Thursday, 28 December 2017

4. பொருளாதார விதிகள்

உற்பத்தியில் சமூக உறவுகளும் அவற்றின் இயல்பான தற்செயல் தொடர்புகளும் பொருளாதார விதிகளில் வெளிப்படுகின்றன. பொருளாதார விதிகள் புறவயமானவை. அதாவது அவை மனிதர்களின் சித்தம், உணர்வு ஆகிய வற்றைச் சாராத சுதந்திரமானவை. உற்பத்திச் சக்திகளின் தரத்தால் தீர்மானிக்கப்படும் புறவயத் தன்மையுடைய உற்பத்தி உறவுகளினால் அவை சுதந்திரமானவையாக உள்ளன. இத்தகைய விதிகள் வரலாற்று பூர்வமானவை. ஏனெனில் அவை வரலாற்றுப் பூர்வமாக நிலவும் உற்பத்தி உறவுகளை வெளிப்படுத்துகின்றன.

பொருளாதார விதிகளின் செயல்பாடு உற்பத்தி உறவுகளின் தன்மையைப் பொறுத்துள்ளது. தனிச் சொத்துரிமையால் மக்கள் பிரிக்கப்படும் முதலாளித்துவ சமுதாயத்தில் பொருளாதார விதிகள் தன்னியல்பாக செயல்படுகின்றன. வர்க்கப் போராட்டம், போட்டி ஆகியவற்றால் அவை தெளிவாக்கப்படுகின்றன. சோஷலிச சமுதாயத்தில் உணர்வு பூர்வமான முறைப்படுத்தப்பட்ட மக்களின் நடவடிக்கையால் அவை நிறைவேற்றப்படுகின்றன.
.....
மக்கள் பொருளாதார விதிகளைப் பற்றிய அறிவினைப் பெற்று அவற்றைப் பயன்படுத்துகிறார்கள். ஆனால் இந்த அறிவின் எல்லை, பொருளாதார விதிகளைப் பயன்படுத்தும் எல்லை, பொருளாதார விதிகளைப் பயன்படுத்தும் எல்லை, நோக்கங்கள் ஆகியவை மீண்டும் உற்பத்தி உறவுகளால் தீர்மானிக்கப்படுகின்றன.

ஒவ்வொரு சமூக-பொருளாதார முறைக்கும் பொருளாதார விதிகள் அமைப்பு ஒன்று உண்டு. அவற்றில் குறிப்பிட்ட சமுக முறைக்கு உரிய விதிகளும் சமுதாயம் வாழ்வதற்கான பொதுப்படையான நிபந்தனைகளே வெளிப்படுத்தும் விதிகளும் அடங்கியுள்ளன. மேலும் சில விதிகள் ஒரே ஒரு சமுக பொருளாதார அமைப்புக்கு மட்டும் அடங்கியதாக இராது. அவைகள் ஒன்றுடன் ஒன்று பின்னிப் பிணைக்கப்பட்டவை. ஆனால் ஒவ்வொன்றும் உற்பத்தி உறவுகளின் குறிப்பட்ட அம்சங்களே வெளிப்படுத்தும், குறிப்பிட்ட உற்பத்தி முறையை ஆளுகின்ற அடிப்படைப் பொருளாதார விதியால் மொத்தமாக குறிப்பிட்ட உற்பத்தி உறவுகளின் சாரம் வெளிப்படுத்தப்படுகிறது.

அரசியல் பொருளாதாரம் உற்பத்தி உறவுகளைப் பற்றியது. எனவே இயல்பாகவே அது, சமுதாய வளர்ச்சியின் வெவ்வேறு கட்டங்களில் பொருளாயத நன்மைகளின் உற்பத்தி வினியோகம் ஆகியவற்றை ஆளுகின்ற பொருளாதார விதிகளைக் கவனிக்கிறது.

எதார்த்த வாழ்க்கை பொருளாதார விதிகளை அறிவதற்கான தோற்றுவாயாகவும், விஷயங்களின் பெருக்கத்தாலும் பல்வகைப்பட்ட இயல் நிகழ்சசிகளாலும் குணாம்சப்படுத்தப்பட்டதாகவும் உள்ளது. ஆழமாக அடிபட்ட நடைமுறைகளை வெளிப்படுத்துவதற்காக விஞ்ஞானப் பூர்வமான பிரித்தெடுக்கும் முறையையே தேர்ந்து எடுக்க வேண்டும். அதன்படி நம் கவனத்திற்குட்பட்டவற்றின் உண்மைப் பொருளை ஆழமாகப் பார்த்து தேவையற்றதை விட்டுவிட வேண்டும். ஆராயப்படும் இந்த நிகழ்ச்சிப் போக்குகள் அவற்றின் பண்பு, அளவு ஆகியவற்றின் நிச்சயத் தன்மையாலும் அவற்றின் வளர்ச்சியாலும் மதிப்பிடப்படு கின்றன. அவற்றின் வளர்ச்சியானது உள் முரண்பாட்டின் அடித்தளத்தில் நடைபெறுகிறது. இவ்வாறு தத்துவம் மிகத் திட்டமாக ஆக்கப்படுகிறது. பிரித்து ஆய்தல், தொகுத்தாய்தலால் ஈடு செய்யப்படுகிறது. தணிவிதியிலிருந்து பொது விதிக்குச் செல்வதும், பொது விதியிலிருந்து தனிவிதிக்குச் செல்வதும் சேர்க்கப்படுகிறது. தர்க்க ரீதியான சிந்தனை ஒட்டம் உண்மையிலேயே வரலாற்றுப் பூர்வமான வளர்ச்சியைப் பிரதிபலிக்கிறது.

பூர்ஷ்வா சித்தாந்தவாதிகள் பொருளாதார நடைமுறை சாரத்திற்குள் நுழைவதில்லை. அவர்கள் மேம்போக்காகத் தெரியும் விஷயங்களை மட்டும் விவரித்து வகைப்படுத்துகிறார்கள். இந்த அணுகுமுறை எதார்த்தத்தில் முதலாளித்துவம் இருப்பதைவிட, நன்றாக இருப்பதாக அவர்களை எண் ணும்படி செய்கிறது. முதலாளித்துவ சுரண்டல் மேற்போக்கில் மறு உருவத்திலுள்ளது. அநேக பூர்ஷ்வா பொருளா தாரவாதிகள் பொருளாதார விதிகள் இருப்பதையே மொத்தமாக மறுக்கின்றனர். மற்றவர்கள் ''உலகம் முழுவதும் பொருந்தக் கூடியதும் அழிவற்றதுமான விதிகளை'' முன்வைக்கின்றனர். வரலாற்று பூர்வமாக நிலையற்றதான ஒரு இயல் நிகழ்ச்சியை தத்துவ அளவில் சர்வவியாபகமானதாகவும் அழியாததாகவும் இருப்பதாக அவர்கள் கூறுகிறார்கள்.


(“அரசியல் பொருளாதாரத்தின் அடிப்படைகள்” எம்.என்.ரின்டினா, ஜி.பி.செர்னிக்கவ், ஜி.என்.ஹீடக்கோர்மவ் முன்னேற்றப் பதிப்பகம்)

Wednesday, 27 December 2017

3. உற்பத்திச் சக்திகளுக்கும் உற்பத்தி உறவுகளுக்கும் இடையேயுள்ள தொடர்பு

உற்பத்தி உறவுகள் இறுதியாக உற்பத்திச் சக்திகளின் வளர்ச்சி, குணம்சம், தரம் ஆகியவற்றைப் பொறுத்துள்ளன. புராதன சமுதாயத்தின் உற்பத்திச் சக்திகளின் தாழ்ந்த நிலைக்கு ஏற்ப உற்பத்திச் சாதனங்களின் கூட்டுடைமை, கூட்டுழைப்பு, சமமான வினியோகம் ஆகியவை இருந்தன. உற்பத்திச் சக்திகளின் வளர்ச்சி இறுதியாக உற்பத்தி உறவுகளில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தியது. எது எப்படியாயினும் சமுதாய உற்பத்தி உறவுகள் செயலற்றவையாக இல்லை. அவை உற்பத்தி சக்திகளின் வளர்ச்சியின் மீது செல்வாக்குச் செலுத்துகின்றன. புதிய உற்பத்தி உறவுகள் உற்பத்திச் சக்திகளின் வளர்ச்சியை மேம்படச் செய்கிறது. ஆனல் பின்னால் அவை இவற்றின் மேல் ஒரு தடையாகச் செயல் படுகின்றன. உற்பத்தி சக்திகளும் அவற்றின் சமுதாய வடிவமும் ஒன்றுடன் ஒன்று முரண்படுகின்றன. இத்தகைய முரண்பாடு சமுதாயப் புரட்சிக்கான பொருளாதார அடிப்படையை அமைக்கிறது.

