Sunday, 29 November 2020

வகுப்பு 4 :- “காரல் மார்க்ஸ்” – மார்க்சின் பொருளாதாரப் போதனை (-லெனின்)

(“செங்கொடி மையம்” என்கிற வாசகர் வட்டத்தில் எடுக்கப்பட்ட வகுப்பின் குறிப்பு) 

காணொளியில் காண:
*******************************



லெனின் எழுதிய “காரல் மார்க்ஸ்” (மார்க்சியத்தைப் பற்றிய விரிவுரையுடன் அமைந்த வாழ்க்கை வரலாற்றுச் சுருக்கம்) என்ற கட்டுரையைத் தொடர்ந்து பார்த்து வருகிறோம். 

போன வகுப்பில் வரலாற்றியல் பொருள்முதல்வாதம் மற்றும் வர்க்கப் போராட்டம் ஆகிய இரண்டையும் பார்த்தோம். வாழ்நிலைதான் சிந்தனையைத் தீர்மானிக்கிறது, சிந்தனை வாழ்நிலையைத் தீர்மானிக்கவில்லை. 

வாழ்நிலை என்றால் என்ன? 

ஒவ்வொரு மனிதனும் தமது வாழ்வாதரத்துக்காக வேலை செய்யும் போது பொருளாதார உறவுகள் ஏற்படுகின்றன. இந்த உற்பத்தி உறவுகளே வாழ்நிலை எனப்படுகிறது. 

இந்த வாழ்நிலை என்கிற உற்பத்தி உறவுகளில் இருந்துதான் சிந்தனை தோன்றுகிறது, அதாவது உணர்வு தோன்றுகிறது. சிந்தனையில் இருந்து வாழ்நிலை தோன்றவில்லை. 

இதைத்தான் போன வகுப்பில் பார்த்தோம். 

இன்றைய வகுப்புக்குச் செல்வோம். “மார்க்சின் பொருளாதாரப் போதனை”யைப் பற்றி இன்று நாம் பார்க்கப் போகிறோம். 

இந்தப் பகுதியை லெனின் தொடங்கும் போது மார்க்ஸ் “மூலதனம்” நூலில் எழுதிய முன்னுரையை மேற்கோளாகக் கொடுத்துள்ளார். நவீன முதலாளித்துவச் சமூகத்தின் இயக்கத்திற்கு உரிய பொருளாதார விதியை வெளிப்படுத்திக் காட்டுவதுதான் இந்த நூலின் இறுதி நோக்கமாகும் என்று மார்க்ஸ் அதில் கூறியுள்ளார். 

அடுத்து அரசியல் பொருளாதாரம் எதை விளக்குகிறது என்பதைக் கூறுகிறார். 

குறிப்பிட்ட சமூகத்தில் காணப்படும் உற்பத்தி முறையின் தோற்றம், வளர்ச்சி, நலிவு ஆகிய கட்டங்களை ஆராய்வதே அரசியல் பொருளாதாரத்தின் பணியாகும். 

   முதலாளித்துவ உற்பத்தி முறையை மார்க்ஸ் ஆராய்கிறார். முதலாளித்துவச் சமூகத்தில் ஆட்சி செலுத்துவது சரக்குகளின் உற்பத்திதான், அதனால் மார்க்ஸ் தமது பகுப்பாய்வை “சரக்கில்” இருந்து தொடங்குகிறார். 

சரக்கு என்பது மனிதத் தேவைகளை நிறைவேற்றுகிற ஒரு பொருள். 

மனிதனின் தேவை எதுவாக வேண்டுமானலும் இருக்கலாம், பசியாக இருக்கலாம், உடையாக இருக்கலாம், இருப்பிடமாக இருக்கலாம், கேளிக்கையாகக்கூட இருக்கலாம். இது போன்ற தேவைகளை நிறைவு செய்கிற பொருள் தான் சரக்கு. 

உணவு என்னும் சரக்கு பசியைப் போக்குகிறது. சட்டை, வேட்டி என்னும் சரக்கு உடைத் தேவையைத் தீர்த்து வைக்கிறது. வீடு என்கிற சரக்கு இருப்பிடத் தேவையை நிறைவேற்றுகிறது. இவ்வாறு ஒவ்வொரு சரக்கும் மனிதனின் தேவைகளை நிறைவேற்றுகிறது. 

சரக்கு இரண்டு தன்மைகளைக் கொண்டுள்ளது, ஒன்று “பயன்மதிப்பு” மற்றொன்று “பரிவர்த்தனை மதிப்பு.” 

பயன்படாத பொருளை சரக்கு என்று சொல்ல முடியாது. பயனில்லாத பொருளை உற்பத்தி செய்தால் அதைச் சந்தையில் விற்கமுடியாது. அதனால் முதலாளி பயனுள்ள சரக்கையே உற்பத்தி செய்கிறார். 

சரக்கின் பயன்பாட்டையே பயன்பதிப்பு என்று கூறப்படுகிறது. 

சரக்கிற்குப் பயன்மதிப்பைப் போலவே இன்னொரு மதிப்பு இருக்கிறது என்று பார்த்தோம் அதுதான் பரிவர்த்தனை மதிப்பு. 

