Thursday 16 March 2023

1) உற்பத்திச் செயல் முறையில் உழைப்புச் சக்தியின் பாத்திரம் - தி.கே.மித்தேராபோல்ஸ்கி

 II. முதலாளித்துவ சுரண்டலின் சாரம் 

1) உற்பத்திச் செயல் முறையில் உழைப்புச் சக்தியின் பாத்திரம்

'உழைப்புச் சக்தியின் மதிப்பு' என்ற கருத்து, கோட்பாடு ரீதியாக மட்டும் முக்கியமானதல்ல. ஒரு தொழிலாளி தனது உழைப்பைத்தான் (அவனது உழைப்புச் சக்தியை அல்ல) முதலாளிக்கு விற்கிறான் என்று ஆடம் ஸ்மித், டேவிட் ரிக்கார்டோ காலத்திலிருந்து பூர்ஷுவா அரசியல் பொருளாதாரம் வற்புறுத்திக் கூறி வந்துள்ளது. இந்தக் கண்ணோட்டத்தை நாம் ஒப்புக்கொண்டால், தொழிலாளி சம்பள உருவத்தில் தனது உழைப்பிற்கு ஈடு பெறுகிறான். முதலாளியோ தனது மூலதனத்திற்கான லாபத்தை ஈடாகப் பெறுகிறான் என்ற தவிர்க்க முடியாத முடிவுக்கு வரவேண்டும். இப்படிப்பட்ட விளக்கத்துடன், பார்த்தால் தொழிலாளியும், முதலாளியும் சமமானவர்கள்; மனிதனை மனிதன் சுரண்டுவது என்பதில்லை.

எதார்த்தத்தில் ஒரு தொழிலாளி தன்னை முதலாளி வாடகைக்கு அமர்த்திக் கொள்ள அனுமதிப்பதன் மூலம் தனது உழைப்பை அவன் விற்பதில்லை. (அவன் இன்னும் வேலை செய்ய ஆரம்பிக்கவில்லை.) ஆனால் வேலை செய்வதற்காகத் தனது சக்தியைத் தான், அதாவது தனது உழைப்புச் சக்தியை விற்கிறான். இந்த உழைப்புச் சக்தி எப்படி உபயோகப்படுத்தப்படும் என்பது முதலாளியால் - தன் சொந்த நலன்களை அனுசரித்து முடிவு செய்யப்படுகிறது என்பதும் தெரிந்ததே. தொழிலாளியினுடைய உழைப்பை, அவனுக்குக் கொடுத்ததைவிட அதிகமாகப் பெற்றுக் கொடுப்பதற்கான (கொள்வதற்கான) முறையில், உழைப்புச் சக்தியை முதலாளி உபயோகப்படுத்துகிறான்.

உற்பத்தி செயல்முறையில் உழைப்புச் சக்தி என்ன பாத்திரத்தை வகிக்கிறது?

இயந்திர சாதனங்களின் உதவியுடன், கச்சாப் பொருள்களிலிருந்து தொழிலாளி தன் உழைப்புச் சக்தியை உபயோகிப்பதன் மூலம் உற்பத்திப் பொருளைப் படைக்கிறான். அந்த உற்பத்திப் பொருள் விற்பனைப் பண்டமாதலால் அதற்கு மதிப்பு ஏற்படுகிறது. கச்சாப் பொருள், எரி பொருள் ஆகியவற்றின் முழு மதிப்பையும் கட்டடங்கள், இயந்திரங்கள், கருவிகள் ஆகியவை உற்பத்திப் பொருளை உற்பத்தி செய்வதில் உபயோகப்படுத்தப்படுவதால் அவற்றின் ஒரு பகுதி மதிப்பையும் பண்டத்தின் மதிப்பு தன்னுள் கொண்டிருக்கிறது. மேலும் பண்டத்தின் மதிப்பானது, பண்டத்தை உற்பத்தி செய்வதில் தொழிலாளிகளின் உழைப்பினால் உண்டாக்கப்பட்ட புதிய மதிப்பையும் கொண்டது. இந்தப் புதிய மதிப்பானது முதலாளி சம்பளம் தரக்கூடிய உழைப்புச் சக்தியின் மதிப்பைவிட அதிகமானது. பின்வரும் ஸ்தூலமான உதாரணத்தைக்கொண்டு அதை நாம் பரிசீலிப்போம்.

No comments:

Post a Comment