Saturday 3 March 2018

பரிவர்த்தனை மதிப்பும் சமூக தன்மையும் பற்றி மார்க்ஸ்


(தொகுப்பு- அ.கா.ஈஸ்வரன்)


மார்க்ஸ் எழுதிய “மூலதனம்” நூலின் முதல் தொகுதி 1867 ஆம் ஆண்டு வெளிவந்தது. இந்நூல் வெளிவந்து 150 ஆண்டுகள் கடந்துவிட்டன. இந்நூலுக்கு முன்பாக “அரசியல் பொருளாதார விமர்சனத்துக்கு ஒரு பங்களிப்பு” என்ற நூலை 1859 ஆண்டு வெளிவந்தது. இந்நூலின் சாரம், முதல் தொகுதியின் முதல் மூன்று அத்தியாயங்களில் தொகுத்தளிக்கப்பட்டுள்ளது. முதல் தொகுதியின் முன்னுரையில் இவைகளைப் பற்றிக் குறிப்பிடும் போது, மார்க்ஸ் கூறுகிறார், “முந்தைய நூலில் குறிப்பாக மட்டுமே தெரிவிக்கப்பட்ட பல விவரங்கள் இங்கே சூழ்நிலைகள் இடமளிக்கும் அளவுக்கு இன்னும் முழுமையாக விவரிக்கப்பட்டுள்ளன, இதற்கு மாறாக, அங்கே முழுமையாக விவரிக்கப்பட்ட விவரங்கள் இந்தப் பாகத்தில் சுருக்கமாகவே குறிப்பிடப்பட்டுள்ளன.” (பக்கம்-24)

முதல் தொகுதியில் சுருக்கமாக்கப்பட்ட விவரங்கள் விரிவாகப் புரிந்து கொள்ள வேண்டுமானால், “அரசியல் பொருளாதார விமர்சனத்துக்கு ஒரு பங்களிப்பு” நூலை நேரடியாகப் படிக்க வேண்டும்.

முதல் அத்தியாயத்தில் காணப்படும் சரக்கு என்ற பகுதியை இங்கே நேரடியாகப் பார்ப்போம்.

சரக்கு
“முதலாளித்துவச் சமூகத்தின் செல்வம் என்பது முதல் பார்வையில் ஏராளமான சரக்குகளின் குவியலாகத் தோன்றுகிறது, ஒரு தனிச்சரக்கு – இந்தச் செல்வத்தின் அடிப்படை அளவாகத் தோன்றுகிறது. ஆனால் ஒவ்வொரு சரக்கும் பயன் மதிப்பு, பரிவர்த்தனை மதிப்பு என்ற இரட்டை தன்மையைக் கொண்டிருக்கிறது.”
(அரசியல் பொருளாதார விமர்சனத்துக்கு ஒரு பங்களிப்பு – பக்கம் - 17)

எடுத்தயெடுப்பிலேயே மார்க்ஸ், சரக்கில் காணப்படும் பயன் மதிப்பு, பரிவர்த்தனை மதிப்பு என்ற இரட்டைத் தன்மையை வெளிப்படுத்தியுள்ளார். அடுத்து பயன் மதிப்பு பற்றி மார்க்ஸ் கூறியதைப் பார்ப்போம்.

பயன் பதிப்பு

“பயன்மதிப்பானது உபயோகத்தில் மட்டுமே மதிப்பைப் பெறுகிறது; நுகர்வு நடைபெறும் பொழுது தான் அது நிறைவேறுகிறது. ஒரே பயன் மதிப்பு பல வழிகளில் உபயோகிக்கப்பட முடியும். ஆனால் குறிப்பிட்ட தன்மைகளை உடைய பொருளாக அது இருப்பதனால் அதை இவ்வாறு பயன்படுத்துவதற்குச் சாத்தியமான அளவு கட்டுப்படுத்தப்படுகிறது. மேலும் பயன் மதிப்பு குண ரீதியாக மட்டுமல்லாமல் அளவு ரீதியாகவும் நிர்ணயிக்கப்படுகிறது. வெவ்வேறான பயன் மதிப்புகளுக்கு அவற்றின் இயற்கையான தன்மைகளுக்கு ஏற்றவாறு வெவ்வேறான அளவுகள் இருக்கின்றன. உதாரணமாக, ஒரு புஷல் கோதுமை, ஒரு குயர் காகிதம், ஒரு கஜம் துணி என்கிறோம்.”
(அரசியல் பொருளாதார விமர்சனத்துக்கு ஒரு பங்களிப்பு – பக்கம் - 18)

இங்கே மார்க்ஸ் சரக்கின் பயன்மதிப்பைக் குறிப்பிடும் போது அளவு வழியில் தெரிவிக்கிறார். அதாவது 10 நாற்காலி, 5 மூட்டை அரிசி, ஒரு டன் இரும்பு என்பதாகப் பயன்மதிப்பை பொருளின் அளவைக் கொண்டு அழைக்கப்படுகிறது. அடுத்துப் பயன்மதிப்பை மார்க்ஸ் எவ்வாறு விவரிக்கிறார் என்பதைப் பார்ப்போம்.

