Thursday 16 March 2023

1) பூர்ஷுவா வர்க்கமும் தொழிலாளி வர்க்கமும்

 III முதலாளித்துவ சமுதாயத்தின் வர்க்க சேர்க்கை 

1) பூர்ஷுவா வர்க்கமும் தொழிலாளி வர்க்கமும்

ஒவ்வொரு வர்க்க சமுதாயமும் வெவ்வேறான வர்க்கங்களையும், பகுதிகளையும் பெற்றிருக்கிறது. ஆனால் தமக்கு இடைப்பட்ட உறவுகளில் சமுதாயத்தின் பிரதான முரண்பாட்டை வெளிக்காட்டுகிற பிரதான வர்க்கங்கள் இவற்றில் எப்போதும் உட்படும். அடிமை உடைமை சமுதாயத்தில் இந்த வர்க்கங்கள் அடிமை உடைமையாளர்களும், அடிமைகளும் ஆவார்கள். நிலப்பிரபுத்துவ சமுதாயத்தில் அவர்கள் நில உடைமையாளர்களும் பண்ணையடிமைகளும் ஆவார்கள். முதலாளித்துவ சமுதாயத்தில் பிரதான வர்க்கங்கள் பூர்ஷுவா வர்க்கமும் தொழிலாளி வர்க்கமும் (புராலிடேரியட் - Proletarian) ஆகும்.

பூர்ஷ்வாக்கள், உற்பத்தி சாதனங்களைச் சொந்தமாக வைத்துக் கொண்டு கூலித் தொழிலாளிகளைச் சுரண்டுவதற்காக அவற்றைப் பயன் படுத்தும் வர்க்கமாகும். பூர்ஷ்வா வர்க்கம் ஒரே தன்மையானது அல்ல. இன்று முதலாளித்துவ வர்க்கத்தின் மேல்தட்டில் உள்ள கூட்டம், முதலாளித்துவ உலகின் அரசியலிலும், பொருளாதாரத்திலும் ஆதிக்கம் வகிக்கும் ஏகபோக பூர்ஷுவாக்களாகும். இங்ஙனம் அனைத்து முதலாளித்துவ நாடுகளினது உற்பத்தியில் மூன்றில் ஒரு பாகம் 200 ஏகபோகங்களின் ஆதிக்கத்திலிருக்கிறது. குட்டி பூர்ஷுவாக்கள் என்போர் முதலாளி வர்க்கத்திற்கும் தொழிலாளி வர்க்கத்திற்கும் இடைப்பட்ட நிலையில் இருக்கிறார்கள். சிறு தொழில் நிறுவனங்களின் சொந்தக்காரர்களில் கணிசமான கம்பெனிகளைச் சார்ந்திருக்கிறார்கள்.

சென்ற காலங்களில் நகர்ப்புற குட்டி பூர்ஷுவாக்கள், தொழிலாளி வர்க்கத்தைவிட மேலான வாழ்க்கைத் தரத்தை அனுபவித்து வந்தார்கள். இன்று மிகப் பெரும்பாலான குட்டி பூர்ஷ்வாக்களின் வருமானம் பெரும் தொழில் நிறுவனங்களில் வேலை செய்யும் கூலித் தொழிலாளிகளைவிட அதிகமல்ல; பல இடங்களில் பெரும் தொழில் நிலையங்களில் வேலை செய்யும் தொழிலாளிகளின் சம்பளங்களைவிடவும் குறைவாகும். மறுபுறத்தில், சிறு தொழில் நிறுவனங்களது சொந்தக்காரனின் வேலை நிலைமைகள், தொழிலாளிகளின் வேலை நிலைமைகளைவிட மோசமானது, ஏனென்றால் அவனுடைய வேலை நாள் நீண்டதாக இருக்கிறது. தமது விடாப்பிடியான, தொடர்ந்த போராட்டங்கள் மூலம் தொழிலாளிகள் வென்றுள்ள சமூக அனுகூலங்கள் குட்டி பூர்ஷுவாக்களுக்கு இல்லை. மேலும் சிறிய உற்பத்தியாளன் பெரும் கம்பெனிகளைச் சார்ந்திருக்கிறான். குட்டிபூர்ஷ்வாக்கள் பிரதானமாக தமது சுயேச்சையை இழந்து விட்டார்கள்.

உற்பத்தி சாதனங்களும் வாழ்க்கை சாதனங்களும் பறிக்கப்பட்ட கூலித் தொழிலாளிகளின் வர்க்கம்தான் புராலிடேரியட் (Proletarian) எனப்படுவது. எனவே இந்த வர்க்கம் முதலாளிகளுக்குத் தனது உழைப்புச் சக்தியை விற்கும்படி நிர்ப்பந்திக்கப்படுகிறது.

முதலாளித்துவ சமுதாயத்தில், பூர்ஷ்வா வர்க்கம் கூலித் தொழிலாளிகளைச் சுரண்டாமல் நிலைத்திருக்கவோ மேலும் செல்வந்தர்களாகவும் முடியாதாகையாலும், அதே போல் புராலிடேரியன்கள் தங்களை முதலாளிக்கு வாடகைக்குக் கொடுக்காமலும், தங்களுடைய உழைப்புச்சக்தியை விற்காமலும் வாழ முடியாதாகையாலும், பூர்ஷ்வா வர்க்கமும், புராலிடேரியட்டும் பிரிக்க முடியாதபடி இணைந்துள்ளன. அதே சமயத்தில் பூர்ஷுவா வர்க்கமும் தொழிலாளி வர்க்கமும் ஒன்றுக்கொன்று விரோதமான வர்க்கங்களாகும். அவர்களுடைய நலன்கள் சமரசம் செய்யப்பட முடியாதவை. பூர்ஷ்வா வர்க்கத்திற்கும், தொழிலாளி வர்க்கத்திற்கும் இடையிலான முரண்பாடுகள்தாம், முதலாளித்துவ சமுதாயத்தின் பிரதான முரண்பாடு ஆகிறது.

 

No comments:

Post a Comment