Monday, 7 October 2019

முதலாளித்துவ உற்பத்தி முறையில் சமூகமயமாகி விட்ட பொருளுற்பத்திக்கும் முதலாளித்துவ சுவீகரிப்புக்கும் இடையிலான முரண்பாடு தொடர்ந்து வளர்ச்சியடைதல்- எங்கெல்ஸ்


(முதலாளித்துவ உற்பத்தி முறையில் சமூகமயமாகி விட்ட பொருளுற்பத்திக்கும் முதலாளித்துவ சுவீகரிப்புக்கும் இடையிலான முரண்பாடு, முதலாளித்துவ உற்பத்தி முறையின் வளர்ச்சியோடு முரணும் முற்றுகிறது. தனிச் சொத்துடமையின் விளைவாய் ஏற்படும் இந்த முரண்பாடு பொதுச்சொத்தாகும் வரை தீராது.)

“தனிப்பட்ட உற்பத்தியாளர் தமக்குச் சொந்தமானதும், பொதுவாய்த் தாமே தயாரித்ததுமான மூலப் பொருளைக் கொண்டு தமது சொந்தக் கருவிகளை உபயோகித்து, தமது கரங்களது உழைப்பாலோ, தமது குடும்பத்தாரின் உழைப்பாலோ அதை உற்பத்தி செய்வது தான் வழக்கமாக இருந்தது. இந்த உற்பத்தியாளர் இந்தப் புதிய உற்பத்திப் பொருளைச் சுவீகரிக்கத் தேவையில்லை. இயற்கையாகவே அது முற்றிலும் அவருக்கே உரியதாகி விட்டது. ஆகவே இந்த உற்பத்திப் பொருளில் அவருக்கிருந்த உடைமை அவருடைய சொந்த உழைப்பை அடிப்படையாய்க் கொண்டிருந்தது. வெளியார் உதவி உபயோகிக்கப்பட்டிருந்த சந்தர்ப்பங்களிலும் கூட வழக்கமாய் அது அதிக முக்கியத்துவம் பெறவில்லை; கூலிக்கும் கூடுதலாகப் பிற வகையில் அதற்கு ஈடு செய்வதே வழக்கமாக இருந்தது. கில்டுகளில் வேலை பழகிக் கொண்டோரும் துணையாளர்களும் வேலை செய்தது தாமும் உரிமை பெற்ற கைவினைஞர்களாகும் பயிற்சி பெறுவதற்கே அன்றி சாப்பாட்டுடனான தங்கும் வசதி மற்றும் கூலி பெறுவதற்கோ அல்ல.

பிறகு உற்பத்தி சாதனங்களும் (மற்றும் உற்பத்தியாளர்களும்) பெரிய தொழிலகங்களிலும் பட்டறைகளிலும் குவிந்து செறிந்து மெய்யாகவே சமூகமயமான உற்பத்தி சாதனங்களாக (சமூகமயமான உற்பத்தியாளர்களாக) மாற்றமடை வது நிகழ்ந்தது. ஆனால் இந்த (சமூகமயமான உற்பத்தியாளர்களும்) உற்பத்தி சாதனங்களும் மற்றும் அவற்றின் உற்பத்திப் பொருட்களும் இந்த மாற்றத்துக்குப் பிற்பாடும் முன்பு போலவே இருப்பதாய், அதாவது தனி ஆட்களின் உற்பத்தி சாதனங்களாகவும் உற்பத்திப் பொருள்களாகவும் இருப்பதாய்க் கொள்ளப்பட்டுக் காரியங்கள் நடைபெற்றன இது காறும் உழைப்புச் சாதனங்களின் உடைமையாளர் உற்பத்திப் பொருட்களையும் தாமே சுவீகரித்துக் கொண்டிருந்தார், ஏனெனில் பொதுவாக அது அவரது உற்பத்திப் பொருளாகவே இருந்தது, ஏனையோருடைய உதவி விதிவிலக்காகவே இருந்தது.

இப்பொழுது உழைப்புச் சாதனங்களின் உடைமையாளர் உற்பத்திப் பொருள் தம்முடைய உற்பத்திப் பொருளாய் இல்லாமல் முற்றிலும் ஏனையோர் உழைப்பின் உற்பத்திப் பொருளாய் இருந்த போதிலும் அதைத் தாமே தொடர்ச்சியாகச் சுவீகரித்துக் கொண்டார். இவ்வாறாக, இப்பொழுது சமூக முறையில் உற்பத்தி செய்யப்பட்ட இந்தப் பொருட்கள், உண்மையில் உற்பத்தி சாதனங்களை இயக்கிப் பரிவர்த்தனைப் பொருட்களை உற்பத்தி செய்தோரால் சுவீகரிக்கப் படவில்லை ஆனால் முதலாளிகளால் சுவீகரிக்கப்பட்டன.