சந்தையில் பொருட்கள் சம மதிப்புக்குத்தான் பரிவர்த்தனை செய்யப்படுகின்றன. ஒரு குறிப்பிட்ட பயனுள்ள சரக்குக்கு, சம மதிப்புள்ள மற்றொரு பயனுள்ள சரக்குக்குப் பரிவர்த்தனை செய்யப்படுகிறது. 

இரண்டு சட்டைக்கு, ஒரு வேட்டி பரிவர்த்தனை செய்யப்படுகிறது. இந்தப் பரிவர்த்தனை பயன்மதிப்பைக் கொண்டு அளவிட முடியாது. அதாவது இரண்டு சரக்கின் சம மதிப்பை பயன்மதிப்பைக் கொண்டு அளந்திட முடியாது. பரிவர்த்தனை மதிப்பைக் கொண்டுதான் அளவிட முடியும், 

அப்படி என்றால் பரிவர்த்தனை மதிப்பு எவ்வாறு அளவிடப்படுகிறது? 

இரண்டு பொருட்களில் அடங்கியுள்ள உழைப்பின் அளவைக் கொண்டே பரிவர்த்தனை மதிப்பு அளக்கப்படுகிறது. 

இரு சரக்கும் உழைப்பின் உற்பத்திப் பொருளாக இருப்பதனால் தான் மதிப்பை ஒப்பிட்டுப் பரிவர்த்தனை செய்யப்படுகிறது. சமூக வழியிலான உழைப்புப் பிரிவினையின் வளர்ச்சிக் கட்டத்தில்தான் சரக்கு உற்பத்தி முழு வளர்ச்சி பெறுகிறது. 

சரக்கின் இரட்டைத் தன்மையை மேலே பார்த்தோம். சரக்கு என்பது பயன்மதிப்பு மற்றும் பரிவர்த்தனை மதிப்பு என்கிற இரண்டு தன்மைகளைக் கொண்டுள்ளது. அதே போல உழைப்பிலும் இரட்டைத் தன்மை இருக்கிறது. ஒன்று “ஸ்தூலமான உழைப்பு” மற்றது “ஸ்தூலமற்ற உழைப்பு”. 

ஒரு தச்சன் கட்டிலை செய்கிறார், ஒரு நெசவாளி துணியை நெய்கிறார் இது ஒரு ஸ்தூலமான உழைப்பாகும். ஆனால் உழைப்பில் இன்னொரு உழைப்பும் அடங்கி இருக்கிறது என்று பார்த்தோம். அது ஸ்தூலமற்ற உழைப்பு. இது ஒரு குறிப்பிட்ட வகையைச் சேர்ந்த உழைப்பு அல்ல. சூட்சுமமான மனித உழைப்பு என்பதையே ஸ்தூலமற்ற உழைப்பு என்று கூறுகிறோம். 

பொருளை உற்பத்தி செய்யும் போது மனிதனின் மூளை, தசை, நரம்பு ஆகியவற்றை இயக்கி அதன் மூலம் செலவிடப்படுகிற சக்தியே ஸ்தூலமற்ற உழைப்பு எனப்படும். 

ஸ்தூலமான உழைப்பைச் சாராது தனியே பரிசீலனை செய்திடும்போது உழைப்பு மனிதனது உழைப்புச்சக்தி என்ற நிலையில் அது ஸ்தூலமற்ற உழைப்பு எனப்படுகிறது. 

ஸ்தூலமான உழைப்புக் கட்டில், துணி என்கிற பயன்மதிப்பைப் படைக்கிறது. அனைத்துப் பொருட்களுக்கு உள்ளும் பொதுவாகக் காணப்படும் மனித உழைப்பு என்பது ஸ்தூலமற்ற உழைப்பு ஆகும். உற்பத்தி செய்யப்பட்ட சரக்குகள் அனைத்தும் சமூக வழியில் அவசியமான உழைப்பு நேரத்தின் அளவைக் கொண்டுதான் அளக்கப்படுகிறது. மதிப்புகள் என்ற முறையில் அனைத்து சரக்குகளும் கெட்டியாக்கப்பட்ட உழைப்பு நேரத்தின் திட்டவட்டமான திரள்களே என்று மார்க்ஸ் கூறுகிறார். 

ஸ்தூலமான உழைப்பு சரக்கின் பயன்மதிப்பைப் படைக்கிறது, ஸ்தூலமற்ற உழைப்புப் பரிவர்த்தனை மதிப்பைப் படைக்கிறது. 

இந்த இரட்டை தன்மையை முதன்முதலில் மார்க்ஸ்தான் கண்டு பிடித்தார். இதனைச் சரியாகப் புரிந்து கொண்டால்தான் மார்க்சின் அரசியல் பொருளாதாரத்தை முழுமையாகப் புரிந்து கொள்ள முடியும். 

அடுத்து லெனின் பணத்தைப் பற்றிப் பேசுகிறார். சரக்கு பரிவரித்தனையின் ஒரு குறிப்பிட்ட வளர்ச்சிக் கட்டத்தில் தோன்றியது. 

பணம் பல்வேறு பணிகளைச் செய்கிறது. சேர்த்து வைத்தல், கொடுப்புச் சாதனம், உலகப் பொதுப் பணம் ஆகிய வேலைகளைப் பணம் செய்கிறது. 

இதுவரை மதிப்புப் பற்றிதான் லெனின் விளக்கி வந்தார். இதற்கு அடுத்ததாக உபரி மதிப்பு பற்றி விளக்குகிறார். 