உற்பத்தியில் சமூக உறவுகளைப் பற்றி அரசியல் பொருளாதாரம் ஆராயும் பொழுது உற்பத்திச் சக்திகளின் வளர்ச்சியின் மீது அவற்றின் தாக்கத்தைக் கவனிக்கிறது. இக்காரணத்தினால் தற்காலத்திய விஞ்ஞான-தொழிற்நுட்ப புரட்சியின் காரணங்களும் அதன் விளைவுகளும் போன்றப் பிரச்சினைகள் அரசியல் பொருளாதாரத்தின் ஆய்வுப் பொருளுக்குள் வருகின்றன.

உற்பத்திச் சக்திகளும் உற்பத்தி உறவுகளும் ஒரு குறிப்பிட்ட வரலாற்று இணைப்பில் உற்பத்தி முறையை உருவாக்கு கின்றன. ஐந்து வகையான உற்பத்தி முறைகள் உள்ளன. அவையாவன: புராதன-கூட்டுவாழ் குழு உற்பத்தி முறை, அடிமையுடைமை உற்பத்தி முறை, நிலப்பிரபுத்துவ உற் பத்தி முறை, முதலாளித்துவ உற்பத்தி முறை, கம்யூனிச உற்பத்தி முறை. கம்யூனிச உற்பத்தி முறையின் முதல் கட்டம்தான் சோஷலிசம்,

 (“அரசியல் பொருளாதாரத்தின் அடிப்படைகள்” எம்.என்.ரின்டினா, ஜி.பி.செர்னிக்கவ், ஜி.என்.ஹீடக்கோர்மவ் முன்னேற்றப் பதிப்பகம்)

2. உற்பத்தி உறவுகள்

உற்பத்தி நிகழ்ச்சிப் போக்கால் இயற்கையை மாற்றும் அதே நேரத்தில் மக்கள், ஒரு வருடன் ஒருவர் சமூக உறவுகளைக் கொள்ளுகின்றனர். அத்தகைய உறவுகள்தான் உற்பத்தி உறவுகள் எனப்படும். பொருளாயத நன்மைகளை மக்கள் உரிமையாக்கிக் கொள்ளும் உறவுகளுக்குச் சொத்து உறவுகள் எனப் பெயராகும். அவை உற்பத்தி முறையில் தோன்றும். ஏனெனில் “உற்பத்தி என்பது எப்பொழுதும் குறிப்பிட்ட ஒரு அமைப்பு முறைக்குள்ளும் சமூக அமைப்பு முறையின் உதவியாலும் தனிமனிதனால் இயற்கை தனதுரிமையாக்கப் படுகிறது.” சமூக சொத்து உறவு, தனிச் சொத்து உறவு என இருவகை சொத்து உறவுகள் உள்ளன.

உழைப்புச் சக்தி எவ்வாறு உற்பத்திச் சாதனங்களுடன் இணைக்கப்பட்டுள்ளது என்பதனைச் சொத்துறவுகள் தீர்மா னிக்கும். உற்பத்தி உறவுகள் என்பதில் சொத்துறவுகள் தவிர் உற்பத்தி நிகழ்ச்சிப் போக்கில் மக்களிடையே நடை பெறும் செயல் பரிமாற்றமும் உள்ளடங்கும். தனியார் சொத்து உரிமை என்ற அடிப்படையில் உருவான ஒரு சமுதாயத்தில் இத்தகையப் பரிமாற்றம் பல்வேறு உருவங்களில் சுரண்டல், போட்டி ஆகியவற்றில் தவிர்க்க முடியாத அளவு ஈடுபடுகிறது. பொதுச் சொத்துரிமை என்ற அடிப்படையில் உருவான ஒரு சமுதாயத்தில் உழைப்புப் பரிமாற்ற நடவடிக்கையானது, தானாக முன்வந்து ஒத்துழைத்தல், ஒருவருக் கொருவர் உதவுதல் என்ற உணர்வில் செயல்படுகிறது.

உற்பத்தி உறவுகள் வினியோக உறவுகளின் குணாம்சத்தையும் தீர்மானிக்கின்றன. உற்பத்திச் சாதனங்கள் ஒரு குறிப்பிட்ட குழுக்களாலோ வர்க்கங்களாலோ ஏகபோக மாக்கப்பட்டால், இந்த ஆதிக்கக் கும்பல்கள் செய்பொருள்களில் ஒரு பெரும் பங்கினை உரிமையாக்கிக் கொள்ளும். அதே நேரத்தில் உழைப்பாளிகள் மீண்டும் உற்பத்தி செய்வதற்கு, உற்பத்திச் சக்தியைப் பெறத் தேவையான குறைந்தபட்ச சாதனங்களைக் கூட பெறுவதில்லை. அதற்கு மாறாக உற்பத்திச் சாதனங்கள்-அதன் விளைவாக உற்பத்தியான எல்லா செய்பொருள்களும்-மக்களுக்குச் சொந்தமானால் இந்தச் செய்பொருள்கள் சமுதாயம் முழுவதின் நலனில் அக்கறை கொண்டு வினியோகிக்கப்படும்.

அடுத்த முக்கியமான பொருளாதார உறவுகள் நுகர்வு உறவுகள் ஆகும். நுகர்வு என்பது உற்பத்திக்கான காரணமாகும். மேலும் மறு உற்பத்தி முறையில் அது ஒரு பகுதியாகும். நுகர்வின் அளவும் தேவைகளின் தன்மைகளும் உற்பத்தியைப் பொறுத்துள்ளது. சுரண்டல் சமுதாயங்களில் புல்லுருவித்தனமான நுகர்வு அமைப்பு நிலவுகிறது. அத்தகைய சமுதாயங்களில் உழைப்பாளிகள் தரக்குறைவான மலிவான பொருள்களைத்தான் நுகரவேண்டியுள்ளது.

சர்வதேச பொருளாதார உறவுகளுக்கு ஒரு தனியிடம் உண்டு. மார்க்ஸ் அவற்றை இரண்டாவதானது என விவரித்தார். அதன் பொருளாவது அவை ஆரம்ப உற்பத்தி உறவுகளின் குணம்சத்தைப் பொறுத்துள்ளவை என்பதாகும். அவற்றின் முக்கியத்துவம் மேலும் மேலும் உயர்ந்து கொண்டேயிருக்கின்றது. முதலாளித்துவ உலகில் தற்காலத்தில் அநேக விதமான சர்வதேசப் பொருளாதார உறவுகள் இருக்கின்றன. உலக சோஷலிச அமைப்பின் தோற்றத்துடன் புதிய சர்வதேசப் பொருளாதார உறவுகள் தோன்றியுள்ளன.

உற்பத்தி உறவுகளின் பல்வேறு விதமான அம்சங்கள் ஒரு ஒருங்கிணைந்த அமைப்பை உண்டாக்குகின்றன. அதில் எல்லாப் பகுதிகளும் செல்வாக்கு செலுத்துகின்றன. மேலும் ஒன்று மற்றதன் செல்வாக்கிற்கு உட்படுகிறது. ஆனால் உற்பத்திச் சாதனங்களின் உடைமை உறவுகள் இந்த முறையில் முதன்மையான பங்காற்றுகின்றன. ஏன் எனில் அவை எல்லா பொருளாதார உறவுகளையும் ஒரே மொத்தமாக இணேத்து சமுதாயத்தின் முக்கிய குணாம்சங்களை நிறைவாக்கிக் கொடுக்கின்றன.

