Tuesday 4 September 2012

6. தத்துவம்


தத்துவம் என்பது பற்றி மக்களிடம் பலதரப்பட்ட கருத்து நிலவுகிறது. தத்துவம் என்பது ஓய்வு பெற்ற, குடும்ப பொறுப்புகளை முடித்தவர்கள் அறிந்து கொள்ள வேண்டியதுமேட்டுகுடியினரால் மட்டுமே அறிந்து கொள்ளக் கூடியது, புரிந்து கொள்வதற்கு கடினமானது, அத்துடன் தத்துவம் வாழ்வியலுக்கு அப்பாற்பட்டது என்ற கருத்தையும்  சமூகத்தில் பார்க்க முடிகிறது.

தத்துவக் கண்ணோட்டம் இன்றி, அதாவது ஒர் உலகக் கண்ணோட்டமில்லாத ஒரு நபரையும் சமூகத்தில் பார்த்திட முடியாது என்பது தான் உண்மை. குறிப்பிட்ட  சமூகத்தில் வாழும் ஒரு நபர் நூற்றுக் கணக்கான, ஆயிரக் கணக்கான நிகழ்வுகளைக் காண்கிறார், நாட்டில் நடக்கும் நிகழ்வுகளை பற்றி தனக்கென்று சில கருத்துக்கள்உடையவராக இருக்கிறார். இதனோடு இயற்கை நிகழ்வுகளைப் பற்றியும் எண்ணிப்பார்க்காமல் அவரால் இருக்க முடியாது. இந்த உலகம் எங்கிருந்து வந்தது? மனித இனம்  இவ்வுலகில் எவ்வாறு தோன்றியது? இறப்பிற்கு பின் மக்களுக்கு ஏற்படுவது என்ன? மகிழ்ச்சி என்றால் என்ன? வாழ்க்கையின் சாரம் என்ன? இது போன்ற கேள்விகளைப்  பற்றி சிந்திக்கும் போது தன்னை அறியாமலேயே அவர் தத்துவயியலின் அடிப்படைகளைப் பற்றி சிந்திக்கிறார். இந்தக் கேள்விகளுக்கு எந்த விடையளித்த போதிலும் அதற்கு ஒரு  தத்துவயியலின் உட்பொருள் இருக்கும்இவை அவர் சார்ந்திருக்கும் வர்கத்திற்குத் தக்கப்படி அமைந்திருக்கும். இவ்வகையில் தத்துவம் சமூக வாழ்வின் பிரதிபிலிப்பகாகவே திகழ்கிறது.

இயற்கை  நிகழ்வுகள், சமூக சிந்தனை ஆகியவைகளை கட்டுப்படுத்தும் மிகப் பொதுவான விதிகளை ஆராய்கிறது தத்துவம். அதாவது இயற்கை, சமூகம், சிந்தனை இவற்றுடைய  வளர்ச்சியின் மிகப் பொதுவான விதிகளைப் பற்றிய அறிவியல் என்று தத்துவயியலைக் கூறலாம்.

உலகத்தைப் பற்றிய ஒரு பொதுக்கருத்து நமக்குத் தேவை. அதில் நடைபெறும்  நிகழ்ச்சிகளுடன், செயலற்ற முறையில் நில்லாமல், அவற்றின்  மேல் ஆதிக்கம் செலுத்துவதற்கு இந்தக் கருத்து தேவைப்படுகிறது.

வாழ்க்கையின்  பொருள் என்ன? மகிழ்ச்சி என்பது என்ன? என்ற கேள்விகளுக்கு முதலாளித்துவ சிந்தனையாளர்களும், பாட்டாளி வர்க்க சிந்தனையாளர்களும் வெவ்வேறு  பதில்களை அளிக்கின்றனர். முதலாளித்துவ சிந்தனையாளர்கள் மகிழ்ச்சி என்பது முதன்மையாகச் செல்வமேயாகும் என்கின்றனர். அதுவே வாழ்க்கையின் குறிக்கோள், அதனை எப்படியாகிலும் அடைய வேண்டும் என்று கருதுகின்றனர்பாட்டாளி வர்க்க சிந்தனையாளர்களுக்கு பாட்டாளிகள் யாருடன் சேர்ந்து உழைக்கிறார்களோ அந்தத் தொழிலாளர்களால், தங்களுக்கும் தங்களைப் போன்ற மக்களுக்கும் மகிழ்ச்சி  கிடைப்பதில், விருப்பம் உள்ளவர்களாக இருக்கிறார்கள். ஒரு புதிய மகிழ்ச்சிகரமான வாழ்வை எட்டுவதற்காகவும், உழைத்துக் கொண்டிருக்கும் தங்களுக்கும், தங்களைப் போன்ற மக்களுக்கும் பயன்படும்படியாக வாழ  வேண்டும் என்பதிலும், இதற்காக நடத்தும் போராட்டத்திலும், அவர்களது மகிழ்ச்சி அடங்கியிருக்கிறது.