உபரி மதிப்பு 

முதலாளித்துவச் சமூகத்திற்கு முன்பு உள்ள சமூகத்தில், தமக்குத் தேவைப்படுவதையே உற்பத்தி செய்தனர். தேவை போக மீதமுள்ளதை பண்ட மாற்றாக மாற்றிக்கொள்வர். அதாவது தாம் உற்பத்தி செய்த மிகைப் பொருளை தமக்குத் தேவைப்படுகிற பிற பொருளுக்காகப் பரிவர்த்தனை செய்து கொள்வர். 

ஆனால் முதலாளித்துவச் சமூகத்தில் சரக்கு விற்பதற்காகவே உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த மாற்றத்தை கவனமாகப் புரிந்து கொள்ள வேண்டும். முதலாளித்துவ உற்பத்திக்கு முன்பு, தம்மிடம் உள்ள மிகையான உற்பத்திப் பொருளை பணத்திற்கு விற்று அந்தப் பணத்தைக் கொண்டு தேவைப்படுகிற பொருளை வாங்குவர். இதனைச் சரக்கு-பணம்-சரக்கு என்று கூறலாம். அதாவது தம்மிடம் உள்ள சரக்கை விற்று அந்தப் பணத்தைக் கொண்டு தமக்குத் தேவையான சரக்கு வாங்கப்படுகிறது. இந்தச் சரக்கு புழக்கத்தின் பொதுச் சூத்திரம் ச-ப-ச அதாவது சரக்கு-பணம்-சரக்கு ஆகும். 

ஆனால் முதலாளித்துவ உற்பத்தி முறையில், மூலதன ஆதிக்கம் தொடங்கிவிட்டது. மூலதனத்தின் பொதுச் சூத்திரம் பணம்-சரக்கு-பணம் என்கிற முறையில் நடைபெறுகிறது. ப-ச-ப என்று இதைச் சுருக்கலாம். 

முதலாளித்துவ உற்பத்தி முறையில் சரக்கு விற்பதற்காகவே உற்பத்தி செய்யப்படுகிறது என்று பார்த்தோம். பணத்தைக் கொண்டு சரக்கும், அதைக் கொண்டு பணமும் பெறப்படுகிறது. ஆனால் கூடுதலாகப் பணம் பெறப்படுகிறது. அந்தக் கூடுதலான பணம் எவ்வாறு பெறப்படுகிறது என்பதைப் பற்றி மார்க்சுக்கு முன்பாக ஆடம் ஸ்மித், ரிக்கார்டோ என்கிற பொருளாதார அறிஞர்கள் ஆராய்ந்தனர். அவ்வாறு ஆராய்ந்து அவர்கள் மதிப்பு பற்றிய உழைப்புக் கோட்பாட்டைப் படைத்தனர். 

அதாவது உழைப்பே மதிப்பைப் படைக்கிறது. இதில் உழைப்புக்கு முக்கியத்துவம் கொடுத்திருந்தாலும் பல குழறுபடிகள் இருந்தது. இந்தக் கோட்பாட்டில் பல குறைபாடுகளை மார்க்ஸ் கண்டுபிடித்து அதனை நீக்க முயற்சித்தார், அப்படிப்பட்ட முயற்சியில் கிடைத்ததுதான் உபரி மதிப்புக் கோட்பாடு. 

முதலாளித்துவ உற்பத்தி முறையில் மூலதனத்தின் பொதுச் சூத்திரம் பணம்-சரக்கு-பணம். பணத்தில் தொடங்கி இறுதியில் பணத்தில் முடிகிறது. ஆனால் அந்தப் பணம் முதலில் போட்ட பணத்தைவிடக் கூடுதலாகக் கிடைக்கிறது. 

இந்தக் கூடுதல் பணமே உபரி மதிப்பு. 

இந்தக் கூடுதல் பணம்தான் மூலதனமாக மாறுகிறது. பணமும் மூலதனமும் ஒன்றல்ல. உற்பத்தியின் ஒரு தனி வரலாற்று வழியில் நிர்ணயிக்கப்பட்ட, சமூக உற்பத்தி உறவு என்ற முறையில்தான் பணம் மூலதனமாக மாறுகிறது. 

உபரி மதிப்பு எவ்வாறு தோன்றுகிறது என்று பார்ப்போம். 

சரக்குப் புழக்கத்தில் உபரி மதிப்பு உருவாக முடியாது. ஏன் என்றால் சரக்குகள் சம அளவு மதிப்புக்குத்தான் பரிவர்த்தனை செய்யப்படுகின்றன. விலையைக் கூட்டுவதனாலும் உபரி மதிப்பு ஏற்படாது. ஏன் என்றால் வாங்குபவருக்கும் விற்பவருக்கும் இடையே பரஸ்பர நஷ்டங்களும் லாபங்களும் ஒன்றுக்கொன்று சமன் செய்துவிடும். அதாவது ஒருவரின் நஷ்டம் தான் மற்றவருக்கு லாபமாகிறது. கூடுதல் பணம் என்று கூறுவது இங்கே நிகழவில்லை. 

சரக்குகள் சம அளவுக்கே பரிவர்த்தனை செய்யப்படுகின்றன. ஆனால் ஒரு சரக்கை நுகர்கிற இயக்கப் போக்கில் மதிப்பும் கூடுதலாகப் படைக்கப்படுகிறது. 

