Friday 18 January 2019

17) மிகை உற்பத்தியின் காரணங்களென்ன? – எல்.லியான்டியாவ்


பிரிட்டனில் உள்ள நிலக்கரிச் சுரங்கத் தொழிலாளிகளின் வாழ்க்கையை வருணிக்கும் ஒரு புத்தகத்தில் கீழ் வரும் பேச்சு கொடுக்கப்பட்டுள்ளது.

“கணப்பை ஏன் நீ மூட்டவில்லை ? மிகவும் குளிராயிருக்கிறதே"

"நம்மிடம் நிலக்கரி இல்லையே, அதனால்தான்” என்று தாய் கூறுகிறாள்." "உன் அப்பாவிற்கு வேலை போய்விட்டது. நிலக்கரி வாங்குவதற்கு நம்மிடம் காசு இல்லை”

"அப்பா என் வேலையில் இல்லை?” "ஏனா, மிகவும் அதிகமான அளவு நிலக்கரி இருப்பதால் தான்."

சுரங்கத் தொழிலாளியின் குடும்பம் குளிரில் விறைக்கிறது ஏனெனில் 'நிறைய நிலக்கரி உற்பத்தி ஆகிவிட்டது. நெருக்கடி சமயத்தில் பல இலட்சம் தொழிலாளர்கள், உழவர்கள் பட்டினி டெக்கிறார்கள். ஏனெனில் "அதிக அளவு” தானியம் உற்பத்தியாகி விட்டது. போதுமான அளவிற்கும் மேலாக உற்பத்திச் சாதனங்கள், நுகர்ச்சிப் பண்டங்கள், உழைப்பு ஆகியவை இருந்தும் ஒரு நாட்டில் அதன் தொழிற்சாலைகள் மூடப்பட்டும், ரயில் என்ஜின்கள் ஓடாமலும், வயலில் தானியம் மக்கிக் கொண்டும், பண்டக சாலை களில் பொருள்கள் நிரம்பி வழிந்து கொண்டும் இருக்கும்போது தொழிலாளருக்கு வேலையில்லாமலும் அவர்கள் குடும்பங்கள் பட்டினியால் வாடுவதும் நெருக்கடியில் காணப்படும் அம்சங்களாகும், முதலாளித்துவ நெருக்கடியின் வருணனை இது.

முதலாளித்துவத்தின் கீழ் மிகை உற்பத்தி நெருக்கடிகள் தவிர்க்கப்பட முடியாதவையாகும். தங்களது இலாப வேட்டையில் முதலாளிகள் பல்வேறு பண்டங்கள் உற்பத்தி அளவை விரிவுபடுத்து கிறார்கள். ஆனால் வரம்பிலாத உற்பத்தி அளவு விஸ்தரிப்பு, திட்டமில்லாத முறையிலும் அங்காடியின் தேவை அளவுகளைக் கணக்கில் எடுத்துக்கொள்ளாமலும் ஏற்பட்ட இவ்விஸ்தரிப்பு நீண்ட நாட்களுக்கு நீடிக்க முடியாது போகிறது. ஒரு தருணம் கட்டாயம் தோன்றும். அத்தருணத்தில் பண்டங்களை விற்பது சாத்தியமே இல்லாது போகும். ஏனெனில் அவைகளில் மிக அதிகமான அளவு உற்பத்தி ஆகிவிட்டது.

ஆனால் உண்மையிலேயே அதிகமான அளவு நிலக்கரியும், தானியமும், துணிமணியும், உற்பத்தி செய்யப்பட்டு விட்டனவா? உண்மையிலேயே அதிகமான' வீடுகள் கட்டப்பட்டு விட்டனவா? இல்லவே இல்லை. நெருக்கடி சமயத்தில் ரொட்டி, நிலக்கரி, துணிமணிகள் ஆகியவற்றின் தேவை மிக அதிகமாக உள்ளது. ஒரு வேளை நெருக்கடி நிலைமைக்கு முந்திய காலத்தைவிட மிக அதிகமான தேவை உள்ளது. ஆனால் பயனுறுதியான (வாங்கும் சக்தி கொண்ட) தேவை இருப்பதில்லை. மக்களின் வருமானம் குறைந்து விட்டதினால் பெரும்பான்மை மக்களின் வாங்கும் சக்தி மிகவும் குறைந்துவிடுகிறது. அவர்களது பைகளில் பணம் இல்லாத காரணத்தால் உணவைப் புறக்கணிக்க வேண்டி ஏற்படுகிறது, அவர்களுக்கு விறகு வேண்டும். ஆனால் வாங்க முடிவதில்லை. ஏனெனில் அவர்களிடம் பணம் இல்லை. அவர்கள் அணிந்து கொள்வதற்கு ஆடைகள் இல்லை, ஆனால் உடைகள் வாங்கப் பணம் கிடையாது.

அப்படியானால் பெரும்பான்மை மக்களின் தேவையோடு ஒப்பிட்டுப் பார்த்தால் மிக அதிகமான அளவு பொருள்கள் உற்பத்தி யாகிவிட்டன என்று சொல்ல முடியாது. ஆனால் அவர்கள் வாங்கும் சக்தி யோடு ஒப்பிட்டுப் பார்க்கும் போது மிகையான உற்பத்தி ஆகிவிட்டது என்றாகிறது. முதலாளித்துவம் மக்களின் தேவைகளைத் திருப்தி செய் வதில் எவ்வித அக்கறையும் காட்டுவதில்லை முதலாளிகள் வேறொன்றில் அதிக அக்கறை காட்டுகின்றனர். தாங்கள் உற்பத்திக்குச் செய்த செலவைக் காட்டிலும் அதிக விலைக்கு விற்று அதிக இலாபம் பெறும் அக்கறையுடையவர்கள் அவர்கள். ஆனால் இது நெருக்கடி சமயத்தில் சாத்தியமற்றதாகப் போகிறது. உற்பத்தியாகி யுள்ள ஏராளமான பொருள்களுக்கும், மக்களின் வாங்கும் சக்தி கொண்ட தேவைக்கும் இடையே ஏற்படும் பிளவுதான் முதலாளித்து வத்தின் பொருளாதார நெருக்கடிகளின் நேரடியான காரணமாகும்.
(மார்க்ஸிய அரசியல் பொருளாதாரத்தின் அடிப்படைகள்
-தமிழில் தா.பாண்டியன்)


No comments:

Post a Comment