Thursday 16 March 2023

2) உபரி மதிப்பு - தி.கே.மித்தேராபோல்ஸ்கி

 ஒரு முதலாளி ஒரு தையல் இயந்திரத் தொழிற்சாலையை சொந்தமாக வைத்துக் கொண்டிருக்கிறான் என்று வைத்துக் கொள்வோம். தையல் இயந்திரங்களை உற்பத்தி செய்ய அவன் உலோகம் வாங்குகிறான். 200 தையல் இயந்திரங்கள் செய்வதற்கு ஒரு கிலோ உலோகம் 20 சென்ட் வீதம் 10,000 கிலோ உலோகம் வாங்குகிறான். மொத்தத்தில் அதற்காக 2,000 டாலர் செலவு செய்கிறான். 200 தையல் இயந்திரங்களைச் செய்யும்போது, இயந்திர சாதனங்களின் தேய்மானம், விளக்கு வசதி, உஷ்ணம் முதலிய வற்றிற்கான செலவுகள் 250 டாலர்கள் ஆகின்றன (ஒவ்வொருவருக்கும் ஒரு நாளுக்கு 5 டாலர்கள் வீதம் 50. தொழிலாளிகளுக்கு) உழைப்புச் சக்திக்கான செலவு 250 டாலர்கள் வரை ஆகிறது. முதலாளியின் மொத்த செலவு பின்வருமாறு: 

உலோகத்தின் விலை                 = 2000 டாலர்கள்

இயந்திரத்தின் தேய்மானம்             = 250 டாலர்கள்

உழைப்புச் சக்தியின் மதிப்பு           = 250 டாலர்கள்

மொத்தம்                            = 2500 டாலர்கள்

தொழிற்சாலைக்கு 200 தையல் இயந்திரங்களைச் செய்ய 2500 டாலர்கள் செலவாகிறது. அதாவது ஒவ்வொரு தையல் இயந்திரமும் (2500; 200) 12.5 டாலர் செலவில் உற்பத்தி செய்யப்படுகிறது.

ஒவ்வொன்றும் 12.5 டாலர்கள் என்று அந்த தையல் இயந்திரங்கள் விற்கப்படுகின்றன என்று வைத்துக்கொள்வோம். முதலாளி தனது இயந்திரத்தை அந்த விலைக்கு விற்றால், தன்னுடைய செலவுகளை மட்டும் அவன் திரும்பப் பெறுவான், அதாவது அவன் லாபம் அடைய மாட்டான்.

என்றாலும் நடைமுறையில் எல்லாம் வேறுவிதமாக நடக்கிறது. ஒரு தொழிலாளியின் தினசரி உழைப்பு அவனுடைய வாழ்க்கைக்குத் தேவையான அளவைவிட மிக அதிகமாக உற்பத்தி செய்யக்கூடிய வகையில், முதலாளித்துவம் உயர்ந்த அளவு உழைப்பின் உற்பத்தித் திறனை அனுபவிக்கிறது. இயந்திரத் தொழில் உயர்ந்த மட்டத்தில் இருக்கும் போது, தொழிலாளியின் அவசியமான வாழ்க்கைச் சாதனங்களை உற்பத்தி செய்வதற்குக் குறைந்த நேரமே தேவைப்படுகிறது. உழைப்புச் சக்தியின் ஒரு நாளைய மதிப்பைக் கொடுத்துவிட்டதால், முதலாளி வேலை நாள் முழுதும் தொழிலாளியை உழைக்கும்படி செய்கிறான். இதன் விளைவாகத் தொழிலாளி அவனுடைய உழைப்புச் சக்தியின் மதிப்பைவிட அதிகமான மதிப்பை உற்பத்தி செய்கிறான்.

