Tuesday, 17 April 2018

06 சமூக உற்பத்தியின் இரண்டு பக்கங்கள் (உற்பத்திச் சக்திகளும் உற்பத்தி உறவுகளும்)


--எஸ்.இல்யீன், அ.மொத்திலோவ்

பொருளாயத நலன்களின் உற்பத்தியில் ஈடுபடும் மனிதர் கள் இயற்கையின் மீது செயலாக்கம் புரிவதோடு கூட ஒருவருக்கொருவர் குறிப்பிட்ட உறவுகளையும் ஏற் படுத்திக் கொள்கின்றனர். எனவே சமூக உற்பத்திக்கு இரண்டு பக்கங்கள் உண்டு. இயற்கையின் பாலான மனிதர்களின் உறவை வெளிப்படுத்தும் முதல் பக்கம் சமுதாயத்தின் உற்பத்திச் - சக்திகளைக் குறிக்கிறது. உற்பத்தி நிகழ்ச்சிப் போக்கில் மனிதர்களிடையேயான உறவுகளைப் பிரதிபலிக்கும் இரண்டாவது பக்கம் உற்பத்தி உறவுகளைக் குறிக்கிறது. இவை புராதனக் கூட்டுச் சமூக உறுப்பினர்களிடையேயான உறவுகள், அடிமையுடைமையாளர்களுக்கும் அடிமைகளுக்கும் இடையே யான உறவுகள், நிலப்பிரபுக்களுக்கும் பண்ணையடிமை விவசாயிகளுக்கும் இடையேயான உறவுகள், முதலாளி களுக்கும் கூலித் தொழிலாளர்களுக்கும் இடையிலான உறவுகள், சுரண்டலிலிருந்து விடுவிக்கப்பட்டு, கூட்டாக உற்பத்திச் சாதனங்களை வைத்திருக்கும் உழைப்பாளி களுக்கிடையிலான உறவுகள் ஆகியவையாகும். உற்பத்தி நிகழ்ச்சிப் போக்கில் இயற்கையின் மீதான மனிதனின் செயலாக்கம் சமுதாய வளர்ச்சியின் ஒவ்வொரு வரலாற்றுக்கட்டத்திலும் குறிப்பிட்ட உற்பத்தி உறவுகளின் வரம்பு களுக்குள்தான் நிறைவேற்றப்படுகிறது.

உற்பத்திச் சக்திகள்

உற்பத்திச் சக்திகளினுள் உற்பத்திச் சாதனங்களும் (இவற்றின் உதவியால்தான் பொருளாயத நலன்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன) இச்சாதனங்களைப் பயன் படுத்தி, தம் அனுபவம், ஞானத்தைக் கொண்டு பொருளாயத நலன்களை உற்பத்தி செய்யும் மனிதர் களும் அடங்குவர். உற்பத்தி அனுபவம் உடைய மனிதர்கள்தான் இதில் தீர்மானகரமான பங்காற்றுகின்ற னர், இவர்கள்தான் சமுதாயத்தின் பிரதான உற்பத்திச் சக்தி. மனிதர்கள் இல்லாவிடில் மிக நவீனமான இயந்திரத்தை வைத்து கூட ஒன்றும் செய்ய முடியாது. மனிதர்கள்தான் புதுப் புது இயந்திரங்களைக் கண்டு பிடித்து உருவாக்குகின்றனர், இவற்றைப் பின் உற் பத்தியில் பயன்படுத்துகின்றனர்.

உற்பத்திச் சாதனங்கள் சமுதாயத்தின் பொருளாயததொழில்நுட்ப அடித்தளத்தை ஏற்படுத்துகின்றன. உழைப்புச் சாதனங்கள், எல்லாவற்றிற்கும் மேலாக உழைப்புக் கருவிகள் தான் சமுதாயத்தின் உற்பத்திச் சக்திகளிடையே மிகவும் மாறுபடும் தன்மையுள்ள, நவீனப்படுத்தும் அம்சங் களாகும். இவற்றிலிருந்துதான் பொருளாயத உற்பத்தியில் முற்போக்கான மாற்றங்கள் ஆரம்பமாகின்றன; இவை தான் இறுதியில் மனித சமுதாயத்தின் வாழ்வில் எல்லா மாற்றங்களையும் நிர்ணயிக்கின்றன. ' உற்பத்திச் சக்திகளின் வளர்ச்சி மட்டம், மனிதர்கள் எந்த அளவிற்கு இயற்கைச் சக்திகளின் எஜமானர்களாக இருக்கின்றனர் என்பதற்கான அறிகுறியாகும். பண்டையக்
காலத்தில் நெருப்பைக் கண்டுபிடித்து, பயன்படுத்த ஆரம் பித்ததானது இயற்கைச் சக்திகளை அடக்கியாளும் திசையில் மனிதனுடைய மிக முக்கியமான நடவடிக்கையாகத் திகழ்ந்தது. இன்று மனிதர்கள் பருப்பொருளின் ரகசியங் களினுள் மேன்மேலும் ஆழமாகப் புகுகின்றனர், அணு சக்தியைப் பயன்படுத்துகின்றனர், விண்வெளி ஆராய்ச்சி யில் புதுப் புது வெற்றிகளை அடைந்து வருகின்றனர்.

