Sunday 26 February 2023

முதலாளித்துவத்தின் கீழ் சமூக உற்பத்தியின் திட்டமிட்ட வளர்ச்சியின் சாத்தியமின்மை

                                                                                                                  எம்.என்ரின்டினா,
                                                                                                                  ஜி.பி.செர்னிக்கவ்,
                                                                                                     ஜி.என்.ஹீடக்கோர்மன்

“சமூக உற்பத்தியின் திட்டமிட்ட வளர்ச்சி சோஷலிசத்தின் கீழ்தான் சாத்தியம். முதலாளித்துவத்தில் அல்ல. பூர்ஷ்வா பொருளாதாரவாதிகள் இதன் எதிரிடையை நிரூபிக்க உறுதியாக முயற்சித்தாலும் நிகழ்ச்சிகள் பிடிவாதமாக அவர்களுடைய குற்றச்சாட்டுகளை தவறு என நிரூபிக்கின்றன. முதலாளித்துவத்தின் கீழ், திட்டமிட்ட பொருளாதார வளர்ச்சிக்கான ஒரு தேவை மட்டும் இருக்கிறது. இது முதலாளித்துவ உற்பத்தியின் சமூகக் குணாம்சத்திலிருந்து முளைக்கிறது. ஆனால் தனியுடமையின் ஆதிக்கம் இந்தத் தேவை பூர்த்தி செய்யப்படுவதைத் தடுக்கிறது.

 உற்பத்திச் சாதனங்களின் தனி உடைமையால் ஒன்றிலிருந்து மற்றது தனிமைப்படுத்தப்பட்டு முதலாளித்துவ தொழில் நிலையங்கள் அவற்றின் சொந்தப் போக்கிலேயே செயல்படுகின்றன. அவை அவற்றின் நடவடிக்கைகள் ஒன்றுடன் ஒன்று ஒத்திசையவோ அல்லது அவற்றின் உற்பத்திப் பொருள்களுக்கான சமூக தேவையுடன் ஒத்திசையவோ முடியாது. முதலாளித்துவ உலகில் சமூக உற்பத்தியில் அராஜகம் நிலவுகிறது.

 ஏகாதிபத்தியத்தின் கீழ் முக்கியமாக அரசு-ஏகபோக முதலாளித்துவத்தில் முதலாளித்துவ நாடுகள் அரசாங்கங்கத் தலையீட்டின் மூலம் பொருளாதார ஒழுங்குமுறையையும் திட்டமிடுதலையும் முயற்சிக்கின்றன. ஏகாதிபத்திய சித்தாந்தவாதிகள் பொதுமக்களை, பூர்ஷ்வா அரசுகளின் இத்தகைய நடவடிக்கைகள் திட்டமிட்ட பொருளாதார வளர்ச்சி அன்றி வேறு ஒன்றுமில்லை என நம்ப வைக்க அவசரப்படுகின்றனர். அவர்கள், ஒரு புதிய “திட்டமிட்ட” முதலாளித்துவம், அதனுடையத் தீமைகளை தவிர்க்கக் கூடியதும், நெருக்கடிகளிலிருந்து விடுபட்ட வளர்ச்சிக்கான வசதியும் கொண்ட ஒரு புதிய திட்டமிட்ட முதலாளித்துவத் தோற்றத்தைக் குறிப்பிட்டனர். எதார்த்தத்தில் முதலாளித்துவப் பொருளாதார ஒழுங்கு முறையும் முன்னறிவிப்பும் பூர்ஷ்வா அரசுகளால், பொருளாதார ஊக்கங்களின் மூலம் உற்பத்தியின் மேல் செல்வாக்கு செலுத்த எடுத்த ஒரு முயற்சியாகும். இப்படிச் செய்வதன் நோக்கமே நிதி ஆதிக்கக் குழுவின் நலன்களில் அதன் வளர்ச்சிப் போக்கு இருக்க வேண்டும் என்பதே. இது தனியார் முதலாளித்துவ உடைமையின் ஆதிக்கத்தையோ, சமூக உற்பத்தியில் அராஜகத்தையோ அகற்றாது. அது பொருளாதாரத்தை நிர்வகிக்க வல்லதல்ல. எனவே அதற்கும் திட்டமிட்ட வளர்ச்சிக்கும் பொதுவான அம்சம் எதுவும் இல்லை. மார்க்ஸ் எழுதினார்: "பூர்ஷ்வா சமுதாயத்தின் சாராம்சம், ஆரம்பம் முதலே அதில் உணர்வு பூர்வமான சமூக உற்பத்தி ஒழுங்கு முறை என்பது துல்லியமாக இல்லை என்பதே.' முதலாளித்துவப் பொருளாதாரத்தின் குண இயல்பாக இன்னமும் உள்ள, உற்பத்தியில் ஆழமான சரிவுகள் பின்தொடரப்படும், மீண்டும் மீண்டும் நடைபெறும் பொருளாதார நெருக்கடிகள், வேலையின்மை, பணவீக்கம் ஆகியவற்றால் இது நிரூபிக்கப்படுகிறது.”

(அத்தியாயம் 15, சோஷலிச சமூக உற்பத்தியின் திட்டமிட்ட வளர்ச்சி- 342 – 344

அரசியல் பொருளாதாரத்தின் அடிப்படைகள், முன்னேற்றப் பதிப்பகம், மாஸ்கோ)