“முதலாளிகளைச் செல்வந்தர்களாக ஆக்குவது தான் முதலாளித்துவ
உற்பத்தியின் ஒரே நோக்கம். யாரைப் பலி கொடுத்து இது அடையப்படுகிறது?
சந்தையில் பண்டங்களை விற்று பணம் சம்பாதிக்கும்
முன்பாக இவற்றை உற்பத்தி செய்ய வேண்டும், உழைப்பால் மட்டுமே மதிப்பைத் தோற்றுவிக்க
இயலும். முதலாளி அடிமைச் சொந்தக்காரனோ, நிலப்பிரபுவோ இல்லை, தனது சொத்தாகப் பாவிக்கக்
கூடிய அடிமைகளோ, பண்ணையடிமைகளோ அவனிடம் இல்லை. ஆனால் அவனிடம் உற்பத்திச் சாதனங்கள்
உள்ளன, சமுதாயத்தில் இவை மறுக்கப் பட்ட பாட்டாளி வர்க்கம் உள்ளது. தொழிலாளி முதலாளியைத்
தனிப்பட்ட முறையில் சார்ந்திருக்கவில்லை, ஆனால் வாழ்வதற்காக அவன் தனது உழைப்புச் சக்தியை விற்க வேண்டியவனாகிறான்.
இதனை வாங்கும் முதலாளி மதிப்பை உருவாக்க வல்ல ஓரே பண்டத்தைப் பெறுகிறான்.
பண்டம் என்ற முறையில் உழைப்புச் சக்தி குறிப்பிட்ட
ஒரு மதிப்பிற்கு விற்கப்படுகிறது. மனிதனின் அவசியத் தேவைகள் பூர்த்தி செய்யப்பட்டால்
தான் அவனால் உழைக்க இயலும். ஒரு நாளில் தொழிலாளி குறிப்பிட்ட அளவு ரொட்டி, இறைச்சி,
வெண்ணெய், சர்க்கரையைப் பயன் படுத்துகிறான், ஆடைகள், காலணிகளை அணிந்து அவற்றை குறிப்பிட்ட
அளவு தேய்மானம் அடையச் செய்கிறான், வீட்டு வாடகைக்காகக் குறிப்பிட்ட அளவு பணத்தைச்
செலவழிக்கிறான்; முதலாளிக்கான புதிய உயிருள்ள "பண்டம்” வளர்ந்து வரும் குடும்பத்தை
அவன் பராமரிக்க வேண்டும். இதிலிருந்து உழைப்புச் சக்தியின் மதிப்பு, தொழிலாளியையும்
அவனது குடும்பத்தையும் பராமரிப்பதற்கு அவசியமான வாழ்க்கைச் சாதனங்களின் மதிப்பிற்குச்
சமமானது.
உழைப்புச் சக்தியின் மதிப்பின் முழுமுதல் அளவு பல்வேறு
நாடுகளில் வெவ்வேறு காலகட்டங்களில் வெவ்வேறு மாதிரியானது. இது இயற்கைச் சூழ்நிலைகளையும்
வரலாற்று ரீதியாக உருவாகியுள்ள உழைப்பாளிகளின் வாழ்க்கைத் தரத்தையும் பொறுத்தது. உற்பத்தியின்
வளர்ச்சி, தொழில்நுட்ப முன்னேற்றம் போன்ற பொருளாதாரக் காரணங்களும் இதைப் பாதிக்கின்றன.
ஒரு புறம் உழைப்பின் உற்பத்தித் திறன் வளர்ச்சி தொழிலாளர்களுடைய வாழ்க்கைச் சாதனங்களின்
மதிப்பைக் குறைப்பதால் உழைப்புச் சக்தி மதிப்பைக் குறைக்கிறது. மறு புறம் நகரங்கள்
வளர்ந்து வருவதால் போக்குவரத்துச் செலவினங்கள் அதிகமாகின்றன, எரிவாயு, தொலைபேசி போன்ற
புதிய வீட்டு வசதிகளுக்கான செலவுகள் கூடுதலாகின்றன. புதிய கலாச்சாரத் தேவைகள் தோன்றுகின்றன.
வளர்ச்சியடைந்த முதலாளித்துவ நாடுகளிலுள்ள நவீன தொழிலாளியால் பத்திரிககைகள், திரைப்படம்,
வானொலி, தொலைக்காட்சி இல்லாமல் இருக்க இயலாது. தொழிலாளியின், அவனது குடும்பத்தின் தேவைகள்
வளருகின்றன என்றால் உழைப்புச் சக்தியின் மதிப்பு கூடுதலவாகிறது.
தமது நிலைமையை மேம்படுத்துவதற்காக முகலாளிகளுக்கு
எதிராக பாட்டாளி வர்க்கம் நடத்தும் வர்க்கப்போராட்டமும் உழைப்புச் சக்தியின் மதிப்பின்
அளவு மீது தாக்கம் செலுத்துகிறது.