பரிவர்த்தனை மதிப்பு

“பரிவர்த்தனை மதிப்பு பயன் மதிப்புகள் ஒன்றோடொன்று பரிவர்த்தனை செய்யப்படும் அளவு விகிதமாக, அளவு ரீதியான உறவாக முதலில் தோன்றுகிறது. இந்த உறவில் அவை சமமான பரிவர்த்தனை அளவுகளைக் கொண்டிருகின்றன. மூக்குப்பொடிக்கும் இரங்கற்பாக்களுக்கும் பயன் மதிப்புகள் வெவ்வேறானவை என்றாலும் பிராபெர்டியஸ் எழுதிய கவிதை நூலும், எட்டு அவுன்ஸ் பொடியும் ஒரே பரிவர்த்தனை மதிப்பைக் கொண்டிருக்கலாம். பரிவர்த்தனை மதிப்பு என்று பார்க்கும் பொழுது, ஒரு பயன் மதிப்பு மற்றொரு பயன் மதிப்புக்குச் சமமானதே; ஆனால் இரண்டும் பொருத்தமான அளவு வீதத்தில் கிடைக்க வேண்டும்.”
(அரசியல் பொருளாதார விமர்சனத்துக்கு ஒரு பங்களிப்பு – பக்கம் – 19)

இரண்டு சரக்குகளின் பயன்மதிப்பு வேறுபட்டிருந்தாலும் குறிப்பிட்ட அளவுக்குப் பரிமாறப்படுகிறது என்றால் எதனடிப்படையில் என்பதையே இந்தப் பரிவர்த்தனை மதிப்பு சுட்டிக்காட்டுகிறது. அது உழைப்பு ஆகும். இந்த உழைப்பை எந்த வகையில் பொதுமைப்படுத்திப் பார்க்கப்படுகிறது என்பதைத் தொடர்ந்து விவரிக்கிறார்.

“பயன் மதிப்புகள் வாழ்க்கைக்குரிய சாதனங்களாக நேரடியாகப் பயன் படுகின்றன. ஆனால், மறு புறத்தில் இந்த வாழ்க்கைக்குரிய சாதனங்களே சமூக நடவடிக்கையின் உற்பத்திப் பொருள்கள், செலவழிக்கப்பட்ட மனித சக்தியின் விளைவு, பொருள் வடிவத்திலுள்ள உழைப்பு. சமூக உழைப்பின் பொருள் வடிவம் என்ற முறையில், எல்லாச் சரக்குகளுமே ஒரே பொருளின் நிலையான உருவங்களாகும். இந்தப் பொருளின், அதாவது பரிவர்த்தனை மதிப்பில் அடங்கியிருக்கும். உழைப்பின் தனியான தன்மையை இப்பொழுது ஆராய வேண்டும். ”
(அரசியல் பொருளாதார விமர்சனத்துக்கு ஒரு பங்களிப்பு – பக்கம் – 20)

பரிவர்த்தனை மதிப்பில் அடங்கியிருக்கும் உழைப்பை புரிந்து கொள்வதற்கு, “சமூக நடவடிக்கையின் உற்பத்திப் பொருள்கள், செலவழிக்கப்பட்ட மனித சக்தியின் விளைவு, பொருள் வடிவத்திலுள்ள உழைப்பு. சமூக உழைப்பின் பொருள் வடிவம்” என்று மார்க்ஸ் எதனைக் குறிப்பிடுகிறார் என்பதைத் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது. மேலும் கூறுகிறார், ஒரே மாதிரியான உழைப்பின் சமமான அளவுகளைப் பிரதிநிதித்துவப் படுத்துகின்றன. அவற்றில் ஒரே மாதிரியாகப் பொருண்மைப்படுத்தப்பட்டிருக்கும் உழைப்பு ஒரே சீரான. ஒரே தன்மையான, சாதாரண உழைப்பாக இருக்க வேண்டும்.

“ஓர் அவுன்ஸ் தங்கம், ஒரு டன் இரும்பு, ஒரு குவார்ட்டர் கோதுமை, இருபது கஜம் பட்டுத் துணி ஆகியவை சம அளவிலிருக்கும் பரிவர்த்தனை மதிப்புகள் என்று வைத்துக் கொள்வோம். பரிவர்த்தனை மதிப்புகள் என்ற முறையில் அவற்றுக்கிடையே பயன் மதிப்புகளில் உள்ள குண ரீதியான வேறுபாடுகளை நீக்கிவிடுவதால், அவை ஒரே மாதிரியான உழைப்பின் சமமான அளவுகளைப் பிரதிநிதித்துவப் படுத்துகின்றன. அவற்றில் ஒரே மாதிரியாகப் பொருண்மைப்படுத்தப்பட்டிருக்கும் உழைப்பு ஒரே சீரான. ஒரே தன்மையான, சாதாரண உழைப்பாக இருக்க வேண்டும். இது தங்கம், இரும்பு, கோதுமை, பட்டுத் துணி ஆகிய பொருள்களில் எதில் அடங்கியிருக்கிறதென்பது முக்கியமல்ல;.”
(அரசியல் பொருளாதார விமர்சனத்துக்கு ஒரு பங்களிப்பு – பக்கம் – 20)

மார்க்ஸ் அடுத்து, பயன்மதிப்புப் பரிவர்த்தனை மதிப்பு ஆகியவற்றை ஒப்பிட்டுக் காட்டுகிறார். வெவ்வேறு நபர்களின் செயல்களினால் பயன்மதிப்பு விளைகிறது. ஆனால் பரிவர்த்தனை மதிப்பு, தொழிலாளர்களின் தனிப்பட்ட தன்மைகள் முற்றிலும் நீக்கப்பட்ட ஒரு சீரான உழைப்பைக் குறிப்பிடப்படுகிறது. இதனையே சூக்குமமான பொது உழைப்பு என்கிறார்.