சமுதாயத்தின் உற்பத்திச் சக்திகள் இடையறாது | வளர்ந்து, மேம்பாடடைந்து வருகின்றன. தொழில்நுட்ப முன்னேற்றத்தின் பயனாய் உழைப்பின் சாரம் மாறுகிறது, உற்பத்தி நிகழ்ச்சிப் போக்கில் இதற்கேற்றபடி மனிதர் களுடைய உடற்கூறு ரீதியான மற்றும் ஆன்மீகத் திறமைகளின் பங்கு மாறுகிறது. பொருளாயத நலன் களின் உற்பத்தியில் மனிதர்களுடைய ஆன்மீக, அறிவுச் சக்தியின் பங்கு அதிகரிக்கிறது, உடல் சக்தியின் பங்கு குறைகிறது. விஞ்ஞானம் நேரடியான உற்பத்திச் சக்தியாக மாறி வருகிறது.

உற்பத்தி உறவுகள்

  ராபின்சன் குரூசோ கதையில் வருவது போல் மனிதர்கள் தனித்தனியே வாழ்க்கைக்குத் தேவையான பொருட் களை உற்பத்தி செய்வதில்லை. மனிதர்கள் எப்போதுமே கூட்டங்கூட்டமாக, குழுக்களாகத்தான் வாழுகின்றனர். கூட்டாக வாழ்ந்து உரையாடும் மனிதர்கள் இல்லாவிடில் எப்படி மொழி நிலவி, வளர முடியாதோ அதே போல் ஒருவரிடமிருந்து ஒருவர் தனியாகப் பிரிந்து நிற்கும் தனிமனித உற்பத்தியும் பொருளற்றது. மாபெரும் பண்டைய கிரேக்க சிந்தனையாளர் அரிஸ்டாட்டிலே, மனிதன் என்பவன் சமூக விலங்கினம் என்றார். உற்பத்தி என்பது எப்போதும், எல்லா சூழ்நிலைகளிலும் சமூக உற்பத்தியாகும். பொருளாயத உற்பத்தி நிகழ்ச்சிப் போக்கின் போது புறவய ரீதியாக, சித்தத்தையும் சுய உணர்வையும் சாராமல் மனிதர்களிடையே ஏற்படும் குறிப்பிட்ட பொருளாதாரத் தொடர்புகளும் உறவு களும்தான் உற்பத்தி (அல்லது பொருளாதார) உறவுகள் எனப்படுகின்றன. இந்த உற்பத்தித் தொடர்புகள், உறவுகளின் வரம்புகளுக்குள் தான் (இவை எப்போதுமே உணரப்படுவதில்லை, கண்ணுக்குத் தெரிவதில்லை) இயற் கையின் பாலான மனித உறவு நிலவுகிறது, சமூக உற்பத்தி நடைபெறுகிறது. சமூக உறவுகளின் அமைப்பில் பொருளாதார உறவுகள் தீர்மானகரமான பங் காற்றுகின்றன, சமூக உறவுகளின் அடிப்படையாக, அடித்தளமாகத் திகழுகின்றன. பொருளாதார உறவுகள் எப்படிப்பட்டவையோ, இறுதியில் அரசியல், சட்ட, மற்ற சமூக உறவுகளும் அப்படிப்பட்டவையே.

