Wednesday 27 December 2017

1. உற்பத்திச் சக்திகள்

பொருள்களின் உற்பத்தியே மனிதகுல வாழ்வின் அடித்தளமாகும். வாழ்க்கைக்கு வலிமையளிக்க, உணவு, உடை, விடுகள் மற்றும் பிற முக்கிய தேவையான பொருள்களை மக்கள் உற்பத்தி செய்ய வேண்டியுள்ளது. உற்பத்தி முறையானது மனிதன் அல்லது சமுதாயம், இயற்கை ஆகியவற்றிற்கு இடையேயுள்ள பரஸ்பர செயலை உள்ளடக்கியதாகும். மனிதனுக்கும் இயற்கைக்கும் இடையேயுள்ள பரஸ்பர செயல் சமுதாய அமைப்பைப் பொருத்ததல்ல. அது உழைப்பு, உழைப்புப் பொருள்கள், உழைப்புக் கருவிகள் ஆகிய மூன்றின் சேர்க்கையாகும்.

உழைப்பு என்பது மனிதத் தேவைகளைத் திருப்தி செய்யக் கூடியவாறு இயற்கைப் பொருள்களை தகவமைப்பதைக் குறிக்கோளாகக் கொண்ட காரியார்த்தமான மனித நடவடிக்கையே. மனிதன் இயற்கையின் மீது செயல்படும் பொழுது அறிவையும் திறமையையும் சேகரிக்கிறான்; உழைப்பின் நிகழ்ச்சிப் போக்கில் மேம்பாடுகளைப் புகுத்துகிறான், ''ஓர் அர்த்தத்தில், உழைப்பு மனிதனையே சிருஷ்டித்தது என்று நாம் கூற வேண்டிய அளவுக்கு அது மானுட வாழ்வு முழுவதற்கும் முதன்மையான அடிப்படை நிபந்தனையாக உள்ளது’' (இயற்கையின் இயக்க இயல்) என்று எங்கெல்ஸ் குறிப்பிட்டார்.

உழைப்புப் பொருள்கள் என்பது மனிதன் தன்னுடைய உழைப்பைப் பயன்படுத்தும் இயற்கையில் காணக்கிடைப்பவையாகும். மண்ணுடன் கூடிய பூமியே சர்வவியாபகமான ஒரு உழைப்புப் பொருளாகும். ஏற்கெனவே உழைப்பு பயன்படுத்தப்பட்டு மேலும் மாற்றங்களுக்கு உட்படுத்தப்படும் பொருள்கள் கச்சாப் பொருள்கள் எனப்படும். விஞ்ஞானம் முன்னேற முன்னேற அதனுடன் உழைப்புப் பொருள்களின் வகைகள் விரிவடைகின்றன. புதிய உழைப்புப் பொருள்கள் தோன்றுகின்றன. எடுத்துக்காட்டு பல்பொருள் செயற்கை சேர்க்கமான பொருள்கள்.

உழைப்புக் கருவிகள் என்பன, உழைப்புப் பொருள்களின் மீது செயல்பட மனிதனால் பயன்படுத்தப்படும் கருவிகளாகும். உழைப்பதற்குத் தேவையான கருவிகள் அவற்றினுள் முதலாக அடங்கும். எலும்பும் தசையும் உற்பத்திக்கான உழைப்புக் கருவிகள் என்று மார்க்ஸ் குறிப்பிட்டார். உழைப்புக் கருவிகளை உற்பத்தி செய்வதிலிருந்துதான் உண்மையில் மனித உழைப்பு ஆரம்பித்தது. ஒவ்வொரு வரலாற்று உற்பத்தி சகாப்தத்தின் முக்கிய குணும்சம் அவற்றின் வளர்ச்சியின் அளவுதான். கற்கோடாரி, மண்வெட்டி, வில், அம்புகள் ஆகியவைகளே முதல் உற்பத்திக் கருவிகளாக இருந்தன. விஞ்ஞான நுணுக்கம் நிறைந்த நவீன இயந்திரங்கள் இன்று உழைப்புக் கருவிகளில் அடங்கும். போக்கு வரத்து வாகனங்கள், தொழிற்சாலைக் கட்டிடங்கள், நிறு வனங்கள் ஆகியவை கூட உழைப்புக் கருவிகளில் அடங்கும். பூமி கூட உழைப்புக் கருவியாகும்.

உழைப்புப் பொருள்கள் உழைப்புக் கருவிகள் இரண்டும் சேர்ந்து உற்பத்திச் சாதனங்கள் என அழைக்கப்படுகின்றன. மக்களால் அவை கையாளப்பட்டாலன்றி உற்பத்திச் சாதனங்கள் தாமாகவே எதையும் உற்பத்தி செய்துவிட முடியாது. உற்பத்தி அனுபவமும் திறமையும் கொண்ட மக்களும் உற்பத்திச் சாதனங்களும் உற்பத்திச் சக்திகள் என அழைக்கப்படுகின்றன. மக்களால் உற்பத்திக் கருவிகள் உருவாக்கப்பட்டு மேம்பாடடையச் செய்யப்படும் என்பதால் மக்களே முதன்மையான உற்பத்திச் சக்திகளாவார்கள். இயற்கையிடம் சமுதாயத்தின் செயல்வன்மையுள்ள போக்கை உற்பத்திச் சக்திகள் வெளிப்படுத்தும். இயற்கையின் மேல் மனிதனுடைய கட்டுப்பாட்டின் அளவை அவற்றின் வளர்ச்சி நிலை காட்டுகிறது. உற்பத்திச் சக்திகள் முன்னேற முன்னேற விஞ்ஞானம் அதிக அளவு பங்காற்றுகிறது. விஞ்ஞானம், அதுவே நேரடியாக ஒரு உற்பத்திச் சக்தியாக மாறுகிறது. தற்கால நிலைமையின் கீழ் விஞ்ஞான-தொழில் நுணுக்கப் புரட்சி ஒவ்வொரு உற்பத்திச் சக்தியையும் (புதிய உழைப்புக் கருவிகள், புதிய உழைப்புப் பொருள்கள், புதிய ஆற்றலின் மூலாதாரங்கள், மனித சக்தியின் பாலான புதிய தேவைகள்) விரிவடையச் செய்துள்ளது.

உற்பத்திச் சக்திகள் சமுதாய உற்பத்தியின் ஒரு அம்சத்தை உருவாக்குகின்றன. உற்பத்தியிலான சமுதாய உறவுகளில் அல்லது மக்களிடையே உள்ள பொருளாதார உறவுகளில் அடுத்த அம்சம் அடங்கியுள்ளது.

(அரசியல் பொருளாதாரத்தின் அடிப்படைகள்” எம்.என்.ரின்டினா, ஜி.பி.செர்னிக்கவ், ஜி.என்.ஹீடக்கோர்மவ் முன்னேற்றப் பதிப்பகம்)

No comments:

Post a Comment