“பயன் மதிப்புகள் அடங்கியிருக்கும் குறிப்பிட்ட பொருள் பரிவர்த்தனை மதிப்பை உருவாக்கும் உழைப்புக்குச் சம்பந்தமற்றது என்பதால் இந்த உழைப்பின் குறிப்பிட்ட வடிவமும் அதைப் போலவே சம்பந்தமில்லாததாகும். மேலும் வெவ்வேறான பயன் மதிப்புகள் வெவ்வேறான நபர்களின் செயல்களினால் விளையும் பொருள்களாகும்; எனவே அவை தனித்தனியே வெவ்வேறு வகையான உழைப்புக்களின் விளைவாகும். ஆனால் பரிவர்த்தனை மதிப்புகள் என்ற முறையில் அவை அதே ஒரு சீரான உழைப்பை, அதாவது தொழிலாளர்களின் தனிப்பட்ட தன்மைகள் முற்றிலும் நீக்கப்பட்ட உழைப்பைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்றன. எனவே பரிவர்த்தனை மதிப்பை உருவாக்குகிற உழைப்பு சூக்குமமான பொது உழைப்பாகும்.
(அரசியல் பொருளாதார விமர்சனத்துக்கு ஒரு பங்களிப்பு – பக்கம் – 21)

பொது உழைப்பு என்று கூறியவுடன், குறிப்பிட்ட சரக்கில் செலுத்தப்பட்ட பலருடைய உழைப்பு என்ற சிலர் கருதிவிடுகின்றனர். இது மார்க்சுக்கு முன்பான அரசியல் பொருளாதார அறிஞர்களின் முடிவுகளோடு ஒத்துப் போகிறது. இது பற்றி இதே நூலின் அடுத்தப் பிரிவின் (சரக்குகளின் பகுப்பாய்வு பற்றிய வரலாற்றுக் குறிப்புகள்) தொடக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

“படைப்பு சக்தி இயற்கைக் கூறுகளைச் சார்ந்திருப்பது பற்றித் தன்னை ஏமாற்றிக் கொள்ளாமல் பெட்டி பயன்மதிப்பை உழைப்பு என்று வகைப்படுத்துகிறார். உடனே அவர் ஸ்தூலமான உழைப்பை உழைப்புப் பிரிவினை என்ற அதன் முழுமையான சமூகத் தன்மையில் பார்க்கிறார்…..
..
பொருட்செல்வத்தின் பிறப்பிடம் உழைப்பு என்பதை ஒருவர் அங்கீகரித்தாலும்கூடப் பரிவர்த்தனை மதிப்பின் பிறப்பிடமாக உழைப்பு இருக்கக் கூடிய தனிவகையான சமூக வடிவத்தைத் தவறாகப் புரிந்து கொள்வதும் சாத்தியமே என்பதற்கு அவர் ஒரு குறிப்பிடத்தக்க உதாரணமாகும்”
(அரசியல் பொருளாதார விமர்சனத்துக்கு ஒரு பங்களிப்பு - 59-63)

பெட்டி பற்றிய அடிக்குறிப்பில்:-
“பெட்டி உழைப்புப் பிரிவினையையும் ஒரு உற்பத்தி சக்தியாகவே கருதுகிறார், ஆடம் ஸ்மித்தைக் காட்டிலும் இன்னும் உயர்வான அளவில் இப்படிக் கருதுகிறார்… …அவர் உழைப்புப் பிரிவினை மூலம் உற்பத்திக்கு ஏற்படும் சாதகங்களை ஒரு கைக்கடிகாரம் தயாரிப்பதை உதாரணமாகக் கொண்டு – ஆடம் ஸ்மித் பிற்காலத்தில் குண்டூசி தயாரிப்பை உதாரணமாகக் காட்டியது போல – காட்டுவதோடு, ஒரு நகரத்தையும் ஒரு தேசத்தையுமே பெரிய அளவு தொழில் நிறுவனங்களாக எடுத்துக கொண்டு விளக்கிக்கூறுகிறார்.” (அரசியல் பொருளாதார விமர்சனத்துக்கு ஒரு பங்களிப்பு பக்கம் 59-60)

பரிவர்த்தனை மதிப்பை உருவாக்கும் உழைப்பு பிரத்யேகமான சமூக உழைப்பாகும் என்று மார்க்ஸ் கூறியதை பெட்டி போன்றே இன்றும் சிலர் ஒரு குறிப்பிட்ட சரக்கில் இடம்பெறுகின்ற சமூக உழைப்பாகப் புரிந்து கொள்கின்றனர். மார்க்ஸ் தொடர்ந்து விளக்குவதைக் காணும் போது இது தவறு என்பதை அறிந்து கொள்ளலாம்.

பல்வேறு பொருட்களிடையே உள்ள மதிப்பை சமப்படுத்துவது, அவற்றில் அடங்கியிருக்கும் பொதுவான மனித உழைப்பாகும். பல்வேறு பொருட்களிக்கு இடையில் உள்ள அளவு ரீதியான வேறுபாடுகள், அவற்றில் அடங்கியிருக்கும் உழைப்பின் அளவு ரீதியான வேறுபாடுகள் மட்டுமே என்றும், எல்லாப் சரக்குகளுமே கெட்டியாக்கப்பட்ட உழைப்பு நேரத்தின் குறிப்பிட்ட அளவுகள் மட்டும் தான் என்றும் மார்க்ஸ் தெளிவுபடுத்துகிறார்.

“வெவ்வேறு அளவுள்ள பரிவர்த்தனை மதிப்புகள் என்ற முறையில், பரிவர்த்தனை மதிப்பின் சாராம்சமான சாதாரண, ஒரே சீரான, சூக்குமமான பொது உழைப்பின் பெரிய அல்லது சிறிய பகுதிகளையும் பெரிய அல்லது சிறிய அளவுகளையும் அவை பிரதிநிதித்துவப்படுத்துகின்றன. இந்த அளவுகளைக் கணக்கிடுவது எப்படி என்ற கேள்வி இப்போது எழுகிறது. அல்லது வேறு விதமாகச் சொல்வ தென்றால் இந்த உழைப்புப் போக்கின் அளவு ரீதியான வடிவம் என்ன என்ற கேள்வி எழுகிறது. ஏனென்றால் பரிவர்த்தனை மதிப்புகள் என்ற முறையில் சரக்குகளிடம் உள்ள அளவு ரீதியான வேறுபாடுகள் அவற்றில் அடங்கியிருக்கும் உழைப்பின் அளவு ரீதியான வேறுபாடுகள் மட்டுமே, வேகம் நேரத்தைக் கொண்டு கணக்கிடப்படுவதைப் போல் உழைப்பும் உழைப்பு நேரத்தைக் கொண்டு கணக்கிடப்படுகிறது.

