிகளின் கண்களில் சோஷலிசத்தைக் களங்கப்படுத்துவதற்கான வாதங்கள் இட்டுக் கட்டப்படுகின்றன. இதற்காகப் பிற்போக்கு ஏகபோக வட்டங்கள் ஏராளமான தொகையைச் செலவிடத் தயங்குவதில்லை.
இறுதியாக முதலாளித்துவத்தின் ஆதரவாளர்கள், வளர்ச்சியடைந்த முதலாளித்துவ நாடுகளில் உள்ள ஒப்பீட்டு ரீதியாக உயர்வான வாழ்க்கைத் தரம் பெரும்பாலும் முந்தைய காலனி நாடுகளின் மக்களைக் கொள்ளையடித்தின் விளைவு என்பதை நினைவு கூற விரும்பவில்லை.

பூர்ஷ்வாப் பிரச்சாரம் எவ்வளவு பற்றார்வம் உடையதாயிருந்தாலும் அதனால் முதலாளித்துவத்தின் அங்கக ரீதியான குறைகளை மறைக்க இயலாது; முதலாளித்துவம் மனிதனை மனிதன் சுரண்டும் அமைப்பாக, சமுதாயச் சமமின்மை மற்றும் தேசிய ஒடுக்குமுறை அமைப்பாக இருந்தது, இப்போதும் இருக்கிறது.
வரலாறு நீண்ட காலம் முன்னரே ஏகாதியத்தயத்திற்குக் குற்றத் தீர்ப்பை அளித்து விட்டது. ஏகாதிபத்தியம் நிலைத்திருக்காது ஏனெனில் சமுதாய வளர்ச்சியின் புறவய நியதிகள் புதிய சோஷலிச அமைப்பை நோக்கிய புரட்சிகர மாற்றத்தை நமது நூற்றாண்டின் நிகழ்ச்சி நிரலில் சேர்த்துள்ளது.

 (“சமூக விஞ்ஞானம்” முன்னேற்றப் பதிப்பகம் – மாஸ்கோ- 1985)

08. முதலாளித்துவத்தின் பொது நெருக்கடி

முதலாளித்துவ முரண்பாடுகள் கூர்மையடைதல்

உற்பத்திச் சக்திகளுக்கும் உற்பத்தி உறவுகளுக்கும் இடையேயான மோதல்தான் வரலாற்று நிகழ்ச்சிப் போக்கின் உந்து சக்தியாக, ஒரு உற்பத்தி முறையிலிருந்து வேறு முறைக்கு மாற்றத்தை நிகழ்த்தக் கூடிய சமூகப் புரட்சிகளின் பொருளாதார அடிப்படையாக விளங்குகிறது. நமது கண்களின் முன்னே கூர்மையடைந்து வரக்கூடிய உற்பத்தியின் சமுதாயத் தன்மைக்கும் தனி முதலாளித்துவ அபகரிப்பு முறைக்கும் இடையிலுள்ள முரண்பாடு இத்தகைய மோதலின் உதாரணமாகத் திகழுகிறது. இந்த முரண்பாடுதான் முதலாளித்துவத்தின் முக்கிய முரண்பாடாகும்.

இந்தப் பகைமையான, சமரசப்படுத்த இயலாத முரண்பாடு இப்போது பெரிதும் கடுமையாக உள்ளது. அரசு-ஏக போக முதலாளித்துவம் சோஷலிசத்தை நோக்கிய மாற்றத்திற்கான எல்லாப் பொருளாயத முன்தேவைகளையும் தயார் படுத்தியுள்ளது. பெரும் இயந்திரத் தொழில்துறையும் உற்பத்தியை மிக உயர்வான அளவில் பொதுமயப்படுத்தியதும் அராஜகத் தன்மைக்கும் நெருக்கடிகளுக்கும் முடிவுகட்டவும் சமுதாயம் முழுவதன் நலன்களுக்காக உற்பத்திச் சக்திகளின் திட்டமிட்ட வளர்ச்சிக்கு வழி கோலவும் தேவையான சூழ் நிலைகளைத் தோற்றுவிக்கின்றன. ஆனால் இதற்கு முதலாவதாக உற்பத்திச் சாதனங்களின் மீதான தனிச்சொத்துடைமைக்கு முடிவு கட்ட வேண்டும்.

ஏகாதிபத்தியம் அழிந்து வரக் கூடிய முதலாளித்துவம் என்பதற்கு, அது தானாகவே, தொழிலாளி வர்க்கத்தின் தலைமையிலான வெகுஜனங்களின் தீர்மானகரமான போராட்டமின்றி அழிந்து விடும் என்பது பொருளல்ல. வி.இ.லெனின் ஏகாதிபத்தியத்தை சோஷலிசப் புரட்சியின் முன்னணைப் பொழுது என்று குறிப்பிட்டார். நிச்சயமாக ஏகபோக முதலாளி வர்க்கம் போராட்டமின்றி விட்டுக் கொடுக்காது, முதலாளித்துவ அமைப்பைப் பாதுகாக்க அது சக்திகள் அனைத்தையும் செலவிடும். ஆனால் தவிர்க்க இயலாததை அதனால் தடுக்க முடியாது. முதலாளித்துவத்தின் முரண்பாடுகள் மேன்மேலும் கூர்மையடைந்து அதன் அழிவிற்கு இட்டுச் செல்லுகின்றன. உழைப்பாளிகளைச் சுரண்டுவதன் மூலம் தனது செல்வங்களைப் பெருக்கும் ஏகபோக முதலாளி வர்க்கம் இவர்களுடைய வளர்ந்து வரும் எதிர்ப்பைச் சந்திக்கிறது. முதலாளித்துவ ஒடுக்குமுறையிலிருந்து விடுதலை பெறுவதற்காகவும் சமுதாயத்தின் சோஷலிச மாற்றத்திற்காகவும் தொழிலாளி வர்க்கமும் மக்கள் திரளினரும் நடத்தும் புரட்சிகர இயக்கம் வளர்ந்து மேன்மேலும் பலமடைகிறது.
....
காலனிகளின் மக்களை அடிமைப்படுத்தி, பின் அவர்களைப் பொருளாதார சார்புநிலை எனும் வலையில் சிக்கவைத்த ஏகபோக முதலாளி வர்க்கம் அவிர்களது தேசியச் செல்வத்தைக் கொள்ளையடிப்பதன் மூலம் தொடர்ந்து லாபம் சம்பாதிக்கிறது. இதனால் ஏகாதிபத்திய அடிமை முறைக்கு எதிரான மக்களின் தேசிய விடுதலை இயக்க அலை வளர்ந்து வருகிறது.

அடக்குமுறையைப் பின்பற்றி யுத்தங்களைக் கட்டவிழ்த்து விட்டு ஏகபோக முதலாளி வர்க்கம் தனது சுய நலன்களுக்காகப் பல லட்சக்கணக்கான மனித உயிர்களைப் பழி வாங்குகிறது, பல்லாண்டு மனித உழைப்பால் தோற்றுவிக்கப்பட்ட செல்வங்களைப் போராட்டச் சுவாலையில் இட்டுப் பொசுக்குகிறது. இதனால் ஜனநாயகத்திற்கும் சமாதானத்திற்குமான மக்களின் போராட்டம் வலுவடைந்து வருகிறது.

