“முதலாளித்துவப் பொருளுற்பத்தி முறை தொடக்கத்திலிருந்தே
அதற்கென்று உரித்தான இரு சிறப்பியல்புகளால் வேறுபடுத்திக் காட்டப்படுகிறது.
முதலாவது: அது உற்பத்திப் பொருள்களை
சரக்குகளாக உற்பத்தி செய்கிறது. அது சரக்குகளை உற்பத்தி செய்கிறது என்ற உண்மை அதனை
ஏனையப் பொருளுற்பத்தி முறைகளிலிருந்து வேறுபடுத்துவதில்லை; பார்க்கப் போனால், சரக்காய்
இருத்தல் என்பதுதான் முதலாளித்துவப் பொருளுற்பத்தி முறையின் உற்பத்திப் பொருட்களுக்குரிய
மேலோங்கிய சிறப்பியல்பும் நிர்ணயிக்கும் தனித்தன்மையும் ஆகும் என்ற உண்மைதான் அதனை
அவ்வாறு வேறுபடுத்துகிறது. அனைத்துக்கும் முதலாவதாக இதன் பொருள் என்னவென்றால், தொழிலாளியே
வெறும் சரக்கு விற்பவராகவும் இவ்விதம் சுதந்திரக் கூலித்தொழிலாளியாகவும் முன்னுக்கு
வருகிறார். இதனால் உழைப்பு என்பதே பொதுவாகக் கூலி உழைப்பாய்த் தோற்றமளிக்கிறது.
ஏற்கெனவே கூறப்பட்டிருப்பதை கருத்தில் கொள்வோமானால்,
மூலதனத்துக்கும் கூலி உழைப்புக்கும் இடையிலான
உறவுதான் பொருளுற்பத்தி முறையின் தன்மையனைத்தையும் நிர்ணயிக்கிறது என்பதை புதிதாக
மெய்ப்பித்துக் காட்டுவது தேவையற்றது. இந்தப் பொருள் உற்பத்தி முறையின் முதன்மைச் செயலிகளான
முதலாளியும் கூலித் தொழிலாளியும் அந்த வகையில் மூலதனம், கூலி உழைப்பு ஆகியவற்றின் உருக்கள்
தான், ஆளுருவங்கள்தான்; சமுதாயப் பொருளுற்பத்தி நிகழ் முறையில் தனியாட்கள் மீது முத்திரையிடப்படும்
திட்டவட்டமான சமூகச் சிறப்பியல்புகள்தான்; திட்டவட்டமான இந்தச் சமூக உற்பத்தி உறவுகளின்
விளை பயன்கள்தான்.
…
… …
மேலும், உற்பத்தியின் சமூகக்குணாம்சங்கள் பொருளுருவம்
பெறுவதும் உற்பத்தியின் பொருளாயத அடித்தளங்கள் ஆளுருவம் பெறுவதும் முதலாளித்துவப் பொருளுற்பத்தி
முறை அனைத்திற்கும் உரிய சிறப்பியல்பாகிய இது -சரக்கிலேயே உட்கிடக்கையாகும்: சரக்கானது
மூலதனத்தின் உற்பத்திப் பொருளாகும்போது இன்னுங்கூட அதிகமாகவே உட்கிடக்கையாகும்.
முதலாளித்துவப் பொருளுற்பத்தி முறையை வேறுபடுத்திக்
காட்டும் இரண்டாவது குணாம்சம் உபரி மதிப்பின்
உற்பத்தியே பொருளுற்பத்தியின் நேரடிக்குறியும் நிர்ணயிக்கும் நோக்கமுமாய் இருப்பதாகும்.
அடிப்படையாகப் பார்த்தால் மூலதனம் மூலதனத்தை உற்பத்தி செய்கிறது; உபரி - மதிப்பை உற்பத்தி
செய்யும் அளவுக்கே அது இவ்விதம் மூலதனத்தை உற்பத்தி செய்கிறது. ஒப்பீட்டு உபரி - மதிப்பை
பரிசீலித்தபோதும், உபரி - மதிப்பு இலாபமாக மாற்றமடைவதைப் பரிசீலித்தபோதும், முதலாளித்துவக்
காலத்திற்கே உரித்தான ஒரு பொருளுற்பத்தி முறை எப்படி இதன் அடிப்படையில் உருவாகிறது
என்று பார்த்தோம் - உழைப்பின் சமுதாய உற்பத்தித் திறன்களது வளர்ச்சியின் தனிவடிவமாய்
இருந்த போதிலும் இது மூலதனத்தின் சுயேச்சையான உற்பத்தித் திறன்களாகத் தொழிலாளியை எதிர்
நோக்குகிறது, ஆகவே தொழிலாளியின் வளர்ச்சிக்கு நேரெதிராய் நிற்கிறது.
