Friday, 18 January 2019

2) உழைப்புப் பிரிவினை எவ்வாறு வளர்ச்சி அடைந்தது? – எல்.லியான்டியாவ்


மார்க்ஸிய அரசியல் பொருளாதாரத்தின் அடிப்படைகள்
- எல்.லியான்டியாவ்
தமிழில்: தா.பாண்டியன்

விலை- ரூ.105/-

வெளியீடு:
நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்.,
41-பி, சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட்,
அம்பத்தூர், சென்னை- 6000 098.

044-26251968 – 26258410 – 2541288
*******
உழைப்புப் பிரிவினை எவ்வாறு வளர்ச்சி அடைந்தது?

சமுதாய வளர்ச்சியின் ஆரம்பக் கட்டங்களில் மனிதனது உற்பத்தித் திறன் மிகக் குறைவாக இருந்தது. கருவிகளும் புராதனமானவையாக இருந்தன. இருப்பினும் உழைப்புப் பிரிவினையின் ஆரம்ப அம்சங்கள் காணப்பட்டன. பால், வயது முதலியனவற்றிற்கேற்ப உழைப்புப் பிரிவினை அப்பொழுதிருந்தது. ஆண்கள் வேட்டையில் ஈடுபட்டார்கள். பெண்கள் உண்ணக்கூடிய கிழங்கு கீரைகளைச் சேகரித்தார்கள். குழந்தைகள் தங்கள் சக்திக்குத் தகுந்த படி உதவினார்கள்.

உற்பத்தி வளர்ச்சியடைந்த போது சமூக உழைப்புப் பிரிவினை தோன்றிற்று. மக்களின் உழைப்பு நடவடிக்கைகள் தனித்தனி வகைகளாக அல்லது பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டன. பயிர் சாகுபடி செய்வதற்கு வசதியாக உள்ள பிரதேசங்களில் குடிகள் விவசாயம் செய்ய ஆரம்பித்தார்கள், மற்ற இடங்களில் கால்நடைகள் வளர்ப்பதில்  தேர்ச்சி அடைந்தனர். கைத்தொழில்களின் தோற்றம், உழைப்புப் பிரிவினைக்கு ஒரு பலமான வேகத்தைத் தந்தது, கைத்தொழிலாளிகள் பானைகள் செய்யவும், உலோகங்களைக் கொண்டு வேலைகள் செய்யவும், ஆயுதங்கள் செய்யவும், மாவு அரைக்கவும் தொடங்கி தேர்ச்சி பெற்றனர்.

தொழில்நுட்ப வளர்ச்சியினாலும் உற்பத்தி சாதனங்களின் பெருக்கத்தினாலும், சமூக உழைப்புப் பிரிவினை பெரிதும் விரிவடைந்தது. தொழில் விவசாயத்தினின்றும் பிரிந்து சென்றது. தொழிலிலும் கூட புதிய பிரிவுகள் தோன்றின. ஏற்கனவே ஒன்றாக இணைக்கப்பட்டிருந்த வழிமுறைகளைப் பிரிப்பதின் மூலம் இது. முதலில் நேரிட்டது. உதாரணமாக இயந்திரங்கள் தோன்றியபோது அவற்றை ஆக்குவது ஒரு பிரிவாக இருந்தது. ஒரே தொழில் நிறுவனத்தில் பல வகையான இயந்திரங்கள் செய்யப்பட்டன. இயந்திரங்கள் பெருக ஆரம்பித்தபோது ஒன்றாக இருந்த பொறியியல் தொழில் பல தனிப்பட்ட பிரிவுகளாகப் பிரிந்தன. பொறிக் கருவிகள், உபகரணங்கள், சக்தி, உலோகங்கள், துணிகள், செருப்பு, உணவு, விவசாயம், ஏனைய கருவிகள் ஆகியவற்றின் உற்பத்தி என்று தனித்தனியாகப் பிரிந்தது.
(மார்க்ஸிய அரசியல் பொருளாதாரத்தின் அடிப்படைகள்
-தமிழில் தா.பாண்டியன்)


No comments:

Post a Comment