இந்த மகத்தான சக்திகள் அனைத்தும் ஒரே பெருக்காக ஒன்றுசேர்ந்து ஏகாதிபத்தியத்தை அழிக்கின்றன. முதலாளித்துவ அமைப்பின் தவிர்க்க இயலாத மறைவு கட்டம், முதலாளித்துவத்திலிருந்து சோஷலிசத்தை நோக்கி மாறும் கட்டம் வருகிறது.

முதலாளித்துவம் சமமின்றி வளர்ந்து வருவதால் சோஷலிசத்திற்குச் சமுதாயம் மாறுவதும் ஒரே நேரத்தில் நடைபெறாது. முதலாளித்துவத்தின் அழிவும் சோஷலிசத்தின் வெற்றியும் ஒரு சகாப்தம் முழுவதும் நீடிக்கக் கூடிய நீண்ட நிகழ்ச்சிப் போக்காகும். இச்சகாப்தம் முதலாளித்துவத்தின் பொது நெருக்கடி சகாப்தம்.


(“சமூக விஞ்ஞானம்” முன்னேற்றப் பதிப்பகம் – மாஸ்கோ- 1985)

07. ஏகாதிபத்தியம்

"19ம் நூற்றண்டின் இறுதியில் உலகம் பூராவின் கவனமும், ஸ்பெயின்- அமெரிக்க மற்றும் ஆங்கிலேய- போயர் யுத்தங்கள் வெடித்த மத்திய அமெரிக்காவிற்கும் தெற்கு ஆப்பிரிக்காவிற்கும் திரும்பியது. முதலாளித்துவம் தனது வளர்ச்சியில் கடைசி மற்றும் உச்சக் கட்டமாகிய ஏகாதிபத்தியத்தில் நுழைந்ததைக் குறிக்கும் இரத்தக் கிளறியான அறிகுறிகளாக இவை அமைந்தன.

'ஏகாதிபத்தியம்' எனும் கருதுகோளைக் காலணியாதிக்கப் பேரரசுகளின் தோற்றத்தோடு மட்டும் சம்மந்தப் படுத்த பூர்ஷ்வாப் பொருளாதாரவாதிகள் அடிக்கடி முயலுகின்றனர். ஆனால் இது அதனுடைய ஒரு அம்சம் மட்டுமே முதலாளித்துவத்தின் கடைசிக் கட்டத்திற்குப் பல குணாம்சங்கள் உள்ளன. இவையெல்லாம் ஒன்றுசேர்ந்துதான் ஏகாதிபத்தியத்தின் சாரத்தை விளக்குகின்றன.
...
ஏகாதிபத்தியத்தின் முக்கிய அம்சங்களை நினைவுகூர்ந்து, அதன் இன்றைய நிலையைப் பார்ப்போம்.

வி. இ. லெனின் ஏகாதிபத்தியத்தைப் பற்றிய பன்முக சித்தரிப்பை அளித்தார். ஏகாதிபத்தியம் என்பது முதலாவதTக, ஏகபோக முதலாளித்துவம், இரண்டாவதாக, ஒட்டுண்ணி அல்லது அழுகி வரும் முதலாளித்துவம், மூன்றாவதாக, அழிந்து வரும் முதலாளித்துவம் என அவர் காட்டினர், ஏகாதிபத்தியத்தைப் பற்றிய மிகச் சுருக்கமான வரையறையைத் தருவதெனில், இதை ஏகபோக முதலாளித்துவம் என வருணிக்கலாம் என்று வி. இ. லெனின் சுட்டிக் காட் டினர்.

ஏகபோகங்கள் என்றால் என்ன, ஏகபோக முதலாளித்து எப்படி மாறுபடுகிறது? ஏகபோகங்கள் என்பது பொருளாதாரத்தின் ஒரு துறையில் அல்லது ஒரு சில துறைகளில் ஏகபோகமாக அதாவது தனியதிகார முறையில் ஆதிக்கம் செலுத்தக் கூடிய பிரம்மாண்டமான முதலாளித்துவக் கூட்டமைப்புகள். இவை உற்பத்தி மற்றும் மூலதனம் ஒருமுனைப் படுவதன் நியதியான விளைவாகத் தோன்றின.

தொழில்துறை முதலாளித்துவச் சகாப்தத்தின் சுதந்திரமான போட்டியினல் சிறிய நிறுவனங்கள் பெரிய நிறுவனங் களால் வெளியே தள்ளப்படுகின்றன. உற்பத்தியின் ஒருமுனைப் படுத்தல், அதாவது மேன்மேலும் பெரிய நிறுவனங்களில் உற்பத்தி ஒன்றுதிரள்வது நடைபெறுகிறது. உபரி மதிப்பின் ஒரு பகுதி அதனோடு சேருவதால் மூலதனமும் ஒருமுனைப்படுகிறது. மூலதனம் ஒருமுனைப்படுவதோடு கூட சேர்ந்து அதன் மையப்படுத்தலும் நடைபெறுகிறது. இது தன்னிச்சையான அல்லது வலுக்கட்டாயமான முறையில் பல மூலதனங்கள் ஒன்றிணைவதாகும்; பங்கு தோழமையமைப்புகளும் ஐக்கிய மூலதன அமைப்புகளும் தோற்றுவிக்கப்படுகையில் - தன்னிச்சையாக, போட்டிப் போராட்டத்தில் சிறிய நிறுவனங்களைப் பெரிய நிறுவனங்கள் விழுங்கும் போது- வலுக்கட்டாயமாக இது நடைபெறுகிறது.