மதிப்புக்கும் உபரி - மதிப்புக்குமான உற்பத்தி என்பது
ஒரு சரக்கை, அதாவது அதன் மதிப்பை உற்பத்தி செய்வதற்கு அவசியமான உழைப்பு நேரத்தை உள்ளபடியே
நடப்பிலிருக்கும் சமுதாயச் சராசரிக்குக் கீழானதாய்க் குறைக்கும் போக்கு ஓயாமல் செயல்பட்டு
வருவதைக் குறிக்கிறது என்று நமது பகுப்பாய்வின் போக்கில் தெளிவாக்கினோம். அடக்க விலையை
அதன் குறைந்தபட்ச அளவாகக் குறைப்பதற்கான நெருக்குதல்தான் உழைப்பின் சமுதாய உற்பத்தித்
திறனை உயர்த்துவற்கு மிகவலிய நெம்புகோல் ஆகிறது; ஆனால் உழைப்பின் உற்பத்தித்திறன் இவ்விதம்
உயர்ந்தாலும் மூலதனத்தின் உற்பத்தித்திறன் ஓயாமல் உயருவதாகத்தான் இங்கு தோற்றமளிக்கிறது.
நேரடிப் பொருளுற்பத்தி நிகழ்முறையில் மூலதனத்தின்
ஆளுருவம் என்ற முறையில் முதலாளி மேற்கொள்ளும் அதிகாரமானது, பொருளுற்பத்தியின் மேலாளர்,
ஆளுநர் என்ற பொறுப்பில் அவராற்றிடும் சமுதாயச் செயல்பாடானது அடிமைகள், பண்ணை யடிமைகள்
முதலானவர்களைக் கொண்டு நடைபெறும் பொருளுற்பத்தியின் அடிப்படையில் செலுத்தப்படும் அதிகாரத்திலிருந்து
சாராம்சத்தில் வேறுபட்டதாகும்.
…
… …
உழைப்பு கூலியுழைப்பின் வடிவிலும் உற்பத்திச் சாதனங்கள்
மூலதனத்தின் வடிவிலும் இருப்பதால் தான் - அதாவது இந்த இன்றியமையாத உற்பத்திக் காரணிகளின்
இந்தப் பிரத்தியேகமான சமூக வடிவத்தின் காரணத்தால்தான் - மதிப்பில் (உற்பத்திப் பண்டத்தில்) ஒரு பகுதி உபரி -
மதிப்பாகத் தோற்றமளிக்கிறது; இந்த உபரி - மதிப்பு இலாபமாக (வாடகையாக), முதலாளியின் ஆதாயமாக, பயன்படுத்திக் கொள்ளத் தயார்நிலையில்
அவருக்குச் சொந்தமாய் இருக்கும் கூடுதல் செல்வமாகத் தோற்றமளிக்கிறது. ஆனால் இந்த உபரி-மதிப்பு
இப்படி அவரது இலாபமாகத் தோற்றமளிப்பதால்தான், மறுவுற்பத்தியின் விரிவாக்கத்தை நோக்கமாய்க் கொண்டதும் இந்த இலாபத்தில்
ஒரு பகுதியாக அமைவதுமான கூடுதல் உற்பத்திச் சாதனங்கள் புதிய கூடுதல் மூலதனமாகத் தோற்றமளிக்கின்றன;
பொதுவாக மறுவுற்பத்தி நிகழ்முறை விரிவாவது முதலாளித்துவத் திரட்டல் நிகழ்முறையாகத்
தோற்றமளிக்கிறது.
உழைப்பு கூலி உழைப்பாக வடிவெடுப்பது இந்நிகழ்முறை
அனைத்தின் வடிவத்துக்கும் பிரத்தியேகமான பொருளுற்பத்தி முறைக்கும் தீர்மானகரமானது என்றாலும்,
மதிப்பை நிர்ணயிப்பது கூலி உழைப்பு அல்ல. மதிப்பு நிர்ணயிப்பில் பொதுவான சமுதாய உழைப்பு
நேரம் எவ்வளவு என்பதே, சமுதாயம் பொதுவாகத் தன்வசம் வைத்துள்ள உழைப்பு எவ்வளவு என்பதே
பிரச்சினையாகும். இந்த உழைப்பளவு பல்வேறு உற்பத்திப் பொருள்களாலும் ஒப்பளவில் கிரகிக்கப்படுவதாக
அதனதன் சமுதாய - முக்கியத்துவத்தை நிர்ணயிக்கிறது எனலாம். சமுதாய உழைப்பு நேரம் சரக்குகளின் மதிப்பை நிர்ணயிப்பதில் தீர்மானகரப் பங்கு
வகிப்பதன் குறிப்பிட்ட வடிவம் உழைப்பு கூலி உழைப்பாக வடிவெடுப்பதுடனும், இதற்கிணையாக
உற்பத்திச் - சாதனங்கள் மூலமாக வடிவெடுப்பதுடனும் தொடர்புடையதாகும் என்பதில் ஐயமில்லை;
ஏனென்றால் இந்த அடிப்படையில்தான் சரக்கு - உற்பத்தி பொருளுற்பத்தியின் பொது வடிவமாகிறது.
