Thursday 12 April 2018

சரக்கின் இரு காரணிகள், பயன்-மதிப்பும், பரிவர்த்தனை-மதிப்பும்


முதலாளித்துவப் பொருளுற்பத்தி முறை ஏற்பட்டுள்ள நாடுகளில் எல்லாம் செல்வம் என்பது, சரக்குகளின் பெரும் திரட்டாகக் காட்சி தருகிறது. அதனால் மார்க்ஸ் தமது “மூலதனம்” நூலை சரக்கின் பகுப்பாய்வில் இருந்து தொடங்குகிறார்.

சரக்கு என்றால் என்ன என்பதை தொடக்கத்திலேயே வரையறை செய்கிறார். முதலாவதாக சரக்கு நமக்கு புறத்தே உள்ள பொருளாகும். மனிதனது தேவைகளில் எதேனும் ஒன்றை அது நிறைவு செய்வதாக இருக்க வேண்டும். தேவைகள் எதுவாக இருந்தாலும் சரி அது சரக்குதான். அத் தேவை வயிற்றில் இருந்து தோன்றியானாலும் சரி, கேளிக்கையான ஆடம்பரப் பொருளில் இருந்து தோன்றினாலும் சரிதான். ஆக, சரக்கு என்பது பல்வேறு வழிகளில் பயனுள்ளதாகவும், சமூகத்தால் அங்கீகாரம் பெற்றதாகவும் இருக்க வேண்டும்.

சரக்கு உற்பத்தி என்பது முதலாளித்துவ உற்பத்தி முறையில் புதியதாய் தோன்றியது கிடையாது. சமுகத்தில் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தோன்றியது. குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் ஆதி பொதுவுடைமை சமூகத்தின் சிதைவு ஏற்பட்ட போது தோன்றியது.

சரக்கு உற்பத்தி எழுவதற்கான நிபந்தனைகள்

வேட்டையாடும் சமூகத்தினர், வேட்டையாடுவதற்கு உதவியாக சில காட்டு விலங்குகளை பழக்கப்படுத்தினர், பின்பு அதற்கு தேவைப்படுகிற பயிர்களை வளர்த்தனர். கூட்டுழைப்பை அடிப்படையாகக் கொண்ட இந்த ஆதி பொதுவுடைமை சமூகத்தில் சிறு உற்பத்திக் கருவிகளைப் பயன்படுத்தத் தொடங்கினர். இனக்குழுவுக்குள்ளேயே ஆண், பெண், வயது அடிப்படையில் உள்ள வேறுபாடுகள் ஆகியவற்றின் அடைப்படையில் இயற்கையான வேலைப் பிரிவினை ஏற்பட்டது. ஆனால் இதனை சமூக உழைப்புப் பிரினை என்று கூறிவிட முடியாது.

பயிர்சாகுபடியில் இருந்து, கால்நடை வளர்ப்பு தனியாகப் பிரிந்தது தான் பெரிய சமூக உழைப்புப் பிரிவினையாகும் (Social dividion of labour). விவசாயத்தில் இருந்து கைத்தொழில் பிரிந்தது இரண்டாவது பெரிய உழைப்புப் பிரிவினையாகும். இந்த வேலைப் பிரிவினை அடிப்படையிலேயே சரக்கு பரிமாற்றம் சமூகத்தில் தோற்றம் பெற்றது. இவைகள் சரக்கு பரிமற்றர்த்தின் எளிய தொடக்கமாகும், முதலாளித்துவ சமூகத்தில் சரக்கு உற்பத்தி உச்ச வடிவத்திற்கு செல்கிறது, முழுமை அடைகிறது.

சரக்கு உற்பத்தி தோன்றுவதற்கு, சமூக உழைப்புப் பிரிவினை முதன்மையான முன் நிபந்தனையாகும். குறிப்பிட்ட சரக்குகளை தனி மனிதர்கள் அல்லது சில குழுக்கள் பிரிந்துக் கொண்டு உற்பத்தியில் ஈடுபடுகின்றனர். சட்டை, பீரோ, அரிசி,  காலணி போன்ற எதேனும் ஒரு பொருளை பரிவர்த்தனை செய்து கொள்வதற்காக உற்பத்தி செய்கின்றனர். அதாவது தான் உற்பத்தி செய்கின்ற பொருளை பிற உற்பத்தியாளருக்காக உற்பத்தி செய்கின்றனர். அனைத்து உற்பத்தியாளர்களும் சேர்ந்து ஒரு சமூக உற்பத்தியாக கூட்டாக வாழ்கின்றனர். இக்கூட்டில் ஒருவர் மற்றொருவரின் சரக்கை சார்ந்தே இருக்கின்றனர்.