பெரும் முதலாளிகளுக்கு இடையேயான போட்டி குறிப்பாகக் கடுமையானதாகவும் அழிவுத்தன்மையுடையதாகவும் மாறுகிறது. இவர்களில் ஒவ்வொருவரும் சந்தையைக்கைப் பற்றவும் போட்டியாளர்களை ஒழித்துக் கட்டவும் முயலுகிறார். இது சாத்தியமில்லையெனில், பொருள் உற்பத்தியின் அளவு, விலைகள் முதலியவற்றைப் பற்றி தங்களிடையே ஒப்பந்தம் செய்து கொள்ள அவர்கள் முயலுகின்றனர். நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான சிறிய நிறுவனங்களைவிட ஒரு சில பத்து பிரம்மாண்டமான நிறுவனங்களுக்கு ஒப்பந்தம் செய்து கொள்வது எளிது. இவ்வாறாக மூலதனம் மற்றும் உற்பத்தியின் ஒருமுனைப்படுத்தலும் மையப்படுத்தலும் ஏக போகங்களின் தோற்றத்திற்கு இட்டுச் செல்கின்றன.
....
ஏகாதிபத்தியத்தில் சுதந்திரமான போட்டி ஏகபோகத்தால் மாற்றப்படுகிறது என்பதற்கு எல்லாவித போட்டியும் அகற்றப்பட்டுவிட்டது என்று பொருளல்ல. முதலாளித்துவ நாடுகளில் ஏராளமான நடுத்தர மற்றும் சிறிய நிறுவனங்களும் விவசாயிகள், கைவினைஞர்கள் போன்ற பல சிறிய பண்ட உற்பத்தியாளர்களும் அப்படியே இருக்கின்றனர். நிச்சயமாய் இவர்களால் ஏகபோகக் கூட்டமைப்புகளை எதிர்த்துப் போரிட இயலாது, இவர்கள் ஏகபோகங்களுக்கு ஒருவித கட்டணத்தைச் செலுத்துமாறு நிர்ப்பந்திக்கப்படு கின்றனர். இவ்வாறு அமெரிக்க ஐக்கிய நாட்டில் பெரும்பான்மையான பண்ணைச் சொந்தக்காரர்கள் தமது விளை பொருட்களை மொத்தமாக பெரிய வர்த்தகக் கம்பெனிகளுக்கு விற்கின்றனர், பின் இவை அவற்றை சில்லறை விலைக்கு விற்கின்றன. பண்ணைச் சொந்தக்காரன் ஏகபோகங்களின் முன் சக்தியற்றவனுயுள்ளான், இவற்றால் நிர்ணயிக்கப்பட்ட விலையை இவன் ஒப்புக்கொள்ள வேண்டியதாகிறது. இதைப் பயன்படுத்தி ஏகபோகத்தினர் மொத்த விலைகளைக் குறைத்து சில்லறை விலைகளை அதிகப்படுத்துகின்றனர். விலைகளின் வித்தியாசம் நம்ப இயலாத லாபத்தைக் கொணருகிறது. அதே நேரத்தில் ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான பண்ணைகள் திவாலாகின்றன.
...
வி. இ. லெனினுல் கண்டுபிடிக்கப்பட்ட ஏகாதிபத்தியச் சகாப்தத்தில் முதலாளித்துவ வளர்ச்சியின் சமமின்மையைப் பற்றிய விதி முதலாளித்துவச் சமுதாயத்தின் கடைசிக் கட்டத்தின் சிறப்பியல்புகளைப் புரிந்து கொள்வதற்குப் பெரும் முக்கியத்துவம் வாய்ந்தது.

முதலாளித்துவப் பொருளாதாரத்தின் திட்டமின்மையும் அராஜகத் தன்மையும் முதலாளித்துவத்தின் ஆரம்பக் கட்டங்களிலும் அதன் வளர்ச்சியின் சமமின்மையை முன்நிர்ணயித்தன. ஆனால் இது பெரும்பாலும் தனிப்பட்ட நாடுகளின் வரம்புகளுக்குள் தென்பட்டது, உலக அரங்கில் சக்திகளின் சமன்நிலையில் அதிகம் தென்படவில்லை. உதாரணமாக, முதல் ஒரு சில நாடுகளில் ஒன்றாகத் தொழில்துறை வளர்ச்சிப் பாதையில் நுழைந்து காலனியாதிக்கக் கைப்பற்றலில் தனது போட்டியாளர்களே வெகுதூரம் பின்னுக்குத் தள்ளிய இங்கிலாந்து பல பத்தாண்டுகளுக்குத் தொழில்துறை உற்பத்தியில் முதலிடத்தை வகித்தது, உலக அரசியலின் மீது தீர்மானகரமான தாக்கத்தைச் செலுத்தி வந்தது.
...
ஏகாதிபத்தியக் கட்டத்தில் முதலாளித்துவத்தின் பொருளாதார, அரசியல் அமைப்பில் மாற்றங்கள் இயற்கையாகவே நெருக்கமான பரஸ்பரத் தொடர்பில் நடைபெற்றன. நவீன முதலாளித்துவத்தை அரசு-ஏகபோக முதலாளித்துவமாகச் சித்தரித்து மார்க்சியம்-லெனினியம் தந்துள்ள வரையறுப்பில் இந்தப் பரஸ்பரத் தொடர்பு வெளிப்படையாகப் பிரதி பலிக்கிறது."


(“சமூக விஞ்ஞானம்” முன்னேற்றப் பதிப்பகம் – மாஸ்கோ- 1985)

06. உபரி மதிப்பு – மூலதனம் உழைப்பைச் சுரண்டும் விதம்

"முதலாளிகளைச் செல்வந்தர்களாக ஆக்குவதுதான் முதலாளித்துவ உற் பத்தியின் ஒரே நோக்கம். யாரைப் பலிகொடுத்து இது அடையப்படுகிறது?

சந்தையில் பண்டங்களை விற்று பணம் சம்பாதிக்கும் முன்பாக இவற்றை உற்பத்தி செய்ய வேண்டும், உழைப்பால் மட்டுமே மதிப்பைத் தோற்றுவிக்க இயலும், முதலாளி அடிமைச் சொந்தக்காரனோ, நிலப்பிரபுவோ இல்லை, தனது சொத்தாகப் பாவிக்கக் கூடிய அடிமைகளோ, பண்ணையடிமைகளோ அவனிடம் இல்லை. ஆனால் அவனிடம் உற்பத்திச் சாதனங்கள் உள்ளன, சமுதாயத்தில் இவை மறுக்கப்பட்ட பாட்டாளி வர்க்கம் உள்ளது. தொழிலாளி முதலாளியைத் தனிப்பட்ட முறையில் சார்ந்திருக்கவில்லை, ஆனால் வாழ்வதற்காக அவன் தனது உழைப்புச் சக்தியை விற்க வேண்டியவனாகிறான். இதனை வாங்கும் முதலாளி மதிப்பை உருவாக்க வல்ல ஒரே பண்டத்தைப் பெறுகிறான்.

