Thursday 16 March 2023

2) முதலாளித்துவத்தின் கீழ் உற்பத்தி உறவுகள் - தி.கே.மித்தேராபோல்ஸ்கி

உடைமையாளனின் தனிப்பட்ட உபயோகத்திற்காக மட்டுமல்லாமல், சந்தைக்காகவும் (உதாரணமாக ரோம் தேசத்தில் இருந்த ‘லாட்டி பண்டியா' என்ற பெரிய அளவில் ஆட்களை வைத்துப் பண்ணை நடத்தும் முறை) பலர் சேர்ந்து உற்பத்தி செய்யும் பெரிய பொருளாதார அமைப்புகள் முதலாளித்துவத்திற்கு முன்னரும் கூட இருந்தன. ஆனால் இந்த அமைப்புகளை முதலாளித்துவம் என்று அழைக்க முடியாது. ஏனெனில் அவைகள் வாடகைக்கு (கூலிக்கு) தொழிலாளிகளை வேலைக்கமர்த்தவில்லை அதற்குப் பதில் அடிமைகளையோ (லாட்டி பண்டியா) அல்லது பண்ணையடிமைகளையோ உபயோகித்தன.

கூலிவேலைத் தொழிலாளியின் நிலைமையானது அடிமை, பண்ணையடிமையின் நிலைமையிலிருந்து மாறுபடுகிறது என்றாலும் அவர்கள் ஒவ்வொருவரும் சுரண்டப்படும் வர்க்கத்தின் பிரதிநிதியே. அடிமை அல்லது பண்ணையடிமை போலல்லாமல், தொழிலாளி தனிப்பட்ட முறையில் சுதந்திரமானவன். அவன் சட்டப்படி ஒரு முதலாளிக்காக வேலை செய்ய வேண்டிய அவசியமில்லாதவன். ஆனால் ஒரு தொழிலாளிக்கு, பொதுவிதி என்ற முறையில், அவனுடைய ஜீவனோபாயத்திற்கு அவசியமானவற்றை அளிக்கக்கூடிய சொந்தப் பொருளாதாரமில்லை. அவன் தானும் தனது குடும்பமும் உயிர் வாழ்வதற்காக ஒரு முதலாளியிடம் தன்னை வாடகைக்கு அமர்த்திக்கொள்ள வேண்டும். ஒரு தொழிலாளி முதலாளிக்கு வேலை செய்ய ஒப்புக்கொள்ளும் போது, அவன் சுயமாக - தன்னிஷ்டமாக அப்படிச் செய்கிறான். அதாவது அவனை வேலை செய்யும்படி முதலாளியோ, வேறு யாரோ நிர்ப்பந்திப்பதில்லை.

உற்பத்திக்கான பௌதிக நிலைமைகள் - நிலமும், உற்பத்திக் கருவிகளும், சாதனங்களும் - (ஒட்டு மொத்த சமூகத்துடன்) ஒப்பிடும்போது சிறிய கூட்டமான முதலாளிகளின் கட்டுப்பாட்டிலும், பெரும்பாலான மக்கள் தங்கள் உழைப்புச் சக்தியைத் தவிர வேறெதையும் பெற்றிராத நிலையில் உள்ள, முதலாளித்துவ கீழ், (கூலிக்கு வேலை செய்வது) கூலி உழைப்பு நிலவியிருக்கிறது.

தாங்கள் வாழ்வதற்காக வேலைசெய்ய வேண்டிய நிலையில் இருக்கிற மற்றவர்களின் உழைப்பின் பலனை அனுபவிக்க சொந்தக்காரர்கள் வேலை செய்ய வேண்டியதில்லை. முதலாளிகளால் தொழிலாளிகள் சுரண்டப்படுவது என்பது தான், முதலாளித்துவ சமுதாயத்தில் உற்பத்தி உறவுகளின் சாரமாகும்.

