Friday, 18 January 2019

12) உழைப்புச் சக்தி பண்டமாகும்போது அதன் மதிப்பு என்ன? – எல்.லியான்டியாவ்


முதலாளித்துவத் தொழில் நிறுவனத்தால் ஒரு தொழிலாளி வேலைக்கு அமர்த்தப்படும் பொழுது, தொழிலாளி தனது உழைப்புச் சக்தியை எல்லாக் காலங்களுக்கும் விற்று விடாது. குறிப்பிட்ட திட்டமான காலத்தவணையாகிய, ஒரு நாள், ஒரு வாரம், ஒரு மாதம் என்று விற்கிறார். இதற்கு அவர் நாட்கூலியோ, வாரக் கூலியோ, மாதக் கூலியோ பெறுகிறார்.
எல்லாப் பண்டங்களையும் போலவே உழைப்புச் சக்திக்கும் ஒரு மதிப்பு உண்டு. ஒரு பண்டத்தின் மதிப்பு, அதன் உற்பத்திக்கு சமூக அவசியமான உழைப்பின் அளவினால் நிர்ணயிக்கப்படுகிறது என்று நரற்கனவே பார்த்தோம். தொழிலாளர் விற்கும் உழைப்புச் சக்தியின் மதிப்பு என்ன?

மனிதன் உயிரோடிருந்தால்தான் அவனால் உழைக்க முடியும், அவன் உண்டு, உடையுடுத்தி, வீட்டில் தங்கி அதாவது இது போன்ற அவனது அத்தியாவசியத் தேவைகளைத் திருப்தி செய்தால்தான் அவனால் உழைக்க முடியும். உழைப்பாளரின் அத்தியாவசியத் தேவைகள் பூர்த்தி செய்யப்பட்டால்தான் அவனது உழைப்புச்சக்தி அளிக்கப்படக் கூடியதாக இருக்கும்.

ஆனால் மனிதத் தேவைகளைத் திருப்தி செய்யும் எல்லாப் பொருள்களும் - ரொட்டி, இறைச்சி, துணிமணிகள், உறைவிடம் முதலியன- முதலாளித்துவத்தில் பண்டங்களாகும். இவைகளின் உற்பத்தியில் திட்டவட்டமான உழைப்புச் செலவிடப்பட்டுள்ளது. இப்பண்டங்களின் மதிப்பில் அது உள்ளடங்கி இருக்கிறது.

எனவே, உழைப்புச் சக்தி என்ற பண்டத்தின் மதிப்பு, உழைப்பாளர்கள் தம் மைக் காப்பாற்றி உயிரோடிருப்பதற்கு அத்தியாவசியமாகத் தேவைப்படும் பண்டங்களின் மதிப்பிற்குச் சமானமாகும். அதாவது, உழைப்புச் சக்தியின் மதிப்பு, உயிர்வாழ்வுச் சாதனங்களின் மதிப்பாகும். இது அவனது உயிரைக் காப்பாற்ற அவசியமானதாகும்.

முதல் வளர்வதற்குத் தொடர்ச்சியாக உழைப்புச் சக்தி தேவைப்படுகிறது. சிக்கலான எந்திரங்களை இயக்குவதற்கு திறமைமிக்க உழைப்பாளரும், திறன் குறைவான உழைப்பாளர்களும் அதற்குத் தேவைப்படும். அதனால் தான் உழைப்புச் சக்தியின் மதிப்பு, பாட்டாளி வர்க்கத்தின் இளைஞர்களைப் பயிற்றுவிப்பதற்கான செலவீடுகள் சிலவற்றையும் உள்ளடக்கியதாகும்.

முதலாளித்துவம் தராதரமாக, உயர்ந்த உழைப்பின் உற்பத்தித் திறனை உடையதாகும். இந்த மட்டத்தில் தொழிலாளியின் அன்றாட உழைப்பு, அவனது உயிர் வாழ்விற்குத் தேவையான அளவிற்கும் மேலாகவே பண்டங்களை அவ்வுற்பத்தி தருகிறது. அதனால்தான் தொழிலாளியின் உழைப்பு உண்டாக்கிய மதிப்பும், உழைப்புச் சக்தியின் மதிப்பும், இருவேறு அளவுகளில் காணப்படுகின்றன. முதலாவதாகச் சொல்லப்பட்டது இரண்டாவதை விட அதிகமாக இருக்கிறது.

இவ்விரண்டு மதிப்புகளின் வேறுபாடு முதலாளியால் தொழிலாளி சுரண்டப்படுவதற்குரிய அவசியமான நிபந்தனை ஆகும். ஏனெனில், உழைப்புச் சக்தியின் மதிப்புக்கும் தொழிலாளரின் உழைப்பு உண்டாக்கிய மதிப்புக்கும் உள்ள வித்தியாசத்தை முதலாளி முழுவதாகத் தனதாக்கிக் கொள்கிறான்.
(மார்க்ஸிய அரசியல் பொருளாதாரத்தின் அடிப்படைகள்
-தமிழில் தா.பாண்டியன்)


No comments:

Post a Comment