பண்டம் என்ற முறையில் உழைப்புச் சக்தி குறிப்பிட்ட ஒரு மதிப்பிற்கு விற்கப்படுகிறது. மனிதனின் அவசியத் தேவைகள் பூர்த்தி செய்யப்பட்டால்தான் அவனால் உழைக்க இயலும். ஒரு நாளில் தொழிலாளி குறிப்பிட்ட அளவு ரொட்டி, இறைச்சி, வெண்ணெய், சர்க்கரையைப் பயன் படுத்துகிறான், ஆடைகள், காலணிகளை அணிந்து அவற்றை குறிப்பிட்ட அளவு தேய்மானம் அடையச் செய்கிறான், வீட்டு வாடகைக்காகக் குறிப்பிட்ட அளவு பணத்தைச் செலவழிக்கிறான்; முதலாளிக்கான புதிய உயிருள்ள "பண்டம்'' வளர்ந்து வரும் குடும்பத்தை அவன் பராமரிக்க வேண்டும். இதிலிருந்து உழைப்புச் சக்தியின் மதிப்பு, தொழிலாளியையும் அவனது குடும்பத்தையும் பராமரிப்பதற்கு அவசியமான வாழ்க்கைச் சாதனங்களின் மதிப்பிற்குச் சமமானது
உழைப்புச் சக்தியின் பங்கும் உற்பத்திச் சாதனங்களின் பங்கும் வெவ்வேறானவை. உழைப்புச் சக்தி புதிய மதிப்பைத் தோற்றுவிக்கிறது.ஆனால் உற்பத்திச் சாதனங்களால் எந்த வித மதிப்பையும் தோற்றுவிக்க இயலாது. உற்பத்திச் சாதனங்களின் மதிப்பு தொழிலாளிகளின் உழைப்பால் தக்க வைக்கப்பட்டு, இந்தச் சாதனங்கள் தேய்மானம் அடைவதைப் பொறுத்து புதிதாக உற்பத்தி செய்யப்படும் பண்டங்களுக்கு மாற்றப்படுகிறது. உதாரணமாக, ஒரு இயந்திரத்தால் 10 ஆண்டுகள் வேலை செய்ய முடியுமெனில் ஒவ்வொரு ஆண்டும் இது தனது மதிப்பில் பத்திலொரு பங்கை இழக்கிறது, இந்தப் பகுதி புதிதாக உற்பத்தி செய்யப்பட்ட பண்டத்தின் மேல் மாற்றப்படுகிறது. மூலப்பொருள், உதாரணமாக பருத்தி தயாரான வடிவத்தில் புதிய பொருளாகிய பருத்தித் துணியில் முற்றிலுமாக இடம்பெறுகிறது, பருத்தியின் மதிப்பு /முழுவதும் துணியின் மதிப்பிற்கு மாற்றப்படுகிறது.
...
முதலாளித்துவ உற்பத்திப் போக்கில் தொழிலாளியால் தேர்ற்றுவிக்கப்படும் புதிய மதிப்பு தனது அளவில் அவனது உழைப்புச் சக்தியின் மதிப்பைவிட அதிகமாயிருக்கிறது.

ஒரு மணி நேரத்தில் தொழிலாளி 2 டாலர்களுக்குச் சமமான புதிய மதிப்பைத் தோற்றுவிக்கிறான், ஒரு நாள் உழைப்புச் சக்தியின் மதிப்பு 10 டாலர்கள் என்று வைத்துக் கொள்வோம். இப்படிப்பட்ட நிலையில் அவன் இதை ஈடு செய்வதற்காக 5 மணி நேரம் வேலை செய்ய வேண்டும். ஆனால் தொழிலாளி ஏதோ ஒரு அளவு உழைப்பை விற்கவில்லை, மாறாக தனது உழைப்புத் சக்தியை விற்கிறான் இதை வாங்குபவன் இதை விருப்பப்படி பயன்படுத்துகிறான். எனவே பாட்டாளி வேலை நாள் முழுவதும் உழைக்கிறான், இந்த வேலை நாள் 8 மணி நேரம் நீடிக்கும் என்றால் தொழிலாளி இந்நேரத்தில் 16 டாலர்களுக்குச் சமமான புதிய மதிப்பைத் தோற்றுவிக்கிறான். இவ்வாறாக உற்பத்திப் போக்கில் தொழிலாளி தனது உழைப்பின் மூலம் தனது உழைப்புச் சக்தியின் மதிப்பைவிட அதிக மதிப்பைத் தோற்றுவிக்கிறான்.
முதலாளியால் இலவசமாக அபகரிக்கப்படும் இந்த வித்தியாசம்தான் -உபரி மதிப்பு- அவனது செல்வத்தின் மூல ஊற்ருகும்.

இவ்வாறாக உபரி மதிப்பை உற்பத்தி செய்து அதை முதலாளிகள் அபகரிப்பதில்தான் முதலாளித்துவச் சுரண்டலின் சாரம் அடங்கியுள்ளது. எனவே கூலியுழைப்பு முறை என்பது கூலி அடிமை முறையாகும்."


(“சமூக விஞ்ஞானம்” முன்னேற்றப் பதிப்பகம் – மாஸ்கோ- 1985)

Friday 29 December 2017

05. மதிப்பு விதி

"உற்பத்தியை ஏற்பாடு செய்யும் முதலாளிகள் பெரும்பாலும் ஒருவரோடு ஒருவர் தொடர்பின்றி தம் விருப்பப்படி இயங்குகின்றனர். எனவே ஒரே விதமான பண்டங்களின் உற்பத்தியில் எவ்வளவு நிறுவனங்கள் ஈடுபட்டிருக்கும், ஒராண்டு, இரண்டாண்டு கழித்து எவ்வளவு பண்டங்கள் உற்பத்தி செய்யப்பட்டிருக்கும், பணடங்கள் எந்த அளவிற்கு சந்தையில் குவிக்கப்பட்டிருக்கும், பொதுமக்களால் எவ்வளவு வாங்க இயலும் என்பதெல்லாம் ஒருவருக்கும் முன்கூட்டியே சரிவரத் தெரியாது. இது தன்னிச்சையான வளர்ச்சிக்கு இட்டுச் செல்லும், உற்பத்தியின் அராஜகத் தன்மையை, மொத்தமாக முதலாளித்துவப் பொருளாதாரத்தின் ஒழுங்கின்மையை, திட்டமின்மையைத் தோற்றுவிக்கும். தனது நிறுவனத்தில் முழு அதிகாரமுள்ள எஜமானனாக இருக்கும் முதலாளி, முதலாளித்துவத்தின் பொருளாதார விதிகள் தன்னிச்சையாகச் செயல்படக் கூடிய சந்தையின் அடிமையாக இருக்கிறான்.

போட்டி- உற்பத்தி மற்றும் விற்பனைக்கு அதிக சாதகமான சூழ்நிலைகளுக்காகவும் அதிக லாபத்தை அடைவதற்காகவும் முதலாளிகள் மத்தியில் நடைபெறும் கடுமையான போராட்டம் உற்பத்தியின் அராஜகத் தன்மையோடு பிரிக்க முடியாதபடி தொடர்புடையது. சமுதாயத்திற்கு மிக அணுகூலமான முறையில் உடைமையாளர்கள் தமது சாதனங்களைப் பயன்படுத்தும்படி அவர்களே முதலாளித்துவ உலகில் யாராலும் கட்டாயப்படுத்த இயலாது.

இத்தகைய உற்பத்தியால் எப்படி தொடர்ந்து நிலவ இயலும், இது எப்படி வளர்ச்சியுறும்?

முதலாளித்துவ உற்பத்தியைத் தன்னிச்சையாக ஒழுங்கு படுத்தக் கூடிய விதியாக மதிப்பு விதி விளங்குகிறது.