மேலும், விநியோக உறவுகள்; எனப்படுகிறவற்றையே பரிசீலித்தல்
பார்ப்போம். கூலியுழைப்பை முன் தேவையாகக் கொண்டுள்ளது, இலாபம் மூலதனத்தை முன்தேவையாக்கிக்
கொண்டுள்ளது. ஆகவே இந்தக் குறிப்பிட்ட விநியோக வடிவங்கள் உற்பத்திச் சாதனங்களின் குறிப்பிட்ட
சமூகச் சிறப்பியல்புகளையும் உற்பத்திச் செயலிகளின் குறிப்பிட்ட சமூக உறவுகளையும் முன்
தேவைகளாகக் கொண்டுள்ளன. பிரத்தியேகமான விநியோக உறவுகள் இவ்விதம் பிரத்தியேகமான வரலாற்று
வழிப்பட்ட உற்பத்தி உறவுகளின் தெரிவிப்பாகுமே தவிர வேறல்ல.
இலாபத்தை எடுத்துக் கொள்வோம்; உபரி - மதிப்பின்
இந்தப் பிரத்தியேக வடிவமானது உற்பத்திச் சாதனங்களின் புதிய படைப்பு முதலாளித்துவப்
பொருளுற்பத்தியின் வடிவத்தில் நடை பெறுவதற்கான முன்னிபந்தனை ஆகும்; அதாவது இது மறுவுற்பத்தியை
ஆளும் - உறவாகும்; மெய்யாகவே தமது இலாபமனைத்தையும் வருவாயாக நுகரமுடியும் என்பது போல்
தனியொரு முதலாளிக்குத் தோன்றிய போதிலும் நிலைமை இதுவே. எப்படியானபோதிலும் தனியொரு முதலாளி
காப்புறுதி மற்றும் சேமநிதிகள், போட்டியின் விதிகள் போன்றவற்றின் வடிவிலேயே கூட தடை
மதில்களைச் சந்திக்கிறார்; இந்தத் தடை மதில்கள் அவருக்குத் தடை போடுகின்றன, இலாபமென்பது
சொந்த முறையில் நுகரக்கூடிய உற்பத்திப் பண்டத்தின் வினியோகக் கருத்தினம் மட்டுமல்ல
என்பதை அவருக்கு நடைமுறையில் நிரூபித்துக் காட்டுகின்றன.
மேலும் முதலாளித்துவப் பொருளுற்பத்தி நிகழ்முறை
அனைத்தும் உற்பத்திப் பொருட்களின் விலைகளால் ஆளப்படுகிறது. ஆனால் ஆளும் உற்பத்தி விலைகள்
இலாபவீதத்தின் சமனமாக்கத்தாலும், இதற்கிணையாக பல்வேறு சமுதாயப் பொருளுற்பத்திக் கிளைகளிடையே
மூலதனம் வினியோகமானதாலும் ஆளப்படுகின்றன. ஆக, இலாபமென்பது இங்கே உற்பத்திப் பொருட்களின்
வினியோகத்தில் அல்லாமல் அவற்றின் உற்பத்தியிலேயே முக்கியக் காரணியாகத் தோற்ற மளிக்கிறது;
மூலதனங்களும் உழைப்பும் பல்வேறு உற்பத்திக் கிளைகளிடையிலும் வினியோகமாவதில் ஒரு காரணியாகத்
தோற்றமளிக்கிறது. இலாபம் முனைவு இலாபமாகவும் வட்டியாகவும் பிரிவது அதே வருவாயின் வினியோகமாகத்
தோற்றமளிக்கிறது. ஆனால் தற்பெருக்கமடையும் மதிப்பாக, உபரி - மதிப்பின் படைப்பாளியாக
மூலதனம் வளர்ச்சியடைவதிலிருந்தே, அதாவது நடப்பிலுள்ள பொருளுற்பத்தி நிகழ்முறையின் இந்தப்
பிரத்தியேக சமூக வடிவத்திலிருந்தே தொடக்கத்தில் இப்பிரிவினை எழுகிறது. அது கடன் - செலாவணியையும்
கடன் - செலாவணி - நிறுவனங்களையும் தனக்குள்ளிருந்தே வகுத்தமைக்கிறது. இவ்விதம் உற்பத்தி
வடிவத்தையும் வகுத்தமைக்கிறது. வட்டி போன்றவற்றில், வெளிப்படையாகத் தெரியும் வினியோக
வடிவங்கள் நிர்ணயிக்கும் உற்பத்திக் காரணிகளாக விலையில் சேருகின்றன.
