“பண்டம் என்பது, முதன் முதலாக மனிதத் தேவையை நிறைவாக்குகிற ஒரு பொருளாகும். இரண்டாவதாக, அது இன்னொரு பொருளுடன் பரிமாற்றம் செய்து கொள்ளக் கூடிய பொருளாகும். ஒரு பொருளின் பயனுடைமை அதை பயன் மதிப்பு ஆக்குகிறது. பரிமாற்ற மதிப்பு என்பது (அல்லது, வெறுமே மதிப்பு என்றே குறிப்பிடலாம்) முதலில் ஒரு வகைப்பட்ட குறிப்பிட்ட அளவிலான பயன் மதிப்புகளை மற்றொரு வகைப்பட்ட குறிப்பிட்ட அளவிலான பயன் மதிப்புகளுடன் பரிமாற்றம் செய்து கொள்ளப்படும் அளவு வீதம் அல்லது விகிதமாகவும் தென்படுகிறது. இப்படிப்பட்ட கோடானு கோடியான பரிமாற்றங்கள், எல்லா வகையான பயன் மதிப்புகளை, முற்றிலும் வேறு வேறானவையும் ஒப்பிடவே முடியாதவையுமான பயன் மதிப்புகளைக் கூட, ஒன்றுடன் ஒன்று எப்போதும் சமப்படுத்திய வண்ணமாயிருக்கின்றன என்பதை அன்றாட அனுபவம் நமக்குக் காட்டு கிறது.
இனி, பலவகைகளைச் சேர்ந்த பொருட்களுக்கு, சமுதாய உறவுகளின் ஒரு குறிப்பிட்ட அமைப்பு முறையில் ஒன்றோடொன்று எப்போதும் சமப்படுத்தப்பட்டு வரும் இந்தப் பொருட்களுக்குப் பொதுவாயுள்ள அம்சம் எது? அவற்றின் பொது அம்சம் என்னவென்றால் அவை எல்லாம் உழைப்பின் உற்பத்திப் பொருட்களாக இருப்பதுதான்.
உற்பத்திப் பொருட்களைப் பரிமாற்றம் செய்து கொள்ளும் போது உழைப்பின் பல்வேறு வகைகளை மக்கள் ஒன்றோடொன்று சமப்படுத்துகிறார்கள். பண்ட உற்பத்தி என்பது சமுதாய உறவுகளின் அமைப்பு முறை; அந்த அமைப்பு முறையில் தனித்தனி உற்பத்தியாளர்கள் பலவகைப்பட்ட உற்பத்திப் பொருட்களைச் செய்கிறார்கள் (சமுதாய வழியிலான உழைப்புப் பிரிவினை); அந்த அமைப்பு முறையில் இந்த உற்பத்திப் பொருட்களெல்லாம் பரிமாற்றம் மூலமாக ஒன்றோடொன்று சமப்படுத்தப்படுகின்றன. ஆகவே, எல்லாப் பண்டங்களுக்கும் பொதுவாயுள்ள அம்சம் ஒரு திட்டவட்டமான உற்பத்தித் துறையைச் சேர்ந்த ஸ்தூலமான உழைப்பு அல்ல; ஒரு குறிப்பிட்ட வகையைச் சேர்ந்த உழைப்பு அல்ல; ஆனால் அவற்றிற்குப் பொதுவாயுள்ள அம்சம் சூட்சுமமான மனித உழைப்புத்தான், அதாவது, பொதுப்படையான மனித உழைப்புத்தான்.
ஒரு குறிப்பிட்ட அனைத்துப் பண்டங்களின் மதிப்புகளின் கூட்டு மொத்தத்தில் உருவமைந்துள்ள சமுதாயத்தின் உழைப்புச் சக்தி முழுவதும் ஒரே மனித உழைப்புச் சக்திதான். கோடிக் கணக்கிலே நடைபெறும் பரிமாற்ற நடவடிக்கைகள் இதை நிரூபிக்கின்றன. ஆகவே, ஒவ்வொரு குறிப்பிட்ட பண்டமும், சமுதாய வழியில் அவசியமான உழைப்பு நேரத்தில் ஒரு குறிப்பிட்ட பங்கைத்தான் பிரதிநிதித்துவப்படுத்துகிறது. குறிப்பிட்ட பயன் மதிப்புள்ள ஒரு குறிப்பிட்ட பண்டத்தை உற்பத்தி செய்வதற்குச் சமுதாய வழியில் அவசியமான உழைப்பின் அளவைக் கொண்டுதான், சமுதாய வழியில் அவசியமான உழைப்பு நேரத்தின் அளவைக் கொண் டுதான், அம்மதிப்பின் அளவு நிர்ணயிக்கப்படுகிறது.”
(காரல்
மார்க்ஸ் (மார்க்சியத்தைப் பற்றிய விரிவுரையுடன்
அமைந்த
வாழ்க்கை வரலாற்றுச் சுருக்கம்))
No comments:
Post a Comment