உற்பத்தி சாதனங்களும் மற்றும் பொருளுற்பத்தியும் சாராம்சத்தில் சமூகமயமாகி விட்டன. ஆயினும், தனி ஆட்களது தனியார் பொருளுற்பத்தி இருப்பது போலவும் ஆகவே இதன்படி ஒவ்வொருவரும் தமது உற்பத்திப் பொருளுக்குத் தாமே உடைமையாளராய் இருந்து அதைச் சந்தையில் விற்பனை செய்வது போலவும் அமைந்த சுவீகரிப்பு முறைக்கு இந்த உற்பத்தி சாதனங்களும் பொருளுற்பத்தியும் உட்படுத்தப்பட்டன. பொருளுற்பத்தி முறையானது இந்த சுவீகரிப்பு முறைக்கு ஆதாரமாயமைந்த நிலைமைகளை ஒழித்திட்ட போதிலும் அது இம்முறைக்கு உட்படுத்தப்படுகிறது.

புதிய பொருளுற்பத்தி முறைக்கு அதன் முதலாளித்துவத் தன்மையை அளித்திடும் இந்த முரண்பாட்டில் இன்றையச் சமூகப் பகைமைகள் முழுவதன் கரு அடங்கியிருக்கிறது. எல்லா முக்கிய உற்பத்தித் துறைகளிலும் பொருளாதாரத் துறையில் நிர்ணயமான நாடுகள் அனைத்திலும் புதிய பொருளுற்பத்தி முறை எவ்வளவுக்கெவ்வளவு ஆக்கம் பெற்றதோ தனி ஆள் பொருளுற்பத்தியை எவ்வளவுக்கெவ்வளவு சுருங்கச் செய்து அற்பசொற்பமாக்கியதோ அவ்வளவுக்கவ்வளவு, சமூகமயப் பொருளுற்பத்திக்கு முதலாளித்துவ சுவீகரிப்பு ஒவ்வாதென்பது தெளிவாய்ப் புலப்படுத்திக் காட்டப்பட்டது.

முதன் முதலில் தோன்றிய முதலாளிகள் ஏற்கெனவே நாம் கூறியது போல, (பிற உழைப்பு வடிவங்களுடன் கூடவே] கூலியுழைப்பு (சந்தையில்) தமக்குத் தயார் நிலையில் இருப்பதைக் கண்டனர். ஆனால் இது விதிவிலக்காகவும், துணைக் கூறாகவும், இரண்டாந்தரமாகவும், தற்காலியமானதுமான கூலி உழைப்பாக இருந்தது. விவசாயத் தொழிலாளி சில சமயம் நாட்கூலியாய் வேலைக்கு வந்த போதிலும் அவன் எப்படியோ ஒருவாறு பிழைப்பை நடத்துவதற்கான சில ஏக்கர் சொந்த நிலம் வைத்திருந்தான். கைவினைச் சங்க ஒழுங்கமைப்பில் இன்று சங்கத் துணைவினைஞனாக இருந்தவர் நாளை சங்கக் கைவினைஞராக முடிந்தது.

 ஆனால் உற்பத்தி சாதனங்கள் சமூகமயமாகி அவை முதலாளிகள் கைகளில் திரண்டு குவிந்ததும் இவையாவும் மாறலாயின. தனிப்பட்ட உற்பத்தியாளருடைய உற்பத்தி சாதனங்களும் மற்றும் உற்பத்திப் பொருள்களின் மதிப்பும் மேலும் மேலும் குறைந்து போயின; முதலாளியிடம் வேலை செய்யும் கூலித் தொழிலாளியாக மாறுவதைத் தவிர அவருக்கு வேறு வழி ஏதும் இல்லை. இதற்கு முன் விதிவிலக்காகவும் இரண்டாந்தரமாகவும் இருந்த கூலி உழைப்பு இப்பொழுது பொருளுற்பத்தி அனைத்தின் விதி முறையும் அடித்தளமுமாயிற்று; இதன் முன் துணைக் கூறாக இருந்த இது, இப்பொழுது தொழிலாளியின் எஞ்சி நின்ற ஒரே பணியாகி விட்டது. இடையிடையே சிறிது காலம் கூலித் தொழிலாளியாய் வேலை செய்து வந்தவர் வாழ்நாள் முழுதுக்குமே கூலித் தொழிலாளியாகி விட்டார்.