உழைப்புச் சக்தியை வாங்கிய முதலாளி இதை உற்பத்திச்
சாதனங்களுடன் ஒன்றிணைக்கிறான், ஆலைகள் கட்டப்பட்டு மூலப்பொருள் கொணரப்பட்டு தொழிலாளி
இயந்திரத்தின் முன் நின்றதும் காரியம் துவங்குகிறது.
உழைப்புச் சக்தியின் பங்கும் உற்பத்திச் சாதனங்களின்
பங்கும் வெவ்வேறானவை. உழைப்புச் சக்தி புதிய மதிப்பைத் தோற்றுவிக்கிறது. ஆனால் உற்பத்திச்
சாதனங்களால் எந்தவித மதிப்பையும் தோற்றுவிக்க இயலாது. உற்பத்திச் சாதனங்களின் மதிப்பு
தொழிலாளிகளின் உழைப்பால் தக்க வைக்கப்பட்டு, இந்தச் சாதனங்கள் தேய்மானம் அடைவதைப் பொறுத்து
புதிதாக உற்பத்தி செய்யப்படும் பண்டங்களுக்கு மாற்றப்படுகிறது. உதாரணமாக, ஒரு இயந்திரத்தால்
10 ஆண்டுகள் வேலை செய்ய முடியுமெனில் ஒவ்வொரு ஆண்டும் இது தனது மதிப்பில் பத்திலொரு
பங்கை இழக்கிறது, இந்தப் பகுதி புதிதாக உற்பத்தி செய்யப்பட்ட பண்டத்தின் மேல் மாற்றப்படுகிறது.
மூலப் பொருள், உதாரணமாக பருத்தி தயாரான வடிவத்தில் புதிய பொருளாகிய பருத்தித் துணியில்
முற்றிலுமாக இடம் பெறுகிறது, பருத்தியின் மதிப்பு முழுவதும் துணியின் மதிப்பிற்கு மாற்றப்படுகிறது.
குளிர்கால மேலாடைக்குத் தேவையான துணி, உள்துணி,
பொத்தான்கள் போன்றவற்றின் விலை 50 டாலர்கள், தையற்கூலி 30 டாலர்கள் என்றால் தயாரான
இந்த மேலாடையின் விலை 80 டாலர்களாயிருக்கும். 50 டாலர்களுக்குச் சமமான பழைய மதிப்பு
தையற்காரனால் தக்கவைக்கப்பட்டு மேலாடைக்கு மாற்றப்பட்டது. குறிப்பிட்ட உழைப்பின் போக்கில்
தையற்காரனால் உருவாக்கப்பட்ட புதிய மதிப்பு 30 டாலர்களாகும்.
முதலாளித்துவ உற்பத்திப் போக்கில் தொழிலாளியால்
தோற்றுவிக்கப்படும் புதிய மதிப்பு தனது அளவில் அவனது உழைப்புச் சக்தியின் மதிப்பைவிட
அதிகமாயிருக்கிறது.
ஒரு மணி நேரத்தில் தொழிலாளி 2 டாலர்களுக்குச் சமமான
புதிய மதிப்பைத் தோற்றுவிக்கிறான், ஒரு நாள் உழைப்புச் சக்தியின் மதிப்பு 10 டாலர்கள்
என்று வைத்துக் கொள்வோம். இப்படிப்பட்ட நிலையில் அவன் இதை ஈடு செய்வதற்காக 5 மணி நேரம்
வேலை செய்ய வேண்டும். ஆனால் தொழிலாளி ஏதோ ஒரு அளவு உழைப்பை விற்கவில்லை, மாறாக தனது
உழைப்புச் சக்தியை விற்கிறான், இதை வாங்குபவன் இதை விருப்பப்படி பயன்படுத்துகிறான்.
எனவே பாட்டாளி வேலை நாள் முழுவதும் உழைக்கிறான். இந்த வேலை நாள் 8 மணி நேரம் நீடிக்கும்
என்றால் தொழிலாளி . இந்நேரத்தில் 16 டாலர்களுக்குச் சமமான புதிய மதிப்பைத் தோற்றுவிக்கிறான்.
இவ்வாறாக உற்பத்திப் போக்கில் தொழிலாளி தனது உழைப்பின் மூலம் தனது உழைப்புச் சக்தியின்
மதிப்பைவிட அதிக மதிப்பைத் தோற்றுவிக்கிறான்.
முதலாளியால் இலவசமாக அபகரிக்கப்படும் இந்த வித்தியாசம்
தான்--உபரி மதிப்பு-அவனது செல்வத்தின்
மூல ஊற்றகும்.
இவ்வாறாக உபரி
மதிப்பை உற்பத்தி செய்து அதை முத லாளிகள்
அபகரிப்பதில்தான் முதலாளித்துவச் சுரண்டலின் சாரம் அடங்கியுள்ளது. எனவே கூலியுழைப்பு
முறை என்பது கூலி அடிமை முறையாகும்.”
(சமூக விஞ்ஞானம் – முன்னேற்றப் பதிப்பகம் -1985- பக்கம் 144
- 147)
No comments:
Post a Comment