Wednesday, 26 June 2019

மார்க்சின் “மூலதனம்” நூல் பொருளாதாரத்தை மட்டும் பேசுகிறதா? இது பொருளாதார நூலா? அரசியலைப் பேசுகின்ற அரசியல் பொருளாதார நூலா?


மார்க்ஸ் மூலதன நூலுக்கு முன்பு எழுதிய "அரசியல் பொருளாதார விமர்சனத்துக்கு ஒரு பங்களிப்பு" என்ற நூலுக்கு எழுதிய முன்னுரையில் கூறப்பட்டுள்ளதை படித்தால், கம்யூனிஸ்டுகளுக்கு பொருளாதாரத்தின் மீதான அரசியல் என்ன என்பதை அறிந்து கொள்ளலாம். அது சமூக மாற்றமே அதாவது சமூக புரட்சியேயாகும். சமூக மாற்றம் அற்ற பாடமாக முதலாளித்துவ பொருளாதார அறிஞர்கள் மார்க்சின் மூலதனத்தை வெறும் பொருளாதார நூலாக, முதலாளித்துவ அமைப்பை விமர்சனம் மட்டும் செய்கின்ற நூலாக அறிமுகம் செய்கின்றனர்.

"மனிதர்கள் தங்களுடைய வாழ்க்கைக்காக ஈடுபடும் சமூக உற்பத்தியில் திட்டவட்டமான உறவுகளில் தவிர்க்க முடியாத வகையில் ஈடுபடுகிறார்கள். இந்த உறவுகள் அவர்களுடைய சித்தங்களிலிருந்து தனித்து நிற்பவையாகும், அதாவது அவர்களுடைய உற்பத்தியின் பொருளாயத சக்திகளில் வளர்ச்சியில் அந்தக் குறிப்பிட்ட கட்டத்துக்குப் பொருத்தமான உற்பத்தி உறவுகளாகும்.

இந்த உற்பத்தி உறவுகளின் கூட்டுமொத்தமே சமூகத்தின் பொருளாதார அமைப்பாக, அதன் உண்மையான அடித்தளமாக அமைகிறது. இதன் மீது சட்டம், அரசியல் என்ற மேற்கட்டமைப்பு எழுப்பப்பட்டு, அதனோடு பொருந்தக் கூடிய சமூக உணர்வின் குறிப்பிட்ட வடிவங்களும் உருவாகின்றன. பொருளாயத வாழ்க்கையின் உற்பத்தி முறை சமூக, அரசியல், அறிவுத்துறை வாழ்வின் பொதுவான போக்கை நிர்ணயிக்கிறது. மனிதர்களின் உணர்வுநிலை அவர்களுடைய வாழ்நிலையை நிர்ணயிப்பதில்லை, அவர்களுடைய சமூக வாழ்நிலையே அவர்களுடைய உணர்வுநிலையை நிர்ணயிக்கிறது.

வளர்ச்சியின் ஒரு குறிப்பிட்ட கட்டத்தில், சமூகத்தின் பொருளாயத உற்பத்திச் சக்திகள் அன்றைக்கிருக்கின்ற உற்பத்தி உறவுகளோடு - அல்லது அவற்றைச் சட்டபூர்வமான வார்த்தைகளில் வெளிப்படுத்துகின்ற சொத்துரிமை உறவுகளோடு - இதுவரை அவை இயங்கி வந்திருக்கின்ற சுற்றுவட்டத்துக்குள் மோதுகின்றன. இந்த உறவுகள் உற்பத்திச் சக்திகளின் வளர்ச்சிக்கான வடிவங்கள் என்பதிலிருந்து அவற்றின் மீது மாட்டப்பட்டிருக்கும் விலங்குகளாக மாறிவிடுகின்றன. இதன் பிறகு சமூகப் புரட்சியின் சகாப்தம் ஆரம்பமாகிறது."
(அரசியல் பொருளாதார விமர்சனத்துக்கு ஒரு பங்களிப்பு முன்னுரை)