உற்பத்தி சாதனங்களின் உடைமை உறவுகளின் தீர்க்கமான முக்கியத்துவத்தைக் குறைக்க பூர்ஷ்வா சித்தாந்தவாதிகள் தடம் புரண்டு செல்லுகிறார்கள்.
.
அதே நேரத்தில் சமூகப் பொருளாதார உறவுகளில் உற்பக்திச் சாதனங்களின் உடைமை உறவுகள் முதன்மையான பங்காற்றுகின்றன என்பதனை நிகழ்ச்சிகள் எப்பொழுதையும் விட தீர்மானமாகக் காட்டுகின்றன. முக்கியமாக முதலாளித்துவத்தையும் சோஷலிசத்தையும் ஒப்பிடுவதிலிருந்து இது தெளிவாகும். அவ்விரு சமூக அமைப்புகளும் எதிரும் புதிருமாக இருப்பதற்கு எல்லாவற்றையும் விட முக்கிய காரணம் அடிப்படையிலேயே வேறுபட்ட உடைமை வடிவங்களைக் கொண்ட பொருளாதார அடிப்படையில் இவை அமைந்துள்ளன.

 (“அரசியல் பொருளாதாரத்தின் அடிப்படைகள்” எம்.என்.ரின்டினா, ஜி.பி.செர்னிக்கவ், ஜி.என்.ஹீடக்கோர்மவ் முன்னேற்றப் பதிப்பகம்)

1. உற்பத்திச் சக்திகள்

பொருள்களின் உற்பத்தியே மனிதகுல வாழ்வின் அடித்தளமாகும். வாழ்க்கைக்கு வலிமையளிக்க, உணவு, உடை, விடுகள் மற்றும் பிற முக்கிய தேவையான பொருள்களை மக்கள் உற்பத்தி செய்ய வேண்டியுள்ளது. உற்பத்தி முறையானது மனிதன் அல்லது சமுதாயம், இயற்கை ஆகியவற்றிற்கு இடையேயுள்ள பரஸ்பர செயலை உள்ளடக்கியதாகும். மனிதனுக்கும் இயற்கைக்கும் இடையேயுள்ள பரஸ்பர செயல் சமுதாய அமைப்பைப் பொருத்ததல்ல. அது உழைப்பு, உழைப்புப் பொருள்கள், உழைப்புக் கருவிகள் ஆகிய மூன்றின் சேர்க்கையாகும்.

உழைப்பு என்பது மனிதத் தேவைகளைத் திருப்தி செய்யக் கூடியவாறு இயற்கைப் பொருள்களை தகவமைப்பதைக் குறிக்கோளாகக் கொண்ட காரியார்த்தமான மனித நடவடிக்கையே. மனிதன் இயற்கையின் மீது செயல்படும் பொழுது அறிவையும் திறமையையும் சேகரிக்கிறான்; உழைப்பின் நிகழ்ச்சிப் போக்கில் மேம்பாடுகளைப் புகுத்துகிறான், ''ஓர் அர்த்தத்தில், உழைப்பு மனிதனையே சிருஷ்டித்தது என்று நாம் கூற வேண்டிய அளவுக்கு அது மானுட வாழ்வு முழுவதற்கும் முதன்மையான அடிப்படை நிபந்தனையாக உள்ளது’' (இயற்கையின் இயக்க இயல்) என்று எங்கெல்ஸ் குறிப்பிட்டார்.

உழைப்புப் பொருள்கள் என்பது மனிதன் தன்னுடைய உழைப்பைப் பயன்படுத்தும் இயற்கையில் காணக்கிடைப்பவையாகும். மண்ணுடன் கூடிய பூமியே சர்வவியாபகமான ஒரு உழைப்புப் பொருளாகும். ஏற்கெனவே உழைப்பு பயன்படுத்தப்பட்டு மேலும் மாற்றங்களுக்கு உட்படுத்தப்படும் பொருள்கள் கச்சாப் பொருள்கள் எனப்படும். விஞ்ஞானம் முன்னேற முன்னேற அதனுடன் உழைப்புப் பொருள்களின் வகைகள் விரிவடைகின்றன. புதிய உழைப்புப் பொருள்கள் தோன்றுகின்றன. எடுத்துக்காட்டு பல்பொருள் செயற்கை சேர்க்கமான பொருள்கள்.

உழைப்புக் கருவிகள் என்பன, உழைப்புப் பொருள்களின் மீது செயல்பட மனிதனால் பயன்படுத்தப்படும் கருவிகளாகும். உழைப்பதற்குத் தேவையான கருவிகள் அவற்றினுள் முதலாக அடங்கும். எலும்பும் தசையும் உற்பத்திக்கான உழைப்புக் கருவிகள் என்று மார்க்ஸ் குறிப்பிட்டார். உழைப்புக் கருவிகளை உற்பத்தி செய்வதிலிருந்துதான் உண்மையில் மனித உழைப்பு ஆரம்பித்தது. ஒவ்வொரு வரலாற்று உற்பத்தி சகாப்தத்தின் முக்கிய குணும்சம் அவற்றின் வளர்ச்சியின் அளவுதான். கற்கோடாரி, மண்வெட்டி, வில், அம்புகள் ஆகியவைகளே முதல் உற்பத்திக் கருவிகளாக இருந்தன. விஞ்ஞான நுணுக்கம் நிறைந்த நவீன இயந்திரங்கள் இன்று உழைப்புக் கருவிகளில் அடங்கும். போக்கு வரத்து வாகனங்கள், தொழிற்சாலைக் கட்டிடங்கள், நிறு வனங்கள் ஆகியவை கூட உழைப்புக் கருவிகளில் அடங்கும். பூமி கூட உழைப்புக் கருவியாகும்.

உழைப்புப் பொருள்கள் உழைப்புக் கருவிகள் இரண்டும் சேர்ந்து உற்பத்திச் சாதனங்கள் என அழைக்கப்படுகின்றன. மக்களால் அவை கையாளப்பட்டாலன்றி உற்பத்திச் சாதனங்கள் தாமாகவே எதையும் உற்பத்தி செய்துவிட முடியாது. உற்பத்தி அனுபவமும் திறமையும் கொண்ட மக்களும் உற்பத்திச் சாதனங்களும் உற்பத்திச் சக்திகள் என அழைக்கப்படுகின்றன. மக்களால் உற்பத்திக் கருவிகள் உருவாக்கப்பட்டு மேம்பாடடையச் செய்யப்படும் என்பதால் மக்களே முதன்மையான உற்பத்திச் சக்திகளாவார்கள். இயற்கையிடம் சமுதாயத்தின் செயல்வன்மையுள்ள போக்கை உற்பத்திச் சக்திகள் வெளிப்படுத்தும். இயற்கையின் மேல் மனிதனுடைய கட்டுப்பாட்டின் அளவை அவற்றின் வளர்ச்சி நிலை காட்டுகிறது. உற்பத்திச் சக்திகள் முன்னேற முன்னேற விஞ்ஞானம் அதிக அளவு பங்காற்றுகிறது. விஞ்ஞானம், அதுவே நேரடியாக ஒரு உற்பத்திச் சக்தியாக மாறுகிறது. தற்கால நிலைமையின் கீழ் விஞ்ஞான-தொழில் நுணுக்கப் புரட்சி ஒவ்வொரு உற்பத்திச் சக்தியையும் (புதிய உழைப்புக் கருவிகள், புதிய உழைப்புப் பொருள்கள், புதிய ஆற்றலின் மூலாதாரங்கள், மனித சக்தியின் பாலான புதிய தேவைகள்) விரிவடையச் செய்துள்ளது.

உற்பத்திச் சக்திகள் சமுதாய உற்பத்தியின் ஒரு அம்சத்தை உருவாக்குகின்றன. உற்பத்தியிலான சமுதாய உறவுகளில் அல்லது மக்களிடையே உள்ள பொருளாதார உறவுகளில் அடுத்த அம்சம் அடங்கியுள்ளது.

(“அரசியல் பொருளாதாரத்தின் அடிப்படைகள்” எம்.என்.ரின்டினா, ஜி.பி.செர்னிக்கவ், ஜி.என்.ஹீடக்கோர்மவ் முன்னேற்றப் பதிப்பகம்)

அரசியல் பொருளாதாரத்தின் ஆய்வுப் பொருள்

மார்க்சிய-லெனினிய அரசியல் பொருளாதாரமானது உற்பத்தி முறையில் மக்களிடையேயுள்ள சமூக உறவுகளைப் பற்றியதாகும். மனித சமுதாயத்தின் பல்வேறு வளர்ச்சிக் கட்டங்களில் பொருளாயத நன்மைகளின் உற்பத்தி, வினி யோகம், பரிமாற்றம், நுகர்வு ஆகியவற்றை ஆளுகின்ற பொருளாதார விதிகளை அது ஆராய்கிறது.


