(The Two-fold Character of the
Labour Embodied in Commodities)
(மூலதனம் நூலில் இருந்து)
பயன் மதிப்பு, பரிவர்த்தனை
மதிப்பு என்ற இரண்டையும் இணைந்தது சரக்கு என்று
பார்த்தோம். அதே போல் சரக்குகளில் உருக்கொண்டுள்ள உழைப்பும்
இரண்டு தன்மைகள் பெற்றுள்ளன என்பதைப் பார்ப்போம்.
பயன் மதிப்பை
உருவாக்குகிற சிறப்பியல்பு வேறாகவும், பரிவர்த்தனை மதிப்பைப்
படைக்கின்ற சிறப்பியல்பு வேறாகவும் இருக்கிறது. சரக்குகளை
உருவாக்குகிற உழைப்பின் இரட்டை இயல்பை முதன் முதலாக எடுத்துக்காட்டி ஆராய்ந்தவர்
மார்க்ஸ், மூலதனம் நூலில் வெளிப்படையாகவே இதனைக் கூறியுள்ளார்.
மேலும், அரசியல் பொருளாதாரத்தைத் தெளிவாகப் புரிந்து கொள்வதற்கு அச்சாணியாக இது இருப்பதால், இதனைச் சற்று விரிவாகப் பார்க்க வேண்டும் என்று வலியுறுத்துகிறார்.
சட்டையானது
உடுக்கும் தேவையை நிறைவு செய்கிற பயன் மதிப்பாகும். இது ஒருவகைத் தனிப்பட்ட உற்பத்தி நடவடிக்கையின் விளைவினால் உருவானது. ஒரு குறிப்பிட்ட பயனைப் படைப்பது என்ற நோக்கமும், அதற்கான
இயங்கு முறையும், உழைப்பை செலுத்துகிற குறிப்பொருளாலும்,
உழைப்பை செலுத்துவதற்குத் தேவைப்படுகிற
சாதனங்களாலும், விளைவாலும் இந்த வகை உழைப்பு
நிர்ணயிக்கப்படுகிறது. அந்த உற்பத்திப் பொருளை நுகர்வதால்
கிடைக்கிற பயன்பாடு அச் சரக்கின் பயன்-மதிப்பாகும். பயன்-மதிப்பைப் படைகிற உழைப்பு பயனுள்ள உழைப்பு
என்று அழைக்கப்படுகிறது. இதன் மூலம் அச்சரக்கின் பயன்தரு
விளைவை மட்டுமே இங்க நோக்குகிறோம்.
சட்டையும், கட்டிலும் பண்பு வழியில் வேறுபட்ட இருவேறு பயன்-மதிப்புகளைக் கொண்டிருப்பது போலவே, அதனை உற்பத்தி செய்கிற தையலும் தச்சும் உழைப்பின் இருவேறு வடிவங்களாகும். இவ்விரண்டு சரக்குகளிலும் வெவ்வேறு பண்புள்ள உழைப்பை செலுத்தவில்லை என்றால் இவையிருண்டும் சரக்கு என்ற வகையினைச் சேர்ந்தவையாக இராது. சட்டையைச் சட்டைக்கே யாரும் பரிவர்த்தனை செய்துகொள்வதில்லை.
பயன் மதிப்புகளின் வெவ்வேறு வகைகளுக்கும் சமூக உழைப்புப் பிரிவினையில்
(Social division of labour) பயனுள்ள உழைப்பின் வெவ்வேறு வகைகளாக அமைந்துள்ளன. உற்பத்தி செய்கின்ற சரக்கு மற்றொருவருக்காக உழைக்கப்படும் போது அவர்களது உழைப்பு ஒரு சமூக வடிவத்தை மேற்கொள்கிறது. இந்த உழைப்புப் பிரிவினை சரக்கு உற்பத்திக்கு இன்றியமையாத் தேவை ஆகும்.
ஒவ்வொரு சரக்கிலும், குறிப்பிட்ட
பயனுள்ள நோக்கோடே உழைப்புச் செலுத்தப்படுகிறது. ஒவ்வொரு பயன் மதிப்புகள் கொண்ட சரக்கும் பண்பு வழியில் வேறுபட்டதாக இல்லை
என்றால் அவைகள் ஒன்றையொன்று சரக்குகளாக எதிர்கொள்ள முடியாது. சரக்கு உற்பத்திச் சமுதாயத்தில், தனிப்பட்ட உற்பத்தியாளர்கள்
ஒவ்வொரும் தமது சொந்த நலனுக்காகச் செலுத்தப்படும் பயனுள்ள
உழைப்பு வடிவங்களுக்கு இடையிலான இத்தகைய பண்பு வழி வேறுபாடு சிக்கலான அமைப்பாக,
சமூக உழைப்புப் பிரிவினையாக வளர்ச்சி அடைந்துள்ளது.