உற்பத்தி நிகழ்ச்சிப் போக்கின் போது பொருளாதார உறவுகளைத் தவிர மனிதர்களிடையே, உற்பத்தியின் தொழில் நுட்பத்துடனும் உழைப்பை ஒழுங்கமைப்பதுடனும் நேரடியாகத் தொடர்புடைய உறவுகளும் உருவாகின்றன. தொழில் நுட்ப நிகழ்ச்சிப் போக்கின் கோரிக்கை களுக்கேற்ப பல்வேறு வேலைப் பிரிவுகளில் பணி புரியும் வேலையாட்களுக்கு இடையிலான உறவுகள், இவர்களின் நடவடிக்கைக்கான உரிய தலைமை ச போன்றவை மேற்கூறிய உறவுகளுக்கான உதாரணமாகும்.

உற்பத்தி உறவுகள் என்பது பொருளாயத நலன் களின் உற்பத்தி, வினியோகம், பரிவர்த்தனை மற்றும் நுகர்வின் (1 போது மனிதர்களிடையே தோன்றும் பொருளாதார உறவுகளின் அமைப்பாகும். உற்பத்தி உறவுகள் சுரண் டலிலிருந்து விடுவிக்கப்பட்ட மனிதர்களின் ஒத்துழைப்பு, பரஸ்பர உதவி உறவுகளாக இருக்கலாம், சோஷலிச சமுதாயத்தில் உற்பத்தி உறவுகள் இப்படிப்பட்டவைதான். அல்லது அடிமையுடைமை அமைப்பு, நிலப்பிரபுத்துவ அமைப்பு, முதலாளித்துவ அமைப்பில் இருப்பதைப் போல் ஆதிக்க உறவுகளாக, ஒரு சிலர் பெரும்பாலோ ரைக் கட்டுப்படுத்தி ஆளும் உறவுகளாக இருக்கலாம். அல்லது இவை உற்பத்தி உறவுகளின் ஒரு வடிவத்திலிருந்து இன்னொரு வடிவத்தை நோக்கிய மாற்ற உறவுகளாக இருக்கலாம். அந்தந்த உற்பத்தி உறவுகளின் தன்மை எதனால் நிர்ணயிக்கப்படுகிறது?

உற்பத்தி உறவுகளின் அமைப்பில் உற்பத்திச் சாதனங் களின் மீதான உடைமை வடிவம் தீர்மானகரமான பங்காற்றுகிறது. பூர்ஷ்வா விஞ்ஞானிகள் சாதாரண மாக உடைமை உறவுகளில் பொருட்களின் பாலான மனித உறவை மட்டுமே பார்க்கின்றனர். ஆனால் இது மிகவும் மேற்போக்கான கண்ணோட்டம். ஏனெனில் ஒரு குறிப்பிட்ட நபருக்கு ஏதோ ஒரு பொருள் அல்லது பல பொருட்கள் சொந்தமாக உள்ளன என்றால் (உதாரணமாக, தொழிற்சாலை சொந்தமாக உள்ள தெனில்) அவன் கண்டிப்பாக மற்ற மனிதர்களுடன் (உதாரணமாக, அத்தொழிற்சாலையின் தொழிலாளர் களுடன்) குறிப்பிட்ட உறவுகளைக் கொள்ள வேண்டும். பொருட்களின் பாலான உறவுகளின் பின், பொருட் களின் உறவுகளுக்குப் பின் மார்க்சிய அரசியல் பொருளா தாரம் பொருளாயத நலன்களின் உற்பத்தி நிகழ்ச்சிப் போக்கில் மனிதர்களிடையே ஏற்படும் உறவுகளைக் கண்டு அவற்றை வெளிப்படுத்துகிறது. இவற்றில் உற்பத்திச் சாதனங்களின் மீதான உடைமை உறவு களுக்குத்தான் தீர்மானகரமான பங்குண்டு. உற்பத்திச் சாதனங்கள் யாருடைய உடைமையாக இருக்கின்றன என்பதையும் எனவே உழைப்பின் விளைபொருட்களை யார் (உற்பத்திச் சாதனங்களை வைத்திருக்கும் தனிப் பட்ட வர்க்கங்களா அல்லது மொத்தத்தில் சமுதாயம் | முழுவதுமா) சுவீகரிக்கின்றனர் என்பதையும் உடைமை உறவுகள் காட்டுகின்றன.