(இதனைத் தொடர்ந்து “அரசியல் பொருளாதாரத்தின் அடிப்படைகள்” என்ற மாஸ்கோவில் இருந்து முன்னேற்றப் பதிப்பகம் வெளியிட்டுள்ள நூலில் இருந்து சில பகுதிகளைப பார்ப்போம். இந்நூல் எம்.என்.ரின்டினா, ஜி.பி.செர்னிக்கவ், ஜி.என்.ஹீடக்கோர்மவ் ஆகிய மூவரால் எழுதப்பட்டது, தமிழில் 1982 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது.)



Wednesday, 7 June 2017

அரசியல் பொருளாதாரம் என்றால் என்ன? (கேள்வி-பதில் வடிவில் ஓர் எளிய அறிமுகம்)

1) அரசியல் பொருளாதாரம் எதனை ஆராய்கிறது?

பொருள் உற்பத்தி, வினியோகம், பரிவர்த்தனை, நுகர்வு ஆகியவற்றின் போது மக்களுக்கு இடையே ஏற்படுகிற உறவுகளை ஆராய்வது அரசியல் பொருளாதாரம் என்கிறது மார்க்சியம். தமது அரசியல் பொருளாதாரத்தை, விஞ்ஞானத் தன்மை பெற்றதாகக் கம்யூனிஸ்டுகள் கூறுகின்றனர்.

2) மார்க்சிய அரசியல் பொருளாதாரத்தின் உள்ளடக்கம் என்ன?

குறிப்பிட்ட ஒரு சமூகத்தில், உற்பத்தி உறவுகளின் தோற்றம், வளர்ச்சி, மறைவு ஆகிய கட்டங்களைப் பரிசீலனை செய்வது மார்க்சிய அரசியல் பொருளாதாரத்தின் உள்ளடக்கம் ஆகும்.

3) முதலாளித்துவ உற்பத்திமுறையைப் பற்றி மார்க்சிய அரசியல் பொருளாதாரம் என்ன சொல்கிறது?

அரசியல் பொருளாதாரத்தின் உள்ளடக்கத்தின்படியே முதலாளித்துவ உற்பத்தி முறையின் தோற்றத்தையும் வளர்ச்சியையும் இறுதியில் அதன் மறைவையும் விவரிக்கிறது.

4) பிரம்மாண்டமான முதலாளித்துவ உற்பத்திமுறை எப்படி மறையும்?

இந்த மறைவு என்பது மார்க்சின் தனிப்பட்ட விருப்பம் கிடையாது. முதலாளித்துவ உற்பத்தியில் காணப்படும் உள்முரண்பாடுகளே அதன் மறைவையும், அந்த மறைவை நிகழ்த்தப் போகும் பாட்டாளிகளையும் படைத்துள்ளது.

5) தொழிலாளர்களும் முதலாளிகளும் பரஸ்பரம் சமரசமாகப் பேசி தங்களது பிரச்சினையைத் தீர்த்துக் கொள்ள முடியாதா?

தொழிலாளர்களுக்கும் முதலாளிகளுக்கும் இடையேயான பிரச்சினை வெறும் மனம் சார்ந்ததாக மட்டும் பார்ப்பதால் தான் இந்தக் கேள்வி எழுகிறது. தொழிலாளர்கள், முதலாளிகள் ஆகியோரின் மனம் என்பது அவரவர்களின் தனிப்பட்ட நலன்களைச் சார்ந்து தோன்றுகிறது. முதலாளித்துவ உற்பத்திமுறையில் காணப்படும் முரணில் இவர்களின் நலன்கள் அடங்கியிருக்கின்றன. முதலாளித்துவ உற்பத்தியின் உள்முரண் இணக்கம் காணமுடியாத இரு வர்க்கமாகப் பிரிக்கிறது. அடித்தளம் மேற்கட்டமைப்பு என்கிற மார்க்சின் கருத்தாக்கம் இதனையே விவரிக்கிறது. இந்த அடித்தளம் மேற்கட்டமைப்பு என்கிற கருத்தாக்கமே வரலாற்றியல் பொருள்முதல்வாத தத்துவத்தின் அடிப்படையாக இருக்கிறது.

6) மார்க்சிய அரசியல் பொருளாதாரத்தின் வகையினங்கள் எவை?

தொடக்கநிலையில் அறிவதற்கான வகையினங்கள் சரக்கு, சரக்கின் இரட்டைத் தன்மை, சமூகவழியில் அவசியமான உழைப்பின் நேரம், உழைப்பின் இரட்டைத் தன்மை, பரிவர்த்தனை, பணம், மூலதனம், உழைப்பு சக்தி, உபரி மதிப்பு, மாறா மூலதனம், மாறும் மூலதனம், பொருளாதார நெருக்கடி, சமூக மாற்றம், உற்பத்தி முறை ஆகியவையாகும்.

7) சரக்கு (commodity) என்றால் என்ன?

முதலாளித்துவத்தில் செல்வம் என்பது சரக்குகளின் பெருந்திரட்டலாகக் காணப்படுகிறது. அதனால் தான் மார்க்ஸ் தமது “மூலதனம்” நூலை சரக்கு பற்றிய பகுப்பாய்வில் இருந்து தொடங்கினார். சரக்கு என்பது மனிதனின் தேவைகளை நிறைவு செய்கின்ற குணங்களைக் கொண்ட ஒன்று. அது உடுப்பதற்கான உடையாகவோ, சாப்பாட்டுப் பொருளாகவோ, மனதுக்கு மகிழ்வூட்டுவதாகவோ இருக்கலாம்.

8) சரக்கின் இரட்டைத் தன்மை என்றால் என்ன?

சொந்த நுகர்வுக்காக இல்லாமல் விற்பனைக்காக உற்பத்தி செய்யும் பொருள் சரக்காகும். சந்தைக்குச் செல்கின்ற அச்சரக்கு இரட்டைத் தன்மைகளைக் கொண்டுள்ளது. ஒன்று பயன்மதிப்பு மற்றொன்று பரிவர்த்தனை மதிப்பு. இந்த இரட்டைத் தன்மையை மார்க்சே முதன்முறையாகக் கண்டுபிடித்தார். மார்க்சிய அரசியல் பொருளாதாரத்திற்கு இந்தக் கண்டுபிடிப்பு மிகவும் முக்கியமானதாகும்.

9) பயன்மதிப்பு (use-value) என்றால் என்ன?

சரக்கு பரிவர்த்தனைக்காக உற்பத்தி செய்யப்பட்ட உழைப்பின் விளைபொருளாகும். இந்தப் பொருள் எதேனும் மனிதத் தேவையை நிறைவு செய்யும் வகையில் இருக்க வேண்டும். அந்த நிறைவேற்றமே பயன்மதிப்பு எனப்படும். அரிசி, இறைச்சி, பால் போன்றவை மனிதனின் உணவுத் தேவையை நிறைவு செய்கிறது. சட்டை, புடவை போன்றவை உடுக்கும் தேவையை நிறைவு செய்கிறது. கவிதை, கதை, நாடகம், திரைப்படம் போன்றவை கலை உணர்வை நிறைவு செய்கிறது. நுகர்வின் அல்லது பயன்படுத்துவதின் மூலம் பயன்மதிப்பு உண்மையாகின்றது.

10) பரிவர்த்தனை மதிப்பு (exchange-value) என்றால் என்ன?

