Thursday 16 March 2023

7) மூலதனம் - தி.கே.மித்தேராபோல்ஸ்கி

முதலாளித்துவ சமுதாயத்தைப் பற்றி நாம் ஆராயும் போது முதலில் மூலதனம் என்ற கருத்து நம்முன் நிற்கிறது. 

மூலதனம் என்றால் என்ன? இந்த சொல்லின் உள்ளடக்கம் என்ன?

மூலதனத்தின் திட்டவட்டமான வெளித் தோற்றங்கள் பல உள. எந்த முதலாளித்துவ நாட்டிலும் பணம், இயந்திரங்கள், கட்டடங்கள், தயாராகவுள்ள பொருள்கள் முதலியன எதுவும் மூலதனமாக இருக்க முடியும். எனவே இதிலிருந்து மூலதனம் என்றால் மதிப்பு என்ற முதல் முடிவிற்கு வரமுடியும். ஒரு தொழிலாளியினுடைய கூலி பணமாகக் கொடுக்கப்படுகிறது. ஆனால் இதற்குத் தொழிலாளி மூலதனத்தைப் பெற்றிருக்கிறான் என்று அர்த்தமல்ல. ஒரு விவசாயி ஒரு வீட்டையும், விவசாயக் கருவிகளையும் பெற்றிருக்கிறான். ஆனால் இந்த சொத்தும் மூலதனமல்ல. மற்றெல்லா மதிப்பையும் போல, பணம், அது தன்னுடைய மதிப்பை அதிகரிக்கிறபோதுதான் அதாவது அது உபரி மதிப்பை உண்டாக்குகிறபோதுதான் மூலதனமாகிறது. எனவே, உபரி மதிப்பை உண்டாக்குகிற மதிப்புத்தான் மூலதனம் என்று விளக்கி நாம் நமது முதல் முடிவை விரிவுபடுத்தலாம்.

லாபமானது மூலதனத்தின் பிரிக்க முடியாத, அதனுள்ளேயே இருக்கிற தன்மை என்று பூர்ஷுவா விஞ்ஞானம் வலியுறுத்துகிறது. எனினும் மூலதனம் தானாகவே உபரி மதிப்பை உண்டாக்க முடியாது. மூலதனம் அது உழைப்புடன் ஒன்றுபடுகிற - சேருகிற - போதுதான், அதாவது உற்பத்தி செயல்முறைப் போக்கில்தான் அதன் மதிப்பை அதிகரிக்கிறது. மூலதனம் தொழிலாளியைச் சுரண்டுகிறது. அத்தொழிலாளி தன்னுடைய உழைப்பால் உபரி மதிப்பை உண்டாக்குகிறான்; அந்த உபரி மதிப்பு மூலதனத்தை அதிகரிக்கிறது. இதிலிருந்து, மூலதனம் என்பது கூலி வேலைத் தொழிலாளிகளைச் சுரண்டுவதன் மூலம் உபரி மதிப்பை உண்டாக்குகிற மதிப்பு என்றாகிறது.

அதனுடைய ஸ்தூலமான உருவம் எதுவானாலும் மூலதனம் என்பது வெறும் ஒரு பொருள் மட்டும் அல்ல. முதலாளி வர்க்கத்திற்கும் கூலி வேலைத் தொழிலாளர் வர்க்கத்திற்கும் இடையே ஒரு குறிப்பிட்ட உற்பத்தி உறவுகளை மூலதனம் தன்னுட் கொண்டிருக்கிறது. இந்த உறவுகள், மனிதனை மனிதன் சுரண்டுவதில் வெளியாகிறது.

மூலதனத்தைப் பற்றி விளக்குகையில், பூர்ஷுவா பொருளாதார விதிகள், வழக்கமாக உற்பத்திச் சாதனங்கள் எனப் பொருள்படும்படி அதைக் குறிப்பிடுகிறார்கள். பண்டைய ஆங்கிலேய பூர்ஷுவா அரசியல் பொருளாதாரத்தின் பிரதிநிதிகளான ஆடம் ஸ்மித்தும், டேவிட் ரிக்கார்டோவும் இந்தக் கண்ணோட்டம் கொண்டிருந்தனர். உதாரணமாக, ரிகார்டோ கல்லையும், தடியையும் அதாவது புராதன மனிதனின் புராதனக் கருவிகளை, மூலதனமாகக் கருதினார். பூர்ஷுவா விஞ்ஞானம் இன்னமும் மூலதனத்தை, உற்பத்தி சாதனமாக, மூலதனமும் உற்பத்திக்கருவிகளும் ஒன்றெனக் கூறுகிறது. அது மூலதனம் என்பது எந்த உற்பத்தியிலும் நிரந்தரமான, சாசுவதமான, இயற்கையான நிலைமை என எடுத்துக்காட்ட முயற்சிக்கிறது. புராதன சமுதாயத்தில் மூலதனக் “கண்டுபிடிப்பு” இந்த நோக்கத்தைத்தான் நிறைவேற்றுகிறது. மூலதனம் ‘சாசுவதமாக இருந்தது என்ற கோட்பாடு" முதலாளித்துவம் காலகாலத்திலும் இருந்தது என்ற கோட்பாட்டை” உறுதிப்படுத்துவதாகக் கருதப்பட்டது.

பூர்ஷுவா பொருளாதாரவாதிகள், முதலாளித்துவத்தினது - தோற்றத்தின் சரித்திரத்தையும் முதலாளித்துவ சமுதாயத்தில் வர்க்கங்கள் உருவாவதைப் பற்றியும் தவறாக எடுத்துக் காட்டுகிறார்கள். கஷ்டப்பட்டு வேலைசெய்து சிக்கனமாக இருந்தவர்கள் முதலாளிகள் ஆனார்கள் என்றும் தங்கள் சொத்தையெல்லாம் ஊதாரித்தனமாக செலவிட்ட சோம்பேறிகள் தொழிலாளிகள் ஆனார்கள் என்றும் அவர்கள் வாதிடுகிறார்கள். இந்தக் கட்டுக் கதைகளுக்கும் வரலாற்று ரீதியான உண்மைக்கும் எவ்வித சம்பந்தமுமில்லை. ஆரம்ப மூலதனக் குவியல் சிக்கனத்தால் ஏற்பட்டதல்ல; ஆனால் காலனி நாடுகளைக் கொள்ளையடித்ததன் மூலமாகவும் பலவந்தமாக விவசாயிகளை ஓட்டாண்டியாக்கியதன் மூலமும், முதலாளித்துவ உழைப்புக் கட்டுப்பாட்டை உண்டாக்கும் நோக்கத்துடன், ஏழைகளுக்கெதிராக கெடுபிடியான கட்டங்களை அமுலாக்கியதன் மூலமாகவும் தான் அது ஏற்பட்டது.

No comments:

Post a Comment