பயன்
மதிப்புள்ள பொருள்களில் இரண்டு கூறுகள் அடங்கியிருக்கின்றன, அதில்
ஒன்றான செலவிடப்பட்ட பயனுள்ள உழைப்பை எடுத்துவிட்டால், மனித
உதவியின்றி இயற்கையால் வழங்கப்பட்ட பொருளாயத ஆதாரமாக, எஞ்சி
நிற்கும். இயற்கை செயற்படுவது போலவே, மனிதனும்
பொருளின் வடிவத்தை மாற்றுகிறான். இதனையே வில்லியம் பெட்டி
உழைப்பு தந்தை, பூமி தாய் என்றார்.
அடுத்துப்
பரிவர்த்தனை மதிப்பைப் பார்ப்போம்.
ஆறு சட்டை ஒரு
கட்டிலுக்குப் பரிவர்த்தனை செய்து கொள்ளப்படுகிறது. மதிப்புகள் என்ற வகையில்
இரண்டும் ஒத்த தன்மையே பெற்றிருக்கிறது. இரண்டுமே
சாராம்சத்தில் உழைப்பின் தெரிவுப்புகளே ஆகும். இச்சரக்கின்
உற்பத்தி நடவடிக்கை என்பதில் பயனுள்ள தன்மையைப் பார்வையில் இருந்து நீக்கினால்,
அதில் மனித உழைப்பு சக்தியின் செலவீடே அடங்கிருக்கிறது என்பதை
அறிந்து கொள்ளலாம். தையலும், நெசவும்
பண்பு வழியில் வேறுபட்ட உழைப்பு நடவடிக்கைத் தான் என்றாலும், இவை ஒவ்வொன்றிலும் மனிதனின் மூளை, நரம்பு, தசை இவற்றின் திறனுடைய செலவீடே ஆகும். இந்த வகையில்
இவையிரண்டும் மனிதனது உழைப்பே ஆகும். மனித சக்தியை செலவிட்ட
இருவேறு முறைகளே இச் சரக்குகள். அதாவது பொதுவான மனித உழைப்பே
இவையிரண்டும் பரிவர்த்தனை மதிப்பைப் படைக்கிறது. மதிப்பைப்
படைக்கிற இந்த உழைப்பு ஸ்தூலமற்ற (சூக்குமமான) மனித
உழைப்பாகும்.
மார்க்ஸ், “மூலதனம்”
நூலுக்கு முன்பு எழுதிய “அரசியல் பொருளாதார
விமர்சனத்துக்கு ஒரு பங்களிப்பு” என்ற நூலில் இந்தப் பொதுவான மனித உழைப்பின் சமூகத் தன்மைய பற்றி விரிவாக எழுதியுள்ளார்.
அதனையும் இங்குத் தொகுத்துப் பார்ப்போம்.
பல்வேறு
பொருட்களிடையே உள்ள மதிப்பை சமப்படுத்துவது, அவற்றில் அடங்கியிருக்கும்
பொதுவான மனித உழைப்பாகும். பல்வேறு பொருட்களுக்கு இடையில்
உள்ள, அளவு ரீதியான வேறுபாடுகள், அவற்றில்
அடங்கியிருக்கும் உழைப்பின் அளவு ரீதியான வேறுபாடுகள் மட்டுமே. எல்லாப் சரக்குகளுமே கெட்டியாக்கப்பட்ட
உழைப்பு நேரத்தின் குறிப்பிட்ட அளவுகள் மட்டும் தான்.
பரிவர்த்தனை
மதிப்பில் அடங்கியிருக்கிற உழைப்பு என்பதை நிர்ணயிப்பதற்குச் சிலவற்றைப் புரிந்து
கொள்ள வேண்டும் என்று மார்க்ஸ் கூறுகிறார். இந்த உழைப்பு எந்தவிதமான பண்புரீதியான
தன்மைகள் இல்லாத உழைப்பாகும். அதாவது கட்டில், சட்டை, பீரோ போன்ற வடிவத்தைப் படைக்கின்ற உழைப்பாக
அதைக் கொள்ளமுடியாது. பயன்-மதிப்பைத்
தோற்றுவிக்கின்ற ஸ்தூலமான உழைப்பிடம் இருந்து பரிவர்த்தனை மதிப்பைப் படைக்கிற
சூக்குமமான உழைப்பு வேறுபட்ட பிரத்யேகமான சமூக
உழைப்பாகும்.