சந்தையில் சந்திக்கின்ற சரக்குகள் ஒவ்வொன்றும் தம்முள் ஒப்பீட்டு மதிப்பைப் பெற்றுள்ளது. அதாவது 10 முட்டைக்கு ஒரு கிலோ அரிசி என்று ஒப்பீடப்படுகிறது. இந்த ஒப்பீடு அச்சரக்கில் செலுத்தப்பட்ட உழைப்பைக் கொண்டே நிகழ்த்தப்படுகிறது. அந்த உழைப்பின் மதிப்பே பரிவர்த்தனை மதிப்பு என்றழைக்கப்படுகிறது. சரக்குகளில் காணப்படும் பயன்மதிப்பை நீக்கிப் பார்க்கும் போது அதாவது உழைப்பின் ஸ்தூலமான வடிவங்களை நீக்கிவிட்டுப் பார்க்கும் போது அனைத்துக்கும் பொதுவான ஒரே உழைப்பாக ஸ்தூலமற்ற மனித உழைப்பாக இருக்கிறது. சந்தையில் பரிவர்த்தனை செய்திடும் போது பயன்மதிப்பை சற்றும் சார்ந்திராத பரிவர்த்தனை மதிப்பாகத் தன்னைக் காட்டிக் கொள்கிறது.

11) சரக்கில் செலுத்தப்பட்ட உழைப்பைக் கொண்டு மதிப்பை கணக்கிடும் போது திறம்பெற்ற உழைப்பாளியின் உழைப்பும், திறமற்ற உழைப்பாளின் உழைப்பும் சம மதிப்பைப் பெறுகிறதா?

இது சரியான கேள்வியே. ஒரு பொருளை உற்பத்தி செய்யத் திறமையான தொழிலாளி எடுத்துக் கொள்ளும் நேரத்தைவிட, திறம்குறைந்தவர் அதிக நேரத்தையே எடுத்துக் கொள்வார். இரண்டையும் வேறுபடுத்திப் பார்க்கவில்லையாயின், உழைப்பாளி எவ்வளவு அதிகம் சோம்பேறியாகவும் தேர்ச்சியற்றவராகவும் இருக்கிறாரோ, அவ்வளவு அதிகம் மதிப்புள்ளதாக அவரது சரக்கு இருக்கும், ஏனெனில் அவரது உற்பத்திப் பொருளில் அதிக உழைப்பு நேரம் செலவிடப்பட்டுள்ளது. ஆனால், அப்படிக் கணக்கிடப்படுவதில்லை, சமூகவழியில் அவசியமான உழைப்பின் நேரத்தைக் கொண்டே மதிப்புக் கணக்கிடப்படுகிறது.

12) சமூகவழியில் அவசியமான உழைப்பின் நேரம் என்றால் என்ன?

ஒரு புடவையைச் செய்ய ஒரு நெசவாளி 8 மணி நேரத்தை எடுத்துக் கொள்வதாகவும், மற்றொருவர் 4 மணி நேரம் எடுத்துக் கொள்வதாகவும், வேறொருவர் 6 மணி நேரத்தை எடுத்துக் கொள்வதாகவும் கொண்டால், மூவரின் சராசரி 6 மணிநேரமாகிறது. இந்தச் சராசரி உழைப்பின் நேரத்தை, சமூகவழியில் அவசியமான உழைப்பின் நேரம் என்று அழைக்கப்படுகிறது. முதல் நெசவாளி 8 மணிநேரம் எடுத்துக் கொண்டா லும் அதன் மதிப்பு 6 மணிநேரமாகும். இரண்டாவது உள்ளவர் 4 மணி நேரத்தில் முடித்தாலும் அதன் மதிப்பு 6 மணி நேரமாகும். மூன்றவது நபர் சாராசரி மதிப்புக்கு ஒத்த நேரத்தை எடுத்துக் கொள்வதால் அதே மதிப்பைப் பெறுகிறது.

13) உழைப்பின் இரட்டைத் தன்மை என்றால் என்ன?

ஒன்று ஸ்தூலமான உழைப்பு (concrete labour), மற்றொன்று ஸதூலமற்ற உழைப்பு. (abstract labour) இதுவும் மார்க்சின் கண்டுபிடிப்பே.

14) ஸ்தூலமான உழைப்பு என்றால் என்ன?

பொருள் என்னவாக உருவம் கொள்கிறதோ அதற்காக உழைப்பது ஸ்தூல உழைப்பாகும். துணி நெய்யப்பட்டதில் காணப்படும் நெசவும், தானியம் உற்பத்தி செய்யப்பட்டதில் காணப்படும் உழவும் ஸ்தூல உழைப்பு. முதலாவது துணியை உற்பத்தி செய்வதற்குச் செய்யப்பட்ட உழைப்பு, மற்றொன்று தானியத்தை உற்பத்தி செய்வதற்குச் செய்யப்பட்ட உழைப்பு. நெசவு, உழவு என்று இவை வெவ்வேறு வகையைச் சேர்ந்ததாக இருந்தாலும் இவை இரண்டும் பயன்படக்கூடியதே. இந்த ஸ்தூல உழைப்பே சரக்கின் பயன்மதிப்பைப் படைக்கிறது.

15) ஸ்தூலமற்ற உழைப்பு என்றால் என்ன?

பொருளை உற்பத்தி செய்யும் போது அதில் செலவிடப்படுகிற சக்தி அதாவது தசை மூளை போன்றவற்றைக் குறிக்கிறது. ஸ்தூலமான உழைப்பைச் சாராது தனியே பரிசீலனை செய்திடும்போது உழைப்பு மனிதனது சக்தி என்ற நிலையில் அது ஸ்தூலமற்ற உழைப்பு எனப்படுகிறது. இந்த ஸ்தூலமற்ற உழைப்பே சரக்கின் பரிவர்த்தனை மதிப்பைப் படைக்கிறது.

16) பணம் என்றால் என்ன?

பணத்தின் சாரத்தை மார்க்ஸ் பொருள்முதல்வாத வழியில் அணுகினார். உற்பத்தியோடும், பரிவர்த்தினையின் வளர்ச்சியோடும், மதிப்பு வடிவங்களின் வளர்ச்சியோடும் பணத்தைத் தொடர்புபடுத்தி விளக்கினார். சரக்கு உற்பத்தியில் தனித்தனி உற்பத்தியாளர்கள் தனிமைப்பட்டுப் போகாமல் பிணைப்பை ஏற்படுத்துவது பணம் ஆகும். சரக்குப் பரிவர்த்தனையில் மற்ற அனைத்துச் சரக்குகளின் மதிப்பை வெளியிடக் கூடிய சரக்காகச் சர்வபொது சமானமாகப் பணம் திகழ்கிறது.

17) மூலதனம் (Capital) என்றால் என்ன?

       பணம் தானே மூலதனமாவது இல்லை. முதலாளித்துவத்திற்கு முன்பே பணம் இருந்துள்ளது, ஆனால் அதனை மூலதனம் என்று அழைப்பதில்லை. சரக்கு உற்பத்தி வளர்ச்சியின், குறிப்பிட்ட கட்டத்தை எட்டும் போது பணம் மூலதனமாகிறது, முதலாளித்துவத்திற்கு முன்பான எளிய உற்பத்தி முறையின் சூத்திரம் சரக்கு-பணம்-சரக்கு என்ற அடிப்படையில் இயங்கியது. விளைவித்த சரக்குப் பணத்திற்கு விற்று அதனைக் கொண்டு தேவைப்படும் சரக்கு வாங்கப்பட்டது. அதாவது சரக்கு மற்றொரு சரக்கு வாங்குவதற்காக விற்கப்பட்டது.

முதலாளித்துவத்தில் விற்பனைக்காகச் சரக்கு உற்பத்தி செய்யப்படுகிறது. இதன் சூத்திரம் பணம்-சரக்கு-பணம். முதலாளித்துவத்தில் உற்பத்தி பணத்தைக் கொண்டு தொடங்கப்படுகிறது. அதாவது முதலாளி பணத்தின் மூலம் உற்பத்திக்கு தேவையானதை வாங்கி  உற்பத்தியின் மூலம் விளைவித்ததைப் பணத்திற்கு விற்கிறார். முதலில் போடப்பட்ட பணத்தைவிடக் கூடுதலாய் பணம் இதன் மூலம் கிடைக்கிறது. முதலில் போட்டப் பணத்திற்கு மேல் கூடுதலாய் பணம் கிடைக்கும் வகையில் இயங்குவதே மூலதனம் எனப்படுகிறது. இந்தக் கூடுதல் பணம் உழைப்பாளியின் உபரி நேரத்தின் உழைப்பில் விளைந்த உபரி மதிப்பால் கிடைத்ததாகும். இதனையே முதலாளி இலாபம் என்கிறார்.