உழைப்பின் தன்மையை ஒரே மாதிரியானது என்று வைத்துக் கொண்டால் உழைப்பின் கால அளவில் மட்டுமே மாறுபாடுகள் சாத்தியமான வேறுபாடாகும். உழைப்பு நேரம் நேரத்தின் இயல்பான அடிப்படை அளவுகள் மூலம், அதாவது மணிகள், நாட்கள், வாரங்கள் என்று கணக்கிடப்படுகிறது. உழைப்பு நேரம் என்பது அதன் வடிவம், உள்ளடக்கம், தனித்தன்மைகள் ஆகியவற்றுக்குச் சம்பந்தமில்லாமல் பார்த்தால் அது உழைப்பு இருக்கின்ற வாழும் நிலையாகும்; அதுவே உழைப்பின் அளவு ரீதியான அம்சம் என்பதோடு அதன் உள்ளார்ந்த அளவும் அதுவே.

சரக்குகளின் பயன் மதிப்புகளில் பொருண்மைப்படுத்தப்பட்டிருக்கும் உழைப்பு நேரம் அவற்றைப் பயன் மதிப்புகளாக, அதன் மூலம் சரக்குகளாக மாற்றுகிற பொருள் என்பது மட்டுமல்லாமல் அவற்றின் மதிப்பை அளவிடுகிற துல்லியமான அளவாகும். ஒரே அளவிலுள்ள உழைப்பு நேரத்தைக் கொண்டிருக்கும் வெவ்வேறான பயன் மதிப்புகளின் பொருந்துகிற அளவுகள் சமமான வையாகும்; அதாவது ஒரே அளவில் செலவழிக்கப்பட்ட, பொருண்மைப்படுத்தப்பட்ட உழைப்பு நேரத்தைக் கொண்டிருக்கும் பயன் மதிப்புகளைப் பொருத்தமான அளவுகளில் எடுத்துக்கொண்டால் அவை எல்லாமே சம அளவிலிருப்பவை யாகும். பரிவர்த்தனை மதிப்புகள் என்று பார்க்கும் பொழுது எல்லாப் சரக்குகளுமே கெட்டியாக்கப்பட்ட உழைப்பு நேரத்தின் குறிப்பிட்ட அளவுகள் மட்டும் தான்.”
(அரசியல் பொருளாதார விமர்சனத்துக்கு ஒரு பங்களிப்பு – பக்கம் – 21-22)

ஸ்தூல உழைப்பு, சூக்கும உழைப்பு என்பது உழைப்பின் இரட்டைத் தன்மையாகும். ஸ்தூல உழைப்பு என்பது சரக்கின் வடிவத்தைக் குறிபிடுகிறது, அதாவது  2 நாற்காலி, 4 சட்டை, 1 பீரோ போன்று சுட்டுகிறது. அதாவது பயன்மதிப்புகள் எண்ணிக்கையில் குறிப்பிடப்படுகிறது. சூக்கும உழைப்புப் பரிவர்த்தனை மதிப்பைப் படைக்கிறது. பரிவர்த்தனை மதிப்புகள் சமூக வழியில் அவசியமான உழைப்பு நேரத்தைக் கொண்டு நிர்ணயிக்கப்படுகிறது.

      பரிவர்த்தனை மதிப்பில் அடங்கியிருக்கிற உழைப்பு என்பதை நிர்ணயிப்பதற்குச் சிலவற்றைப் புரிந்து கொள்ள வேண்டும் என்று மார்க்ஸ் கூறுகிறார். இந்த உழைப்பு எந்தவிதமான குணரீதியான தன்மைகள் இல்லாத உழைப்பாகும். அதாவது நாற்காலி, சட்டை, பீரோ போன்ற வடிவத்தைப் படைக்கின்ற உழைப்பாக அதைக் கொள்ளக்கூடாது. பயன் மதிப்பைத் தோதற்றுவிக்கின்ற ஸ்தூலமான உழைப்பிடம் இருந்து பரிவர்த்தனை மதிப்பைப் படைக்கிற சூக்குமமான உழைப்பு வேறுபட்ட பிரத்யேகமான சமூக உழைப்பாகும்.

  ஏன் இதனைச் சமூக உழைப்பாகக் கூறப்படுகின்றது என்றால், குறிப்பிட்ட சரக்கில் காணப்படும் சூக்குமமான உழைப்பை, சமூகத்தில் காணப்படும் வேறொரு சரக்கில் அடங்கியிருக்கும் சூக்குமமான உழைப்பைக் கொண்டு நிர்ணயிக்கப்படுகிறது. இருவேறு சரக்குகள் வெவ்வேறு வகைப்பட்டவையாக இருந்தாலும் அதில் அடங்கியிருக்கிற சூக்கும உழைப்பை, சமூக வழியில் சராசரி உழைப்பு நேரத்தைக் கொண்டு நிர்ணயிக்கப்படுகிறது. இந்தச் சூக்கும உழைப்பு ஒரு குறிப்பிட்ட சமூகத்தில் ஒரு சராசரி மனிதன் தன்னுடைய தசைகளையும் நரம்புகளையும் மூளையையும் இதரவற்றையும் குறிப்பிட்ட அளவில் பலன் தரும் முறையில் செலவிடும் உழைப்பாகும். அதனால் தான் சூக்கும உழைப்பை ஓரே தன்மையான, ஓரே சீரான உழைப்பாக வகைப்படுத்தப்படுகிறது.

