Thursday 16 March 2023

4) உழைப்புச் சக்தியின் மதிப்பு - தி.கே.மித்தேராபோல்ஸ்கி

முதலாளித்துவத்தின் கீழ் உழைப்புச் சக்தி ஒரு பண்டமாகும். எனவே, அதற்கு மதிப்பு இருக்க வேண்டும். ஒரு பண்டத்திற்கு இருவிதத் தன்மைகள் இருக்கின்றன. முதலாவதாக ஏதாவது மனிதத் தேவையைப் பூர்த்தி செய்யக்கூடிய பொருள். இரண்டாவதாக, அது சொந்த உபயோகத்திற்காக அல்லாமல், விற்பனைக்காக, பரிவர்த்தனைக்காக உற்பத்தி செய்யப்பட்டது. ஒரு பண்டம் இரு குணங்களைப் பெற்றிருக்கிறது: உபயோக மதிப்பும், (பரிவர்த்தனை) மதிப்புமாகும். உபயோக மதிப்பு ஒரு பண்டத்தின் குணமாகும். அதனால் தான் பண்டமானது மனிதனுடைய ஏதாவது தேவையைப் பூர்த்தி செய்கிறது. ஒரு பண்டத்தின் (பரிவர்த்தனை) மதிப்பு, பண்டத்தில் அடங்கியிருக்கிற அதன் உற்பத்தியாளர்களின் சமூக உழைப்பாகும்.

ஒரு பண்டமானது மற்றொரு பண்டத்திற்கு பரிவர்த்தனை செய்யப்படும் அளவிலான உறவின் உருவத்தில் பண்டத்தின் மதிப்பு வெளித் தோன்றுகிறது. எந்தப் பண்டத்தின் மதிப்பும் அதில் அடங்கியிருக்கிற உழைப்பின் அளவைக் கொண்டு நிச்சயிக்கப்படுகிறது. ஏனென்றால் பண்டங்கள் எல்லாம் உழைப்பினால்தான் படைக்கப்படுகின்றன. உழைப்பின் மொத்த அளவை, வேலை நேரத்தின் மொத்த அளவினால் அளக்கப்படுகிறது. இதிலிருந்து உழைப்பின் மதிப்பும் கூட, அதை மறு உற்பத்தி செய்யப்படுவதற்கு அவசியமான வேலை நேரத்தினால் அளக்கப்படுகிறது என்பது புலனாகிறது.

இந்த நேரத்தை எப்படி அளப்பது?

ஒரு தொழிலாளி வேலை செய்வது முடியவேண்டுமானால் அவன் குறைந்தபட்ச வாழ்க்கைத் தேவைகளை - சாதனங்களைப் பெற்றிருக்க வேண்டும். அதாவது உணவு, துணிமணிகள், காலணி, ஒரு குடியிருப்பு முதலியன. உழைப்புச் சக்தியை மறு உற்பத்தி செய்ய உத்தரவாதம் செய்ய, ஒரு தொழிலாளி தனக்கு மாத்திரம் வழி செய்துகொண்டால் போதாது. தனது குடும்பத்திற்கும் வேண்டும். கடைசியாக சிக்கலான இயந்திரங்களை வேலை செய்விக்க, ஒரு தொழிலாளிக்குச் சில திறமைகள் தேவை. அதற்கு அவனுடைய பயிற்சிக்காகச் செலவிடுவது தேவையாகிறது.

எனவே உழைப்புச் சக்தியின் மதிப்பானது தொழிலாளியினுடையவும், அவனது குடும்பத்தினுடையவும் வாழ்க்கைத் தேவைகளின் சாதனங்களின் விலையினால் நிச்சயிக்கப்படுகிறது. பணமாக உழைப்புச் சக்தியின் மதிப்பு சொல்லப்படுவதுதான் உழைப்புச் சக்தியின் விலை. முதலாளித்துவத்தின் கீழ் உழைப்புச் சக்தியின் விலை, கூலி என்ற உருவத்தைப் பெறுகின்றது.

உழைப்புச் சக்தியின் மதிப்பானது ஒரேயடியாக எல்லாக் காலத்திற்குமான மதிப்பு அல்ல. ஏனெனில் அது வரலாற்று வளர்ச்சிப் போக்கில் மாறுகிறது. உழைப்புச் சக்தியின் மதிப்பு இருவழிகளில் மாறுகிறது. ஒரு புறத்தில், உபயோகப் பொருள் உற்பத்தி செய்யும் பொருளாதாரப் பிரிவுகளில், உழைப்பு, உற்பத்தித்திறன் அதிகரிக்கப்படுவதன் விளைவாக, இந்தப் பொருள்களின் மதிப்பு குறைகிறது. ஆனால் உபயோகப் பொருள்கள் குறிப்பாக அத்யாவசியமானவைகளின் மதிப்பு உழைப்புச் சக்தியின் மதிப்பில் ஒரு பாகமாகிறது. இதனால் உபயோகப் பொருள் மதிப்புக் குறைவினால் உழைப்புச் சக்தியின் மதிப்பு குறைவதில் முடிகிறது. மறுபுறத்தில் தொழிலாளியின் உடற்சக்தியைத் திரும்பப் பெறுவதற்கான, உபயோகப் பொருள் மதிப்பு மாத்திரமின்றி உழைப்புச் சக்தியின் மதிப்பில் தொழிலாளியினுடையவும், அவனுடைய குடும்பத்தினுடையவும் சில குறிப்பிட்ட கலாசாரத் தேவைகளை திருப்திப்படுத்துவதன் செலவும்கூட அடங்கியிருக்கிறது.

சமுதாய வளர்ச்சியுடன் தொழிலாளிகளின் வழக்கமான தேவைகள் மாறுகின்றன. பொருள் தோன்றுவதாலும், உழைப்புச் சக்தியின் மதிப்பை தொழிலாளிகளுடைய தேவைகள் அதிகரிப்பதாலும், புதிய பொருள் தோன்றுவதாலும், உழைப்புச் சக்தியின் சக்தியின் மதிப்பை உயர்த்துகிறது. எனினும் உழைப்புச் சக்தியின் மதிப்பைப் பாதிக்கும் மிக முக்கியமான அம்சம் உழைப்பைத் தீவிரப் படுத்துவதாகும். தொழிலாளிகளிடமிருந்து மேலும் அதிகமான உடற்சக்தி மட்டுமின்றி, நரம்புச் சக்தியும் கசக்கிப் பிழிந்து எடுக்கப்படுவதால் அவர்களுடைய வேலை செய்வதற்கான சக்தியைத் திரும்பப் பெறுவதற்கான உற்பத்திப் பொருள்களின் அளவை அதிகப்படுத்துவது, அதாவது உழைப்புச் சக்தியின் மதிப்பை அதிகப் படுத்துவது தவிர்க்க முடியாததாகிறது.

முதலாளிகள், தொழிலாளி வர்க்கத்தின் வாழ்க்கைத் தரத்தை சாத்தியமான அளவு மிகக் குறைந்த மட்டத்திற்குக் கொண்டுவர எப்போதும் முயற்சி செய்கிறார்கள். தொழிலாளி வர்க்கம் உயர்ந்த வாழ்க்கைத் தரத்திற்காகப் போராடுவதன் மூலம் முதலாளிகளின் இந்த முயற்சிகளை எதிர்க்கிறார்கள்.

No comments:

Post a Comment