உற்பத்தி உறவுகள் என்றால், உற்பத்தி சாதனங்களின் மீதான உடைமையின் வடிவம், வர்க்கங்கள், சமூகக் குழுக்களின் உற்பத்தியில் அவர்களுக்குள்ள நிலைமை, அவர்களுக்குள்ளிருக்கும் உறவுகள், பொருள் விநியோகத்தின் வடிவங்கள் உட்படும்.

உற்பத்தி சாதனங்களை முதலாளித்துவ தனி உடைமையாகப் பெற்றிருப்பதை அடிப்படையாகக் கொண்டது முதலாளித்துவ உற்பத்தி உறவுகள். இது மற்ற தனி உடைமை வடிவங்களிலிருந்து, குறிப்பாக சிறு சொத்துடைமையிலிருந்து மாறுபடுகிறது. சிறு உற்பத்தியாளர்களின் தனிச் சொத்துடைமையானது, அவர்களுடைய சொந்த உழைப்பை அடிப்படையாகக் கொண்டது. அதேசமயத்தில் முதலாளித்துவ தனிச் சொத்துடைமையோ, கூலி வேலைத் தொழிலாளிகளைச் சுரண்டுவதை அடிப்படையாகக் கொண்டது. முதலாளியின் தனிச் சொத்து, அவனாலேயே நிறுவனங்களில் உள்ள தொழிலாளிகளின் உழைப்பின் உற்பத்திப் பொருளேயாகும்.

உற்பத்தி செயல் முறையில் வர்க்கங்கள் வகிக்கும் இடத்தை உடைமையின் வடிவம் நிர்ணயிக்கிறது. முதலாளித்துவ சமுதாயத்தில், தொழிலாளியின் உழைப்பையும், அவனுடைய உழைப்பினால் உற்பத்தியான பொருளையும் தனக்குச் சொந்தமாக வைத்திருக்கிற முதலாளியின் கட்டுப்பாட்டின் கீழ் ஒரு தொழிலாளி வேலை செய்கிறான். முதலாளிகளுக்கும், தொழிலாளிகளுக்குமிடையில், உற்பத்திப் பொருள் வினியோகிக்கப்படுவது, அவர்கள் அடைகிற பங்கிலும், அதை அவர்கள் அடைகின்ற முறையிலும் வித்தியாசப்படுகிறது. ஒரு முதலாளி தனது சொந்த உபயோகத்திற்குப் போதுமானதாக மட்டுமல்லாமல், உற்பத்தியை விரிவுபடுத்தவும் போதுமான லாபத்தை அடைகிறான். ஒரு தொழிலாளியோ அதிகபட்சமாகத் தனது குடும்பத்தைச் சாதாரண வாழ்க்கைக்கு வழி செய்யக்கூடிய அளவுக்குக் கூலி பெறுகிறான்.

முதலாளித்துவத்தின் கீழ், அடிமை, நிலப்பிரபுத்துவ முறைகளைப் போலவே, உற்பத்தி உறவுகள் மனிதனை மனிதன் சுரண்டுவதை அடிப்படையாகக் கொண்டவை. ஆனால் சுரண்டல் வடிவங்கள் மாறுகின்றன. முதலாளித்துவத்திற்கு முன்னரும் கூட செல்வந்தர்களும், ஏழை மக்களும் இருந்தார்கள். ஏழைகள் தாங்கள் பணக்காரர்களைச் சார்ந்தவர்களாக இருப்பதைக் கண்டார்கள். ஆனால், முதலாளித்துவத்திற்கு முன் முதலாளிகள் இருக்கவில்லை. ஒருவன் அவன் செல்வந்தனாக இருப்பதனாலேயே அவனை முதலாளி என்று அழைப்பதில்லை. குறிப்பிட்ட சமூக உறவுகள் காரணமாக, மற்றவர்களின் உழைப்பின் பலனைக்கொண்டு தான் வாழ்வதற்காக இதர சுதந்திரமான மக்களைச் சுரண்டுவதற்காகத் தனது செல்வங்களை உபயோகிக்கும் நிலையில் இருக்கும்போதுதான் ஒரு செல்வந்தன் முதலாளியாகிறான்.

No comments:

Post a Comment