“பரிவர்த்தனை மதிப்பை உழைப்பு நேரத்தின் மூலமாக நிர்ணயிப்பதைப் புரிந்து கொள்வதற்குக் கீழ்க்கண்ட அடிப்படையான கருதுகோள்கள் அவசியமாகும். உழைப்பு சாதாரண உழைப்பாக, அதாவது எத்தகைய குண ரீதியான தன்மைகளும் இல்லாத உழைப்பு என்று சொல்லக் கூடிய வகையில் வகைப்படுத்தப்படுகிறது; பரிவர்த்தனை மதிப்பை உருவாக்கும் உழைப்பு, எனவே சரக்குகளை உருவாக்கும் உழைப்பு பிரத்யேகமான சமூக உழைப்பாகும்; கடைசியாக, பயன் மதிப்புகளை உருவாக்கும் உழைப்பு என்பதை எடுத்துக் கொண்டால் பரிவர்த்தனை மதிப்புகளை உருவாக்கும் உழைப்பிலிருந்து அது தனித்திருக்கிறது.

சரக்குகளின் பரிவர்த்தனை மதிப்புகளை அவற்றில் அடங்கியிருக்கும் உழைப்பு நேரத்தின் மூலமாக அளவிடுவதற்கு வெவ்வேறு வகைகளாயிருக்கும் உழைப்பை ஒரே தன்மையான, ஒரே சீரான, சாதாரண உழைப்பாக வகைப் படுத்த வேண்டும். சுருக்கமாகச் சொல்வதென்றால் அளவில் மட்டுமே வேறுபடக் கூடிய ஒரே தன்மையும் தரமும் கொண்ட உழைப்பாக வகைப்படுத்த வேண்டும்.

இப்படி வகைப்படுத்துதல் சூக்குமப்படுத்துதலைப் போலத் தோன்றும். ஆனால் இது உற்பத்தியின் சமூக நிகழ்வில் நாள்தோறும் நடைபெறுகின்ற சூக்குமப்படுத்துதல் தான். எல்லாப் சரக்குகளையும் உழைப்பு நேரத்துக்கு மாற்றுவது எல்லா உயிர்ப் பொருள்களும் காற்றாக மாறுவதைக் காட்டிலும் அதிகமான சூக்குமம் பொருந்தியதல்ல; அதைக் காட்டிலும் குறைவான மெய்ம்மை கொண்டதுமல்ல. இவ்வாறாக நேரத்தால் அளவிடப்படுகிற உழைப்பு உண்மையாகவே வெவ்வேறு மனிதர்களின் உழைப்பாகத் தோன்றுவதில்லை; அதற்கு மாறாக உழைப்பில் ஈடுபட்டிருக்கும் வெவ்வேறான நபர்கள் இத்தகைய உழைப்பின் சாதாரண உறுப்புக்களாக மட்டுமே தோன்றுகிறார்கள்.

வேறு வார்த்தைகளில் சொல்வதென்றல் பரிவர்த்தனை மதிப்புகளில் அடங்கியிருக்கும் உழைப்பைப் பொதுவாக மனித உழைப்பு என்று குறிப்பிடலாம். பொதுவாக மனித உழைப்பு என்ற சூக்கும் வடிவம் சராசரி உழைப்பு என்ற வடிவத்தில் இருந்து வருகிறது. அது ஒரு குறிப்பிட்ட சமூகத்தில் ஒரு சராசரி மனிதன் தன்னுடைய தசைகளையும் நரம்புகளையும் மூளையையும் இதரவற்றையும் குறிப்பிட்ட அளவில் பலன் தரும் முறையில் செலவிடும் உழைப்பாகும்.”
(அரசியல் பொருளாதார விமர்சனத்துக்கு ஒரு பங்களிப்பு – பக்கம் – 22-23)

இதனைத் தொடர்ந்து மார்க்ஸ் கூறுகிறார், ஒரு சரக்கை உற்பத்தி செய்வதற்குத் தேவையான உழைப்பு நேரம் என்பது, பொதுவாக இருக்கக் கூடிய உற்பத்தி நிலைமைகளில், அதே சரக்கின் வகையில் இன்னொரு பொருளை உற்பத்தி செய்வதற்குத் தேவையான உழைப்பு நேரமாகும். அதனால் தான் சூக்கும உழைப்பை சமூக உழைப்பின் இனங்கள் என்று மார்க்ஸ் அழைக்கிறார். ஏன் என்றால் சம அளவுக்குப் பரிவர்த்தனை செய்யப்படுகின்ற பொருட்களுக்குச் சூக்கும உழைப்பு சமூகத்தின் சராசரி உழைப்பு நேரத்தைக் கொண்டு கணக்கிடப்படுகிறது. இந்தச் சம அளவு என்ற தன்மை சமூக வழிப்பட்ட சராசரி உழைப்பின் அடிப்படையில் நிர்ணயிப்பதால் தான், சூக்கும உழைப்புச் சமூகத் தன்மை பெற்றதாகக் கூறப்படுகிறது.