இவ்வாறாக தத்துவம் சிந்தனைக்கு இரண்டு அணுகுமுறைகள் இருப்பதை, அதாவது முதலாளித்துவ கண்ணோட்டம், பாட்டாளி வர்க்க கண்ணோட்டம் இருப்பதை அறிந்து  கொள்ள முடிகிறது. வர்க்கம் தோன்றியது முதல், கண்ணோட்டங்கள் தனித்தனியாக செயல்படுகிறது. பண்டைய பொதுவுடைமை சமூகத்தின் சிதையிலிருந்துஅதாவது ஏட்டிலேறிய வரலாற்றிலிருந்து தத்துவக் கண்ணோட்டமும்  பிரிவுப்பட்டே காணப்படுகிறது.

சமூகம் பகைமைப்பட்ட வர்க்கங்களாகப் பிரிவுபட்டதிலிருந்து, எந்தப் பொதுவானதொரு உலகக் கண்ணோட்டத்தையும் காண முடியாது. ஒரு வர்க்கத்திற்கு ஒரு தத்துவயியலும்மற்றொன்றிற்கு வேறொரு தத்துவயியலுமாக இரண்டு பட்டே காணப்படுகிறது. பாட்டாளிகள், உழைக்கும் மக்கள் இவர்களது வாழ்க்கை நலன்களும், முதலாளிகளின் வாழ்க்கை நலன்களும முரணாகவும், பகையாகவும் இருக்கிறது. உலகில் நடைபெறும் நிகழ்ச்சிகளுக்கு அவர்கள் வெவ்வேறு வழிகளில் மறுவினை புரிகிறார்கள். ஒவ்வொரு வர்க்கமும் தனக்கே உரித்தான  வழியில் அவற்றைப் புரிந்து கொள்கிறது. எனவே உலகக் கண்ணோட்டத்தில், அதாவது தத்துவக் கண்ணோட்டத்தில் வேறுபடுகிறார்கள். இதை தவிர்த்து  நடுநிலையான தத்துவம் என்பது கிடையாது, அதாவது அனைத்து மக்களுக்கும், பகைமைக் கொண்டுள்ள வர்க்கம் அனைத்திற்கும் ஒரேவிதமான பொதுத் தத்துவம் என்பது இருக்க முடியாது. தத்துவம் என்பது வர்க்க சார்புடையதேயாகும்.

பொருள்முதல்வாதிகள் தங்களின் கண்ணோட்டத்தை இயற்கை, பருப்பொருள், வாழ்நிலை என புறநிலையிலிருந்து தொடங்குகிறார்கள். கருத்துமுதல்வாதிகள் துவக்கத்தை ஆன்மீகமாக, அதாவது கருத்து, சிந்தனை, சங்கல்பம் என அகநிலையிலிருந்து தொடங்குகிறார்கள்.

பொருள்முதல்வாதிகள் உலகை விளக்குவதற்கு வெளிச் சேர்க்கைகள், கற்பனை வளங்கள் போன்றவற்றின் துணையை நாடாது, உலகில் காணப்படுபவைகளிலிருந்தே தமது கண்ணோட்டத்தை அமைத்துக் கொள்கின்றனர். இதனால் தான் இதற்கு பொருள்முதல்வாதம் என்று பெயர்.

கருத்துமுதல்வாதிகள் உலகத்தின் தொடக்கத்தையும், இருப்பையும் உலகத்திற்கு அப்பால் உள்ளவற்றிலிருந்து விளக்குகிறார்கள், அதனால், சமூகத்தின் சாரத்தை அறிந்து கொள்ள முடியாமல், விடிவை சமூகத்திற்கு வெளியே தேடுகிறார்கள்.

சுரண்டுவோருக்கு கருத்துமுதல்வாதம் துணைபுரிகிறது, தொழிலாளிகளுக்கு பொருள்முதல்வாதம் உதவுகிறது.


No comments:

Post a Comment