Thursday 16 March 2023

3) உழைப்புச் சக்தி ஒரு பண்டம் - தி.கே.மித்தேராபோல்ஸ்கி

 ஒரு தொழிலாளி, ஒரு முதலாளிக்குத் தன்னை (வாடகைக்கு) விலைக்குக் கொடுத்துத்தான் ஆகவேண்டும். இல்லையென்றால் அவனுக்கு வாழ்வதற்கு வழியில்லை. அதே போல, ஒரு முதலாளி தன்னிடம் எல்லா உற்பத்திச் சாதனங்களையும் பெற்றிருந்தாலும் கூட, தொழிலாளிகள் இல்லாமல் உற்பத்தியை ஆரம்பிக்க முடியாது. எந்த ஒரு மனிதனையும் போல், தொழிலாளி உழைப்புச் சக்தியை, அதாவது வேலை செய்வதற்கான சக்தியைப் பெற்றிருக்கிறான். எந்த சமுதாயத்திலும், உழைப்புச் சக்தியானது உற்பத்தியில் ஒரு முக்கியமான அம்சமாகும். ஆனால் முதலாளித்துவத்தின் கீழ் உழைப்புச் சக்தியின் பாத்திரம் மாறுகிறது; ஏனென்றால் அதுவும்கூட ஒரு பண்டமாக ஆகிவிடுகிறது. உழைப்புச் சக்தி பண்டமாக மாற்றப் பட்டதுடன், பண்ட உற்பத்தி ஒரு பொதுத் தன்மையைப் பெறுகிறது. எனவே, முதலாளித்துவமானது பண்ட உற்பத்தியின் உயர்ந்த கட்டமாகக் கருதப்படலாம்.

உழைப்புச் சக்தியைப் பண்டமாக மாற்ற இரு நிபந்தனைகள் அவசியம். முதலாவதாகத் தன் சொந்த விருப்பப்படி, தான் வேலை செய்வதற்கான சக்தியை அவன் உபயோகிப்பது சாத்தியமாவதற்குத் தொழிலாளி தனிப்பட்ட முறையில் சுதந்திரமாக இருக்கவேண்டும். ஒரு அடிமையோ அல்லது ஒரு பண்ணை யடிமையோ சுதந்திரமாக இல்லாததால், அவர்கள் தமது உழைப்புச் சக்தியை விற்க முடியாது. இரண்டாவதாக ஒரு தொழிலாளி எந்த உற்பத்திச் சாதனங்களையும், இதர வாழ்க்கைச் உழைப்புச் சக்தியைக் கொடுப்பதைத் தவிர வேறு வழியில்லை என்றிருக்க வேண்டும். விவசாயப் பண்ணையடிமைகள் முற்றிலும் வேறான நிலைமையில் இருந்தார்கள். ஏனென்றால் அவர்கள் தங்கள் குடும்பங்களுக்கும் வாழ வழி செய்துகொள்ள முடிந்தது. சொந்தமான கால் நடைகளை வைத்திருந்தார்கள். தங்களுக்கும், தங்கள் குடும்பங்களுக்கும் வாழ வழி செய்துகொள்ள முடிந்தது.

தனிநபர்கள் என்ற முறையில் சுதந்திரம் பெற்றிருந்தும், உற்பத்திச் சாதனங்களையும், வாழ்க்கைச் சாதனங்களையும் பெற்றிராததால், தங்கள் உழைப்புச் சக்தியை விற்க வேண்டிய நிர்ப்பந்தத்திலிருக்கிற மக்கள் கூட்டம் தோன்றுவது முதலாளித்துவம் நிலவி வருவதற்குத் தேவையாகிறது என்பது இதிலிருந்து பெறப்படுகிறது. மேலும் தனிப்பட்ட நபர்களின் கைகளில் பெரும் அளவு பணமும் உற்பத்திச் சாதனங்களும் குவிந்து இருப்பதும் தேவையாகிறது. இந்த நிபந்தனைகள் நிலப்பிரபுத்துவ சமுதாயத்திலேயே, ஆரம்ப மூலதன சேமிப்பு எனப்படும் காலகட்டத்திலேயே உண்டாக்கப் பட்டுவிட்டன.

No comments:

Post a Comment