“உழைப்பு நேரத்தைக் கொண்டு பரிவர்த்தனை மதிப்பைக் கணக்கிடும் பொழுது, ஒரு குறிப்பிட்ட சரக்கில், உதாரணமாக ஒரு டன் இரும்பில், அது A, B என்பவர்களில் யாருடைய உழைப்பாகவும் இருந்த போதிலும், அதில் ஒரே அளவு உழைப்பு பொருண்மைப்படுத்தப்பட்டிருக்கிறது என்பதை முன்னூகிக்கிறது. அதாவது குணரீதியிலும், அளவு ரீதியிலும் சமமான பயன் மதிப்புகளை உருவாக்குவதற்கு வெவ்வேறு நபர்கள் சம அளவுள்ள உழைப்பு நேரத்தைச் செலவிடுகிறார்கள். வேறு வார்த்தைகளில் சொல்வதென்றால், ஒரு சரக்கில் அடங்கியிருக்கும் உழைப்பு நேரம் அதனை உற்பத்தி செய்வதற்குத் தேவையான உழைப்பு நேரம் என்று அனுமானிக்கப்படுகிறது; அதாவது ஒரு சரக்கை உற்பத்தி செய்வதற்குத் தேவையான உழைப்பு நேரம் என்பது, பொதுவாக இருக்கக் கூடிய உற்பத்தி நிலைமைகளில், அதே சரக்கின் வகையில் இன்னொரு பொருளை உற்பத்தி செய்வதற்குத் தேவையான உழைப்பு நேரமாகும்.

பரிவர்த்தனை மதிப்பு பற்றி மேலே கொடுக்கப்பட்ட ஆராய்ச்சியிலிருந்து, பரிவர்த்தனை மதிப்பை உருவாக்கும் உழைப்பு நிலைமைகள், உழைப்பின் சமூக இனங்கள் அல்லது சமூக உழைப்பின் இனங்கள் என்பது காணப்பெறும். இங்கே சமூகம் என்பது அதற்குரிய பொதுவான அர்த்தத்தில் கையாளப்படவில்லை; சமூகத்தின் ஒரு குறிப்பிட்ட வடிவத்தைக் குறிக்கிற தனியான அர்த்தத்தில் கையாளப்படுகிறது. ஒரே விதமான சாதாரண உழைப்பு என்பது முதலில் வெவ்வேறான தனி நபர்களின் உழைப்பு சமமானது என்பதையும் ஒரே சீரான உழைப்பாக வகைப்படுத்தப்படுவதன் மூலம் அவர்களுடைய உழைப்பு சமமான தாகவே கருதப்படுகிறது என்பதையும் உள்ளடக்கியிருக்கிறது. ஒவ்வொரு தனி நபருடைய உழைப்பும், அது பரிவர்த்தனை மதிப்பில் வெளிப்படுகிறது என்ற அளவில், இந்த சம அளவு என்ற சமூகத் தன்மையைக் கொண்டிருக்கிறது; மற்ற எல்லாத் தனி நபர்களின் உழைப்புடன் சமமாக நடத்தப்படும் அளவில் மட்டுமே அது பரிவர்த்தனை மதிப்பில் வெளிப்படுகிறது.”
(அரசியல் பொருளாதார விமர்சனத்துக்கு ஒரு பங்களிப்பு – பக்கம் – 24-25)

ஒரு சரக்கில் அடங்கியிருக்கிற பலபேருடைய உழைப்பு என்று பெட்டி போன்றோர்கள் தவறாகப் புரிந்ததை, மார்க்சைப் படித்தப்பின்பும் தொடர்பவர்கள் சிலர் இருக்கிறார்கள். மார்க்ஸ், பரிவர்த்தனை மதிப்பில் ஒரு குறிப்பிட்ட தனிநபரின் உழைப்பு நேரம், பொதுவான உழைப்பு நேரமாகப் பிரதிநிதித்துவப்படுதப்பட்டு, தனிநபருடைய உழைப்பின் பொதுத் தன்மையையே சமூகத் தன்மை என்று அழைக்கிறார். “எனவே ஒரு தனி நபரின் உழைப்பு நேரம் என்பது உண்மையில் ஒரு குறிப்பிட்ட பயன் மதிப்பை உற்பத்தி செய்வதற்கு, அதாவது ஒரு குறிப்பிட்ட தேவையைப் பூர்த்திச் செய்வதற்குச் சமூகத்துக்குத் தேவையான உழைப்பு நேரமே.”  இதற்கு மேல் நேரடியாக சொல்வதற்கு என்ன இருக்கிறது.

“மேலும், பரிவர்த்தனை மதிப்பில் ஒரு குறிப்பிட்ட தனி நபரின் உழைப்பு நேரம் பொதுவான உழைப்பு நேரம் என்று நேரடியாகவே பிரதிநிதித்துவப்படுத்தப்படுகிறது. தனி நபருடைய உழைப்பின் இத்தகைய பொதுத் தன்மை இந்த உழைப்பின் சமூகத் தன்மையாகத் தோன்றுகிறது. பரிவர்த்தனை மதிப்பில் எடுத்துரைக்கப்படும் உழைப்பு நேரம் ஒரு தனி நபரின் உழைப்பு நேரமாகும். ஆனால் இந்தத் தனி நபர், அடுத்த தனி நபரிடமிருந்தும், மற்ற எல்லாத் தனி நபர்களிடமிருந்தும் -அவர்கள் சமமான உழைப்பைச் செய்கிறார்கள் என்ற அளவில்- எத்தகைய வேறுபாடும் இல்லாதவர். எனவே ஒரு குறிப்பிட்ட சரக்கை உற்பத்தி செய்வதற்கு ஒரு நபருக்குத் தேவையான உழைப்பு நேரம் என்பது அதே சரக்கை உற்பத்தி செய்வதற்கு எந்த நபருக்கும் தேவையான அவசியமான உழைப்பு நேரமாகும். இது ஒரு தனி நபரின் உழைப்பு நேரம்; அவருடைய உழைப்பு நேரம், ஆனால் எல்லோருக்கும் பொதுவான உழைப்பு நேரம் என்ற அளவில் மட்டுமே. எனவே இது எந்தத் தனி நபருடைய உழைப்பு நேரம் என்பது அவசியமானதல்ல. எக்காலத்துக்கும் உரிய இந்த உழைப்பு நேரம், எல்லாக் காலத்துக்கும் உரிய பொருளில், எக்காலத்துக்கும் உரிய சமமதிப்பு என்ற பொருளில் வெளிப்படுகிறது. இது பொருண்மைப்படுத்தப்பட்ட உழைப்பு நேரத்தின் திட்டவட்டமான அளவாகும்.