மதிப்பு விதியின்படி பண்டங்களின் உற்பத்திக்காகச் செலவிடப்பட்ட சமுதாயரீதியாக அவசியமான உழைப்பின் அளவிற்கேற்ப பண்டங்களின் பரிவர்த்தனை நடைபெறுகிறது. பண்டத்திற்காக அளிக்கப்படும் விலை அதன் மதிப்பிற்கு ஏற்றதாயிருக்க வேண்டும். ஆனால் சந்தையில் விலைகள் தேவை மற்றும் சப்ளையின் தாக்கத்திற்கேற்ப தன்னிச்சையாக உருவாகின்றன. தேவையைவிட சப்ளை அதிகமாயிருந்தால் பண்டத்தின் விலை மதிப்பைவிடக் குறைகிறது. தேவையைவிட சப்ளை குறைவாயிருந்தால் விலை மதிப்பைவிட அதிகமாகும். தேவையும் சப்ளேயும் சமமாயிருந்தால் விலையும் மதிப்பும் ஒன்றாயிருக்கும். விலைகளின் ஊசலாட்டத் தாக்கத்தால் முதலாளிகள் தமது மூலதனங்களைப் பண்டங்களின் விலைகள் அவற்றின் மதிப்பைவிடக் குறைவாயுள்ள துறைகளிலிருந்து இவை மதிப்பைவிட அதிகமாயுள்ள துறைகளுக்கு மாற்றுகின்றனர்.
...
மதிப்பைச் சுற்றிய விலைகளின் தன்னிச்சையான ஊச லாட்டம்தான் முதலாளித்துவ பண்ட உற்பத்தியின் ஒரே சாத்தியமான சீர்படுத்தும் முறையாகும். குறிப்பிட்ட ஒரு துறையில் உற்பத்தியை ஒரளவு லாபகரமானதாக ஆக்கிய விலைகளின் ஊசலாட்டங்கள் உற்பத்தியளவை விரிவாக்குவதை அல்லது குறைப்பதை நிர்ணயிக்கின்றன. முதலாளித்துவத்தில் பண்டங்களின் பரிவர்த்தனையையும் உற்பத்திச் சாதனங்கள் மற்றும் உழைப்பைப் பொருளாதாரத்தின் பல்வேறு துறைகளுக்கிடையில் வினியோகிப்பதையும் சீர்படுத்தக்கூடிய மதிப்பு விதியின் சாரம் இதுதான்.

சந்தை விலைகளின் ஊசலாட்டம், தேவை மற்றும் சப்ளையின் மாற்றங்கள் உற்பத்தியாளர்களிடம் சமமின்மையைத் தோற்றுவிக்கின்றன, ஒரு சிலரைத் திவாலாக்கி மறு சிலரைச் செல்வந்தர்களாக்குகின்றன -இதுதான் மதிப்பு விதியின் செயல்பாட்டின் தவிர்க்க இயலாத விளைவாகும். தமது நிறுவனத்தில் உழைப்பின் உற்பத்தித் திறனை அதிகப்படுத்தி உற்பத்தியின் தொழில்நுட்பத் தரத்தை மேம்படுத்த இயலும் ஆலை முதலாளிகளால் மட்டுமே முதலாளித்துவப் போட்டியில் நிலைத்து நிற்கவும் திவாலாகிப் போவதைத் தவிர்க்கவும் இயலும்.
...
போட்டிப் போராட்டம் ஒரளவிற்கு புதிய தொழில் நுட்பத்தைப் புகுத்துவதையும் உற்பத்தியை நவீனப்படுத்துவதையும் ஊக்குவிக்கிறது. அதே நேரத்தில் போட்டியும் உற்பத்தியின் அராஜகத் தன்மையும் உற்பத்திச் சக்திகளை அழிக்கின்றன, உழைப்பாளிகளுக்குக் கணக்கிலடங்கா இன்னல்களை உண்டாக்குகின்றன. மூலதனம் உழைப்பைச் சுரண்டும் முறையை அறிவதன் மூலம் இது எப்படி நடைபெறுகிறது என்று புரிந்து கொள்ளலாம்."

(“சமூக விஞ்ஞானம்” முன்னேற்றப் பதிப்பகம் – மாஸ்கோ- 1985)

04. பணம்

"பண்டப் பரிவர்த்தனை நடைபெறும் சமுதாயத்தில் கண்டிப்பாக பணம் நிலவும். பண்டப் பரிவர்த்தனையில் இது சர்வாம்சசமானமாக, அதாவது மற்ற எல்லாப் பண்டங்களின் மதிப்பை வெளியிடக் கூடிய பண்டமாக பங்காற்றுகிறது.

பொதுவாக அங்கீகரிக்கப்பட்ட பணப் பண்டமாக தங்கம் உள்ளது. தனது இயற்கைக் குணங்களால் தங்கம்தான் பணத்தின் சமுதாயப் பணியை நிறைவேற்றுவதற்கு மிக வசதியானதாகும். இது எளிதாகப் பிரிக்கப்பட்டு, மதிப்பில் எவ்வித இழப்புமின்றி பின் ஒன்றுசேர்க்கப்படுகிறது; கணிசமான மதிப்பிலும் குறைந்த அளவு பரிமாணத்தையும் எடையையும் கொண்டுள்ளது.
...
சமுதாய உற்பத்தி உறவுகளின், அதாவது பண்ட உற்பத்தியும் பரிவர்த்தனையும் நிலவும் உறவுகளின் வெளியீடு என்ற முறையில் மட்டுமே பணத்திற்கு அர்த்தம் உள்ளது.
...
புழக்கத்திற்குத் தேவையான தங்கத்தின் அளவிற்கேற்ப காகிதப் பணம் வெளியிடப்படும் என்றால் இவற்றின் வாங்கும் சக்தி தங்கப் பணத்தின் வாங்கும் சக்திக்குச் சமமானதாக இருக்கும். ஆனால் சாதாரணமாக முதலாளித்துவ அரசு தனது செலவுகளை, குறிப்பாக இராணுவச் செலவுகளைச் சரிகட்டு வதற்காகப் பண்டப் புழக்கத்தின் தேவைகளைக் கணக்கில் கொள்ளாது தேவைக்கதிகமான காகிதப் பணத்தை வெளியிடுகிறது. காகிதப் பணத்தை இவ்வாறு அளவிற்கதிகமாக வெளியிடுவது இதன் மதிப்பிழப்பை, பணவீக்கத்தை ஏற்படுத்துகிறது. பணவீக்கம் தொழிலாளர்கள், உத்தியோகஸ்தர்களின் தோள்களில் கடும் பாரமாக வீழ்கிறது, ஏனெனில் வாழ்க்கைக்குத் தேவையான சாதனங்களின் விலைகளை விட ஊதியம் மெதுவாக உயருகிறது. சிறு பண்ட உற்பத்தியாளர்களாகிய பண்ணை உரிமையாளர்களும் விவசாயிகளும் கூட இதனால் அவதியுறுகின்றனர்.

பணவீக்கம் முதலாளித்துவப் பொருளாதாரத்தை அச்சுறுத்தத் துவங்கும் போது பூர்ஷ்வா அரசு பண முறையை வலுப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்கிறது. இந்த நோக்கத்துக்காகப் பல்வேறு வகையான பணச் சீர்திருத்தங்கள் -முதலில் பணமதிப்பைக் குறைப்பது, அதாவது பண அலகின் தங்க அளவைக் குறைப்பது - நிறைவேற்றப்படு கின்றன."