முதலாளித்துவ சரக்கு உற்பத்திக்கு முன்பாக எளிய சரக்கு உற்பத்தி முறையாகத் தான் இருந்து.

எளிய சரக்கு உற்பத்தியில் சிறு விவசாயிகளும் கைவினைஞாகளும் அடங்குவர். அவர்களது உற்பத்தி தனி மனித உழைப்பாக அல்லது சிறு உதவியாளரின் உதவியுடன் அமைந்த உற்பத்தியாக இருந்தது. எளிய சரக்கு உற்பத்தியும், முதலாளித்துவ சரக்கு உற்பத்தியும் தனி உடைமையை அடிப்படையாகக் கொண்டது தான். ஆனால் எளிய சரக்கு உற்பத்தியில் உற்பத்திச் சாதனங்கள் தனிஉடைமையாக பெற்றிருக்கவில்லை, முதலாளித்துவ உற்பத்தி முறையில் உற்பததிச் சாதனங்கள் படிப்படையாக தனி உடையையாகவும், மூலதனமாக செயற்படுவதற்கான பணம் திரட்டப்பட்டதாகவும் உள்ளது. முதலாளித்துவ உற்பத்தியில் ஈடுபடுபவர் தமது சொந்த பணத்தில் இருந்தே உழைப்புச் சக்தியை வாங்குகிறார். இவ்வாறு விலைக்கு வாங்கப்பட்ட உழைப்புச் சக்தியைக் கொண்டே உற்பத்திச் சாதனங்களை இயக்குகிறார். உழைப்புச் சக்தியை சரக்காக வாங்குவதே சரக்கு உற்பத்தி வளர்ந்துவிட்டதின் அறிகுறியாகும். முதலாளித்துவ உற்பத்தி முறைக்கு முன் நிபந்தனை, உற்பத்திச் சாதனங்கள் தனி உடையாக மாறுதல், உழைப்புச் சக்தியை சரக்காக கிடைத்தல்.

சரக்கும் சரக்குகளை படைக்கும் உழைப்பும்

சொந்த நுகர்வுக்கு இல்லாமல் பிறரது தேவையை நிறைவேற்றுவற்காக உற்பத்தி செய்வதே சரக்கு உற்பத்தியாகும். அதாவது ஒவ்வொருவரும் சமூகத் தேவைக்காக உற்பத்தி செய்வதாகும்.

சரக்கில் இரண்டு தன்மைகள் இணைந்து காணப்படுகின்றன. ஒன்று பயன் மதிப்பு, மற்றொன்று பரிவரித்தனை மதிப்பு, பரிவர்த்தனை மதிப்பை பொதுவாக மதிப்பு என்று அழைக்கப்படுகிறது.

ஒரு சரக்கை நுகர்வது அல்லது அதன் பயன்பாடு பயன்மதிப்பைக் குறிக்கிறது. அந்தப் பயன் மதிப்பு பௌதிக தன்மையாக அறியப்படுவதால், அந்தச் சரக்கிற்கு அப்பாற்பாட்ட வாழ்வுகிடையாது. எனவே தானியம், இரும்பு, தங்கம் போன்ற பொருளாயதமான ஒன்று என்ற அளிவில் பயனுள்ள பயன் மதிப்பாகும். சரக்கின் பயன்மதிப்பை எண்ணிக்கையைக் கொண்டு அளக்கப்படுகிறது,  200 மூட்டை தானியம், 2 டன் இரும்பு, 200 கிராம் தங்கம் போன்று எண்ணிக்கையில் அளக்கப்படுகிறது. பயன் மதிப்பின் உண்மைத் தன்மை நுகர்வதில் அல்லது அதனை பயன்படுத்துவதில் அடங்கியிருக்கிறது. இது செல்வம் அனைத்தின் சராமாக அமைகின்றன, அந்தச் செல்வத்தின் சமூக வடிவம் எதுவனாலும் பரிவர்த்தனை மதிப்பின் பொருளாயத சேமிப்பகங்களாக உள்ளன.

