Tuesday 6 March 2018

உழைப்பின் இரட்டைத் தன்மை – எஸ்.இல்யீன், அ.மொத்திலோவ்


“பண்டத்திற்கு பயன் மதிப்பும், மதிப்பும் உண்டு என்பதைப் பார்த்தோம். எனவே பண்டத்தில் உள்ளடங்கியுள்ள உழைப்பிற்கும் இரட்டைத் தன்மை உண்டு.

பல்வேறு விதமான உழைப்பின் பயனாய் சமுதாயத்தில் பல்வேறு விதமான பயன் மதிப்புகள் தோற்றுவிக்கப் படுகின்றன. ஒவ்வொரு பயன் மதிப்பிலும் குறிப்பிட்ட வகையான உழைப்பு உள்ளது. உதாரணமாக, தானியத்தில் விவசாயியின் உழைப்பும் ஆடையில் தையற்காரனின் உழைப்பும் எஃகில் உலோகத் தொழிலாளியின் உழைப்பும் உள்ளது. ஸ்தூலமான உழைப்பு பண்டத்தின் குறிப்பிட்ட பயன் மதிப்பைத் தோற்றுவிக்கிறது.

வெவ்வேறான பண்டங்களை (உதாரணமாக, தானியத்தையும், ஆடையையும்) பரிவர்த்தனை செய்யும் போது இப்பண்டங்களைத் தோற்றுவித்த ஸ்தூலமான உழைப்பிற்கு இடையிலான வேறுபாடுகள் ஒரு புறமாக தள்ளி வைக்கப்படுகின்றன. இங்கே தானியமும் ஆடையும் மனிதனின் தசை மற்றும் மூளைச் சக்திகள் செலவிடப்பட்டதால் கிடைத்த விளைபொருட்களாக, பொதுவான உழைப்பின் (இது அளவு ரீதியாக மட்டுமே பிரித்துப் பார்க்கப்படுகிறதே தவிர பண்பு ரீதியாக அல்ல) விளைபொருட்களாகத் திகழ்கின்றன. இப்படி ஸ்தூலமான உழைப்பைச் சாராத பொதுவான உழைப்பு சூக்குமமான உழைப்பு எனப்படுகிறது. இதுதான் பண்டத்தின் மதிப்பைத் தோற்றுவிக்கிறது.

இவ்வாறாக, ஒரு புறம் உழைப்பு என்பது பயன் மதிப்பைத் தோற்றுவிக்கும் ஸ்தூலமான உழைப்பாகும், மறு புறம், இது பண்ட உற்பத்தியாளனின் உழைப்பு, பொதுவான, சூக்குமமான உழைப்பு: சமூக உழைப்பு முழுவதன் அங்கமாகத் திகழும் இது இந்த வகையில் பண்டத்தின் மதிப்பைத் தோற்றுவிக்கிறது,

இதுவரை கூறியவற்றைத் தொகுத்துப் பார்த்தால், பண்டத்தின் மதிப்பு என்பது பண்டத்தின் உற்பத்திக்காகச் செலவிடப்பட்ட, பண்டத்தில் அடங்கியுள்ள சூக்கும்மான, சமூக ரீதியாக அவசியமான உழைப்பு எனும் முடிவிற்கு வரலாம்.
பண்ட உற்பத்தியாளனின் உழைப்பிற்கு இரண்டு பக்கங்கள் உள்ளன எனலாம். அதாவது இது ஒரே நேரத்தில் ஸ்தூலமான உழைப்பாயும் சூக்குமமான உழைப்பாயும் உள்ளது.

உழைப்பின் இரட்டைத் தன்மையை கா.மார்க்ஸ் முதன்முறையாகக் கண்டுபிடித்தார். முதலாளித்துவ உற்பத்தியின் சாரம் மற்றும் இதன் வளர்ச்சி நியதிகளை வெளிப்படுத்துவதில் இது பெரும் முக்கியத்துவம் வாய்ந்ததாக விளங்கியது. உழைப்பின் இரட்டைத் தன்மையைப் பற்றிய போதனைதான் “உண்மைகளை முழுமையாகப் புரிந்து கொள்வதன் அடிப்படை” என்று கா.மார்க்ஸ் கருதினார்.
(அரசியல் பொருளாதாரம் என்றால் என்ன?
முன்னேற்றப் பதிப்பகம்- மாஸ்கோ -பக்கம்-209 - 211)


No comments:

Post a Comment