அதுதான் மனித “உழைப்பு சக்தி”. 

மூலதனம் வைத்துள்ள முதலாளியிடம் ஒரு தொழிலாளி விற்பது உழைப்பை அல்ல. உழைப்பு சக்தியை. இது மார்க்சின் கண்டுபிடிப்பாகும். இந்தக் கண்டுபிடிப்பின் மூலம்தான் பழைய அரசியல் பொருளாதார அறிஞர்களின் குறைகள் நீக்கப்படுகின்றன. 

அதனால் இந்தப் பகுதியை மிகவும் கவனமாகப் புரிந்து கொள்ள வேண்டும். உழைப்பை விற்பதற்கும். உழைப்பு சக்தியை விற்பதற்கும் வேறுபாடு உள்ளது. ஒரு முதலாளி, தொழிலாளியின் உழைப்பு சக்திக்கே கூலி கொடுக்கிறார். 

ஒரு தொழிலாளி வாழ்வதற்கும், அவனது குடும்பம் வாழ்வதற்கும் தேவைப்படுவதே கூலியாகக் கொடுக்கப்படுகிறது. இது சமூக வழியில் அவசியமான உழைப்பு நேரத்தினால் நிர்ணயிக்கப்படுகிறது. 

நவீன உற்பத்தியில் உழைப்புச்சக்தி ஒரு சரக்காகப் பரிணாமம் பெற்றுள்ளது. சந்தையில் காணப்படும் ஏற்ற இறக்கத்திற்குச் சரக்கு உள்ளவாது போல் இந்த உழைப்பு சக்தி என்கிற சரக்கும் சந்தையின் போக்கால் ஏற்றமும் இறக்கமும் பெறுகிறது. அதனால் இன்றை நவீன உற்பத்தியில் மனிதனின் உழைப்புச்சக்தி ஒரு சரக்காகக் காணப்படுகிறது. 

உழைப்பு சக்தியை வாங்கியை முதலாளி, உழைப்பாளியின் உழைப்பை நாள் முழுதும் வேலை வாங்குவதற்கு முதலாளித்துவச் சமூகத்தில் உரிமை பெற்றவராக உள்ளார். அதனால்தான் மூலதனத்தை வைத்துள்ள முதலாளியால் உபரி மதிப்பைப் பெற முடிகிறது. வேறுவகையில் கூற வேண்டுமானால் லாபம் பெற முடிகிறது. உபரி மதிப்பு முழுமையாக லாபமாக மாறுவதில்லை. பல செலவீனங்கள் செலுத்திய பிறகுதான் லாபமாகக் கிடைக்கிறது. 

ஒரு ஆலை முதலாளி, உற்பத்தியை தொழிலாளியைக் கொண்டு மட்டும் உற்பத்தி செய்யவில்லை. அந்த முதலாளி உற்பத்திக்கு, கச்சாப் பொருளைப் பயன்டுத்துகிறார், நவீன இயந்திரங்களைப் பயன்படுத்துகிறார், இயந்திரங்களை வைப்பதற்குப் பெரிய அளவிலான தொழிற்சாலையை நிறுவிகிறார். உற்பத்தி செய்வதற்கு மின்சாரத்தைப் பயன்படுத்துகிறார், தொழிற்சாலையில் தொழிலாளியை வேலை வாங்குவதற்கும் மற்ற அலுவல் வேலைக்கும் பணியாளர்களைப் நியமித்துள்ளார். 

இவைகள் எல்லாம் மதிப்பைப் படைக்கவில்லையா? 

உழைப்பாளியின் உழைப்பு சக்தி மட்டும்தான் மதிப்பைப் படைக்கிறதா? 

என்ற கேள்வி எழுவது இயற்கையே. 

இதனை மார்க்சின் மூலதனம் பற்றிய ஆய்வு விடை கண்டுள்ளது. மார்க்ஸ் மூலதனத்தையும் இரண்டாகப் பிரிக்கிறார். ஒன்று மாறா மூலதனம் (constant capital) மற்றொன்று மாறும் மூலதனம் (variable capital). 

இயந்திரம், உழைப்புக் கருவிகள், கச்சாப் பொருட்கள், மின்சாரச் செலவுகள் ஆகியவற்றுக்கு முதலாளி பயன்படுத்தும் மூலதனத்தை மாறா மூலதனம் என்று மார்க்ஸ் கூறுகிறார். அதே நேரத்தில் உழைப்பாளியிடம் இருந்து பெற்ற உழைப்பு சக்திக்கு, முதலாளி கொடுக்கும் மூலதனத்தை மார்க்ஸ் மாறும் மூலதனம் என்று கூறுகிறார். 

மாறும் மூலதனத்திற்கும் மாறா மூலதனத்திற்கும் என்ன வேறுபாடு என்று பார்ப்போம். இதற்கு ஏன் இந்தப் பெயர் கொடுக்கப்பட்டுள்ளது என்பதை அறிந்தாலே இந்த வேறுபாட்டை எளிதில் புரிந்து கொள்ளலாம். மாறா மூலதனம் செலவிடப்பட்டதில், புதிய சரக்கில் எந்த மதிப்பும், புதியதாய்ப் படைக்கப்படுவதில்லை. 

