Thursday 16 March 2023

5) முற்றான உபரி மதிப்பு (Absolute Surplus-Value = அறுதி உபரி மதிப்பு) - தி.கே.மித்தேராபோல்ஸ்கி

உபரி மதிப்பை அதிகப்படுத்துவதற்கான முதல் வழி வேலை நாள் நீட்டுவதில் இருக்கிறது. வேலை நாள் 10 மணியிலிருந்து 12 மணியாக நீட்டப்பட்டு விட்டதாக வைத்துக் கொள்வோம். 

உழைப்புச் சக்தியின் மதிப்பு மாறாததால், அவசிய உழைப்பு நேரம் மாறவில்லை. ஆனால் உபரி உழைப்பு நேரம் அதிகரித்து விட்டது.

5 மணிகள்               7 மணிகள்

அவசிய நேரம்           உபரி நேரம்

7 மணி

X  100ரூ  =  140ரூ

5 மணி

வேலை நாளை நீட்டுவதன் மூலம் கிடைக்கப் பெறுகிற உபரி மதிப்பு முற்றான உபரி மதிப்பு (அறுதி உபரி மதிப்பு), ஏனென்றால் வேலை நாள் ஒட்டு மொத்தமாக முற்றாக நீண்டதாகி விட்டது. முற்றான உபரி மதிப்பு (அறுதி உபரி மதிப்பு) அதாவது நீட்டப் பட்ட வேலைநாள் என்பது முதலாளித்துவ வளர்ச்சியின் ஆரம்ப கட்டத்தின் குணாம்சமாக இருந்தது. ஏனென்றால் அப்போது தொழில் நுட்பம் மிக தாழ்ந்த மட்டத்திலேயே இருந்தது; தங்களுக்குச் சொந்தமான கால் நடைகளைப் பெற்றிருந்த பல விவசாயிகளும், கைத் தொழிலாளிகளும் இல்லை. அப்போது பூர்ஷுவா அரசு முதலாளிகளுக்காக எவ்வளவு முடியுமோ அவ்வளவு அதிகமாகத் தொழிலாளிகளை உழைக்கும்படி நிர்ப்பந்திப்பதற்கான விசேஷ சட்டங்களை வெளியிட்டது. இதன் விளைவாகத் தொழிலாளிகளின் ஜீவிய காலம் குறைந்தது, உழைப்பாளி மக்களிடையே மரண விகிதம் உயர்ந்தது.

தொழிலாளி வர்க்கம் வளர்ந்து, பலம் பெற்றபோது குறைந்த நேரம் கொண்ட வேலை நாளுக்கான தங்களுடைய போராட்டத்தைத் தொழிலாளிகள் தீவிரப் படுத்தினார்கள். குறைந்த நேரம் கொண்ட வேலை நாளுக்கான கோரிக்கை, தொழிலாளி வர்க்க இயக்கத்தின் முதல் கோரிக்கைகளில் ஒன்றாகும். இந்தப் போராட்டம் முதலில் இங்கிலாந்தில் ஆரம்பித்தது. பத்தொன்பதாம் நூற்றாண்டின் மத்தியில் இங்கிலாந்தில் வேலை நாள் 12 மணியாகவும் 1901-இல் 10 மணியாகவும் குறைக்கப்பட்டது. குறைந்த நேரம் கொண்ட வேலை நாளுக்கான போராட்டம் இதர நாடுகளிலும் நடத்தப்பட்டது. உதாரணமாக ருஷ்யாவில் 1897-ஆம் வருட பெரும் வேலை நிறுத்தப் போராட்டங்களுக்குப்பின் வேலை நாளை 11½ மணி என்று வரையறுத்துச் சட்டம் இயற்றப்பட்டது.

பின்னர், தொழிலாளி வர்க்கம் 8 மணி நேரம் வேலை நாளைக் கோரியது. 8 மணி நேர வேலை நாளுக்கான போராட்டம், குறிப்பாக 1917-ஆம் வருட சோஷலிஸப் புரட்சி வெற்றி யடைந்ததற்குப்பின் ருஷ்யாவில் தொழிலாளி வர்க்கத்தின் இந்த கோரிக்கை அமுலாகியபின், ஆக்கம் பெற்றது. தொழிலாளி வர்க்கத்தின் நிர்ப்பந்தத்தால் பலமுதலாளித்துவ நாடுகளில் 8 மணி நேர வேலை நாள் அமுலாக்கப்பட்டது. வேலை நாள் நேரத்தைக் குறைத்ததை ஈடு செய்துகொள்வதற்கு முதலாளிகள் உழைப்பைக் கடுமையாக வேகப்படுத்தினர்.

No comments:

Post a Comment