(“சமூக விஞ்ஞானம்”
என்ற மாஸ்கோ முன்னேற்றப் பதிப்பகம் 1985ல் வெளியிட்ட நூலில் இருந்து முதலாளித்துவம்
பற்றிய சில பகுதிகளை தொடர்ந்து பார்க்கலாம். இந்நூலை கி.ஷஹ்நஸாரவ், அ.போபரீக்கின்,
யூ.சிராஸின், வி.சுகதேயெவ் ஆகியோர் எழுதியுள்ளனர்.)
முதலாளித்துவ பொது
நெருக்கடியின் முதல் கட்டம் முதல் உலக யுத்தத்தையடுத்து, குறிப்பாக அக்டோபர் சோஷலிசப்
புரட்சியின் வெற்றியோடு துவங்கியது. அக்டோபர் புரட்சி தொழிலாளர் மற்றும் தேசிய விடுதலை
இயக்கத்தின் மீது பெரும் செல்வாக்கு செலுத்தியது, சமுதாய வளர்ச்சி முழுவதற்கும் பெரும்
உந்து சக்தியை அளித்தது. சோஷலிசம் தத்துவத்திலிருந்து நடைமுறையாகியது, முதலாளித்துவத்தின்
தவிர்க்க இயலாத அழிவைப் பற்றியும் அதைப் புதிய சமுதாய அமைப்பால் மாற்றுவதைப் பற்றியும்
மார்க்சிய-லெனினியப் போதனை கூறிய ஆரூடத்தின் உண்மை முதன்முதலாக மெய்ப்பிக்கப்பட்டது.
இரண்டாவது உலக யுத்தம்
முதலாளித்துவத்தின் பொது நெருக்கடியைக் கூர்மையாக்கி ஆழப்படுத்தியது; ஐரோப்பாவிலும்
ஆசியாவிலும் பல நாடுகள் முதலாளித்துவ அமைப்பிலிருந்து விலகியதையடுத்து இந்த நெருக்கடியின்
இரண்டாவது கட்டம் துவங்கியது. சோஷலிசம் ஒரு நாட்டின் வரம்பை விட்டு வெளியேறி உலக அமைப்பாக
மாறியது. அதே பொழுது தேசிய விடுதலைப் புரட்சிகள், பல முந்தைய காலனிகள் மற்றும் அரைக்
காலனிகளின் இடத்தில் சுயமான அரசுகளைத் தோற்றுவித்தன.
50ம் ஆண்டுகளின் இரண்டாம்
பாதியிலிருந்து முதலாளித்துவ பொது நெருக்கடியின் மூன்றுவது கட்டம் ஆரம்பமாகியது. இது
உலக யுத்தத்தோடு தொடர்பின்றி துவங்கியது என்பதில்தான் இதன் சிறப்பியல்பு அடங்கியுள்ளது.
முன்பு சமாதானக் காலத்தில் உழைப்பாளிகளின் சோஷலிச இயக்கத்தையும் அடிமைப்படுத்தப்பட்ட
மக்களின் தேசிய விடுதலை இயக்கத்தையும் நசுக்கக்கூடிய அளவிற்கு முதலாளித்துவம் சக்தி
வாய்ந்ததாக இருந்தது; பரஸ்பர வேறுபாடுகளால் பலவீனமடைந்து, அவர்களாலேயே மூட்டி விடப்பட்ட
உலக யுத்தங்களில் மும்முரமாயிருந்ததால்தான் ஏகாதிபத்தியவாதிகளால் விடுதலை இயக்கங்களின்
பெரும் வெற்றிகளுக்குத் தடைவிதிக்க இயலவில்லை.
...
இலட்சியங்களின்றி
சித்தாந்தத் துறை உட்பட
வாழ்க்கையின் எல்லாத் துறைகளுக்கும் இந்நெருக்கடி பரவியுள்ளதால்தான் இது பொது நெருக்கடி என்று அழைக்கப்படுகிறது. மக்களைத்
தன் பக்கம் இழுக்கும் போராட்டத்தில் ஏகபோக முதலாளி வர்க்கம் நம்பிக்கையின்றி தோல்விகளைத்
தழுவி வருகிறது.
முதலாளி வர்க்கம் ஆட்சிக்கு
வந்த தருணத்தில் விடுதலை, சமத்துவம், சகோதரத்துவம் ஆகிய கோஷங்களால் வெகு ஜனங்களைத்
தன் பக்கம் கவர்ந்திழுத்தது. இந்தக் கோஷங்கள் பூர்ஷ்வா அரசியல் அமைப்புச் சட்டங்களில்
எழுதப் பட்டுள்ளன. ஆனால் முதலாளித்துவச் சூழ்நிலைகளில் இவற்றின் மட்டான தன்மை இப்போது
நன்கு தெளிவாகியுள்ளது. தனிநபர் சுதந்திரத்தின் அம்சங்களில் ஏதாவது ஒன்றைப் பயன்படுத்தும்
வாய்ப்பு (உதாரணமாக பத்திரிகை சுதந்திரம் போன்றவை)
பொருளாயத சாதனங்களைப் பெற்றிருப் பதைப் பெரிதும் சார்ந்துள்ளதால், இது பெரும்பாலும்
ஆளும் வர்க்கத்திற்கு மட்டுமே எட்டக்கூடியது.