18) உழைப்பு சக்தி (Labour-Power) என்றால் என்ன?

முதலாளியிடம் தொழிலாளி விற்பது உழைப்பை அல்ல, உழைப்பு சக்தியை தான் விற்கிறார். உழைப்பு சக்தி என்பது அதன் உடைமையாளராகிய கூலித் தொழிலாளி, முதலாளிக்கு விற்கும் ஒரு சரக்கு ஆகும். உழைப்பு சக்தி எல்லாக் காலங்களிலும் கூலி உழைப்பாக அதாவது சுதந்திர உழைப்பாக இருக்கவில்லை. முதலாளித்துவச் சமூகத்தில் தொழிலாளி தன் உழைப்பை விற்பதற்குச் சுதந்திரம் பெற்றவராக இருக்கும் நிலையிலேயே உழைப்பு சக்தியை சரக்காக முதலாளிக்கு விற்கிறார். உழைப்புக்கும், உழைப்பு சக்திக்கும் உள்ள வேறுபாட்டை உபரிமதிப்பு பற்றிய விளக்கத்தில் அறிந்து கொள்ளலாம். உழைப்பு சக்தி என்ற மார்க்சின் இந்தக் கண்டுபிடிப்பே முதலாளித்துவத்தின் சுரண்டலை முழுமையாக வெளிக் கொண்டுவந்தது.

19) உபரி மதிப்பு (Surplus-Value) என்றால் என்ன?

முதலாளிகள் செல்வம் சேர்ப்பதற்கே உற்பத்தியில் ஈடுபடுகின்றனர், இந்தச் செல்வம் முதலாளித்துவ உற்பத்தி முறையில் எவ்வாறு சேருகிறது என்பதை மார்க்ஸ் உபரிமதிப்பு என்ற கருத்தாக்கத்தால் விளக்கினார். தொழிலாளியின் உபரி உழைப்பால் தோற்றுவிக்கப்பட்ட மதிப்புதான் உபரி மதிப்பாகும். தொழிலாளிக்கு கொடுக்கப்படாத கூலியால் இந்த உபரி மதிப்புத் தோற்றுவிக்கப்படுகிறது. முதலாளித்துவத்தின் சுரண்டல் இந்த உபரி உழைப்பில் தான் அடங்கியிருக்கிறது.

20) உபரி உழைப்பு என்றால் என்ன?

முதலாளி உற்பத்தியில் ஈடுபடுவதற்குத் தமக்குத் தேவைப்படுபவைகளைச் சந்தையில் வாங்குகிறார். இயந்திரம், கச்சாப்பொருள், எரிபொருள் இவைகளைக் கொண்டும் உழைப்பதற்கு உழைப்பாளியையும் சந்தையில் வாங்குகிறார். அடுத்து உற்பத்தியைத் தொடங்குகிறார். இயந்திரங்கள், கருவிகள் இயங்குகின்றன, இதனைத் தொழிலாளி இயக்குகிறார். இயந்திரத்தின் தேய்மானம், பயன்படுத்திய கச்சாப் பொருள் மற்றும் எரி-பொருள் ஆகியவையில் அடங்கியுள்ள பழைய மதிப்பு, புதிய சரக்கில் இடம்பெயற்கிறது. பழைய மதிப்பு புதிய சரக்கில் இடம் மாற்றப்படுகிறது அவ்வளவே, புதிய மதிப்பு எதுவும் அது படைக்கவில்லை. தொழிலாளியின் உழைப்புக்குக் கூலி கொடுக்கப்பட்டுள்ளது அதுவும் சரக்கில் மதிப்பேற்றப்பட்டுள்ளது. சந்தையில் விளைபொருளான சரக்கு விற்று முதலாளிக்கு இலாபம் கிடைக்கிறது. இந்த இலாபம் என்கிற கூடுதல் மதிப்பு எங்கிருந்து வந்தது என்றால் அது தொழிலாளியின் உபரி உழைப்பால் வந்தது என்கிறார் மார்க்ஸ்.

21) ஒன்றும் புரியவில்லை சற்று விளக்க முடியுமா?

உற்பத்திக்குத் தேவைப்படும் உழைப்புச் சாதனங்களைப் போலவே, உழைப்பாளியின் உழைப்பு சக்தியையும், முதலாளி விலை கொடுத்து வாங்குகிறார். முதலாளியால் வாங்கப்பட்ட உழைப்பு சக்தி முதலாளிக்கே சொந்தமாகும். இந்த நிபந்தனையின் அடிப்படையில்தான் தொழிலாளி முதலாளியிடம் வேலைக்குச் சேர்கிறார். அதனால் நாள் முழுமைக்கும் உழைக்கும்படி முதலாளி கட்டாயப்படுத்துகிறார். தொழிலாளியால் உற்பத்தி செய்யப்பட்ட விளைபொருள் முதலாளியால் உரிமையாக்கப்படுகிறது.

22) இதில் எங்கே உபரி உழைப்பு வருகிறது?

பொறுமை பொறுமை. படிப்படியாகச் செல்வோம். ஒரு முதலாளி வேலை செய்த தொழிலாளிக்கு நாட்கூலியாக ரூ.500/- கொடுக்கிறார். இந்த ரூபாயின் மதிப்பிற்கு அந்தத் தொழிலாளி வேலை செய்ய வேண்டும் என்றால் அவர் முதல் இரண்டு மணி நேரத்திலேயே அதன் மதிப்பிற்கான உழைப்பை செலுத்திவிடுகிறார். மதிப்புக்கு மதிப்பு தான் பரிவர்த்தனை நடத்தப்படுகிறது என்றால், இப்போது தொழிலாளி அன்றைய உழைப்பில் இருந்து விடுபட்டு வெளியேறலாம். அப்படிச் செய்தால் எந்தக் கூடுதல் மதிப்பும் விளைபொருளில் சேர்வதில்லை. முதலாளிக்கு இலாபம் எதுவும் கிடைப்பதில்லை. இதனை அறிந்த முதலாளி தொழிலாளியை வெளியேற அனுமதிப்பதில்லை. தொழிலாளியின் உழைப்பை வாங்கிய முதலாளி நாள் முழுமைக்கும் உழைப்பதற்குக் கட்டாயப்படுத்துகிறார். இங்கே தான் மார்க்சின் புதிய கண்டுபிடிப்பு அடங்கியிருக்கிறது.

23) அது என்ன புதிய கண்டுபிடிப்பு?

தொழிலாளி முதலாளிக்கு விற்றது உழைப்பை அல்ல உழைப்பு சக்தியை. அதாவது தொழிலாளியின் உழைப்பை மார்க்ஸ் இரண்டாகப் பிரிக்கிறார். தொழிலாளிக்குக் கொடுக்கப்பட்ட கூலிக்கு ஈடாக உழைப்பது அவசியமான உழைப்பு நேரம், மீதமுள்ள நாள் உழைப்பு என்பது உபரி உழைப்பு.

24) இன்னும் புரியவில்லையே?

தொழிலாளி முதலாளிக்கு விற்றது தன் உழைப்பை அல்ல, விற்றது உழைப்பு சக்தி என்கிறார் மார்க்ஸ். இந்த உழைப்பு சக்திக்கே கூலி கொடுக்கப்படுகிறது. உற்பத்தியின் போது இழந்த உழைப்பு சக்தி மீட்டுக் கொள்வதற்கே அதாவது மறுவுற்பத்தி நடைபெறுவதற்குக் கொடுக்கப்படுவதே கூலி ஆகும். உழைப்பாளிக்கு மட்டுமல்லாது அவர்களது குடும்பத்தின் பராமரிப்புக்கும் மறுவுற்பத்திக்கும் கொடுக்கப்பட்ட கூலியாகும். இந்த மறுவுற்பத்தியின் மூலமே எதிர்காலத்தில் தேவைப்படும் உழைப்பாளிகள் தோன்றுகிறார்கள். இந்தக் கூலிக்கான உழைப்பு நேரமே அவசியமான உழைப்பு நேரம். இந்த அவசியமான உழைப்பு நேரத்திற்குக் கூடுதலாய் உழைக்கும் நேரம், உபரி உழைப்பு நேரம் ஆகும். இந்த உபரி உழைப்பு நேரத்தில் உருவாக்கப்பட்ட மதிப்பே உபரி மதிப்பு. இதனை மிகவும் எளிதாகப் புரிந்து கொள்வதற்கு மார்க்ஸ் எழுதிய “கூலியுழைப்பும் மூலதனமும்” என்ற நூலுக்கு எங்கெல்ஸ் எழுதிய முன்னுரையை முதலில் படிக்க வேண்டும். அதில் இந்த உபரி மதிப்புக் கோட்பாட்டைச் சிறு நாடக பாணியில் விளக்கப்பட்டுள்ளது. முன்னுரையைப் படித்துவிட்டு, அந்நூலைப் படிக்க வேண்டும். அதற்கு அடுத்து “கூலி விலை இலாபம்” என்கிற மார்க்சின் நூலைப் படித்தால் மூலதனம் நூலில் காணப்படும் பகுதியை படிப்பதற்குத் தயாராகிவிடலாம்.