மார்க்ஸ் எழுதிய மூலதன நூலைப் பற்றிய மதிப்புரையில் எங்கெல்ஸ் எழுதிகிறார்:-

"மூலதனத்தின் ஒரு முகமான குவிதல் மற்றும் திரட்சி என்பதோடு அக்கம்பக்கமாயும் அதே வேகத்தோடும் உழைக்கும் மக்கள் உபரி தொகையின் திரட்சியும் நடைபெறுகிறது. இவ்விரண்டும் சேர்ந்து முடிவில் ஒரு புறம் சமூகப் புரட்சியை அவசியமாக்கும் மறு புறத்தில் அதை சாத்தியமாக்கும் என்பதை நிரூபிக்கச் செய்யும் மார்க்சின் தற்படைப்பான சாதனையாகும்."
(மார்க்சின் "மூலதனம்" முதல் தொகுதி பற்றிய மதிப்புரை பக்கம் 15)

சோஷலிச சமூக மாற்றத்தை பேசாத, முதலாளித்துவ பொருளாதார அமைப்பை மட்டும் மூலதன நூல் பேசுகிறது என்பது அபத்தம் மட்டும் அல்ல, ஆபத்தானதாகும். சோஷலிச சமூக மாற்றத்தை சாத்தியமாக்கும் பொருளாயாத விளக்கத்தையே மூலதன நூல் நமக்கு சொல்கிறது.

எங்கெல்சின் வழிகாட்டுதலுடன் கீழ்காணும் மார்க்சின் வரிகளைப் படிக்கும் போது மூலதனம் என்னும் நூல் முதலாளித்துவம் பற்றிய நூல் மட்டும் கிடையாது, முதலாளிததுவத்தின் முடிவைப் பற்றியதும் ஆகும் என்பதை அறியலாம்.

மார்க்ஸ்:-
முடிவில், உற்பத்திச் சாதனங்களின் மையப்பாடும் உழைப்பின் சமூகமயமாதலும் வளர்ந்து செல்கையில், அவற்றின் முதலாளித்து மேலோடு அவற்றுக்கு ஒவ்வாததாகி விடும்நிலை வருகிறது. ஆகவே அந்த மேலோடு உடைத்தெளியப்படுகிறது. முதலாளித்துவத் தனியுடைமையின் சாவு மணி ஒலிக்கிறது. உடைமை பறிப்போரின் உடைமை பறிக்கப்படுகிறதுமூலதனம் (முதல் தொகுதி பக்கம் 1027)

முதலாளித்துவத்தின் முடிவும், சோஷலிச சமூகத்தின் தொடக்கமும் பற்றியே மூலதன நூல் பேசுகிறது.

அதுமட்டும் அல்லாது மூலதன நூல் கம்யூனிச சமூகம் பற்றியும் பேசுகிறது. சமூக மாற்றத்துக்கு அஞ்சுகிற முதலாளித்துவ அறிஞர்கள், மார்க்சின் மூலதன நூலை வெறும் முதலாளித்துவ அமைப்பைப் பற்றி விமர்சிக்கிறது என்பதாக சுருக்கிக் காட்டுகின்றனர்.

மூலதன நூல் வெறும் பொருளாதார நூல் தான் என்பதே முதலாளித்துவத்தின் சதி.

அரசியல் பொருளாதாரம் என்பது மனிதச் சமூக வாழ்வின் அடித்தளமான பொருளாயாச் செல்வ உற்பத்தியை எடுத்துரைக்கிறது. அதாவது உற்பத்தியின் சமூக அமைப்பு, உற்பத்தி நிகழ்வின் போது மனிதர்களிர்களுக்கு இடையே ஏற்படுகிற பொருளாதார உறவுகள், மனித சமூக வளர்ச்சியில் தோன்றுகின்ற பொருளாயத நலன்கள், மற்றும் உற்பத்தி, வினியோகம், பரிவர்த்தனை போன்றவற்றை நிர்வகிக்கும் விதிகளை ஆராய்கிறது.

இந்த விதி எவ்வாறு சோஷலிசப்புரட்சிக்கு இட்டுச் செல்கிறது என்பதையே மூலதன நூல் நமக்கு விளக்குகிறது. சோஷலிசப் புரட்சிக்கான விஞ்ஞானத் தன்மையை மூலதன நூல் நமக்கு அளிக்கிறது. அதனால் இது வெறும் பொருளாதார நூல் அல்ல அரசியல் பேசுகிற அரசியல் பொருளாதார நூலாகும்.

No comments:

Post a Comment