ஒரு நபரின் நேரடியான உற்பத்தி என்ற முறையில் அதனுடைய பயன் மதிப்பு வெளிப்படுகின்ற திட்டவட்டமான வடிவம் அதற்கு முழுவதும் சம்பந்தமில்லாததாகும். பயன் மதிப்பின் வேறு எந்த வடிவமாகவும் அதை நினைத்த போது மாற்றிக்கொள்ள முடியும். அப்படி மாற்றப்படும் பொழுது யாராவது ஒரு நபரின் உற்பத்தியாகவும் அது தோன்றும். எக்காலத்துக்கும் உரிய அளவு என்ற நிலையில் மட்டுமே அது சமூக அளவைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறது. ஒரு தனி நபரின் உழைப்பு எக்காலத்துக்கும் உரிய சமமதிப்பை உற்பத்தி செய்தால் தான், அதாவது தனி நபரின் உழைப்பு நேரம் எக்காலத்துக்கும் உரிய உழைப்பு நேரத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தினால் அல்லது எக்காலத்துக்கும் உரிய உழைப்பு நேரம் தனி நபரின் உழைப்பு நேரத்தைப் பிரதி நிதித்துவப்படுத்தினாலும் தான் அது பரிவர்த்தனை மதிப்பை உற்பத்தி செய்ய முடியும்.

இதன் விளைவு பல்வேறு தனி நபர்களும் தங்களுடைய உழைப்பு நேரத்தை ஒன்றுசேர்த்து, தங்களுடைய பொதுவான விநியோகத்துக்குத் தயாராகவுள்ள உழைப்பு நேரத்தைப் பல்வேறு பயன் மதிப்புகளுக்கும் ஒதுக்கீடு செய்வது போன்றதே. எனவே ஒரு தனி நபரின் உழைப்பு நேரம் என்பது உண்மையில் ஒரு குறிப்பிட்ட பயன் மதிப்பை உற்பத்தி செய்வதற்கு, அதாவது ஒரு குறிப்பிட்ட தேவையைப் பூர்த்தி செய்வதற்கு சமூகத்துக்குத் தேவையான உழைப்பு நேரமே. ஆனால் உழைப்பின் சமூகத் தன்மை நிறுவப்படுகிற பிரத்யேகமான முறை மட்டுமே இங்கே முக்கியமானதாகும்.
      (அரசியல் பொருளாதார விமர்சனத்துக்கு ஒரு பங்களிப்பு – பக்கம் – 25-26)

மேலும் இதனை உதாரணத்தின் மூலம் மார்க்ஸ் விளக்குகிறார்:- 
உதாரணமாக, நூறு பவுண்ட் நூலில் ஒரு நூற்பவரின் உழைப்பு நேரத்தின் குறிப்பிட்ட அளவு பொருண்மைப் படுத்தப்படுகிறது. ஒரு நெசவாளியின் உற்பத்தியான நூறு கஜம் லினன் துணி அதே உழைப்பு நேரத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துவதாகக் கருதப்படுகிறது. இந்த இரண்டு பொருள்களும் எக்காலத்துக்கும் உரிய உழைப்பு நேரத்தின் சமமான அளவுகளைப் பிரதிநிதித்துவப்படுத்துவதாலும், எனவே அவை ஒரே அளவு உழைப்பு நேரத்தைக் கொண்டிருக்கிற எந்தப் பயன் மதிப்புக்கும் சம்மதிப்புடையவை என்பதாலும், அவை ஒன்றுக்கொன்று சமமானவையாகும். ஒரு நூற்பவரின் உழைப்பு நேரமும் நெசவாளியின் உழைப்பு நேரமும் எக்காலத்துக்கும் உரிய உழைப்பு நேரத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துவதாலும் அதனால் அவர்கள் இருவருடைய உற்பத்திப் பொருள்களும் எக்காலத்துக்கும் உரிய சமமதிப்புடையவை என்பதால் மட்டுமே இரண்டு தனி நபர்களுடைய உழைப்பின் சமூகத் தன்மை ஒருவருக்கொருவர் அடுத்த வருடைய உழைப்பால் பிரதிநிதித்துவப்படுத்தப்படுகிறது: அதாவது நெசவாளியின் உழைப்பு நூற்பவருக்கு அதைப் பிரதி நிதித்துவப்படுத்துகிறது; நூற்பவரின் உழைப்பு நெசவாளிக்கு அதைப் பிரதிநிதித்துவப்படுத்து கிறது.”
      (அரசியல் பொருளாதார விமர்சனத்துக்கு ஒரு பங்களிப்பு – பக்கம் – 26-27)

      இந்த உதாரணத்தில் நூற்பாளர், நெசவாளர் ஆகிய இரண்டு தனி நபர்களின் ஒப்பிடப்படும் உழைப்பையே சமூகத் தன்மை பெற்றதாக மார்க்ஸ் கூறியுள்ளார். இதனையே மார்க்ஸ் “மூலதனம்” முதல் தொகுதியின் ஏழாம் பக்கத்தில் தொகுத்தளித்துள்ளார்.