உழைப்பாளியின் உழைப்பு சக்திக்குக் கொடுக்கப்பட்ட மாறும் மூலதனம் கொடுக்கப்பட்ட பணத்தை மீட்டுக் கொள்வதுடன், புதிய மதிப்பையும் படைக்கிறது. இதனால்தான் இது மாறும் மூலதனம் என்று பெயர் பெற்றுள்ளது. 

மாறா மூலதனம் என்ன செய்கிறது? 

மாறா மூலதனத்தால் செலவிடப்பட்ட இயந்திரம், கருவிகள், கச்சாப் பொருட்கள் போன்றவற்றின் மதிப்புப் பகுதிகள், புதிய சரக்கில் பகுதிபகுதியாக இடம் பெறுகிறதே தவிர, புதிய மதிப்பு உதையும் படைக்கவில்லை. மாறா மூலதனம் மதிப்பை படைப்பதில்லை என்பதால் மார்க்ஸ் அதனைப் பூஜ்யம் என்கிறார். 

அடுத்து தொழிலாளியால் எவ்வாறு புதிய மதிப்புப் படைக்கப்படுகிறது, அதாவது உபரி மதிப்பு எவ்வாறு தோன்றுகிறது என்பதைப் பார்ப்போம். 

ஒரு தொழிலாளியின் நாள் கூலியை வைத்து உபரி மதிப்பு கணக்கிடுவோம். 

கூலி என்றாலும் சம்பளம் என்றாலும் ஒன்று தான். மாதக் கூலி, வாரக் கூலி, நாட் கூலி ஆகிய முறைகளில் கூலி கொடுக்கப்படுகிறது. கணக்கிடுவது எளிமையாக இருக்க வேண்டும் என்பதற்காக நாம் நாட் கூலியை எடுத்துக் கொள்வோம். 

ஒரு தொழிலாளியின் உழைப்பு சக்திக்கு கொடுக்கப்படுகிற கூலி நாள் ஒன்றுக்கு 1,000/- ரூபாய் என்று வைத்துக் கொள்வோம். இந்த 1,000/- ரூபாய் தொழிலாளியின் உழைப்பு சக்திக்குக் கொடுக்கப்படுகிற கூலி ஆகும். அதாவது அந்தத் தொழிலாளி தான் இழந்த சக்தியை மீட்டுக் கொள்வதற்கும், தமது குடும்பம் வாழ்வதற்கும் தேவைப்படுகிற பொருட்களின் மதிப்பின் அளவைக் கொண்டும், உழைப்பு சக்தியின் மதிப்பாகக் கணக்கிடப்படுகிறது என்று முதலில் பார்த்தோம். இந்த மதிப்பைப் படைப்பதற்குத் தேவையான உழைப்பின் நேரம்தான் அவசியமான உழைப்பு நேரம் என்று அழைக்கப்படுகிறது. 

தொழிலாளி ஒரு நாளில் உழைக்கும் நேரத்தை 8 மணியாகக் கொள்வோம். இன்றைய நவீன இயந்திரங்களின் மூலம் நடைபெறும் உற்பத்தி முறையில் தொழிலாளிக்குத் தமக்கான பிழைப்புச் செலவை சரிக்கட்ட, அரை மணி நேரம் அல்லது ஒரு மணி நேரம் போதுமானது. இங்கே நாம் ஒரு மணி நேரம் என்று கொள்வோம். 

அதாவது தொழிலாளிக்கு அளிக்கப்படும் நாட் கூலியான 1,000/- ரூபாய் முதல் ஒரு மணி நேரத்தால் ஈடு செய்யப்படுகிறது. தொழிலாளியை வேலைக்கு அமர்த்திய முதலாளி ஒரு நாள் வேலையை வாங்க உரிமை பெற்றவராக இருக்கிறார். அதனால் தொழிலாளி மேலும் கூடுதலாக ஏழு மணி நேரம் உழைக்க வேண்டி இருக்கிறது. 

இந்த ஏழு மணிநேர உழைப்புக்கு, முதலாளி பணம் கொடுப்பதில்லை. இந்த நேரமே உபரி உழைப்பு நேரம் என்று அழைக்கப்படுகிறது, இந்த உபரி உழைப்பு நேரத்தில் உழைக்கப்பட்டதில் இருந்தே உபரி மதிப்புக் கிடைக்கிறது. 

ஒரு தொழிலாளி இந்தக் கணக்கின்படி ஒரு நாளைக்கு உழைத்துக் கொடுத்த மொத்த மதிப்பு 8,000/- ரூபாய். இதில் உழைப்பாளிக்கு கொடுக்கப்படுவது 1,000/- ரூபாய் தான், மீதி 7,000/- ரூபாய் எதுவும் செலவு செய்யாமல் முதலாளிக்குப் போய்ச் சேர்கிறது. இதுவே உபரி மதிப்பாக முதலாளிக்குக் கிடைக்கிறது. 

தொழிலாளிக்குக் கொடுக்கப்பட்ட கூலிக்கு இணையாகத் தொழிலாளி உழைப்பைத் தருவதோடு கூடுதலாக உழைப்பைச் செலுத்துவதால்தான் உபரி மதிப்புக் கிடைக்கிறது. தொழிலாளிக்குச் செலவளிக்கப்பட்ட மூலதனம் புதிய மதிப்பைப் படைப்பதனால் அது மாறும் மூலதனம் என்று பெயர் பெறுகிறது. 