25) மாறா மூலதனம் (Constant Capital) என்றால் என்ன?

முதலாளி தமது உற்பத்திக்குத் தேவைப்படுகிற இயந்திரம், கருவிகள், கச்சாப்பொருள், தொழில் செய்திடும் இடம் போன்றவற்றிற்குச் செலுத்தும் மூலதனத்தின் பகுதி மாறா மூலதனம் என்று பெயர். ஏன் என்றால் இயந்திரம், கருவி ஆகியவற்றின் தேய்மானம், பயன்படுத்திய கச்சாப் பொருள் போன்றவற்றின் மதிப்பு புதிய பொருளில் இடம் பெயர்கிறது அவ்வளவே. அதன் மதிப்பு, பூஜ்யம் என்கிறார் மார்க்ஸ். மதிப்பை தோற்றுவிக்காததால் இந்த மூலுதனத்திற்கு மாறா மூலதனம் என்று பெயர்.

26) மாறும் மூலதனம் (Variable Capital) என்றால் என்ன?

       முதலாளியால் தொழிலாளிக்குக் கூலியாகக் கொடுக்கப்படும் பணம் மாறும் மூலதனம். ஏன் என்றால் இந்த மூலதனமே உபரி மதிப்பைப் படைக்கிறது. அவசியமான உழைப்பு நேரத்திற்குக் கூடுதலாக, தொழிலாளி உழைக்கும் உபரி நேரமே உபரி மதிப்பைப் படைக்கிறது. உழைப்பு சக்திக்குச் செலவிடப்பட்ட மூலதனம், கூடுதல் மதிப்பையும் அதன் மூலம் கூடுதல் பணத்தையும் தோற்றுவிக்கிறது.

27) முதலாளித்துவத்தில் பொருளாதார நெருக்கடி ஏன் ஏற்படுகிறது?

உற்பத்தியில் ஈடுபடும் தனித்தனி முதலாளிகள் சந்தைக்கு எவ்வளவு பொருட்கள் தேவைப்படுகிறது என்பதை அறிந்திடாமல், மிகையாக உற்பத்தி செய்திடுகின்றனர். சந்தையில் தேங்கும் இந்த மிகை உற்பத்தியால் பொருளாதார நெருக்கடி ஏற்படுகிறது. தேங்கிய சரக்கை விற்று மறுவுற்பத்திக்கு செல்ல முடியாமல் திணருகிறது. சில ஆண்டுகளுக்குப் பிறகு தாக்குப்பிடித்த அல்லது புதிய முதலாளிகள் உற்பத்தியில் ஈடுபடுகின்றனர். வளர்ச்சிக் கட்டத்தில் மீண்டும் ஒரு நெருக்கடியை முதலாளித்துவப் பொருளாதாரம் சந்திக்கிறது. தேக்கம், செழுமை, மிகையுற்பத்தி, நெருக்கடி என்ற சுற்றை முதலாளித்துவம் தொடர்ந்து சந்திக்கிறது. இந்த நெருக்கடியின் உச்சமே சமூக மாற்றத்திற்குக் காரணமாகிறது.

28) சமூக மாற்றம் என்றால் என்ன?

       உற்பத்தி சக்திகளின் வளர்ச்சி புதிய கட்டத்தை எட்டும் போது பழைய உற்பத்தி உறவுகள் பழைமைப்பட்டுப் போவதுடன் புதிய வளர்ச்சிக்கு தடையாகவும் ஆகிறது

முதலாளித்துவத்தின் மேம்பட்ட வளர்ச்சி கட்டத்தில், சமூகமயமான உற்பத்திக்கும் தனிசொத்துடைமையின் அடிப்படையிலான பழைய வினியோக முறைக்கும் முரண்முற்றி வளர்ச்சிக்குத் தடையாகிறது. வளர்ச்சிக்குத் தடையாகப் போன முதலாளித்தவத் தனியுடைமை சமூகத்தைத் தூக்கி எறிந்துவிட்டு, பாட்டாளி வர்க்கம் புதிய அரசை அமைத்து, சொத்துகளைச் சமூகச் சொத்தாக மாற்றுகிறது.

இதனை மார்க்ஸ், உற்பத்திச் சாதனங்களின் மையப்பாடும் உழைப்பின் சமூகமயமாதலும் வளர்ந்து செல்கையில் முதலாளித்துவத்தின் மேலோடு உடைத்தெறியப்படுகிறது. முதலாளித்துவத் தனியுடைமையின் சாவு மணி ஒலிக்கிறது. உடமை பறிப்போரின் உடமை பறிக்கப்படுகிறது என்று தமது “மூலதனம்” நூலில் எழுதினார்.

29) உற்பத்தி முறைகள் என்றால் என்ன?

சமூக வளர்ச்சியினுடைய ஒரு குறிப்பிட்ட கட்டத்தை உற்பத்தி முறை என்று அழைக்கப்படுகிறது. ஆதிகம்யூனிச சமூக உற்பத்தி முறை, அடிமை சமூக உற்பத்தி முறை, நிலப்பிரபுத்துவச் சமூக உற்பத்தி முறை, முதலாளித்துவ உற்பத்தி முறை, சோஷலிச சமூக உற்பத்தி முறை என்று இதுவரை உலகம் ஐந்து உற்பத்தி முறைகளைக் கண்டுள்ளது. அந்தந்த உற்பத்தி முறையை நிர்ணயிப்பது அந்தந்த சமூகத்தின் உற்பத்திச் சாதனங்களின் மீதான சொத்துடமை ஆகும். உற்பத்திச் சாதனங்களின் உடமையே அந்தந்த உற்பத்தி உறவுகளை அமைக்கிறது.

முதலில் கூறியபடி அரசியல் பொருளாதாரம் என்பது அந்தந்த கட்டத்தின் உற்பத்தி முறையில் காணப்படும் உற்பத்தி உறவுகளின் தோற்றம், வளர்ச்சி, மறைவு ஆகியவற்றைப் பரிசீலனை செய்வதாகும்.

30) அரசியல் பொருளாதாரத்தை அறிவதற்குப் படிக்க வேண்டிய நூல்கள் யாவை?

       மார்க்ஸ் எழுதிய நூல்கள் கூலியுழைப்பும் மூலதனமும், கூலி விலை லாபம், அரசியல் பொருளாதார விமர்சனத்துக்குப் பங்களிப்பு (முன்னுரை). எங்கெல்ஸ் எழுதிய நூல் காரல் மார்க்ஸ் "அரசியல் பொருளாதார விமர்சனத்துக்குப் பங்களிப்பு", மார்க்சின் மூலதனம் பற்றி..., பி.நிக்கிடின் எழுதிய நூல் அரசியல் பொருளாதாரத்தின் அடிப்படைகள். ஜீலியன் போர்ச்சார்ட் எழுதிய நூல் மக்கள் மார்க்ஸ். த.ஜீவானந்தம் எழுதிய நூல் மார்க்ஸின் மூலதனம் - வாசிப்புக்கு ஒரு திறவுகோல்.