நம்முடைய உதாரணத்தில், தொழிலாளி உழைப்புச் சக்தியின் மதிப்புக்குச் சமமான மதிப்பை 4 மணி நேரத்தில் உற்பத்தி செய்தான் என்று வைத்துக் கொள்வோம். ஆனால் முதலாளியுடனுள்ள ஒப்பந்த விதிகளின் படி அவன் எட்டு மணி நேரம் வேலை செய்யவேண்டும். எட்டு மணி நேரத்தில் அதே 50 தொழிலாளிகள் இரு மடங்கு உற்பத்தி சாதனங்களைப் பயன் படுத்துவார்கள். இரண்டு மடங்கு தையல் இயந்திரங்களை அதாவது 400 தையல் இயந்திரங்களை உற்பத்தி செய்து முடிப்பார்கள். இந்த நிலையில் முதலாளியின் செலவுகள் மாறுகின்றன.

உலோகத்தின் விலை           = 4000 டாலர்கள்

இயந்திரத்தின் தேய்மானம்      = 500 டாலர்கள்

உழைப்புச் சக்தியின் மதிப்பு     = 250 டாலர்கள்

மொத்தம்                      = 4750 டாலர்கள்

முந்திய விலையில் (அதாவது ஒன்று 12.5 டாலர்) 400 தையல் இயந்திரங்களை விற்பதன் மூலம் முதலாளி 5000 டாலர்களை அடைகிறான். உற்பத்திச் செயல் முறைப் போக்கின்விளைவாக அடைகிற மதிப்பானது முதலாளியினுடைய செலவைவிட 250 டாலர்கள் அதிகமாகிறது. இந்த அதிகப் படியான மதிப்பு உபரி மதிப்பு எனப்படுகிறது.

உற்பத்திச் செயல் முறைப்போக்கில் தொழிலாளிகளுடைய உழைப்பால் படைக்கப்படுகிற உபரி மதிப்பு முதலாளித்துவ சமுதாயத்தில், சம்பாதிக்கப் படாத எல்லா வருமானத்தின், பெருமளவு உற்பத்தியாளர்களின், வியாபாரிகளின் லாபத்தின், பங்குதாரர் (டிவிடெண்டின்) ஈவுத்தொகையின், கந்து வட்டிக் காரர்கள், பாங்கர்கள் ஆகியோருடைய வட்டியின், நிலவுடைமையாளர்களின் நிலவாடகையின், இன்னும் பலவற்றின் மூல ஊற்றாகிறது.

முதலாளிகள் உபரி மதிப்பைப் பெற முடிந்தது எதனால் என்றால், தொழிலாளிகள், உழைப்புச் சக்தியின் மதிப்பிற்குச் சமமான மதிப்பைப் படைப்பதற்குத் தேவையானதைவிட அதிகநேரம் வேலைசெய்தார்கள். அந்த உபரி மதிப்பை முதலாளிகள் இலவசமாக அபகரித்துக் கொண்டார்கள். அதே சமயத்தில் அதையும் படைத்ததற்காகத் தொழிலாளிகளுக்கு எதுவும் கொடுக்கப்படவில்லை. இதிலிருந்து முதலாளித்துவ சுரண்டலின் சாரம், கூலிக்குவேலை செய்யும் தொழிலாளர்களின் உழைப்பால் படைக்கப்பட்ட உபரி மதிப்பை முதலாளிகள் அபகரித்துக் கொள்வதில் அடங்கியிருக்கிறது.

முதலாளித்துவ சுரண்டலானது, அடிமை சமுதாய, நிலப்பிரபுத்துவ சமுதாயச் சுரண்டலிலிருந்து, இது மறைமுகமானது என்ற அம்சத்தில் வேறுபடுகிறது. அடிமைகளுடையதும், பண்ணையடிமைகளுடையதும் உழைப்பு கட்டாய (நிர்ப்பந்த) உழைப்பு. முதலாளித்துவத்தின் கீழ் உழைப்பு கட்டாயப் படுத்தவும்படுகிறது. ஏனென்றால் அவனிடம் வாழ்க்கை வசதி எதுவும் இல்லை. ஆனால் இந்தக் கட்டாய உழைப்பானது, தொழிலாளி தனிப்பட்ட முறையில் முதலாளிகளுக்கு அடிமையாக இல்லாமல் சுதந்திரமாக இருக்கிறான் என்பதனால் மறைக்கப்படுகிறது.

No comments:

Post a Comment