(“சமூக விஞ்ஞானம்” முன்னேற்றப் பதிப்பகம் – மாஸ்கோ- 1985)

03. பண்டத்தின் பண்புகள்

உபயோக மதிப்பு:-

"பண்டம் என்பது பரிவர்த்தனைக்காக உற்பத்தி செய்யப்பட்ட உழைப்பின் விளைபொருளாகும். இது ஏதாது மனிதத் தேவைகளைப் பூர்த்தி செய்ய வேண்டும் என்பது தெளிவு, இல்லாவிடில் இதை யாரும் வாங்கமாட்டார்கள். பொருளின் பயன்தன்மை, மக்களின் ஏதாவதொரு தேவையைப் பூர்த்தி செய்யும் குணம் உபயோக மதிப்பு என்றழைக்கப்படுகிறது.

ரொட்டி, சர்க்கரை, வெண்ணெய், பால், இறைச்சி ஆகியவை மனிதர்களின் உணவுத் தேவையை பூர்த்தி செய்கின்றன என்பதில் தான் இவற்றின் உபயோக மதிப்பு (பயன் மதிப்பு) அடங்கியுள்ளது.
உபயோக மதிப்புகள் என்பதே பொருட்கள், பொருளாயத நலன்கள் ஆகும். எந்த ஒரு சமுதாயத்திலும் இவை செல்வத்தின் பொருட் சாரத்தை உருவாக்குகின்றன. ஆனால் பண்டத்தின் உபயோக மதிப்பு, இயற்கைப் பொருளாதாரத்தில் விளைபொருளின் உபயோக மதிப்பிலிருந்து மாறுபடுகிறது. இயற்கைப் பொருளாதாரத்தில் விளைபொருட்கள் உற்பத்தியாளர்களைப் பொறுத்த மட்டில்தான் உபயோக மதிப்பைப் பெற்றுள்ளன, பண்டங்களுக்குச் சமுதாய உபயோக மதிப்பு, அதாவது சமுதாயத்தின் மற்ற உறுப்பின்ர்களுக்கான உபயோக மதிப்புதான் உள்ளது. செருப்பு தைப்பவன் தனக்காக இல்லாமல் மற்றவர்களுக்காகச் செருப்புக்களை உற்பத்தி செய்கிறான்.

பரிவர்த்தனை மதிப்பு;-

பண்டங்களை மக்கள் வாங்கினால் இவற்றை அவர்கள் பயன்படுத்தலாம். ஒரு குறிப்பிட்ட தொகையைக் கொண்டு ஒரு குளிர்பதன பெட்டி அல்லது நான்கு ஆண்டுகளுக்கான கோட்டுகள் அல்லது மூன்று தையல் இயந்திரங்களை வாங்கலாம். இது எதைக் குறிக்கிறது? அதாவது முற்றிலும் வெவ்வேறான பண்டங்களில், குறிப்பிட்ட ஒரு விகிதத்தில் இவற்றை ஒன்றுடன் ஒன்று ஒப்பிடவல்ல எதோ ஒரு பொது அம்சம் உள்ளது என்பதைக் குறிக்கிறது. இந்தப் பொது அம்சம் பௌதீக, இரசாயன அல்லது வேறு எதோ இயற்கைக் குணங்கள் அல்ல. இவையனைத்தும் மனித உழைப்பின் விளைபொருட்கள் என்பதுதான் பொது அம்சமாகும். இதுதான் இவற்றை ஒப்பிடத்தக்கவையாக்குகிறது.

பண்டங்களை ஒன்றுடன் ஒன்று ஒப்பிடுகையில் மக்கள் உண்மையில் அவற்றில் உள்ள உழைப்பை ஒப்பிடுகின்றனர். பண்டங்களில் அடங்கியுள்ள உழைப்பு பண்டத்தின் மதிப்பை (பரிவர்த்தனை மதிப்பு) உருவாக்குகிறது.

சமுதாய ரீதியாக அவசியமான வேலை நேரம்:-

பண்ட உற்பத்தியாளர்கள் ஒரே மாதிரியான நிலைமைகளில் வேலை செய்வதில்லை. வெவ்வேறு உழைப்புக் கருவிகளைப் பயன்படுத்துகின்றனர். சமமற்ற திறமைகளைக் கொண்டுள்ளனர், இவர்கள் ஒரே விதமான பண்டங்களின் உற்பத்திக்கு வெவ்வேறு அளவு நேரங்களைச் செலவிடுகின்றனர். ஆனால் சந்தையில் ஒரே விதமான பண்டங்களுக்கு ஒரே மாதிப்புதான் உள்ளது. எனவே பண்ட மதிப்பின் அளவு உற்பத்தி மற்றும் உற்பத்தியாளனின் தனிப்பட்ட சிறப்பியல்புகளைப் பொறுத்திருப்பதில்லை. இது மேலோங்கி நிற்கக் கூடிய உழைப்பு நிலைமைகளாலும் சமுதாய ரீதியாக அவசிமான வேலை நேரத்தாலும் நிர்ணயிக்கப்படுகிறது.

காலணிகளை உற்பத்தி செய்யும் மூன்று பண்ட உற்பத்தியாளர் பிரிவுகள் இருப்பதாக வைத்துக் கொள்வோம். ஒரு சிலர் 7 நிமிடங்களிலும் அடுத்தவர்கள் 10 நிமிடங்களிலும் மூன்றாமவர்கள் 14 நிமிடங்களிலும் ஒரு ஜோடி செருருப்புகளைத் தைக்கின்றனர். இதில முதலாவது மற்றும் மூன்றாவது பிரிவுகள் சிறியவை, சிறிதளவு காலணிகளைத் தான் இப்பிரிவுகள் உற்பத்தி செய்து சந்தைக்கு அன்புகின்றன. இரண்டாவது பிரிவுதான் பெரும்பாலான காலணிகளை உற்பத்தி செய்கிறது.

சமுதாய ரீதியாக அவசியமான நேரம் எது?

இரண்டாவது பிரிவு செலவழிக்கும் 10 நிமிடம்தான் இந்த நேரம். ஏனெனில் சமுதாய ரீதியாக அவசியமான நேரம், குறிப்பிட்ட துறையில் பெரும்பான்மை பொருட்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்களின் வேலை நேரத்தோடு ஒத்துப் போகிறது அல்லது நெருக்கமாயுள்ளது.

இப்போது நம்மால மதிப்பு என்ற கருதுகோளை வரையறுக்க இயலும். மதிப்பு என்பது பண்டத்தின் உற்பத்திக்காக செலவிடப்பட்ட சமுதாய ரீதியாக அவசியமான உழைப்பு ஆகும்.

மதிப்பு என்பது பண்ட உற்பத்திக்கு மட்டுமே உரிய ஒரு வரலாற்றுப் புலப்பாடு ஆகும். எங்கெல்லாம் எப்போதெல்லாம் உழைப்பின் விளைபொருட்கள் பண்டங்களாக விளங்குகின்றனவோ, பரஸ்பரம் பரிவர்த்தனை செய்து கொள்ளப்படுகிறதோ அங்கெல்லாம் மதிப்பு நிலவுகிறது.

