முதலாளித்துவ
முரண்பாடுகள் கூர்மையடைதல்
உற்பத்திச் சக்திகளுக்கும்
உற்பத்தி உறவுகளுக்கும் இடையேயான மோதல்தான் வரலாற்று நிகழ்ச்சிப் போக்கின் உந்து சக்தியாக,
ஒரு உற்பத்தி முறையிலிருந்து வேறு முறைக்கு மாற்றத்தை நிகழ்த்தக் கூடிய சமூகப் புரட்சிகளின்
பொருளாதார அடிப்படையாக விளங்குகிறது. நமது கண்களின் முன்னே கூர்மையடைந்து வரக்கூடிய
உற்பத்தியின் சமுதாயத் தன்மைக்கும் தனி முதலாளித்துவ அபகரிப்பு முறைக்கும் இடையிலுள்ள
முரண்பாடு இத்தகைய மோதலின் உதாரணமாகத் திகழுகிறது. இந்த முரண்பாடுதான் முதலாளித்துவத்தின்
முக்கிய முரண்பாடாகும்.
இந்தப் பகைமையான, சமரசப்படுத்த
இயலாத முரண்பாடு இப்போது பெரிதும் கடுமையாக உள்ளது. அரசு-ஏக போக முதலாளித்துவம் சோஷலிசத்தை
நோக்கிய மாற்றத்திற்கான எல்லாப் பொருளாயத முன்தேவைகளையும் தயார் படுத்தியுள்ளது. பெரும்
இயந்திரத் தொழில்துறையும் உற்பத்தியை மிக உயர்வான அளவில் பொதுமயப்படுத்தியதும் அராஜகத்
தன்மைக்கும் நெருக்கடிகளுக்கும் முடிவுகட்டவும் சமுதாயம் முழுவதன் நலன்களுக்காக உற்பத்திச்
சக்திகளின் திட்டமிட்ட வளர்ச்சிக்கு வழி கோலவும் தேவையான சூழ் நிலைகளைத் தோற்றுவிக்கின்றன.
ஆனால் இதற்கு முதலாவதாக உற்பத்திச் சாதனங்களின் மீதான தனிச்சொத்துடைமைக்கு முடிவு கட்ட
வேண்டும்.
ஏகாதிபத்தியம் அழிந்து
வரக் கூடிய முதலாளித்துவம் என்பதற்கு, அது தானாகவே, தொழிலாளி வர்க்கத்தின் தலைமையிலான
வெகுஜனங்களின் தீர்மானகரமான போராட்டமின்றி அழிந்து விடும் என்பது பொருளல்ல. வி.இ.லெனின்
ஏகாதிபத்தியத்தை சோஷலிசப் புரட்சியின் முன்னணைப்
பொழுது என்று குறிப்பிட்டார். நிச்சயமாக ஏகபோக முதலாளி வர்க்கம் போராட்டமின்றி
விட்டுக் கொடுக்காது, முதலாளித்துவ அமைப்பைப் பாதுகாக்க அது சக்திகள் அனைத்தையும் செலவிடும்.
ஆனால் தவிர்க்க இயலாததை அதனால் தடுக்க முடியாது. முதலாளித்துவத்தின் முரண்பாடுகள் மேன்மேலும்
கூர்மையடைந்து அதன் அழிவிற்கு இட்டுச் செல்லுகின்றன. உழைப்பாளிகளைச் சுரண்டுவதன் மூலம்
தனது செல்வங்களைப் பெருக்கும் ஏகபோக முதலாளி வர்க்கம் இவர்களுடைய வளர்ந்து வரும் எதிர்ப்பைச்
சந்திக்கிறது. முதலாளித்துவ ஒடுக்குமுறையிலிருந்து விடுதலை பெறுவதற்காகவும் சமுதாயத்தின்
சோஷலிச மாற்றத்திற்காகவும் தொழிலாளி வர்க்கமும் மக்கள் திரளினரும் நடத்தும் புரட்சிகர
இயக்கம் வளர்ந்து மேன்மேலும் பலமடைகிறது.
....
காலனிகளின் மக்களை
அடிமைப்படுத்தி, பின் அவர்களைப் பொருளாதார சார்புநிலை எனும் வலையில் சிக்கவைத்த ஏகபோக
முதலாளி வர்க்கம் அவிர்களது தேசியச் செல்வத்தைக் கொள்ளையடிப்பதன் மூலம் தொடர்ந்து லாபம்
சம்பாதிக்கிறது. இதனால் ஏகாதிபத்திய அடிமை முறைக்கு எதிரான மக்களின் தேசிய விடுதலை
இயக்க அலை வளர்ந்து வருகிறது.
அடக்குமுறையைப் பின்பற்றி
யுத்தங்களைக் கட்டவிழ்த்து விட்டு ஏகபோக முதலாளி வர்க்கம் தனது சுய நலன்களுக்காகப்
பல லட்சக்கணக்கான மனித உயிர்களைப் பழி வாங்குகிறது, பல்லாண்டு மனித உழைப்பால் தோற்றுவிக்கப்பட்ட
செல்வங்களைப் போராட்டச் சுவாலையில் இட்டுப் பொசுக்குகிறது. இதனால் ஜனநாயகத்திற்கும்
சமாதானத்திற்குமான மக்களின் போராட்டம் வலுவடைந்து வருகிறது.
இந்த மகத்தான சக்திகள்
அனைத்தும் ஒரே பெருக்காக ஒன்றுசேர்ந்து ஏகாதிபத்தியத்தை அழிக்கின்றன. முதலாளித்துவ அமைப்பின் தவிர்க்க இயலாத மறைவு
கட்டம், முதலாளித்துவத்திலிருந்து சோஷலிசத்தை நோக்கி மாறும் கட்டம் வருகிறது.
முதலாளித்துவம் சமமின்றி
வளர்ந்து வருவதால் சோஷலிசத்திற்குச் சமுதாயம் மாறுவதும் ஒரே நேரத்தில் நடைபெறாது. முதலாளித்துவத்தின்
அழிவும் சோஷலிசத்தின் வெற்றியும் ஒரு சகாப்தம் முழுவதும் நீடிக்கக் கூடிய நீண்ட நிகழ்ச்சிப்
போக்காகும். இச்சகாப்தம் முதலாளித்துவத்தின் பொது நெருக்கடி சகாப்தம்.
(“சமூக விஞ்ஞானம்” முன்னேற்றப் பதிப்பகம் – மாஸ்கோ- 1985)
No comments:
Post a Comment