உற்பத்திச் சாதனங்களின் மீதான சொத்துடைமை சமூக உற்பத்திப் பொருளின் வினியோக உறவுகளை மட்டுமின்றி சமுதாயத்தில் பல்வேறு வர்க்கங்கள், சமூக குழுக்களின் நிலையையும் நிர்ணயிக்கிறது. உற்பத்திச் சாதனங்கள் முதலாளி வர்க்கத்தின் தனியுடைமையாக இருக்கும் முதலாளித்துவத்தில், தொழிலாளர்கள் உற்பத்திச் சாதனங்கள் மறுக்கப்பட்ட பாட்டாளிகளாக இருக் கின்றனர். இவர்கள் உற்பத்தி செய்யும் பொருட்கள் யாவும் முதலாளிகளுக்குச் சொந்தமானவை. முதலாளி வர்க்கத் தனிச் சொத்துடைமை மனிதனை மனிதன் " சுரண்டுவதன் அடிப்படையிலானது.

மார்க்சிய அரசியல் பொருளாதாரம் ஏதோ சொத் துடைமையையே மறுப்பதாகச் சித்தரிக்க இதன் எதிரிகள் முயன்றனர், முயன்று வருகின்றனர். உண்மை யில் பாட்டாளி வர்க்கத்தின் புரட்சிகரப் போதனை என்ற வகையில் மார்க்சியமானது, பொதுவில் சொத் துடைமையை எதிர்க்கவில்லை, இதன் முதலாளித்துவ தனியுடைமை வடிவத்தைத்தான் எதிர்க்கிறது; வரலாற் றின் குறிப்பிட்ட ஒரு கட்டத்தில் இது பழையதாகிப் போகும், எனவே பொதுச் சொத்துடைமையால் மாற்றப்படும் என்கிறது மார்க்சியம்.

பொதுச் சொத்துடைமையின் அடிப்படையிலான சோஷலிச சமுதாயத்தில் உற்பத்திச் சாதனங்கள் உழைப்பாளிகள் அனைவருக்கும் சொந்தமானவை, இவர்கள் கூட்டாக உற்பத்தியில் பங்கேற்கின்றனர். எனவே உழைப்பின் விளைபொருட்களும் இவர்களுக்கு மட்டுமே சொந்தமானவை. உற்பத்திச் சாதனங்களின் மீதான சோஷலிச சொத்துடைமையான து, உழைப்பாளி களை ஒன்றிணைக்கிறது, சுரண்டலிலிருந்து விடு விக்கப்பட்ட மனிதர்களின் நலன்களின் பொதுமைக்கும், தோழமை ஒத்துழைப்பு, பரஸ்பர உதவிக்கும் வழி கோலுகிறது. இதுதான் சோஷலிச சமுதாயத்தின் பொருளாதார அமைப்பின் அடிப்படையாகும், இது சோஷலிசத்தின் கீழ் மக்களின் மற்ற எல்லா சமூக உறவுகளையும் நிர்ணயிக்கிறது.

ஆக, சொத்துடைமை என்பது மனிதர்கள், பொருளாய்த நலன் களை, எல்லாவற்றிற்கும் மேலாக உற்பத்திச் சாதனங்களை சுவீகரிப்பதன் குறிப்பிட்ட வரலாற்று சமூக வடிவமாகும். இதுதான் உற்பத்தியின் சமூக அமைப்பையும், இதன் சமூக-பொருளாதாரத் தன்மையை யும் நிர்ணயிக்கிறது,

ஏற்கெனவே குறிப்பிடப்பட்டபடி, சொத்துடைமை உறவுகள் எப்போதும் பொருட்களுடன், அதாவது உழைப்புச் சாதனங்கள், உழைப்புப் பொருட்களுடனும் உழைப்பின் விளைபயனாகிய உற்பத்திப் பொருட் களுடனும் தொடர்புடையவை. சொத்துடைமை உறவு கள் பொருட்களின் பாலான உறவுகள். இவை " சமுதாய ஒப்பந்தம்'', '' கடவுள் தந்த உரிமை'' அல்லது ''என் றென்றும் நிலையான இயற்கை விதிகள்'' (அதாவது முதலாளித்துவ சமுதாய விதிகள்) ஆகியவற்றின் அடிப்படையிலானவை என்று பூர்ஷ்வா பொருளாதார நிபுணர்களும் சமூகவியலாளர்களும் கூறுவது தவறானது. சொத்துடைமை என்பது வரலாற்றுக் கருத்துருவாகும், இது அந்தந்த வர்க்கத்தின் அடிப்படை ஜீவாதார நலன்களைப் பற்றியது.



No comments:

Post a Comment