ஏன் இதனைச் சமூக உழைப்பாகக் கூறப்படுகின்றது
என்றால்,
குறிப்பிட்ட சரக்கில் காணப்படும்
சூக்குமமான உழைப்பை, சமூகத்தில் காணப்படும் வேறொரு சரக்கில்
அடங்கியிருக்கும் சூக்குமமான உழைப்பைக் கொண்டு நிர்ணயிக்கப்படுகிறது என்பதே
காரணமாகும். இருவேறு சரக்குகள் வெவ்வேறு வகைப்பட்டவையாக
இருந்தாலும் அதில் அடங்கியிருக்கிற சூக்கும உழைப்பு, சமூக
வழியில் சராசரி உழைப்பு நேரத்தைக் கொண்டு நிர்ணயிக்கப்படுகிறது. இந்தச் சூக்கும உழைப்பு ஒரு குறிப்பிட்ட சமூகத்தில் ஒரு சராசரி மனிதன்
தன்னுடைய தசைகளையும் நரம்புகளையும் மூளையையும் இதரவற்றையும் குறிப்பிட்ட அளவில்
பலன் தரும் முறையில் செலவிடும் உழைப்பாகும். அதனால் தான்
சூக்கும உழைப்பை ஓரே தன்மையான, ஓரே சீரான உழைப்பாக
வகைப்படுத்தப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து
மார்க்ஸ் கூறுகிறார்,
ஒரு சரக்கை உற்பத்தி செய்வதற்குத் தேவையான உழைப்பு நேரம்
என்பது, பொதுவாக இருக்கக் கூடிய உற்பத்தி நிலைமைகளில், அதே சரக்கின் வகையில் இன்னொரு பொருளை உற்பத்தி செய்வதற்குத் தேவையான உழைப்பு
நேரமாகும்.
அதனால் தான் சூக்கும
உழைப்பை சமூக உழைப்பின் இனங்கள் என்று மார்க்ஸ் அழைக்கிறார். ஏன் என்றால் சம அளவுக்குப் பரிவர்த்தனை செய்யப்படுகின்ற பொருட்களுக்குச்
சூக்கும உழைப்பு சமூகத்தின் சராசரி உழைப்பு நேரத்தைக் கொண்டு கணக்கிடப்படுகிறது. இந்தச் சம அளவு என்ற
தன்மை சமூக வழிப்பட்ட சராசரி உழைப்பின் அடிப்படையில் நிர்ணயிப்பதால்தான், சூக்கும உழைப்புச் சமூகத் தன்மை பெற்றதாகக் கூறப்படுகிறது.
மார்க்ஸ், பரிவர்த்தனை
மதிப்பில் ஒரு குறிப்பிட்ட தனிநபரின் உழைப்பு நேரம், பொதுவான
உழைப்பு நேரமாகப் பிரதிநிதித்துவப்படுதப்பட்டு, தனிநபருடைய
உழைப்பின் பொதுத் தன்மையையே சமூகத் தன்மை என்று அழைக்கிறார். தனித்தனியாகச் சரக்குகளை உற்பத்தி செய்கிற, முதலாளித்துவச் சமூக வழியிலான உழைப்புப் பிரிவினையையே, சமூகத் தன்மை என்று “அரசியல் பொருளாதார
விமர்சனத்துக்கு ஒரு பங்களிப்பு” என்ற நூலில் மார்க்ஸ்
எழுதியுள்ளார்.
“மூலதனம்”
நூலுக்கு வருவோம்.
சரக்கில்
அடங்கியுள்ள உழைப்பானது பயன் மதிப்பைப் பொறுத்தளவில் பண்பு வழிகளின் அடிப்படையில்
கணக்கிடப்படுகிறது, அதே நேரத்தில் மதிப்பைப்
பொறுத்தளவில் அளவு வழியில் கணக்கிடப்படுகிறது. அதாவது
பயன்மதிப்பை அதன் பண்புகளின் எண்ணிக்கை அளவில் (6 சட்டை, ஒரு கட்டில், 20 கிலோ அரிசி, 80 முட்டை) கணக்கிடப்படுகிறது.
பரிவர்த்தனை மதிப்பு சமூக வழியில் அவசியமான உழைப்பு நேர அளவைக்
கொண்டு அளக்கப்படுகிறது.
உற்பத்தி
நடவடிக்கையில் ஈடுபடுகிற உடலியல் நோக்கில் குறிப்பிடும் போது, பயனுடைய
நோக்கமாகக் கொண்ட ஸ்தூலமான உழைப்பு பயன் மதிப்பைப் படைக்கிறது, தசை, நரம்பு, மூளை ஆகிய
சக்திகளைச் செலவிட்ட ஸ்தூலமற்ற (சூக்குமமான)
உழைப்புப் பரிவர்த்தனை மதிப்பைப் படைக்கிறது.
No comments:
Post a Comment