பரிவர்த்தனை மதிப்பின் முதன்மைத் தன்மை, ஒரு வகைப்பட்ட பயன்மதிப்புக்கும் மற்றொரு வகைப்பட்ட பயன்மதிப்புக்கும் ஒரு குறிப்பிட்ட விகிதாசாரத்தற்கு மாற்றிக் கொள்ளும்படியாக இருக்கிறது. மேலும் காலத்துக்கும் இடத்துக்கும் ஏற்ப இடைவிடாமல் மாறிக் கொண்டிருக்கும் உறவாக காட்சித் தருகிறது. அதனால் இது ஏதோ தற்செயலானதாகவும், முற்றிலும் ஒப்பிடத்தக்க முறையிலானதாகவும் காணப்படுகிறது. அதனால் சரக்குகளில் பிணைந்துள்ள, உள்ளார்ந்துள்ள பரிவர்த்தனை மதிப்பு என்பது சொற்களில் ஒரு முரண்பாடானதாகத் தோன்றுகிறது. ஆதலால் இதனை சற்று நெருங்கி ஆராய வேண்டும்.

குறிப்பிட்ட ஒரு சரக்கு 6 சட்டைக்கு, 1 கட்டிலுக்கு, 10 கிலோ அரிசிக்கு, 80 முட்டைக்கு என வெவ்வேறு விகிதாசாரங்களில் மற்ற சரக்குகளுக்கு பரிவர்த்தனை செய்து கொள்ளப்படுகிறது. இதன் மூலம் பரிவர்த்தனை மதிப்புகள் குறிப்பிட்ட விகிதங்களில் சமமான தன்மையில் மாற்றிக் கொள்ளப்படுவதை உணர முடிகிறது. மேலும் பரிவர்த்தனை மதிப்பானது அதில் அடங்கியுள்ள, ஆனால் அதில் இருந்து வேறுபடுத்திப் பார்க்கத்தக்க ஏதோ ஒன்றின் புலப்பாட்டு வடிவமாக இருக்கிறது.

இதனை இரண்டு உதாரணங்களை எடுத்துக் கொண்டு ஆராய்வோம். சட்டை, முட்டை ஆகிய இரண்டை எடுத்துக் கொள்வோம்.  குறிப்பிட்ட எண்ணிக்கையுள்ள சட்டைக்கும் குறிபிட்ட எண்ணிக்கையுள்ள முட்டைக்கும் சமப்படுத்தப்பட்டதனால் தான் இரண்டும் பரிமாற்றத்துக்கு உள்ளாகிறது. இதனை உற்று நோக்கும் போது, முதல் பொருளுக்கோ இரண்டாவது பொருளுக்கோ அல்லாத மூன்றாவது பொருளுக்கும் இவ்விரு பொருட்கள் சமமாக இருக்கக் கூடிய ஒன்றாக காண முடிகிறது. இதன் மூலம் ஒன்று தெளிவாகிறது, சரக்குகளின் பரிவர்த்தனை என்பது அதில் காணப்படும் பயன்மதிப்பை முழுமையாக நீக்கிவிட்டுப் பார்ப்பதே ஆகும்.

பயன்மதிப்பை நீக்கிவிட்டு அதனை நோக்கும் போது, சட்டை, கட்டில், அரிசி, முட்டை என்ற பொருளாயத பொருளாக இல்லாது போகிறது. அவற்றில் உருக்கொண்டுள்ள உழைப்பின் பல்வேறு வகைப்பட்ட பயனுள்ள தன்மை, அந்த உழைப்பின் ஸ்தூல வடிவங்கள் (Concrete forms) என்ற இரண்டையும் பார்வையில் இருந்து அகற்றிவிடுகிறோம். தற்போது சரக்கு அனைத்திலும் உள்ள பொதுவானது எதுவோ, அது மட்டுமே மீதமாய் நிற்கிறது. அது எது?

