Tuesday 24 September 2019

முதலாளித்துவ உற்பத்தியில் ஏற்படுகிற பொருளாதார நெருக்கடிக்கு, வளர்ச்சி அடைந்த உற்பத்தி சக்திகளினால் உருவான மிகை உற்பத்தியே காரணமாகும். குறைநுகர்வு என்பது இதற்கு கீழ்மட்ட நிலையில் அதாவது இரண்டாம் நிலை காரணமாகும் என்பது பற்றி லெனின்:-


"நாம் பேசிக்கொண்டிருக்கும் இவ்விரண்டு கோட்பாடுகள் நெருக்கடிகளைப் பற்றி முற்றிலும் வெவ்வேறான விளக்கங்கள் தருகின்றன. உற்பத்திக்கும் தொழிலாளி வர்க்கத்தின் நுகர்வுக்கும் இடையேயுள்ள முரண்பாட்டைக் கொண்டு முதல் கோட்பாடு நெருக்கடிகளை விளக்குகிறது, உற்பத்தியின் சமுதாயவகைப்பட்ட தன்மைக்கும் பறித்துடைமையாக்கிகொள்வதின் தனியுடைமை முறைக்கும் இடையேயுள்ள முரண்பாட்டைக் கொண்டு இரண்டாம் கோட்பாடு நெருக்கடிகளை விளக்குகிறது.

எனவே, முந்தைய கோட்பாடு நெருக்கடிக்குரிய வேர் உற்பத்திக்கு அப்பால் வெளியே இருப்பதாகக் காண்கிறது, பிந்தையத் கோட்பாடு நெருக்கடிக்குரிய வேர் உற்பத்தி நிலைமைகளிலேதான் இருப்பதாகக் காண்கிறது. மேலும் சுருங்கச் சொல்வதானால், முந்தைய கோட்பாடு குறைநுகர்வை கொண்டு நெருக்கடிகளை விளக்குகிறது, பிந்தைய கோட்பாடு உற்பத்தி உற்பத்தியின் அராஜகத்தன்மையைக் கொண்டு நெருக்கடிகளை விளக்குகிறது.

ஆக, இரு கோட்பாடுகளுமே பொருளாதார அமைப்புமுறைக்குள்ளேயேயுள்ள முரண்பாட்டைக் கொண்டு நெருககடிகளை விளக்குகிறபோதிலும், அந்த முரண்பாட்டின் தன்மை விஷயத்திலே அவ்விரண்டுமே முற்றிலும் வேறுபடுகின்றன. ஆனால் கேள்வி இதுதான், உற்பத்திக்கும் நுகர்வுக்கும் இடையே முரண்பாடு என்கிற உண்மையை இரண்டாம் கோட்பாடு மறுக்கிறதா, குறைநுகர்வு என்கிற உண்மையை அது மறுக்கிறதா? கிடையவே கிடையாது. அது அந்த உண்மையை முற்றாக அங்கீகரிக்கிறது, ஆனால் அதை அதற்குரிய கீழ்மட்ட இடத்தில் வைக்கிறது, இந்த உண்மையால் நெருக்கடிகளை விளக்கமுடியாது என்று அது போதிக்கிறது, அந்த நெருக்கடிகளைத் தோற்றுவிப்பது இன்றையப் பொருளாதார அமைப்புமுறையில் அடிப்படையானதாக இருக்கும் மற்றொரு, மேலும் ஆழமான முரண்பாடு ஆகும். -அதாவது, உற்பத்தியின் சமுதாயவகைப்பட்ட தன்மைக்கும் பறித்துடைமையாக்கி கொள்வதின் தனியுடைமைத் தன்மைக்கும் இடையேயுள்ள முரண்பாடுதான்."
(“பொருளாதாரத் தன்னுணர்ச்சிவாதம் பற்றிய ஒரு பண்புரை” பக்கம் 61-62)
(A Characterization of Economic Romanticism)

No comments:

Post a Comment