இதே காலத்தில் நிகழ்ந்த பிரபுத்துவ அமைப்பின் தகர்வாலும், பிரபுத்துவக் கோமான்களின் பணியாட்களின் குழுக்கள் கலைக்கப் பட்டதாலும், விவசாயிகள் உடைமை நீக்கம் செய்யப்பட்டுத் தமது குடும்ப நிலங்களிலிருந்து வெளியேற்றப்பட்டதாலும் இன்ன பிறவற்றாலும் இந்த நிரந்தரக் கூலித் தொழிலாளர்களின் எண்ணிக்கை மேலும் பிரம்மாண்டமாக அதிகரித்தது. ஒரு புறம் தமது கைகளில் உற்பத்தி சாதனங்கள் திரண்டு குவிந்திருந்த முதலாளிகளுக்கும், மறுபுறம் தமது உழைப்புச் சக்தி அன்றி வேறு எந்த உடைமையும் இல்லாத உற்பத்தியாளர்களுக்கும் இடையிலான பாகுபாடு முழு நிறைவாக்கப் பட்டது. சமூகமயமாகி விட்ட பொருளுற்பத்திக்கும், முதலாளித்துவச் சுவீகரிப்புக்கும் இடையிலான முரண்பாடு, பாட்டாளி வர்க்கத்துக்கும் முதலாளித்துவ வர்க்கத்துக்கும் இடையிலான பகைமையாய்த் தன்னை வெளிப்படுத்திக் கொண்டது.

தமது உற்பத்திப் பொருள்களின் பரிவர்த்தனையைத் தம்மிடையிலான சமூகப் பந்தமாய் கொண்ட பரிவர்த்தனைப் பண்ட உற்பத்தியாளர்கள், தனிப்பட்ட உற்பத்தியாளர்களின் சமுதாயத்தினுள் முதலாளித்துவப் பொருள் உற்பத்திமுறை புகுந்து தனக்குப் பாதை வகுத்துக் கொண்டதை நாம் கண்டோம். ஆனால் பரிவர்த்தனைப் பண்ட உற்பத்தியை அடிப்படையாய்க் கொண்ட ஒவ்வொரு சமுதாயத்திற்குமுரிய விசேஷ இயல்பு என்னவெனில் உற்பத்தியாளர்கள் தமது சொந்த சமூக இடையுறவுகள் மீதான கட்டுப்பாட்டை இழந்து விட்டார்கள் என்பதே. ஒவ்வொருவரும் தம்மிடம் இருக்கும் படி வாய்த்துள்ள உற்பத்தி சாதனங்களைக் கொண்டு தமக்காகவும், தமது எஞ்சிய தேவைகளை நிறைவு செய்து கொள்வதற்கு அவசியமான பரிவர்த்தனைக்காகவும் உற்பத்தி செய்கிறார்.

குறிப்பிட்ட தனது பண்டம் எந்தளவு சந்தைக்கு விற்பனைக்கு வரும், எந்தளவில் அதற்குத் தேவை இருக்கும் என்பது யாருக்கும் தெரியாது. தாம் உற்பத்தி செய்யும் பண்டத்திற்கு உள்ள படியே தேவை இருக்குமா, அவர் தமது உற்பத்திச் செலவை ஈடு செய்து கொள்ள முடியுமா என்றோ அல்லது தமது பண்டத்தை விற்க முடியப் போகிறதா என்றோ கூடயாருக்கும் தெரியாது. சமூகமயமாகி விட்ட பொருளுற்பத்தியில் அராஜகம் தலைவிரித்தாடுகிறது.

ஆயினும் பரிவர்த்தனைப் பண்ட உற்பத்தி, வேறு எந்த வகையான உற்பத்தியையும் போலவே அதற்கே உரியவையான உள்ளியல்பான விதிகளை, அதனின்று தனியே பிரிக்க முடியாத விதிகளைப் பெற்றிருக்கிறது. அராஜகத்தையும் மீறி இந்த விதிகள் அராஜகத்தினுள்ளும் அதன் வாயிலாகவும் செயல்படுகின்றன. சமூகப் பரஸ்பர உறவுகளின் விடாப்பிடியான ஒரே வடிவத்தில், அதாவது பரிவர்த்தனையில், இவ்விதிகள் தம்மை வெளிப்படுத்திக் கொள்கின்றன. இங்கு இவை போட்டியின் கட்டாய விதிகளாய்த் தனிப்பட்ட உற்பத்தியாளர்களைப் பாதிக்கின்றன.

ஆரம்பத்தில் இவை இந்த உற்பத்தியாளர்களுக்கே தெரியாத விதிகளாய் இருக்கின்றன. இவர்கள் இவற்றைச் சிறிது சிறிதாகவும் அனுபவத்தின் வாயிலாகவும் கண்டுபிடிக்க வேண்டியிருக்கிறது. ஆகவே இவை உற்பத்தியாளர்களைச் சாராது எதேச்சையாகவும் அவர்களுக்கு எதிராகவும் அவர்களது தனிவகைப் பொருளுற்பத்தி முறையின் இரக்கமற்ற இயற்கை விதிகளாய்ச் செயல்படுகின்றன. உற்பத்திப் பொருளானது உற்பத்தியாளர்களை ஆட்சி புரிகிறது.”
(டூரிங்குக்கு மறுப்பு – பக்கம் 470-474)

3 comments:

  1. Can you make this as e-book

    ReplyDelete
  2. இந்த நூல் மின் நூலாக கிடைப்பதில்லை

    ReplyDelete
  3. அலைகள் வெளியீட்டகம் இந்த நூலை வெளியிட்டுள்ளது

    ReplyDelete