Thursday 16 March 2023

1) சாதாரண பண்ட உற்பத்தியும் முதலாளித்துவப் பண்ட உற்பத்தியும் - தி.கே.மித்தேராபோல்ஸ்கி

முதலாளித்துவப் பண்ட உற்பத்தியானது சாதாரண பண்ட உற்பத்தியிலிருந்து வளர்ந்து வந்துள்ளது. எனினும் அது திடீரென்று ஒரேயடியாக ஏற்பட்டுவிடவில்லை. மனித சமுதாய வளர்ச்சியின் நீண்ட கால கட்டத்தில் வளர்ந்தது. முதலாளித்துவ உற்பத்தியானது அடிமை உடைமை சமுதாய அமைப்பு அல்லது நிலப்பிரபுத்துவ அமைப்பு முறையில், சாதாரண பண்ட உற்பத்தியிலிருந்து வளர்ச்சி அடைய முடியவில்லை. ஏனெனில் உற்பத்திச் சக்திகள் மிகவும் தாழ்வான வளர்ச்சி மட்டத்தில் இருந்தன. அன்றைய சமூக பொருளாதாரத்தில் பண்ட உற்பத்தி, பண்டத்தின் அடிப்படையிலான பொருளாதாரம் மிகச்சிறிய பாத்திரத்தையே வகித்தது. முதலாளித்துவத்தின் கீழ் எல்லாத் தொழில் நிறுவனங்களும் தமது உபயோகத்திற்காக அல்லாமல் விற்பனைக்காகப் பொருள்களை உற்பத்தி செய்கின்றன. விவசாயிகளும் தங்கள் உற்பத்தியில் பெரும் பகுதியை முதலாளித்துவ வளர்ச்சியுடன் சிறு உற்பத்தியாளர்களும் விற்கிறார்கள்.

முதலாளித்துவத்தின் கீழ் ஏறக்குறைய எல்லா உற்பத்தி சாதனங்களும், உபயோகப்பொருள்களும், வாங்கவும், விற்கவும் செய்யப்படுகின்றன. சாதாரண பண்ட உற்பத்தி முறைக்கும், முதலாளித்துவ உற்பத்தி முறைக்கும் இடையில் இரு அடிப்படையான அம்சங்கள் பொதுவாக இருக்கின்றன.

அவை யாவன: முதலாவதாக உற்பத்தி சாதனங்களில் தனியுடைமை, இரண்டாவதாக உழைப்பு சமூக ரீதியாகப் பிரிக்கப்படுதல். உழைப்பு சமூக ரீதியாகப் பிரிவினை செய்யப்படுவது வளர்ச்சி பெற்று, விரிவடைந்து, ஆழமடைவதுடன், அதே சமயத்தில், பண்டப் பொருளாதாரமும் வளர்ச்சி பெற்றது.

சாதாரண பண்ட உற்பத்தி, முதலாளித்துவம் ஆகிய இரண்டிற்கும் பொதுவான அம்சமாகிய உற்பத்தி சாதனங்களில் தனியுடைமை என்பது முதலாளித்துவம் தோன்றுவதற்கான அம்சமாகும், சாதாரண பண்ட உற்பத்தியானது, முதலாளித்துவ உற்பத்தியைத் தோற்றுவித்தது சென்ற காலத்தில் மட்டுமல்ல; சில குறிப்பிட்ட சமூக நிலைமைகளில் அது இன்னும் முதலாளித்துவத்தை வளர்க்கிறது. சிறுபான்மை உற்பத்தியாளர்களை பணக்காரர்களாக்கி, பெரும்பான்மை உற்பத்தியாளர்களைச் சீரழித்து, நடைமுறையில் முதலாளித்துவத்தை வளர்க்கத்தான் செய்கிறது.

சாதாரண பண்ட உற்பத்திக்கும், முதலாளித்துவ உற்பத்திக்கும் இடையில் ஒரு அடிப்படையான வேறுபாடு இருக்கிறது. சாதாரண பண்ட உற்பத்தியின் கீழ் விவசாயி அல்லது கைத்தொழிலாளி, தனது சொந்த உழைப்பைக் கொண்டு பண்டங்களை உற்பத்தி செய்கிறான். அதாவது, பண்ட உற்பத்தியானது, பண்டங்களைச் சொந்தமாக வைத்திருக்கிற, உற்பத்தியாளனின் தனிப்பட்ட உழைப்பை அடிப்படையாகக் கொண்டது. முதலாளித்துவத்தின் கீழ் ஒருவனே பண்டங்களை உற்பத்தி செய்பவனாகவும், சொந்தமாக அதை வைத்திருப்பவனாகவும் இருப்பதில்லை. முதலாளித்துவ உற்பத்தியானது விலைக்கு வாங்கப்பட்ட உழைப்பைச் சுரண்டுவதை அடிப்படையாகக் கொண்டது.

No comments:

Post a Comment