...
எப்போதோ தன் பதாகையில்
எழுதப்பட்ட லட்சியங்களே நம் காலத்தில் முதலாளி வர்க்கம் கீழே போட்டு மிதித்துள்ளது.
வெகுஜனங்களைக் கவரக் கூடிய புதிய கோஷங்களைக் கண்டுபிடிக்க அதன் சித்தாந்தவாதிகள் செய்த
முயற்சிகள் யாவும் தோல்வியடைந்து வருகின்றன.
இப்போது, சோஷலிசம்
கற்பனையிலிருந்து யதார்த்த மாக மாறியுள்ள போது முதலாளித்துவ உண்மையை சோஷலிச உலகின் நடைமுறையோடு ஒப்பிட உழைப்பாளிகளுக்கு வாய்ப்புள்ளது. இவ்வாருன ஒப்பீடு, சோஷலிசம், கம்யூனிசம் மட்டுமே உண்மையான சுதந்திரத்தையும் சமத்துவத்தையும் சகோதரத்துவத்தையும் அளிக்க முடியும் என்ற முடிவிற்கு இட்டுச் செல்கிறது. எனவேதான் பூர்ஷ்வாச் சித்தாந்தவாதிகள் கம்யூனிசக் கருத்துக்களுக்கு எதிரான போராட்டத்தை, கம்யூனிச எதிர்ப்பைத் தமது முக்கியக் கடமையாக அறிவிக்கின்றனர். அவர்களிடம் ஆக்க பூர்வமான வேலைதிட்டம் கிடையாது, நிலைநாட்டுவதற்கு அவர்களிடம் எதுவும் இல்லை, இவர்கள் சமுதாய முன்னேற்றத்திற்கு இடையூறு மட்டுமே விளைவிக்கின்றனர் என்பதை இதுவே நிரூபிக்கின்றது.
ஏகாதிபத்திய அரசுகளில் கம்யூனிச எதிர்ப்பிற்காக ஒரு முழு தொழில்துறையே
தோற்றுவிக்கப்பட்டுள்ளது, பத்துக்கணக்கான, நூற்றுக்கணக்கான விசேஷ நிறுவனங்களில் கம்யூனிசக்
கருத்துக்களை மறுப்பதற்கான பல்வேறு முறைகள் உருவாக்கப்பட்டு வருகின்றன, உழைப்பாளிகளின்
கண்களில் சோஷலிசத்தைக் களங்கப்படுத்துவதற்கான வாதங்கள் இட்டுக் கட்டப்படுகின்றன. இதற்காகப்
பிற்போக்கு ஏகபோக வட்டங்கள் ஏராளமான தொகையைச் செலவிடத் தயங்குவதில்லை.
…
இறுதியாக முதலாளித்துவத்தின் ஆதரவாளர்கள், வளர்ச்சியடைந்த முதலாளித்துவ
நாடுகளில் உள்ள ஒப்பீட்டு ரீதியாக உயர்வான வாழ்க்கைத் தரம் பெரும்பாலும் முந்தைய காலனி
நாடுகளின் மக்களைக் கொள்ளையடித்தின் விளைவு என்பதை நினைவு கூற விரும்பவில்லை.
பூர்ஷ்வாப் பிரச்சாரம் எவ்வளவு பற்றார்வம் உடையதாயிருந்தாலும்
அதனால் முதலாளித்துவத்தின் அங்கக ரீதியான குறைகளை மறைக்க இயலாது; முதலாளித்துவம் மனிதனை
மனிதன் சுரண்டும் அமைப்பாக, சமுதாயச் சமமின்மை மற்றும் தேசிய ஒடுக்குமுறை அமைப்பாக
இருந்தது, இப்போதும் இருக்கிறது.
…
வரலாறு நீண்ட காலம் முன்னரே ஏகாதியத்தயத்திற்குக் குற்றத் தீர்ப்பை
அளித்து விட்டது. ஏகாதிபத்தியம் நிலைத்திருக்காது ஏனெனில் சமுதாய வளர்ச்சியின் புறவய
நியதிகள் புதிய சோஷலிச அமைப்பை நோக்கிய புரட்சிகர மாற்றத்தை நமது நூற்றாண்டின் நிகழ்ச்சி
நிரலில் சேர்த்துள்ளது.
(“சமூக விஞ்ஞானம்” முன்னேற்றப் பதிப்பகம்
– மாஸ்கோ- 1985)
No comments:
Post a Comment