இப்போது, அனைத்துமே ஒரே வகையான பொதுவான ஸ்தூலமற்ற (சூக்குமமான) மனித உழைப்பாகத் தென்படுகிறது. அது பொருளுருவில் இல்லாத ஒரு யதார்த்தமாக ஆகிறது. தையல், நெய்தல் போன்ற பயனுறு உழைப்பைப் பொருட்படுத்தாமல், செலவிடப்பட்ட மனித உழைப்புச் சக்தியே இப்போது வெளிப்படுகிறது. அதாவது பொதுவான மனித உழைப்புச் சக்தியில் உருக்கொண்டிருக்கிறது என்பதையே சுட்டுகிறது.

சரக்கில் காணப்படும் பயன்மதிப்பை நீக்கிவிட்டு பார்க்கும் போது அதில் பொதுவான மனித உழைப்புச் சக்தியின் இறுகல் மட்டுமே எஞ்சியிருக்கிறது. அவை அனைத்தும் பொதுவான இந்த சமூக சாரத்தின் படிகங்களாக நோக்கும் போது அவையே மதிப்புகள் (Values) ஆகிறது.

மதிப்பின் பருமனை அளப்பதெப்படி?

பயன்மதிப்புள்ள ஒரு சரக்கு ஸ்தூலமற்ற மனித உழைப்பு அதில் உருக்கொண்டுள்ளது என்பதனாலேயே அது மதிப்பைப் பெற்றுள்ளது. மதிப்பின் பருமனை அளப்பதெப்படி என்று பார்ப்போம்.

சரக்கில் அடங்கியுள்ள, மதிப்பைப் படைக்கின்ற சாரமாகிய உழைப்பின் அளவைக் கொண்ட அளக்கப்படுகிறது.  பயன்மதிப்பை எண்ணிக்கையில் அளப்பது போல் பரிவர்த்தனை மதிப்பின் அளவு, உழைப்பின் நேர அளவைக் கொண்டு அளக்கப்படுகிறது.

ஒரு சரக்கின் மதிப்பு, அதில் அடங்கிய உழைப்பு நேரத்தைக் கொண்டு அளக்கப்படுகிறது என்றால், அதிக நேரம் எடுத்துக் கொண்ட, சோம்பேறியான தேர்ச்சியற்ற உழைப்பாளி, உழைக்கும் சரக்கிற்கு அதிக மதிப்பு பெறும் என்ற முடிவுக்கு வரக்கூடாது. மதிப்பின் சாரமாகிய உழைப்பு என்பது பொதுவான மனித உழைப்பாகும், ஓரேசீரான உழைப்புச் சக்தியின் செலவீடாகும்.

அனைத்து சரக்குகளினுடைய மதிப்புகளின் முழுமையில்,  உருபெற்றுள்ள சமூகத்தின் மொத்தமான உழைப்புச் சக்தியின் எண்ணில் அடங்கா தனித்தனி அலகுகளால் ஆனதாகவும், மனித உழைப்புச் சக்தியின் ஒருபடித்தான திரளாகவும் கணக்கிடப்படுகிறது. சமூக வழியில் அவசியமான உழைப்பு நேரம் என்ற அளவில் இவ்வலகுகள் அனைத்தும் ஒன்றே.

சமூக வழியில் அவசியமான உழைப்பு நேரம் எப்படி கணக்கிடப்படுகிறது என்று பார்ப்போம்.

கட்டில் செய்வதற்கு ஒவ்வொரு தச்சரும் வெவ்வேறு நேரத்தை எடுத்துக் கொள்வர். அனைத்துத் தச்சர்களின் உழைப்பு நேரத்தின் சராசரியே சமூக வழியில் அவசியமான உழைப்பு நேரம் ஆகும். ஒரு கட்டிலை செய்ய முதல்நபர் 3 மணிநேரத்தையும், மற்றொருவர் 5 மணி நேரத்தையும், மூன்றவது நபர் 4 மணிநேரத்தை எடுத்துக் கொள்வதாகவும் வைத்துக் கொண்டால் இதன் சராசரியான நான்கு மணி நேரத்தை சராசரி அவசியமான உழைப்பு நேரமாகக் கொள்ளப்படும். இதன்படி முதல் நபர் சராசரியைவிட 1 மணிநேரம் முன்னதாகவே செய்து முடிக்கிறார், இரண்டாம் நபர் 1 மணி நேரம் கூடுதலாக எடுத்துக் கொள்கிறார், மூன்றாம் நபரே சரியான சமூக வழியில் அவசியமான உழைப்பு நேரத்தையே எடுத்துக்கொண்டுள்ளார், அதனால் அவரிடம் எந்த நேர மாற்றமும் இல்லை.