இயந்திரம், உழைப்புக் கருவிகள், கச்சாப் பொருட்கள் போன்ற உற்பத்திச் சாதனங்களுக்குச் செலவிடப்பட்ட மூலதனம் மாறா மூலதனம் என்று அழைக்கப்படுகிறது. 

முன்பே கூறியது போல் இதற்குச் செலவிடப்பட்ட மூலதனம் எந்தப் புதிய மதிப்பையும் உருவாக்குவதில்லை. இந்த உற்பத்திச் சாதனங்களின் மதிப்புகளின் சில பகுதிகள் புதிய சரக்கில் மாற்றப்படுகிறது அவ்வளவுதான், கச்சாப்பொருளின் மதிப்பு புதிய சரக்கில் இடம் மாற்றப்படுகிறதே தவிர, புதிய மதிப்பை இது படைப்பதில்லை. 

மூலதனத்தின் தோற்றத்திற்கு வரலாற்று வழிப்பட்ட முன்தேவைகள் இருக்கின்றன. முதலாவதாகச் சிலநபர்களிடம் பணம் குவிந்திருக்க வேண்டும். அதே நேரத்தில் சரக்கு உற்பத்திக்குத் தேவையான உழைப்புப் பிரிவினை சமூகத்தில் ஏற்பட்டிருக்க வேண்டும். 

இரண்டாவதாகச் உழைப்பு சக்தியைத் தவிர இழப்பதற்கு வேறெதுவும் இல்லாத சுதந்திரப் பாட்டாளி வர்க்கம் இருக்க வேண்டும். தமது உழைப்பு சக்தியை விற்பதற்காக, அனைத்துக் கட்டுப்பாடுகளும் நீங்கி இருக்க வேண்டும். நிலத்தில் இருந்தும், உற்பத்திச் சாதனங்களில் இருந்தும் விடுபட்டிருக்க வேண்டும். உழைப்பு சக்தியை விற்பதைத் தவிர வேறு வழியில் பிழைப்பதற்கு வாய்ப்பு இல்லாது இருக்க வேண்டும். அப்படிப்பட்ட தொழிலாளியையே பாட்டாளி என்று அழைக்கிறோம். இது தான் தொழிலாளிக்கும் பாட்டாளிக்கும் (Proletarian) உள்ள வேறுபாடு. 

அனைவரும் தொழிலாளர்கள்தான். ஆனால் இந்தப் பாட்டாளி என்கிற ஆலைத் தொழிலாளி மற்ற தொழிலாளர்களிடம் இருந்து வேறுபடுகிறார். இதை அறிந்து கொள்ளாதவரை மார்க்சியவாதி என்றே அழைக்க முடியாது. பாட்டாளி வர்க்கம்தான் புரட்சிகரமான வர்க்கம் என்று மார்க்சியம் ஏன் கூறுகிறது என்பதைப் புரிந்து கொள்வதற்கும் இந்த வேறுபாடு அவசியம் ஆகும். 

எங்கெல்ஸ் எழுதிய “கம்யூனிசத்தின் கோட்பாடுகள்” என்ற கேள்வி பதில் பகுதியில் பாட்டாளிக்கும் தொழிலாளிக்கும் உள்ள வேறுபாடு தெளிவாக விளக்கப்பட்டுள்ளது. அதனால் கண்டிப்பாக இதனை நாம் படிக்க வேண்டும். 

உபரி மதிப்பு இரண்டு வகையில் முதலாளிக்குக் கிடைக்கிறது. 

இங்கே இதனைச் சுருக்கமாகப் பார்ப்போம். ஒன்று அறுதி உபரி மதிப்பு (Absolute Surplus-Value), மற்றொன்று ஒப்பீட்டு உபரி மதிப்பு (Relative Surplus-Value). இந்த இரண்டுக்கும் வெவ்வேறு மொழி பெயர்ப்புகள் இருக்கின்றன. Absolute Surplus-Value-வை அறுதி உபரி மதிப்பு என்றும், தனிமநிலை உபரி மதிப்பு என்றும் முழுமுதல் உபரி மதிப்பு என்றும் பலவாறு அழைக்கப்படுகிறது. அதே போல் Relative Surplus-Value-வை ஒப்பீட்டு உபரி மதிப்பு என்றும், சார்புநிலை உபரி மதிப்பு என்றும் அழைக்கப்படுகிறது. இந்த மொழியாக்கங்களைக் கண்டு பல உபரி மதிப்பு இருப்பதாகக் குழம்பிக் கொள்ளக்கூடாது. இரண்டு உபரி மதிப்புதான் இருக்கிறது. 

தொழிலாளி உழைக்கின்ற கால அளவை நீட்டிப்பதின் மூலம் முதலாளிக்குக் கிடைக்கும் உபரி மதிப்புக்கு அறுதி உபரி மதிப்பு என்று பெயர். 

அவசியமான உழைப்பு நேரத்தைக் குறைப்பதின் மூலம் முதலாளிக்குக் கிடைக்கும் உபரி மதிப்புக்கு ஒப்பீட்டு உபரி மதிப்பு என்று பெயர். 