“எந்தப் சரக்கினது மதிப்பின் பருமனையும் நிர்ணயிப்பது சமுதாய வழியில் அவசியமான உழைப்பின் அளவே, அதாவது அதன் உற்பத்திக்கு சமுதாய வழியில் அவசியமான உழைப்பு நேரமே என்பதைப் பார்க்கிறோம். இது தொடர்பாக, ஒவ்வொரு தனிச் சரக்கும் அதன் வகையில் ஒரு சராசரி மாதிரியாகவே கருதப்பட வேண்டும். எனவே, உழைப்பின் சம அளவுகள் உருக்கொண்ட அல்லது ஒரே அளவு நேரத்தில் உற்பத்தி செய்யக் கூடிய சரக்குகள் ஒரே மதிப்பையே பெற்றுள்ளன. ஒரு சரக்கின் உற்பத்திக்கு அவசியமான உழைப்பு நேரத்திற்கும் வேறொரு சரக்கின் உற்பத்திக்கு அவசியமான உழைப்பு நேரத்திற்குமுள்ள விகிதமே முன்னதன் மதிப்புக்கும் பின்னதன் மதிப்புக்குமுள்ள விகிதமாகும்.”
(மூலதனம் - முதல் தொகுதி - பக்கம்-65) 

பரிவர்த்தனை மதிப்பைப் படைக்கிற சூக்கும உழைப்பை, ஒரு சரக்கின் உற்பத்திக்கும் மற்றொரு சரக்கின் உற்பத்திக்கும் ஆகிய சமூகவழியில் அவசியமான உழைப்பு நேரத்தைக் கொண்டே நிர்ணயிக்கப்படுகிறது என்பது தெளிவாகிறது.

சரக்கின் இரட்டைத் தன்மையையும், உழைப்பின் இரட்டைத் தன்மையையும் சாரியாகப் புரிந்தால் தான் மார்க்சிய அரசியல் பொருளாதாரம் எளிதாகவும் சரியாகவும் புரிந்து கொள்ள முடியும்.

“எடுத்த எடுப்பில் சரக்கானது இரு விஷயங்களின்-பயன்-மதிப்பு, (use-value) பரிவர்த்தனை-மதிப்பு (exchange-value) இவற்றின்-பின்னலாக நம்மிடம் தன்னைக் காட்டிக் கொண்டது. அதே இரட்டை இயல்பை (two-fold nature) உழைப்பும் பெற்றிக்கிறது..

ஏனென்றால் பயன்-மதிப்புகளின் படைப்பாளி என்ற முறையில் அதற்குள்ள சிறப்பியல்புகள் வேறு, மதிப்பு வாயிலாகத் தெரிவிக்கப் பெறுகிறது என்ற அளவில் அதற்குள்ள சிறப்பியல்புகள் வேறு. சரக்குகளில் அடங்கிய உழைப்பின் இந்த இரட்டை இயல்பை முதல் முதல் சுட்டிக் காட்டியதும் விமர்சன வழியில் ஆராய்ந்ததும் நானே. அரசியல் பொருளாதாரத்திலான தெள்ளிய ஞானத்துக்கு அச்சாணியாகத் திகழ்வது இதுவே...
(மூலதனம் முதல் தொகுதி - பக்கம் 67)

மார்க்சின் கண்டுபிடிப்பின்படி ஒரு தொழிலாளியின் உழைப்பு இரண்டு தன்மைகளைக் கொண்டுள்ளது. ஒரு சரக்கைப் படைக்கும் போது அச் சரக்கின் பயன்தன்மையை தோற்றுவிப்பது ஸ்தூலமான உழைப்பாகும். இந்த உழைப்பே சரக்கின் பயன்மதிப்பைப் படைக்கிறது.

ஒரு சரக்கில் காணப்படும் பயன்தன்மையை எடுத்துவிட்டுப் பார்க்கும் போது, அச் சரக்கு மனித உழைப்புச் சக்தியின் செலவீடே அன்றி வேறல்ல என்பதைக் காணலாம். நெசவு, தையல் என்பது பண்பு வழியில் வேறுவகைப்பட்ட உற்பத்தி நடவடிக்கள் என்ற போதிலும், அவை ஒவ்வொன்றிலும் மனிதனின் பொதுவான உழைப்பே செலவிடப்பட்டுள்ளது என்பதை உணர முடியும். இந்த பொதுவான உழைப்பு என்பது நெசவாளியின் மூளை, நரம்பு, தசை போன்ற மனித சக்திகளே ஆகும். அதே போல் தையல் உழைப்பாளியின் மூளை, நரம்பு, தசை போன்ற மனித சக்திகளே ஆகும். இதனையே சூக்கும உழைப்பு என்று அழைக்கப்படுகிறது. இந்த சூக்கும உழைப்பே பரிவர்த்தனை மதிப்பைப் படைக்கிறது. இந்த அடிப்படைப் புரிதல் அரசியல் பொருளாதாரத்திலான தெள்ளிய ஞானத்துக்கு உதவிடும்.

“உடலியல் நோக்கில் பேசுவதானால், ஒரு புறம், உழைப்பு அனைத்தும் மனித உழைப்புச் சக்தியின் செலவீடே; முழுதொத்த ஸ்தூலமற்ற மனித உழைப்பு என்ற தன்மையில் அது சரக்குகளின் மதிப்பைப் படைக்கிறது, அம்மதிப்பாக அமைகிறது. மறு புறம், உழைப்பு அனைத்தும் ஒரு விசேஷமான வடிவத்திலும், ஒரு திட்ட மான நோக்கத்துடனும் மனித உழைப்புச் சக்தியைச் செலவிடுதலே ஆகும்; ஸ்தூலமான பயனுள்ள உழைப்பு என்ற இந்தத் தன்மையில் அது பயன் - மதிப்புகளை உற்பத்தி செய்கிறது.”  
(மூலதனம் முதல் தொகுதி பக்கம்-74)

இந்த அடிப்படைப் புரிதல் “மூலதனம்” நூலை புரிந்து கொள்வதற்கு அடித்தளமாகும்.


No comments:

Post a Comment