…
… …
ஆக, விநியோக உறவுகள் எனப்படுகிறவை பொருளுற்பத்தி
நிகழ்முறையின் வரலாற்று வழியில் நிர்ணயமான சமூக வடிவங்களுக்கும், மனித வாழ்க்கையின்
மறுவுற்பத்தி நிகழ்முறையில் மனிதர்கள் தமக்குள் ஏற்படுத்திக் கொள்ளும் உறவுகளுக்கும்
ஏற்ப அமைகின்றன, அவற்றிலிருந்து எழுகின்றன. இந்த விநியோக உறவுகளின் வரலாற்று வழிப்பட்ட
தன்மை உற்பத்தி உறவுகளின் வரலாற்று வழிப்பட்ட தன்மையாகும்; உற்பத்தி உறவுகளின் பண்புக்
கூறுகளில் ஒன்றுதான் விநியோக உறவுகளில் குறிக்கப்படுகிறது. முதலாளித்துவ விநியோகம்
ஏனைய பொருளுற்பத்தி முறைகளில் லிருந்து எழும் விநியோக வடிவங்களிலிருந்து வேறுபடுகிறது;
ஒவ்வொரு விநியோக வடிவமும் எந்த உற்பத்தி வடிவத்திலிருந்து அது எழுகிறதோ, எந்த உற்பத்தி
வடிவத்துக்கு ஏற்ப அது அமைகிறதோ அந்த பிரத்தியேக உற்பத்தி வடிவத்துடன் சேர்ந்து மறைந்து
விடுகிறது.
விநியோக உறவுகள் மட்டுமே வரலாற்று வழிப்பட்டவை,
உற்பத்தி உறவுகள் அப்படி அல்ல என்ற கருத்தானது ஒருபுறம் முதலாளித்துவப் பொருளாதாரத்தின்
மீதான தொடக்க நிலைப்பட்ட - ஆனால் இன்னமும் அரைகுறையான - விமர்சனத்தின் பார்வையே ஆகும்.
மறுபுறம் இந்தக் கருத்து சமுதாய பொருளுற்பத்தி
நிகழ்முறையையும் சாமான்ய உழைப்பு நிகழ்முறையையும் ஒன்றோடொன்று குழம்பிக் கொள்வதையும்
இரண்டையும் ஒன்றாகக் கருதுவதையும் அடிப்படையாகக் கொண்டுள்ளது - சமான்ய உழைப்பு
நிகழ்முறை என்பது இயல்பு மீறி - தனிமைப்பட்டுள்ள ஒரு மனிதப் பிறவியாலும் கூட சமுதாயத்தின்
உதவியே இல்லாமல் செய்து முடிக்கக் கூடியதாகும். உழைப்பு நிகழ்முறையானது முழுக்க முழுக்க
மனிதனுக்கும் இயற்கைக்கும் இடையிலான நிகழ்முறையாக மட்டும் இருக்கும் அளவுக்கு அதன்
சாமான்ய அடிக்கூறுகள் சமுதாய வளர்ச்சி வடிவங்கள் அனைத்திற்கும் பொதுவானவையாக இருந்து
வருகின்றன.
ஆனால் இந் நிகழ்முறையின் பிரத்தியேக வரலாற்று வடிவம்
ஒவ்வொன்றும் அதன் பொருளாயத அடித்தளங்களையும் சமூக வடிவங்களையும் மேலும் வளர்த்தெடுக்கிறது.
குறிப்பிட்ட முதிர்ச்சிக்கட்டத்தை அடைந்துவிட்ட போதெல்லாம் பிரத்தியேகமான வரலாற்று
வடிவம் களையப்பட்டு இன்னும் உயர்ந்த வரலாற்று வடிவத்துக்கு வழிவிடுகிறது. இப்படியொரு
நெருக்கடி வந்து சேரும் தருணத்தை வெளிப்படுத்தும் அடையாளம் என்னவென்றால் ஒருபுறம் விநியோக
உறவுகளுக்கும் இவ்விதம் அவற்றுக்குரிய உற்பத்தி உறவுகளின் பிரத்தியேக வரலாற்று வடிவத்துக்கும்,
மறுபுறம் உற்பத்தி சக்திகளுக்கும் உற்பத்தித்
திறன்களுக்கும் அவற்றின் செயலிகளது வளர்ச்சிக்கும் இடையிலான முரண்பாடுகளும் பகைமைகளும்
ஆழ அகலமும் பெறுவதாகும். அடுத்து மூள்வது பொருளுற்பத்தியின் பொருளாயத வளர்ச்சிக்கும்
அதன் சமூக வடிவத்துக்கும் இடையிலொரு பூசல்"
(மூலதனம்- தொகுதி 3 – பக்கம் 1255-1262)
No comments:
Post a Comment