எட்டு மணிநேரம் உழைக்கின்ற தொழிலாளியை பத்து அல்லது பன்னிரண்டு மணிநேரம் உழைக்க வைப்பதின் மூலம் கிடைக்கும் உபரி மதிப்பானது அறுதி உபரி மதிப்பு ஆகும். 

அவசியமான உழைப்பு நேரத்தைக் குறைப்பது எவ்வாறு நடைபெறுகிறது என்றால், தொழிலாளிக்கு உணவுப் பொருட்களைக் குறைவான விலைக்கு விற்பதின் மூலமும், பிற முதலாளிகளைவிட நவீன தொழில்நுட்பத்தினாலும், புதிய இயந்திரத்தைப் புகுத்துவதாலும் அவசிய உழைப்பு நேரம் குறைக்கப்படுகிறது, இந்தத் தனிப்பட்ட முதலாளிக்குக் கிடைப்பது ஒப்பீட்டு உபரி மதிப்பு ஆகும். 

அறுதி உபரி மதிப்புக்காக முதலாளி தொழிலாளியின் உழைப்பு நேரத்தைக் கூட்டும் போதெல்லாம் உழைப்பாளர்கள் போராடிய வரலாற்றை மார்க்ஸ் “மூலதனம்” நூலில் விளக்கி இருக்கிறார். வேலை நேரத்தைக் குறைப்பதற்காகத் தொழிலாளிகள் போராடி சட்டமாக்கியதை அதில் படித்து அறிந்து கொள்ளலாம். “மூலதனம்” நூலுக்குப் பிறகு வளர்ச்சி அடைந்த நாடுகளில் இதே போன்ற போராட்ட வரலாறு தொழிலாளர் இயக்கம் கண்டிருக்கிறது. கண்டும் வருகிறது. 

ஒப்பீட்டு உபரி மதிப்பு எவ்வாறு பெறப்படுகிறது என்பதை மார்க்ஸ் மூலதனம் நூலில் விளக்கி இருக்கிறார். அதை லெனின் மூன்றாக இந்தக் கட்டுரையில் தொகுத்தளிக்கிறார். 

1) சாதாரணக் கூட்டுறவு – ஒரே இடத்தில் பல தொழிலாளர்கள் ஒன்றாக உழைப்பதினால் கிடைக்கக்கூடியது. 

2) உழைப்புப் பிரிவினையும் பட்டறைத் தொழிலும். 

பட்டறைத் தொழிலில் ஒரே நபர் அனைத்து வேலையையும் செய்கிறார். ஆனால் உழைப்புப் பிரிவினையில் ஒரு குறிப்பிட்ட பொருளை பல்வேறு தொழில் பிரிவினர் பகுதிபகுதியாகச் செய்து ஒரே பொருளாக உருவாக்குகின்றனர். நவீன உற்பத்தியில் ஒரு குண்டூசி கூடப் பல்வேறு உழைப்புப் பிரிவுகளின் மூலம் தான் செய்யப்படுகிறது. 

குண்டூசி செய்வதற்கு, உலோகம் உருக்கப்படுவது, அதனைக் கம்பியாக நீட்டப்படுவது, கம்பியை வெட்டுவது, அதனைக் கூர் தீட்டுவது, தலை உருவாக்குவது இது போன்ற பல வேலைப் பிரிவுகளால் செய்யப்படும் போது, வேலை விரைவாக நடைபெறுகிறது, உற்பத்தி பன்மடங்கு பெருகுகிறது. 

3) இயந்திரங்களும் பெருவீதத் தொழிலும் ஒப்பீட்டு உபரி மதிப்பைப் படைக்கிறது. 

இதுவரை மார்க்ஸ் கூறியதை லெனின் வழியில் விரிவாகப் பார்த்தோம். ஒரே நேரத்தில் அனைத்தையும் விரிவாகப் பார்ப்பது சோர்வை ஏற்படுத்தும். லெனின் இந்தக் கட்டுரையில் அரசியல் பொருளாதாரப் பகுதியைத்தான் அதிகமாக எழுதியிருக்கிறார். அனைத்தையும் ஒரே நேரத்தில் அறிந்து கொள்வது சிரமம் என்பதை உணர்ந்து சிலவற்றைச் சொல்வதோடு இந்த வகுப்பை முடித்துக் கொள்கிறேன். 

இந்தப் பகுதியின் இறுதியில்,

முதலாளித்துவ மூலதனத் திரட்சியின் வரலாற்று வழிப்பட்ட போக்கு,

மொத்த சமூக மூலதனத்தின் மறுவுற்பத்தி,

விவசாயத்துறையில் முதலாளித்துவத்தன் பரிணாமம், 

-ஆகியவைகளை லெனின் மார்க்சின் மூலதனம் நூலின் மேற்கோள் அடிப்படையில் விளக்கி இருக்கிறார். இதனைப் பின்பொரு நாள் பார்ப்போம். இன்றைக்குச் சிலவற்றைச் சொல்வதோடு வகுப்பை முடித்துக் கொள்கிறேன். 

மார்க்சின் மூலதனம் தொகுதி ஒன்றை முழுமையாகத் தோழர் த.ஜீவானந்தம் அவர்கள் வகுப்பெடுத்துள்ளார். அதன் காணொளி தற்போது விற்பனையில் கிடைக்கிறது. இது 15 மணிநேரத்திற்கு மேல் செல்கிறது. இதனைப் பல தோழர்கள் சேர்ந்து வாங்கிக் கேட்டுப் பயன் அடையலாம். ஒவ்வொரு கம்யூனிஸ்டும் மார்க்சின் அரசியல் பொருளாதாரத்தை அறிந்து கொள்ள வேண்டியது அவசியம் ஆகும். 