இயற்கைப் பொருளாதாரச் சூழநிலைகளில் – இதன் விளைபொருட்கள் சந்தைக்கு வருவதில்லை – மதிப்புக்குச் சமுதாய அவசியம் இல்லை. கம்யூனிசச் சமுதாயத்தின் உயர் கட்டத்திலும் இது இருக்காது. ஏனெனில் அப்போது பண்ட உற்பத்தி உதிர்ந்து விடும். எனவே மதிப்பு பொருட்களின் குணமல்ல, இது பண்டங்களை உற்பத்தி செய்யக் கூடிய மனிதர்களுக்கு இடையேயான சமுதாய உறவுகளைக் குறிக்கிறது."

(“சமூக விஞ்ஞானம்” முன்னேற்றப் பதிப்பகம் – மாஸ்கோ- 1985)

02. பண்டமும் பண்ட உற்பத்தியும்

முதலாளித்துவத்தில் பண்ட உற்பத்தி முழு ஆதிக்கம் செலுத்துகிறது. பண்டம் என்பது பரிவர்த்தனைக்காக உற்பத்தி செய்யப்பட்ட உழைப்பின் விளைபொருள். பண்ட உற்பத்தி என்பது சமுதாயப் பொருளாதாரத்தின் ஒரு ஒழுங்கமைப்பாகும். இதில் பொருட்கள் சொந்த உபயோகத்திற்காக இல்லாமல் விற்பதற்காக உற்பத்தி செய்யப்படுகின்றன.

எந்த நிலைமைகளில் பொருட்கள் பண்டங்களாகின்றன?

இதற்கு முதலாவதாக சமுதாய உழைப்புப் பிரிவினை நிலவ வேண்டும். இதில் மக்கள் தமக்கு வேண்டிய எல்லாவற்றையும் தாமே உற்பத்தி செய்வதில்லை, மாறாக ஏதோ ஒரு வித நடவடிக்கையில் ஈடுபடுகின்றனர், ஏதோ சில பொருட்களின் உற்பத்தியில் தேர்ச்சி பெறுகின்றனர். இரண்டாவதாக, உற்பத்திச் சாதனங்கள் தனிப்பட்ட நபர்களின் அல்லது குழுக்களின் சொத்தாக இருக்க வேண்டும். இச்சந்தர்ப்பத்தில் பண்டங்களை வாங்குவதும் விற்பதும் பொருளாதார அவசியமாக மாறுகின்றன.

முதலாளித்துவப் பண்ட உற்பத்தி நிலப்பிரபுத்துவச் சமுதாயத்தின் உள்ளே தோன்றியது.

கைத்தொழிலுக்கும் விவசாயத்திற்கும், நகரத்திற்கும் கிராமத்திற்கும் இடையிலுள்ள சமுதாய உழைப்புப் பிரிவினே வலுவடைந்ததானது நிலப்பிரபுத்துவப் பொருளாதாரம் படிப்படியாக சந்தை உறவுகளினுள் இழுக்கப்பட்டு பணத்தின் அதிகாரத்தின் கீழ் வருவதற்கு இட்டுச் சென்றது. பண்ட உறவுகளின் வளர்ச்சி நிலப்பிரபுத்துவத்தின் சிதைவிற்கான அடிப்படையை உருவாக்கியது. பிரபுக்களின் கோட்டைச் சுவர்களைக் குண்டுகள் துளைப்பதற்கு நெடுங் காலம் முன்னதாகவே அவற்றின் அடிப்படைகளைப் பணம் குலைத்திருந்தது என்று பி. எங்கெல்ஸ் எழுதினர்.

சாதாரணப் பண்டஉற்பத்தி மற்றும் முதலாளித்துவப் பண்ட் உற்பத்தியின் சிறப்பு அம்சங்களை ஒப்பிடுவோம். இரண்டுமே சமுதாய உழைப்புப் பிரிவினையையும் உற்பத்திச் சாதனங்கள் மற்றும் உழைப்பின் விளைபொருட்களின் மீதான தனியுடைமையையும் அடிப்படையாகக் கொண்டன. இதில் தான் இவற்றின் பொதுமை அடங்கியுள்ளது. ஆனல் சாதாரணப் பண்ட உற்பத்தியில் உழைப்பின் விளைபொருட்கள் அவற்றை உற்பத்தி செய்தவர்களுக்கு (கைத்தொழிலாளர்கள், விவசாயிகள்) சொந்தமாயிருக்கும் என்றால் முதலாளித்துவ உற்பத்தியில் இவை யாரிடம் உற்பத்திச் சாதனங்கள் உள்ளதோ, யார் கூலித் தொழிலாளர்களின் உழைபபன் பயனை அபகரிக்கின்றார்களோ அவர்களுக்குச் சொந்தம்.

முதலாளித்துவத்திற்கு வெகுகாலம் முன்னரே பண்டப் பரிவர்த்தனை நிலவியது என்றாலும் முதலாளித்துவத்திற்கு முந்தைய அமைப்புகளில் பொருளாதாரம் பெரும்பாலும் இயற்கையானதாக இருந்தது. ஒவ்வொரு நிலப்பிரபுத்துவப் பண்ணையும் தனிப்பட்ட வாழ்க்கையை நடத்தியது, வெளியுலகுடனான பரிவர்த்தனையைக் கிட்டத்தட்ட நாடவேயில்லை, ஏனெனில் நிலச்சுவாந்தாருக்கும் அவனது அடியாட்களுக்கும் தேவையான அனைத்தும் பண்ணையடிமைகள் மற்றும் அவர்களின் கிழிருந்த கைத்தொழிலாளர்களின் உழைப்பால் உற்பத்தி செய்யப்பட்டது.

விவசாயப் பண்ணேயும் இயற்கையானதாயிருந்தது. விவசாயிகள் தானியச் சாகுபடி, கால்நடை வளர்ப்பு ஆகியவற்றோடு கூட நெசவு வேலைகளைச் செய்தனர், காலணிகள் மற்றும் உழைப்புக் கருவிகளைத் தயாரித்தனர். நிச்சயமாக இயற்கைப் பொருளாதாரத்திலும் ஒரு சில உழைப்பின் விளைபொருட்கள் (உப்பு, இரும்பு, மளிகைப் பொருட்கள், ஆடம்பரப் பொருட்கள்) சந்தையில் பண்டங்களாகப் பரிவர்த்தனை செய்து கொள்ளப்பட்டன; ஆனால் இத்தகைய பரிவர்த்தனை இரண்டாம் பட்சமாகத்தான் இருந்தது, ஏனெனில் சிறிய அளவு பொருட்கள்தான் விற்கப்பட்டன.

முதலாளித்துவத்தில் ஆலைகளும் தொழிற்சாலைகளும் விவசாயப் பண்ணைகளும் சாதாரணமாக விற்பதற்காக தமது பொருட்களை உற்பத்தி செய்கின்றன. முதலாளித்துவச் சமுதாயத்தில் வாழ்க்கையின் எல்லாத் துறைகளிலும் பண்ட-பண உறவுகள் ஊடுருவி நிற்கின்றன. பண்டப் பரிவர்த்தனை என்பது மிகப் பரவலான, மிகச் சாதாரணமான, கோடிக்கணக்கான முறை காணப்படும் முதலாளித்துவச் சமுதாயத்தின் உறவு முறையாகும்.