அனைத்து சரக்கின் மதிப்பின் பருமனையும் இவ்வாறே சமூக வழியில் அவசியமான உழைப்பு நேரம் கொண்டே நிர்ணயிக்கப்படுகிறது. இந்த உழைப்பு நேரத்தைக் கொண்டே சரக்குகள் சமப்படுத்தப்படுகிறது.

ஒரு சரக்கின் உற்பத்திக்குத் தேவையான உழைப்பு நேரம் மாறாதிருந்தால், அச்சரக்கின் மதிப்பும் மாறதிருக்கும். உழைப்பின் உற்பத்தி திறன்கூடும் போது அதற்கு ஏற்ப உழைப்பு நேரம் மாறுதல் அடையும். அதனால் உழைப்பின் உற்பத்தித் திறன் ஒரே மாதிரியாக இருப்பதில்லை என்பதனால் அவ்வப்போது மாற்றங்களுக்கு உட்படும்.

உழைப்பே மதிப்பைப் படைக்கிறது என்பதை இதுவரை கண்டோம். வைரத்திற்கு அதிக மதிப்புக்கு, அதில் அடங்கியிருக்கின்ற உழைப்பு நேரமே காரணமாகும். கரித்துண்டை சிறிது உழைப்பை செலுத்தி வைராமாக மாற்றும் சூழ்நிலை ஏற்பட்டால், அப்போது வைரம் செங்கல்லின் மதிப்பைவிடக் குறைந்துவிடும்.

உழைப்பின் உற்பத்தி திறன் உயர்வாக இருக்கும் போது, அந்தளவுக்கு அச் சரக்கின் உற்பத்திக்குத் தேவைப்படுகிற உழைப்பு நேரமும் அதனடிப்படையில் அச் சரக்கின் மதிப்பும் குறையும். இதற்கு மாறாக உழைப்பின் உற்பத்தித் திறன் குறைவாக இருக்கும் போது அந்தளவுக்கு அச் சரக்கின் உற்பத்திக்குத் தேவைப்படுகிற உழைப்பு நேரமும் அதனடிப்படையில் அச் சரக்கின் மதிப்பும் அதிகரிக்கும்.

சொந்த நுகர்வுக்காக இல்லாமல் பிறருக்காக உற்பத்தி செய்யப்படுவதையே சரக்கு உற்பத்தி என்று அழைக்கப்படுகிறது. சொந்த பயன்பாட்டிற்காக உற்பத்தி செய்யப்படும் பொருட்களை சரக்கு என்று அழைக்கப்படுவதில்லை. அந்தப் பொருள் மதிப்பைப் பெறாமலே ஆனால் பயன்மதிப்பை மட்டும் கொண்டுள்ளது. எடுத்துக் காட்டாக கன்னி நிலமும், இயற்கையாகக் கிடைக்கும் புல்வெளிகளும் பயன்மதிப்பை மட்டும் பெற்றவையாகும். அதே போல் ஒரு பொருள் சரக்கா இல்லாமல், சொந்த உழைப்பைக் கொண்டு தனக்காக உற்பத்தி செய்யும் பொருளில் மனித உழைப்பு பெற்றிருந்தும் தனக்குப் பயன்படுத்திக் கொள்ளும் போது அது பயன்மதிப்பை பெற்றதாக இருக்குமே அன்றி சரக்காக இருக்க முடியாது. உற்பத்திப் பொருள் சரக்குகளாக வேண்டுமானால், அது பிறருக்கு பயன் படுபவையாகவும், அதாவது சமூகத்துக்கு பயன் மதிப்புள்ளவையாகவும் இருத்தல் வேண்டும். உற்பத்தி செய்யப்பட்டவை சமூகத்திற்கு பயன்படாதவையாகிப் போனால் அவைகள் சரக்காக கருதாமல் போவதோடு அதில் அடங்கிய உழைப்பும் பயனற்றுப் போகும். அது உழைப்பாக பயன்படாமல் போவதால் அதற்கு மதிப்பெதுவும் இல்லாது வீணாய்போகும்.

No comments:

Post a Comment