 

Thursday, 9 March 2017

மார்க்சிய அரசியல் பொருளாதாரம் பற்றி லெனின்

பொருளாதார அமைப்பு முறை என்ற அடித்தளத்தின் மீதுதான் அரசியல் மேல்கட்டுமானம் கட்டப்படுகிறது என்று தெளிந்து ஏற்றுக் கொண்டவுடன், மார்க்ஸ் தமது பெரும்பாலான கவனத்தை இந்தப் பொருளாதார அமைப்பு முறையின் மீது செலுத்தினார். மார்க்சின் பிரதான நூலாகிய மூலதனம் நவீன காலத்திய - அதாவது, முதலாளித்துவ - சமுதாயத்தின் பொருளாதார அமைப்பு முறையை ஆராயும் நூலாகும்.

மார்க்சுக்கு முற்பட்ட செம்மை அரசியல் பொருளதாரம் முதலாளித்துவ நாடுகள் எல்லாவற்றிலும் அதிக வளர்ச்சி பெற்றிருந்த இங்கிலாந்திலே உருவாயிற்று. ஆடம் ஸ்மித்தும், டேவிட் ரிக்கார்டோவும் பொருளாதார அமைப்பு முறையை ஆராய்ந்து மதிப்பு பற்றிய உழைப்புத் தத்துவத்துக்கு அடித்தளமிட்டாகள். அவர்களுடைய பணியை மார்க்ஸ் தொடர்ந்து நடத்தினார். இந்தத் தத்துவத்தை அவர் திட்டமாக நிரூபித்து முரணற்ற வகையில் விவரித்தார். ஒவ்வொரு பண்டத்தின் மதிப்பும் அதை உற்பத்தி செய்வதில் செலவழிக்கப்பட்ட சமுதாய ரீதியில் அவசியமான உழைப்பு நேரத்தின் அளவைக் கொண்டுதான் நிர்ணயிக்கப்படுகிறது என்று அவர் விளக்கிக் காட்டினார்.

முதலாளித்துவப் பொருளாதாராவாதிகள், பொருட்கள் இடையிலான (ஒரு பண்டம் மற்றொன்றுடன் பரிமாற்றம் செய்து கொள்ளப்படும்) உறவு என்பதாக விவரித்ததில் மனிதர்கள் இடையிலான உறவு நிலவுவதை மார்க்ஸ் புலப்படுத்தினார். பண்டப் பரிமாற்றம் தனித்தனியான உற்பத்தியாளர்களிடையே சந்தை மூலமாக ஏற்படும் பிணைப்பைக் காட்டுகிறது. பணம் என்பது இந்தப் பிணைப்பு தனிப்பட்ட உற்பத்தியாளர்களின் பொருளாதார வாழ்க்கை முழுவதையும் பிரிக்க முடியாதபடி முழுமொத்தமாக இணைத்து மேலும் மேலும் நெருக்கமாவதைக் குறிக்கிறது. மூலதனம் என்பது இந்தப் பிணைப்பு மேலும் வளர்ச்சியுறுவதைக் குறிக்கிறது; அதாவது மனிதனின் உழைப்புச் சக்தியே ஒரு பரிமாற்றப் பண்டமாகிவிடுவதைக் குறிக்கிறது. கூலி பெறும் உழைப்பாளி நிலம், ஆலைகள், உழைப்புக் கருவிகள் ஆகிவவற்றின் சொந்தக்காரர்களிடம் தனது உழைப்புச் சக்தியை விற்கிறான். தொழிலாளி வேலை நாளின் ஒரு பகுதியைத் தன்னையும் தனது குடும்பத்தையும் பராமரித்துக் கொள்வதற்கு வேண்டிய செலவுக்காக (அதாவது, கூலிக்காக) உழைப்பதில் கழிக்கிறான். மறு பகுதியில் ஊதியமின்றியே உழைத்து முதலாளிக்கு உபரி மதிப்பை உண்டாக்கித் தருகிறான். இந்த உபரி மதிப்புத் தான் லாபத்துக்குத் தோற்றுவாய், அதுதான் முதலாளி வர்க்கத்தின் செல்வத்துக்குத் தோற்றுவாய்.

உபரி மதிப்பைப் பற்றிய போதனைதான் மார்க்சின் பொருளாதாரத் கொள்கைக்கு மூலைக்கல் ஆகும்.

தொழிலாளியின் உழைப்பால் உண்டாக்கப்பட்ட மூலதனம் சிறு உற்பத்தியாளர்களை அழித்து வேலையில்லாதோர் பட்டாளத்தைப் படைப்பதின் மூலமாகத் தொழிலாளியை நசுக்குகிறது. தொழில் துறையில், பெருவீத உற்பத்தி பெறுகிற வெற்றி பளிச்சென்று தெரிகிறது. ஆனால், இதே நிகழ்ச்சியை விவசாயத் துறையிலும் நாம் பார்க்க முடியும். பெருவீத முதலாளித்துவ விவசாயத்தில் இயந்திரங்களை உபயோகிப்பதும் அதிகரிக்கிறது, பண மூலதனத்தின் சுருக்குக் கயிற்றில் விவசாயப் பொருளாதாரம் சிக்கிக் கொள்கிறது; அது தனது பிற்பட்ட தொழில்நுணுக்கத்தின் சுமையால் அழுத்தப்பட்டு அழிகிறது. விவசாயத் துறையில் சிற்றளவான உற்பத்தியின் சீர்குலைவுக்குரிய வடிவங்கள் வேறாயிருப்பினும், இச்சீர்குலைவு ஏற்படுவது மறுக்க முடியாத உண்மையாகும்.
மூலதனம் சிற்றளவான உற்பத்தியை ஒழிப்பதன் மூலம், உழைப்பின் உற்பத்தித் திறன் அதிகரிப்பதற்கும் பெரிய முதலாளிகளின் கூட்டுகளுக்கு ஏகபோக நிலையைப் படைப்பதற்கும் வகை செய்கிறது. உற்பத்தியே மேலும் மேலும் சமுதாயத் தன்மை பெறுகிறது, ஒரு முறையான பொருளாதார ஒழுங்கமைப்பிலே லட்சக் கணக்கான, கோடிக் கணக்கான தொழிலாளர் பிணைக்கப்பட்டு விடுகின்றனர். ஆனால் அந்தக் கூட்டு உழைப்பின் உற்பத்திப் பொருளை விரல்விட்டு எண்ணத்தக்க ஒரு சில முதலாளிகள் உடைமையாக்கிக் கொள்கிறார்கள். உற்பத்தியில் அராஜகம் வளர்கிறது, அதேபோல் நெருக்கடிகளும் வளர்கின்றன, சந்தைகளைப் பிடித்துக் கொள்வதற்கான ஆவேச வேட்டையும் அதிகமாகிறது, திரளான மக்களின் வாழ்க்கைக் காப்புறுதியின்மையும் அதிகரிக்கிறது.

தொழிலாளர்கள் மூலதனத்தை அண்டிப்பிழைக்க வேண்டிய நிலையை முதலாளித்துவ முறை தீவிரப்படுத்தும் அதே சமயத்தில் ஒன்றுசேர்ந்த தொழிலாளர் எனும் மாபெரும் பலத்தையும் பிறப்பித்துவிடுகிறது.

பரிமாற்றப் பண்டப் பொருளாதாரத்தின் ஆரம்ப வித்துக்களிலிருந்து, சாதாரணப் பரிமாற்றத்திலிருந்து தொடங்கி, மிக உயர்ந்து வடிவங்கள் வரையில், பெருவீத உற்பத்தி வரையில் முதலாளித்துவத்தின் வளர்ச்சியை மார்க்ஸ் ஆராய்ந்து காட்டினார்.
பழையவையும் புதியவையும் அடங்கலான எல்லா முதலாளித்துவ நாடுகளின் அனுபவமும் இந்த மார்க்சியப் போதனை பிழையற்றதாகும் என்பைத ஆண்டுதோறும் மேலும் மேலும் கூடுதலான தொழிலாளர்களுக்குத் தெளிவாக நிருபித்துக் காட்டி வருகிறது.

உலெகங்கும் முதலாளித்துவம் வெற்றி பெற்றுவிட்டது. ஆனால் இந்த வெற்றி முதலாளித்துவத்தின் மீது தொழிலாளர் காணப் போகும் வெற்றியின் முன்னறிவிப்பே ஆகும்.

(மார்க்சியத்தின் மூன்று தோற்றுவாய்களும் மூன்று உள்ளடக்கக் கூறுகளும்)