எல்லாமே- "வீடுகள், நிலங்கள், மரியாதை, பதவிகள், நாடுகள், முடியரசுகள், விருப்பார்வங்கள், திருப்திகள், மனச்சாட்சி, பெருமை, மனைவிகள், கணவன்மார்கள், குழந்தைகள், எஜமானர்கள், வேலையாட்கள், வாழ்க்கை, இரத்தம், உடல், ஆன்மா" -வாங்கி விற்கும் பொருளாகின்றன என்று முதலாளித்துவச் சமுதாயத்தைப் பற்றி ஆங்கிலேய எழுத்தாளர் ஜான் பென் யான் எழுதுகிறார்.

(“சமூக விஞ்ஞானம்” முன்னேற்றப் பதிப்பகம் – மாஸ்கோ- 1985)

01. முதலாளித்துவம்

(“சமூக விஞ்ஞானம்” என்ற மாஸ்கோ முன்னேற்றப் பதிப்பகம் 1985ல் வெளியிட்ட நூலில் இருந்து முதலாளித்துவம் பற்றிய சில பகுதிகளை தொடர்ந்து பார்க்கலாம். இந்நூலை கி.ஷஹ்நஸாரவ், அ.போபரீக்கின், யூ.சிராஸின், வி.சுகதேயெவ் ஆகியோர் எழுதியுள்ளனர்.)

"முதலாளித்துவம் மனிதனை மனிதன் சுரண்டுவதை அடிப் படையாகக் கொண்ட கடைசி சமூக-பொருளாதார அமைப்பாகும்

17-19ம் நூற்றாண்டுகளின் முதலாளித்துவப் புரட்சிகளின் விளைவாய் மேற்கு ஐரோப்பாவில் முதலாளித்துவம் நிலைபெற்ற போது, நிலப்பிரபுத்துவத்துடன் ஒப்பிடுகையில் புதிய சமுதாய அமைப்பு முற்போக்கானதாக இருந்தாலும் உழைப்புச் சுரண்டலை அது ஒழிக்கவில்லை, இதன் வடிவத்தை மட்டுமே மாற்றுகிறது என்பதை பல சிந்தனையாளர்கள் சுட்டிக் காட்டினர். ஷார்ல் ஃபூரியே, ராபர்ட் ஒவன், மற்ற கற்பனவாத சோஷலிஸ்டுகள் முதலாளித்துவ முறைகளைக் கூர்மையாக விமரிசித்தனர். ஆனால் அவர்களாலோ, பூர்ஷ்வா அரசியல் பொருளாதாரத்தின் பிரதிநிதிகளாலோ உழைப்பை மூலதனம் சுரண்டுவதன் முறையைக் கண்டுபிடிக்கும் முக்கியக் கடமையைத் தீர்க்க இயலவில்லை. விஞ்ஞான கம்யூனிசத்தின் ஆசான்கள்தான் இக்கடமையை நிறைவேற்றினார்கள்.


தனது மேதாவிலாசம் மிக்க நூலாகிய மூலதனத்தில் கா. மார்க்ஸ் பின்வருமாறு எழுதினர்: "முதலாளித்துவ உற்பத்தி முறையும் இதற்கேற்ற உற்பத்தி மற்றும் பரிவர்த் தனை உறவுகளும் இந்நூலில் எனது ஆராய்ச்சிப் பொருளாக உள்ளன". பொருளாயத நலன்களின் உற்பத்தியையும் வினியோகத்தையும் நிர்ணயிக்கக் கூடிய விதிகளைக் கண்டுபிடித்த கா. மார்க்ஸ், முதலாளித்துவத்தின் தவிர்க்க இயலாத அழிவு மற்றும் சோஷலிசத்தின் வெற்றியின் காரணங்கள் சமுதாய வாழ்வின் பொருளாதார நிலைமைகளில் வேரூன்றியுள்ளன என்று காட்டினார்."

02. பண்டமும் பண்ட உற்பத்தியும்
03. பண்டத்தின் பண்புகள்
04. பணம்
05. மதிப்பு விதி
06. உபரி மதிப்பு – மூலதனம் உழைப்பைச் சுரண்டும் விதம்
07. ஏகாதிபத்தியம்
08. முதலாளித்துவத்தின் பொது நெருக்கடி
09. முதலாளித்துவ பொது நெருக்கடியின் கட்டங்கள்

Thursday 28 December 2017

8. முதலாளித்துவ வளர்ச்சியின் கட்டங்கள்

முதலாளித்துவ வளர்ச்சியில் இரு கட்டங்கள் உள்ளன. முதல் கட்டத்தில் சுதந்திரமான போட்டி ஆதிக்கம் செலுத்துகிறது. முக்கியமாக உற்பத்திச் சாதனங்கள் தனிப்பட்ட முதலாளிகளுக்குச் சொந்தம். இரண்டாவது கட்டம் 20வது நூற்றண்டு திருப்பத்தில் தொடங்கியது. அதை ஏகபோக முதலாளித்துவம் அல்லது ஏகாதிபத்தியம் என்போம். இந்தக் கட்டத்தில் பொருளாதாரம் அரசியல் ஆகியவற்றில் ஆதிக்கப் பங்கு வகிப்பது பெரு முதலாளிகளின் சங்கங்களான ஏக போகங்களாகும். பங்கு முறைச் சொத்து மற்ற முதலாளித்துவ சொத்துக்களை விட ஆதிக்கம் செலுத்துவதாகிறது. பொருளாதாரத்தில் பூர்ஷ்வா அரசின் தலையீடு அதிகரிக்கிறது. அரசு-ஏகபோக முதலாளித்துவ அமைப்பு உருவாகிறது. முதலாளித்துவம் பொது நெருக்கடிக்குள்ளாகும் போது ஏகாதிபத்தியம் ஒரு முடிவிற்கு வருகிறது. அதாவது அதனுடைய சிதைவின் சகாப்தத்திற்கு வருகிறது. இந்தக் காலமானது மாபெரும் அக்டோபர் சோஷலிச புரட்சியால் முன்னறிவிக்கப்பட்டது.

முதலாளித்துவ உற்பத்தி முறையானது மார்க்சால் அவருடைய “மூலதனம்” என்ற நூலில் பகுத்தாராயப்பட்டது. அவர் விரித்துரைத்த கருத்துக்கள் லெனினுல் மேலும் அவ ருடைய நூலான “ஏகாதிபத்தியம்-முதலாளித்துவத்தின் உச்சக் கட்டம்” என்ற நூலில் செழுமைப்படுத்தப்பட்டன.


(அரசியல் பொருளாதாரத்தின் அடிப்படைகள்” எம்.என்.ரின்டினா, ஜி.பி.செர்னிக்கவ், ஜி.என்.ஹீடக்கோர்மவ் முன்னேற்றப் பதிப்பகம்)