மேலும் தோழர் த.ஜீவானந்தம் மார்க்சின் “மூலதனம்” மூன்று தொகுதியையும் சுருக்கமாக எழுதியுள்ளார். அது பாரதிப் புத்தகாலயத்தில் கிடைக்கிறது. மற்றும் பல தோழர்களும் அரசியல் பொருளாதாரம் பற்றி எழுதியுள்ளனர் அதனைப் படித்துப் பயனடையலாம். 

அடுத்து லெனின் மூலதனத் திரட்சியைப் பற்றிப் பேசுகிறார். இந்த அரசியல் பொருளாதாரப் பகுதி அனைத்தையும் மார்க்ஸ் எழுதிய மூலதனம் நூலின் மூன்று தொகுதியைக் கொண்டு விளக்கி உள்ளார். 

முதலாளி உற்பத்தியின் போது கிடைத்த உபரி மதிப்பில் தமது செலவுக்கும் மற்றவற்றுக்கு எடுத்துக் கொண்டது போக, மீதமுள்ள அனைத்தையும் புதிய உற்பத்திக்குப் பயன்படுத்துகின்றார். 

ஆடம் ஸ்மித் முதலாகப் பழைய செம்மை பொருளாதார அறிஞர்கள் அனைவரும் செய்த தவறை மார்க்ஸ் சுட்டிக்காட்டுகிறார். 

செம்மை பொருளாதார அறிஞர்கள், மூலதனமாக மாற்றப்படும் உபரி மதிப்பு முழுதும், மாறும் மூலதனமாகும் என்று நினைத்தனர். ஆனால் உண்மையில் உபரி மதிப்பு உற்பத்திச் சாதனங்களுக்கு ஒரு பங்கும், மாறும் மூலதனத்தற்கு மற்றொரு பங்காகவும் பிரிக்கப்படுகிறது. 

லெனின் இங்கே மார்க்சின் ஒரு கருத்தை குறிப்பிட்டு சொல்வதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

மாறும் மூலதனத்தைவிட மாறா மூலதனத்தின் பங்கு அதிக விரைவுடன் வளர்ச்சி பெறுகிற நிகழ்ச்சியானது, முதலாளித்துவத்தின் வளர்ச்சிப் போக்குக்கு மட்டும் முக்கியமானது அல்ல.  இந்த வளர்ச்சிப் போக்குதான் முதலாளித்துவம், சோஷலிசமாக மாறுவதற்கான இயக்கப் போக்கிலும் மகத்தான முக்கியத்துவம் பெறுகிறது. 

வளர்ச்சி அடைந்த முதலாளித்துவ நாடுகளில் பிரம்மாண்டமான உற்பத்திச் சாதனங்களை நாம் பார்க்கிறோம். இந்த வளர்ச்சியில் ஏற்படுகிற முரண்பாட்டினால் முதலாளித்துவம் சிக்கலுக்கு உருவாகி, தவிர்க்க முடியாமல் சோஷலிச உற்பத்தி முறைக்கு மாற வேண்டி வருகிறது. ரோபோட்டாக இருந்தாலும் சரி, மற்ற எந்த நவீன வளர்ச்சியான எந்திரமானாலும் சரி, அந்த வளர்ச்சியே சோஷலிசத்தைக் கொண்டுவருகிறது. 

தொழிலாளர்களுக்குப் பதிலாக எந்திரங்களைப் பயன்படுத்தும் போக்கு அதிகரிக்கும் போது, ஒரு இடத்தில் செல்வத்தையும் மறுகோடியில் வறுமையையும் ஏற்படுத்துகிறது. முதலாளிகளுக்கு இடையே உள்ள போட்டியினால் மிகை உற்பத்தி ஏற்படுகிறது. அதனால் பொருளாதார நெருக்கடி உண்டாகிறது. இது பத்தாண்டுகளுக்கு ஒரு முறையும், பிறகு இதைவிட நீண்ட கால இடைவெளியிலும் ஏற்படுகிறது. 

இந்தப் பொருளாதார நெருக்கடியே முதலாளித்துவத்தை வீழ்த்துவதற்கான புறநிலைக் காரணமாகும். இந்த நிலைமையைக் கணக்கில் கொண்டு புரட்சிக்குத் தயார் படுத்திய கம்யூனிஸ்ட் கட்சி, உழைக்கும் மக்களைக் கொண்டு புரட்சி செய்து சமூக மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதையே, மார்க்சின் வரலாற்றியல் பொருள்முதல்வாதமும், அரசியல் பொருளாதாரமும் நமக்குச் சொல்லித் தருகிறது. 

குறிப்பிட்ட சமூகத்தில் காணப்படும் உற்பத்தி முறையின் தோற்றம், வளர்ச்சி, நலிவு ஆகிய கட்டங்களை ஆராய்வதே அரசியல் பொருளாதாரத்தின் பணியாகும் என்று முதலில் பார்த்தோம். அதை மீண்டும் நினைவில் கொண்டு இன்றைய வகுப்பை முடித்துக் கொள்வோம். 


No comments:

Post a Comment